Tuesday, July 26, 2011

Kambaramayanam _ வாலிவதைப் படலம்

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு

பாகம் இரண்டு

தன்து நெஞ்சில் பாய்ந்த அம்பு இராமனால் எய்யப்பட்டது என்று தெரிந்தவுடனேயே வாலி கூறும் வாசகம் நமது நெஞ்சில் நீங்காத வடுவாகப் பதிகிறது.

“இல்லறம் துறந்த நம்பி எம்மனோர்க்காகத் தங்கள்
வில்லறம் துறந்த வீரன் தோன்றலால் வேதநூலில்
சொல்லறம் துறந்திலாத சூரியன் மரபும் தொல்லை
நல்லறம் துறந்தது

என்று கூறி நகைக்கிறான்.  பெருமுழக்கமிட்டுச் சிரிக்கிறான் வாலி.  இப்படிக் வாலி கூறக் கேட்ட இராமன் வாலி முன்னே தோன்றுகிறான்.  எல்லாம் தெரிந்த நீங்களே இப்படி செய்யலாகுமா என்று வினா தொடுக்கிறான். “தீமை தான் பிறரைக் காத்துத் தான் செய்தால் தீங்கன்றாமோஎன்று நக்கலாகக் கேட்கிறான்.  “ஓவியத்து எழுத ஒண்ணா உருவத்தாய் அமிழ்தின் வந்த தேவியைப் பிரிந்த பின்னை திகைத்தனை போலும்என்று இராமனின் தவறுக்குத் தானே காரணமும் கூறுகிறான்.  “அரக்கர் தலைவன் தவறு செய்தால் குரங்குத் தலைவனைக் கொல்லுவதாஎன்று கேட்கிறான் வாலி.

கூட்டு ஒருவரையும் வேண்டா கொற்றவ பெற்ற தாதை
பூட்டிய செல்வம் ஆங்கோர் தம்பிக்குக் கொடுத்துப் போந்து
நாட்டொரு கருமஞ் செய்தாய் எம்பிக்கு இவ்வரசை நல்கிக்
காட்டொரு கருமம் செய்தாய் கருமம் தான் இதன் மேல் உண்டோ

உன் தந்தை உனக்குக் கொடுத்த அரச பதவியை பரதனுக்குக் கொடுத்து நாட்டில் ஒரு தருமம் செய்தாய்.  காட்டிலேயோ என் தந்தை எனக்குக் கொடுத்த அரச பதவியைப் பறித்து என் தம்பிக்குக் கொடுத்துள்ளாய்.  தருமத்தின் தலைவன் நீ தான் என்று குத்திக் காட்டுகிறான்.  மறைந்து நின்று நீ கொன்றது ஒரு குற்றமே.  அப்படியிருக்க இராவணன் தவறு செய்தான் என்று எவ்வாறு நீ குற்றம் சாட்ட இயலும் என்றும் கேட்கிறான்.  அதுமட்டுமல்ல,

“இருவர் போர் எதிரும் காலை இருவரும் நல் உற்றாரே
ஒருவர் மேல் கருணை தூண்டி ஒருவர் மேல் ஒளித்து நின்று
வரிசிலை குழைய வாங்கி வாய் அம்பு மருமத்து எய்தல்
தருமமோ என்று வினவுகிறான்.  மறைந்து நின்று அம்பு எய்தது,

வீரம் அன்று விதி அன்று மெய்ம்மையின்
வாரம் அன்று நின் மண்ணினுகு என் உடல்
பாரம் அன்று பகை அன்று பண்பழிந்து
ஈரமின்றி இது என் செய்தவாறு அரோ

என மறைந்து நின்று அம்பு எய்த வீரமற்ற செயலைச் செய்த செயலைக் கண்டிக்கிறான் வாலி.  சூரியன் மரபுக்கே களங்கத்தை ஏற்படுத்தி விட்டதாக வருத்தப்பட்டுத் தெரிவிக்கிறான்.

