Saturday, January 22, 2011

tirupugal song no. 2

PRAISE YOUR MOTHER TONGUE - SPEAK IN MOTHER TONGUE - PRAY IN MOTHER TONGUE


அருணகிரிநாதரின்
திருப்புகழ் - பாடல் 2
பக்கரைவி சித்ரமணி
(விநாயகர் துதி)
தத்ததன தத்ததன தத்ததன தத்ததன      தத்ததன தத்ததன ...... தனதான   .
........ பாடல் .........  
பக்கரைவி சித்ரமணி பொற்கலணை யிட்டநடை      பட்சியெனு முக்ரதுர ...... கமுநீபப்  
பக்குவம லர்த்தொடையும் அக்குவடு பட்டொழிய      பட்டுருவ விட்டருள்கை ...... வடிவேலும்  
திக்கதும திக்கவரு குக்குடமும் ரட்சைதரு      சிற்றடியு முற்றியப ...... னிருதோளும்  
செய்ப்பதியும் வைத்துயர்தி ருப்புகழ்வி ருப்பமொடு      செப்பெனஎ னக்கருள்கை ...... மறவேனே  
இக்கவரை நற்கனிகள் சர்க்கரைப ருப்புடனெய்      எட்பொரிய வற்றுவரை ...... இளநீர்வண்  
டெச்சில்பய றப்பவகை பச்சரிசி பிட்டுவெள      ரிப்பழமி டிப்பல்வகை ...... தனிமூலம்  
மிக்கஅடி சிற்கடலை பட்சணமெ னக்கொளொரு      விக்கிநச மர்த்தனெனும் ...... அருளாழி  
வெற்பகுடி லச்சடில விற்பரம ரப்பரருள்      வித்தகம ருப்புடைய ...... பெருமாளே.  
......... சொல் விளக்கம் .........  
பக்கரை விசித்திர மணி பொன் க (ல்) லணை இட்ட நடை பட்சி எனும் உக்ர துரகமும் நீபப்  பக்குவ மலர்த் தொடையும்
அக் குவடு பட்டு ஒழிய பட்டு உருவ விட்டு அருள் கை வடி வேலும் 
திக்கு அது மதிக்க வரு குக்குடமும் ரட்சை தரும் சிற்று அடியும்
முற்றிய பன்னிரு தோளும் 
செய்ப்பதியும் வைத்து உயர் திருப்புகழ் விருப்பமொடு செப்பு என எனக்கு அருள்கை மறவேனே 
இக்கு அவரை நற்கனிகள் சர்க்கரை பருப்புடன் நெய் எள் பொரி அவல் துவரை இள நீர் வண்டு  எச்சில் பயறு அப்ப வகை பச்சரிசி பிட்டு வெளரிப்பழம் இடிப் பல்வகை தனி மூலம்  மிக்க அடிசில் கடலை பட்சணம் எனக் கொள் ஒரு விக்கிந சமர்த்தன் என்னும் அருள் ஆழி  வெற்ப
குடிலச் சடில வில் பரமர் அப்பர் அருள் வித்தக மருப்பு உடைய பெருமாளே. 


பக்கரை விசித்திர மணி பொன் க (ல்) லணை இட்ட நடை பட்சி எனும் உக்ர துரகமும் ...  அங்க அடி, அழகிய மணி, பொன்நிறமான சேணம் இவைகளுடன் மிகக் கம்பீரமாக நடக்கின்ற மயிலாகிய மிடுக்கான குதிரையையும் 

நீபப் பக்குவ மலர்த் தொடையும் ... கடம்ப மரத்தில் பூத்த சிறந்த மலைர்களால் தொடுக்கப்பட்ட மலர்மாலையையும்

அக் குவடு பட்டு ஒழிய பட்டு உருவ விட்டு அருள் கை வடி வேலும் ... அந்த கிரௌஞ்ச மலையே அழிந்துவிடும்படி அந்த மலையை ஊடுருவிச் செல்லும்படி விடப்பட்ட முருகன் கையில் உள்ள கூர்மையான வேலையும்

திக்கு அது மதிக்க வரு குக்குடமும் ... எண் திசைகளும் மதிக்கும்படி கொடியிலே எழுந்தருளியிருக்கும் சேவலையும் 

ரட்சை தரும் சிற்று அடியும் முற்றிய பன்னிரு தோளும் ... நம்மையெல்லாம் காத்து அருளும் சிறிய திருவடிகளையும், திரண்ட பன்னிரண்டு தோள்களையும் 

செய்ப்பதியும் வைத்து உயர் திருப்புகழ் விருப்பமொடு செப்பு என எனக்கு அருள்கை மறவேனே ... வயலூரையும் பாட்டிலே வைத்து திருப்புகழ் பாடிடுக என்று முருகன் கூறி அருள் புரிந்ததை நான் என்றும் மறக்க மாட்டேன். 