கார் இயன்ற நிறத்த களங்கம் ஒன்று
ஊர் இயன்ற மதிக்கு உளதாம் எனச்
சூரியன் மரபுக்கும் ஓர் தொன் மறு
ஆரியன் பிறந்து ஆக்கினை ஆம் அரோ

என்று கூறுகிறார் கம்பர்.  மறைந்து நின்று அம்பு எய்து என்னைக் கொல்ல முயன்ற நீ இப்போது ஆண் சிங்கம் போல என் முன் வந்து நிற்கின்றாயே எனக் கேட்கிறான் வாலி. 

பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்த இராமன் இப்போது தன்னுடைய வாதத்தை எடுத்து வைக்கின்றான். 

தொடரும்.


வாலி வதைப் படலம் பாகம் 3

தன் மார்பில் பதிந்த அம்பு இராமனுடையது என்பதை அறிந்ததும் உயிர் போகும் நிலையிலும் வாய்விட்டு சிரித்து இராமன் நெறி பிறழ்ந்ததைச் சுட்டிக் காட்டுகிறான் வாலி.  இப்போது இராமனின் முறை.  தனது நியாயத்தை எடுத்துச் சொல்லுகிறான் இராமன்.  வாலி ஒரு மாயாவியுடன் போரிட குகை ஒன்றுக்குள் சென்று வெகுநாட்களாகப் போரிடுகிறான்.  வெளியில் சுக்கிரீவனும் அமைச்சர் பெருமக்களும் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.  நெடுநாள் ஆன காரணத்தால் தானும் குகைக்குள் புக முயல்கிறான் சுக்கிரீவன்.  தடுத்து நிறுத்துகிறார்கள் அமைச்சர்கள்.

வானம் ஆள என் தம்முனை வைத்தவன்
தானும் மாளக் கிளையின் இறத் தடிந்து
யானும் மாள்வேன் இருந்து அரசு ஆள்கிலேன்

என்று சுக்கிரீவன் கூற தடுத்தனர் முற்று உணர்ந்த முதியரும் அமைச்சரும்.  அரசுரிமையை ஏற்று மக்களைக் காக்கும்படி வேண்டுகிறார்கள்.  எனவே வேறு வழியில்லாமல் சுக்கிரீவன் அரசுப் பொறுப்பை ஏற்கிறான்.  சிறிது காலம் சென்றபின் போரில் வெற்றி பெற்ற வாலி திரும்பி வருகிறான்.  தன் தம்பி அரசாள்வதைக் கண்டு கொதிக்கிறான்.  ஆனால் சுக்கிரீவன் அண்ணன் வரவு கண்டு அகமகிழ்கிறான்.  நடந்ததைக் கூறி ஆணவமில்லாத சுக்கிரீவன் நடந்ததை எடுத்துக் கூறுகிறான்.  ஆனால் சினத்தில் இருந்த வாலி செவிமடுக்கவில்லை.  குற்றமற்றவன் என்று அவன் கூறிய சொற்களை ஏற்கவில்லை வாலி.  கோபத்தில் பொங்கினான்.  தொழுத கையோடு நின்றவனை ஆதரிக்காமல் கொல்லுவேன் என வாலி அடிக்க ஓடினான்.  நால் திசையிலும் ஓடினான் சுக்கிரீவன்.  விடவில்லை வாலி.  எனவே தான் முனிவரால் சாபமிடப்பட்டு வாலியால் வரமுடியாத பொன்மலைப்பகுதியை அடைந்தான்.(இப்பொன்மலைப் பகுதி தான் இருசிய முகமலை என இப்போது அழைக்கப்படுகிறது).  கர்நாடகத்தில் உள்ள ஹம்பிக்கு அருகே துங்கபத்திரா நதிக்கரையில் உள்ளது.  அதுமட்டுமல்ல  சுக்கிரீவனின் மனைவியையும் நீ அடைந்தாய்.  உனக்கு நியாயஅநியாயங்கள் பற்றி நன்றாகத் தெரியும்.  அடுத்தவன் மனைவியை ஆள்வது பாதகமான செய்ல் என்று உணர்ந்தவன் நீ.  ஆனால் சுக்கிரீவனின் மனைவியை நீ அடைந்தாய்.

ஈரம் ஆவதும் இல்பிறப்பு ஆவதும்
வீரம் ஆவதும் கல்வியின் மெய்ந்நெறி
வாரம் ஆவதும் மற்றொருவன் புணர்
தாரம் ஆவதைத் தாங்கும் தருக்கரோ

(வாரம் என்றால் உரிய செயல், தருக்கு என்றால் பெருமை)

மறம் திறம்பல் வலியம் எனா மனம்
புறம் திறம்பல் எளியவர்ப் பொங்குதல்
அறம் திறம்பல் அருங்கடி மங்கையர்
திறம் திறம்பல் தெளிபுடையோர்க்கு எலாம்.

வீரத்தில் இருந்து தவறுதல்,  எளியவர் மேல் பாய்தல், தருமத்தில் இருந்து தவறுதல், கற்பின் வலியை அழித்தல் போன்ற தவறுகளைச் செய்தவன் என்று இராமன் வாலி மேல் அடுக்கடுக்காகக் குற்றம் சாட்டுகிறான்.

தருமம் இன்னது எனும் தகைத் தன்மையும்
இருமையும் தெரிந்து எண்ணலை எண்ணினால்
அருமை உம்பிதன் ஆருயிர்த் தேவியைப்
பெருமை நீங்கினை எய்தப் பெறுதியோ

அறத்தைப் பற்றியோ இம்மை-மறுமை பற்றியோ நீ சிந்திக்கவில்லை.  எனவே தான் உன் தம்பியின் மனைவியை உனதாக்கிக் கொண்டாய்.  இப்படி நீ பல தவறுகளைச் செய்தாய்.  உன் தம்பியோ என்னைச் சரணடைந்தான்.  என் நண்பனானான்.  எளியவன் துன்பத்தை ஒழிப்பது என் கடமை.  எனவே தான் உன்னைக் கொல்லத் துணிந்தேன் என்கிறான் இராமன். தன்னுடைய செயலை இராமன் நியாயப் படுத்தியதும் வாலி மீண்டும் தன் பக்கத்து நியாயத்தை எடுத்து உரைக்கிறான்.

தொடரும்.

Monday, July 25, 2011

வாலியும் அர்ச்சுனனும் - சுக்கிரீவனும் கர்ணனும்- இராமாயணம் - வாலி வதைப்படலம்Ramayanam - Story of Vaali

திருமால் எடுத்த அவதாரங்களில் இராம அவதாரமும் கிருஷ்ண அவதாரமும் மிக முக்கயமானவை.    எப்படி வாழ வேண்டும் என்பதை விளக்குவது இராமாயணம்.  எப்படி வாழக்கூடாது என்பதை விளக்குவது மகாபாரதம்.  இந்த இரு காப்பியங்களிலும் வீரம் செறிந்த வாலியும் கர்ணனும் வஞ்சகமாகக் கொல்லப்படுகிறார்கள்.

இராமாயணத்தில் சூரியனின் மகன் சுக்கிரீவன்.  இந்திரனின் மகன் வாலி.  இராமாயணத்தில் இந்திரனின் மகனான வாலி வஞ்சகமாகக் கொல்லப்படுகிறான்.  இராமர் மறைந்திருந்து அம்பு விடுத்து வாலியைக் கொல்கிறார்.  இதற்குப் பரிகாரமாக மகாபாரதத்தில் சூரியன் மகனான கர்ணனை வஞ்சகமாகக் கொல்கிறார் கிருஷ்ணன்.  வீரத்தின் விளைநிலம் கர்ணன்.  வெல்லமுடியாது அவனை.  ஆனால் கிருஷ்ணர் பல மாயங்களைச் செய்து - ஏமாற்றி கர்ணனைக் கொல்கிறார்.  மகாபாரதத்தில் அர்ச்சுனன் இந்திரன் மகன்  இந்திரனின் மகனுக்குச் சாதகமாகச் செயல்படுகிறார்.  இப்போது கூட்டணிகளில் கட்சிகள் மாறி மாறி கூட்டணிகளில் சேர்வது போல உள்ளது இது.

வாலிவதைப் படலத்தைச் சுருக்கமாகப் பார்ப்போம் இப்போது.

வாலியை கம்பர் ;“சிறியன சிந்தியாதான்என ஏத்திக் கூறுகிறார்.