இக்கு அவரை நற்கனிகள் சர்க்கரை பருப்புடன் நெய் ... கரும்பு, அவரை, நல்ல பழங்கள், சர்க்கரை, பருப்பு, நெய் 

எள் பொரி அவல் துவரை இள நீர் வண்டு எச்சில் ... எள், பொரி, அவல், துவரை, இளநீர், தேன், 

பயறு அப்ப வகை பச்சரிசி பிட்டு வெளரிப்பழம் ... பயறு, அப்ப வகைகள், பச்சரிசி, பிட்டு, வெள்ளரிப்பழம், 

இடிப் பல்வகை தனி மூலம் மிக்க அடிசில் கடலை பட்சணம் எனக் கொள் ...பல வகையான மாவு வகைகள், ஒப்பற்ற கிழங்குகள், சிறந்த உணவு வகைகள், கடலை போன்றவற்றைப் பட்சணமாகக் கொள்ளும்  

ஒரு விக்கிந சமர்த்தன் என்னும் அருள் ஆழி வெற்ப ... ஒப்பற்ற, வினைகளைப் போக்க வல்லவர் என்று சொல்லப்படும் அருட் கடலே, கருணை மலையே,

குடிலச் சடில வில் பரமர் அப்பர் அருள் வித்தக ... வளைந்த சடையையும், பினாகம் எனப்படும் வில்லையும் கொண்ட இறைவன் சிவபெருமான் பெற்றருளிய வித்தகனே - சிறப்புடையவனே,

மருப்பு உடைய பெருமாளே. ... ஒற்றைக் கொம்பினை உடைய பெருமானே   

  * திருவண்ணாமலையில் 'முத்தைத்தரு' என்ற முதல் பாட்டைப் பாடிய பின்னர் அருணகிரிநாதரை வயலூர் என்ற 'செய்ப்பதி'க்கு முருகன் வரப்பணித்தார். அங்கு தமது மயிலையும், கடப்ப மாலையையும், வேலையும், சேவலையும், பன்னிரு தோள்களையும், திருவடிகளையும், வயலூரையும் வைத்துப் பாடல் பாடக் கூறினார். அந்த அபூர்வமான பாடல்தான் இது.  ** மேருமலையில் முன்னர் 'வியாசர்' விநாயகரிடம் தாம் பாரதத்தைச் சொல்லச் சொல்ல வேகமாக ஏட்டில் எழுதப் பணித்தார். எழுதுகோலாக தனது கொம்புகளின் ஒன்றை ஒடித்து விநாயகர் எழுதத் தொடங்கினார். எனவே அவருக்கு 'ஏகதந்தன்' (ஒற்றைக் கொம்பர்) என்ற பெயர் வந்தது. 
இன்று நாம் கற்றுக் கொண்டா புதிய சொற்கள்

துரகம் - குதிரை
நீபம் - கடம்பம்
தொடை - மலர்மாலை
குவடு - மலை
குக்குடம் - சேவல்
இக்கு - கரும்பு
கனிகள் - பழங்கள்
வண்டு எச்சில் - தேன்
ஆழி - கடல்
வெற்பு - மலை
மருப்பு - கொம்பு