தாய் என உயிர்க்கு நல்கித் தருமமும் தகவும் சால்பும்
நீ என நின்ற நம்பி நெறியினில் நோக்கும் நேர்மை
நாய் என நின்ற எம்மால் நவையற உணரல் ஆமே
தீயன பொறுத்தி என்றான் சிறியன சிந்தியாதான்.

இராமன் மறைந்திருந்து அம்பை எய்கிறான்.  இராமபாணத்தால் தாக்கப்பட்ட வாலி மரம் போல் சாய்கிறான்.  இராமபாணத்திற்கு ஒரு பெருமை.  எய்தால் உடனே எதிரியை வீழ்த்தி விட்டுத் திரும்பி விடும்.  அப்படிப் பெருமைமிக்க அந்த இராமபாணம் தன் உடலை ஊடுருவிச் செல்லாதபடி பிடித்துக் கொள்கிறான்.  அது மட்டுமல்ல, அந்த பாணத்தை உருவி அது யாரால் எய்யப்பட்டது என்பதைக் காண்கிறான்.  பின்னர் இராமனோடு சொற்போர் நடத்துகிறான்.  இறுதியில் சமாதானமடைந்து கூறும்போது, “இராமபிரானே, நீ உலகத்தில் வாழும் உயிர்களுக்கெல்லாம் தாயைப் போல் திகழ்கிறாய்.  அறம், நடுநிலைமை, நற்குணநிறைவு போன்ற குணங்களின் மொத்த வடிவமாகத் திகழ்கிறாய்.  உனது உயர்ந்த எண்ணங்களை நாய் போன்ற என்னால் உணர முடியுமா?  எனவே நான் செய்த தீச்செயல்களைப் பொறுத்துக் கொள்ள வேண்டும்என்கிறான் சிறியன சிந்தியாதான் என அழைக்கப்படும் வாலி.  இப்படிப் பெருமைமிக்க வாலியின் வதம் எப்படி கம்பரால் சித்தரிக்கப்படுகிறது என்பதை நாம் பார்ப்போம்.

வனத்தில் சீதையை இழந்து வாடி வரும் இராமரை அனுமன் சந்தித்து சுக்கிரீவனைப் பற்றிக் கூறி அவனுக்கு அபயம் அளிக்க வைக்கிறான்.  சொல்லின் செல்வன் அல்லவா அனுமன்.  எப்படி தன் வாதத்தை எடுத்து வைக்க வேண்டுமோ அப்படி எடுத்து வைத்து இராமரின் ஆதரவைப் பெற்று விடுகிறான்.  பின்னர் சுக்கிரீவன், அனுமன் மற்றும் இராம இலக்குவர்கள் மலைச்சாரல் வழியே செல்கிறார்கள்.  அவர்கள் செல்வது எப்படி உள்ளது என்பதை கம்பர் விளக்குகிறார்.
வெங்கண் ஆளி ஏறும், மீளி மா இரண்டும் வேகநாகமும்
சிங்க ஏறு இரண்டொடும் திரண்ட அன்ன செய்கையார்
தங்க சாலம், மூலம், ஆர் தமாலம், ஏலம், வாழை, மாப்
பொங்கு நாகமும் துவன்று சாரல் ஊடு போயினார்.

ஆண் யாளி ஒன்று, வீரமிக்க புலிகள் இரண்டு, வேகமாகப் போகும் யானைகள் இரண்டு ஆகியவை இரண்டு ஆண் சிங்கங்களுடன் சென்றது போல சுக்கிரீவன் தன் அமைச்சர்களுடன் இராமஇலக்குவர்களோடு மரங்கள் அடர்ந்த மலைச்சாரல் வழியே சென்றார்கள்.
        இராமஇலக்குவர்கள் விரைந்து வருவதைக் கண்டு மேகங்கள் சிதறி ஓடுகின்றன நீர் பெருகி ஓடுகிறது பாம்புகள் ஓடுகின்றன யானைகள் ஓடுகின்றன சிங்கங்கள் ஓடுகின்றன.  ஓடைகளில் உள்ள வாளை மீன்களும் நீர்ப்பாம்புகளும் கூட ஓடுகின்றன. வேங்கைகளும் கருங்குரங்குகளும் ஓடுகின்றன.  இப்படி பிற உயிரினங்கள் எல்லாம் ஓடுவதை கம்பர் மிக அழகாக எடுத்துக் கூறுகிறார்.

நீடு நாகமூடு மேகம் ஓட நீரும் ஓட நேர்
ஆடு நாகம் ஓட மான யானை ஓட ஆளி போம்
மாடு நாகம் நீடு சாலர் வாளை ஓடும் வாவியோடு
ஓடு நாகம் ஓட வேங்கை ஓடும் ஊகம் ஓடவே

(நீடு நாகமூடு என்றால் உயர்ந்த வானத்தில் எனப் பொருள்
நேர் ஆடு நாகம் என்றார் நேரே படமெடுத்து ஆடும் இயல்புள்ள பாம்புகள் எனப் பொருள்
வாவி என்றால் சுனை, ஊகம் என்றால் கருங்குரங்கு)

இப்படி வளம் பொருந்திய மலைகள் உள்ள பகுதியைக் கடந்து வாலி வாழ்ந்த இடத்தை அடைகிறார்கள்.  அங்கே ஆலோசனை நடத்துகிறார்கள்.  வாலியின் வலிமை என்ன என்பதை அனுமன் எடுத்து உரைக்கிறான்.  வாலிக்கும் சுக்கிரீவனுக்கும் இடையே பகை வரக் காரணம் என்ன என்பதை சுக்கிரீவன் கூறுகிறான்.  எல்லாவற்றையும் கேட்ட இராமர் தன் கருத்தைக் கூறுகிறார்.

அவ்விடத்து இராமன் நீ அழைத்து வாலி ஆனது ஓர்
வெவ்விடத்தின் வந்து போர் விளைக்கும் ஏல்வை வேறு நின்று
எவ்விடத் துணிந்து அமைந்தது என் கருத்து இது என்றனன்
தெவ்வடங்கும் வென்றியானும் நன்று இது என்று சிந்தியா.

பகைவர்களை அடக்கி வெற்றி கொள்ளும் இயல்பினை உடைய இராமன் நன்கு சிந்தித்து “நீ சென்று வாலியைப் போர் செய்யக் கூப்பிடு.  வாலியாகிய  கொடிய விடத்துடனே எதிர்த்துப் போர் செய்கின்ற நேரத்தில் நான் ஓரிடத்தில் மறைந்து நின்று அம்பை எய்து கொல்வேன்எனத் தன் கருத்தைத் தெரிவிக்கிறான்.

(வெவ்விடம் என்றால் கொடிய விஷம்
எவ்விடம்  என்றால் அம்பைச் செலுத்துதல்  எ என்றால் அம்பு என்ற பொருளுண்டு.
கம்பர் காலத்தில் ஜ, ஷ, ஸ, ஹ போன்ற வட எழுத்துக்களை உபயோகிப்பதற்கு யோசித்து இருக்கிறார்கள்.  இப்போது இவற்றைச் சேர்த்து எழுதுவது நாகரிகம் என்று நாம் யோசிக்கிறோம்.  இதனால் பல தமிழ்ச் சொற்களை இழந்தோம்.  விஷம் என்பதை விடம் என்று அழகாகத் தமிழில் கூறுகிறார்கள்.  கஷ்டம் என்பதைக் கட்டம் என்றும் நஷ்டம் என்பதை நட்டம் என்றும் கூறியிருக்கிறார்கள் அந்தக் காலத்தில்.  வடமொழி எழுத்துகளுக்குப் பதிலாக தமிழ் எழுத்துகளை எப்படி உபயோகிக்க வேண்டும் என தமிழ் இலக்கணத்தில் அழகாகச் சொல்லப்பட்டு உள்ளது.  நாம் தான் படித்துப் புரிந்து கொள்வதில்லை.  வடமொழிச் சொற்களையும் ஆங்கிலச் சொற்களையும் அள்ளி அள்ளித் தமிழில் புகுத்தி அதற்கு இணையான பல தமிழ்ச் சொற்களை இழந்து நிற்கிறோம்.)