Thursday, January 20, 2011

tiruppugal - song number 1

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு

தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவ வேண்டும் என்ற அவா எல்லோர் மனதில் இருந்தாலும் - நாம் திரும்பிய பக்கமெல்லாம் - ஊடகங்களில் தமிழ் குறைந்து ஆங்கில ஆதிக்கம் ஓங்கிக் கொண்டிருக்கிறது.  இதனால் வழக்கில் இருந்த பல தமிழ்ச் சொற்கள் இன்று மெல்ல மெல்ல மறைந்து கொண்டிருக்கின்றன.  இளைய தலைமுறையினருக்குப் பல தமிழ்ச் சொற்களைப் புரிந்து கொள்ளவே முடியவில்லை.
சரி - நாம் வழக்கில் இருந்த தமிழ்ச் சொற்களை மறப்பதைத் தடுக்க தினமும் சில தமிழ்ப் பாடல்களை பொருளுடன் படித்துப் பார்ப்போம்.  அதில் உள்ள சொற்களைத் தொகுத்து அறிந்து கொள்வோம்.  ஒரு சிறிய முயற்சி தான் ...
அருணகிரி நாதர் அவர்கள் அருளிய திருப்புகழ் பாடல்களி-ருந்து சில பாடல்களை முத-ல் படிப்போம்.  கணபதியைத் துதிக்க ஒப்பற்ற பாடல் இது.  இசைத் தமிழில் பாடவும் வசதியாக எப்படிப் பாட வேண்டும் என்ற விளக்கத்துடன் உள்ள தமிழ்ப் பாடல்களை அருணகிரிநாதர் அருளி உள்ளார்.

திருப்புகழ்

அருணகிரிநாதரின்
திருப்புகழ் - பாடல் 1
கைத்தலம் நிறைகனி
(விநாயகர் துதி)
தந்தன தனதன தந்தன தனதன      தந்தன தனதன ...... தனதான  
......... பாடல் .........  
கைத்தல நிறைகனி யப்பமொ டவல்பொரி      கப்பிய கரிமுக ...... னடிபேணிக்  
கற்றிடு மடியவர் புத்தியி லுறைபவ      கற்பக மெனவினை ...... கடிதேகும்  
மத்தமு மதியமும் வைத்திடு மரன்மகன்      மற்பொரு திரள்புய ...... மதயானை  
மத்தள வயிறனை உத்தமி புதல்வனை      மட்டவிழ் மலர்கொடு ...... பணிவேனே  
முத்தமி ழடைவினை முற்படு கிரிதனில்      முற்பட எழுதிய ...... முதல்வோனே  
முப்புர மெரிசெய்த அச்சிவ னுறைரதம்      அச்சது பொடிசெய்த ...... அதிதீரா  
அத்துய ரதுகொடு சுப்பிர மணிபடும்      அப்புன மதனிடை ...... இபமாகி  
அக்குற மகளுட னச்சிறு முருகனை      அக்கண மணமருள் ...... பெருமாளே. 
கைத்தலம் நிறைகனி அப்ப மொடு அவல் பொரி கப்பிய கரிமுகன் அடிபேணி
கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவ கற்பகம் எனவினை கடிதேகும்
மத்தமும் மதியமும் வைத்திடும் அரன்மகன் மற்பொரு திரள்புய மதயானை
மத்தள வயிறனை உத்தமி புதல்வனை மட்டு அவிழ் மலர்கொ (ண்) டு பணிவேனே
முத்தமிழ் அடைவினை முற்படு கிரிதனில் முற்பட எழுதிய முதல்வோனே
முப்புரம் எரி செய்த அச்சிவன் உறை ரதம் அச்சு அது பொடிசெய்த அதிதீரா
அத்துயர் அது கொ (ண்) டு சுப்பிரமணி படும் அப்புனம் அதனிடை இபமாகி
அக்குற மகளுடன் அச்சிறு முருகனை அக்கணம் மணம் அருள் பெருமாளே    
 ......... சொல் விளக்கம் .........  
கைத்தலம் நிறைகனி அப்ப மொடு அவல் பொரி கப்பிய கரிமுகன் அடிபேணி ... கைகளிலே பழம், அப்பம், அவல், பொரி ஆகியவற்றை நிறைய எடுத்துக் கொண்டு அவற்றை வாரி உண்ணும் யானை முகக் கடவுளின் திருவடிகளை விரும்பி  
கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவ கற்பகம் எனவினை கடிதேகும் ... அறிவு நூல்களை ஆவலுடன் கற்கும் அடியார்களின் மனதில் நீங்காமல் என்றும் உறைபவன் கணபதிக் கடவுள்.  நாம் எண்ணியதை எண்ணியபடி உடனுக்குடன் நமக்கு வழங்கும் கற்பகமரம் போன்ற வள்ளல் கணபதிக் கடவுள்.  இப்படிப்பட்ட கணபதிக் கடவுளை நாம் துதி செய்தால் நம்மை அண்டி உள்ள வினைகள் யாவும் அஞ்சி நம்மை விட்டு ஓடிவிடும்.  
மத்தமும் மதியமும் வைத்திடும் அரன்மகன் மற்பொரு திரள்புய மதயானை ...   ஊமத்த மலரையும் பிறைச் சந்திரனையும் தனது சடையிலே அழகாக வைத்துக் கொண்டவர் சிவபெருமான்.  அந்த அரனாரின் மகன் தான் கணபதிக் கடவுள்.  மற்போர் புரிய ஏற்ற வகையில் திரண்ட தோள்களை உடையவர் அவர்.  மதயானையை ஒத்த பலம் உடையவர் கணபதி.   
மத்தள வயிறனை உத்தமி புதல்வனை மட்டு அவிழ் மலர்கொ (ண்) டு பணிவேனே ... மத்தளம் போன்ற பெருவயிறு உடையவர் கணபதி.  உத்தமியாகிய பார்வதியின் மைந்தன் அவர்.  தேன் வடியும் புத்தம் புதிய மலர்களைப் பறித்து நான் அவரை வணங்குவேன்.
முத்தமிழ் அடைவினை முற்படு கிரிதனில் முற்பட எழுதிய முதல்வோனே ... முத்தமிழ் என்று போற்றப்படுகிற இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழ் நூல் முறைமையை  மலைகளுள் முத-ல் தோன்றிய மலையான மேரு மலையில் முதன் முதல் எழுதி வைத்த முதன்மைக் கடவுள் கணபதி.
முப்புரம் எரி செய்த அச்சிவன் உறை ரதம் அச்சு அது பொடிசெய்த அதிதீரா ...  நினைத்த இடங்களில் எல்லாம் பறக்க வல்ல வல்லமை பெற்ற மூன்று நகரங்களைப் பெற்று அனைவரையும் அச்சுறுத்திய அசுரர்களின் கொட்டத்தை அடக்க சிவபெருமான் புறப்பட்ட போது தன்னைத் துதிக்காமல் புறப்பட்டதால் அவர் புறப்பட்ட தேரின் அச்சினை ஒடித்துத் தூளாக்கிய தீரன் கணபதி.
அத்துயர் அது கொ (ண்) டு சுப்பிரமணி படும் அப்புனம் அதனிடை இபமாகி ... வள்ளி மீது கொண்ட காதலால் வாடி துயர்பட்ட தனது தம்பியாகிய கந்தன் இருந்த தினைப்புனத்திலே யானை வடிவத்தில் தோன்றி  அக்குற மகளுடன் அச்சிறு முருகனை அக்கணம் மணம் அருள் பெருமாளே. ... அந்தக் குறமகளாகிய வள்ளியையும் தன் தம்பி முருகன் மணம்புரிய திருவருள் செய்த பிரான் கணபதி.    

கரிமுகன் என்றால் யானைமுகத்தை உடையவன் என்று பொருள்.  கரி என்றால் யானை.
உறைபவர் என்றால் தங்குபவர் என்று பொருள்.  உறைவிடம் என்றால் தங்குமிடம் என்று பொருள்.
கடிது ஏகும் என்றால் விரைந்து ஓடும் என்று பொருள்.  ஏகும் என்றால் போகும் என்று பொருள்.
மத்தம் என்றால் ஊமத்தைப் பூ
மதியம் என்றால் நிலவு
மற்போர் என்பது போரில் ஒரு வகை.  ஆயுதங்கள் இல்லாமல் கையால் போரிடும் கலை அது.  பின்னாளில் அது குஸ்தி என்று வடமொழி வரலால் மாறி இன்று மற்போர் என்றால் நமது வழக்கில் மறைந்து விட்டது.
இபம் என்றால் யானை.
இன்று நாம் கற்றுக் கொண்ட சொற்கள் கரி, இபம், உறைதல், கடிது, ஏகும், மத்தம், மதியம், மற்போர்.
இறைவனையும் துதிப்போம்.  தமிழையும் கற்போம்.
============================================================================================================