இராமபிரானின் இந்த வார்த்தைகளைக் கேட்டவுடன் சுக்கிரீவன் துள்ளிக் குதிக்கிறான்.  ஆரவாரம் செய்கிறான்.  எப்படி என்பதை கம்பரின் சொல்லிலேயே பார்ப்போம்.

வார்த்தை அன்னது ஆக வான் இயங்கு தேரினான் மகன்
நீர்த்தரங்க வேலை அஞ்ச நீலமேகம் நாணவே
வேர்த்து மண்உளோர் இரிந்து விண் உளோர்கள் விம்ம மேல்
ஆர்த்த ஓசை ஈசன் உண்ட அண்டம் முற்றும் உண்டதே

இராமபிரானின் சொற்களைக் கேட்டவுடன் கடல் அஞ்சும் படியாக மேகங்கள் வெட்கமடையும்படியாக மண்ணில் உள்ளோரும் விண்ணில் உள்ளோரும் அஞ்சி ஓடும் வண்ணம் பேராரவாரம் செய்தான் கதிரவன் மகன் சுக்கிரீவன்.

(வான் இயங்கு தேரினான் மகன் என்றால் கதிரவன் மகன் எனப் பொருள்.  இராமாயணத்தில் கதிரவன் மகனுக்கு ஆதரவாக போரிட்டு இந்திரன் மகனான வாலியை மறைந்து நின்று வஞ்சகமாகக் கொல்கிறான் திருமாலின் அவதாரமான இராமன்.  மகாபாரதத்தில் இதற்குப் பரிகாரமாக இந்திரனின் மகனான அர்ச்சுனன் பக்கம் நின்று தேரோட்டி மாயைகள் பல புரிந்து வஞ்சகமாகக் கதிரவன் மகனான கர்ணனைக் கொல்லக் காரணமாக செயல்படுகிறான் திருமாலின் அவதாரமான கண்ணன்)  தரங்க வேலை என்றால் அலைகள் வீசும் கடல் எனப் பொருள்.  இரிந்து என்றால் ஓடும்படி எனப் பொருள்)

ஆரவாரம் செய்தததோடு நின்றானா சுக்கிரீவன்.  தேர்தல் காலங்களில் அரசியல்வாதிகள் மேடைகளில் தராதரமின்றி சவால் விடுவது போலப் பேசுகிறான்.  எப்படி?

இடித்து உரப்பி வந்து போர் எதிர்த்தியேல் அடர்ப்பன் என்று
அடித்தலங்கள் கொட்டி வாய் மடித்து அடுத்து அலங்க தோள்
புடைத்து நின்று உளைத்த பூசல் புக்கது என்ப மிக்கு இடம்
துடிப்ப அங்கு உறங்கு வாலி திண் செவித் தொளைக்கணே

உறங்கிக் கொண்டிருக்கின்ற வாலியின் காதைத் துளைக்கும் வண்ணம் குரல் கொடுத்து, “என்னுடைன் போரிய வா.  உன்னைக் கொன்று விடுவேன்.என்று ஆரவாரம் செய்து தொடைகளையும் தோள்களையும் தட்டுக் கொண்டு கூறுகிறான் சுக்கிரீவன்.

(அடர்ப்பன் என்றால் கொல்வேன் என்று பொருள்.  உளைத்த என்றால் வலிய போருக்கு அழைத்த என்று பொருள்)

யானையின் பிளிறலைக் கேட்ட சிங்கம் போல தனது படுக்கையில் படுத்திருந்த வாலி சுக்கிரீவனின் ஆரவார ஓசையைக் கேட்டான்.  வாலிக்குச் சிரிப்பு வந்தது.   அந்த சிரிப்பைக் கேட்டு ஈரேழு உலகத்தில் உள்ளவர்களும் அஞ்சினார்கள்.

சிரித்தனன் அவ்வொலி திசையின் அப்புறத்து
இரித்தது அல்வுலகம் ஓர் ஏழொடு ஏழையும்

(இரித்தது என்றால் அஞ்சி ஓடும்படி செய்தது,  ஏழொடு ஏழையும் என்றால் பதினான்கு உலகத்தையும் என்று பொருள்)

எழுந்தான் வாலி.  தோள்களைத் தட்டினான்.  சுக்கிரீவனை அழிக்க விரைந்து புறப்பட்டான்.  அவனது நடையால் அதிர்ந்தது கிஷ்கிந்தா பகுதி முழுவதும்.  மலை முகடுகள் சாய்ந்தன.  “வந்தனென் வந்தனென்என்று கூவிக் கொண்டே வருகிறான் வாலி.  எண்திசையிலும் முழங்கியது அவன் குரல்.  இக்குரல் கேட்டு வானவர் நிலைகுலைந்தனர்.

ஞாலமும் நால்திசைப் புனலும் நாகரும்
மூலமும் முற்றிட முடிவில் தீக்குமக்
காலமும் ஒத்தனன் கடலின் தான் கடை
ஆலமும் ஒத்தனன் எவரும் அஞ்சவே

மண்ணுலகும் நால்திசையில் உள்ள கடல்களும் அழியும்படி வந்தான் வாலி.  ஆலகால கடும்விடத்தைப் போலத் தோன்றினான் அவன்.  வேகமாகக் கிளம்பிய வாலியைத் தடுக்கிறாள் தாரை.  “விலக்கலை விடுவிடுஎன்றும் சுக்கிரீவன் “இன்உயிர் குடித்து ஒல்லை மீள்குவன் மலைக்குல மயிலேஎன்று கூறி வாலி கிளம்புகிறான்.  (ஒல்லை என்றால் உடனே என்று பொருள்).  ஆனால் தாரையோ அவன் புதிய வலிமை பெறவில்லை ஆனால் புதிய துணையைப் பெற்றுள்ளான்.  அதனால் தான் அவன் ஆரவாரம் எழுப்பி அழைக்கிறான் எனத் தெரிவிக்கிறாள்.  வாலியோ தன் வலிமையை எடுத்துக் கூறுகிறான்.  தாரை கூறுவதை ஏற்க மறுக்கிறான்.
மூன்று என முற்றிய முடிவு இல் பேருலகு
ஏன்று உடன் உற்றன எனக்கு நேர் எனத்
தோன்றினும் தோற்று அவை தொயும் என்றலின்
சான்று உள அன்னவை தையல் கேட்டியால்

மூவுலகத்திலுன் உள்ள சக்திகள் ஒன்றாகச் சேர்ந்து வந்து எதிர்த்தாலும் அவை தோற்று அழியும்.  அதற்குச் சான்றுகள் உள்ளன என்று எடுத்துரைக்கிறான் வாலி.  தான் பாற்கடலைக் கடைந்த வல்லமையை எடுத்து உரைக்கிறான்.  தன்னை எதிர்ப்பவரின் பலத்தில் பாதி தனக்கு வந்து விடும் என்பதையும் எடுத்துக் காட்டுகிறான்.  உடனே தாரை “இராமன் என்பவன் உன்னுயிர் கோடலுக்கு உடன் வந்தான்எனத் தெரிவிக்கிறாள்.  இராமன் பற்றி மிகப் பெருமையாகக் கூறி இராமரை நீ அவமதித்து விட்டாயே இராமர் இப்படி செய்யமாட்டார் என உறுதியாகக் கூறுகிறான் வாலி. “இருமையும் நோக்குறும் இயல்பினாற்கு இது பெருமையோஎன்று நவில்கிறான்.  “தருமமே தவிர்க்குமோ தன்னைத் தானரோஎன்கிறான் வாலி.  தர்மம் தன்னைத் தானே அழித்துக் கொள்ளுமா என்று கேட்கிறான். சிறிய தாயின் கட்டளைக்கு இணங்கி அரசுரிமையைத் தன் இளவலுக்கு அளித்தவன் அவன்.  அப்படிப்பட்ட இராமனைப் போற்றாமல் சுக்கிரீவனுக்குத் துணையாக வந்துள்ளான் எனக் கூறித் தூற்றுகிறாயே என்று கொதிக்கிறான் வாலி.  “உலகமே எதிர்த்தாலும் தன் வில்லான கோதண்டம் கொண்டு வெற்றி பெறுவான் இராமன்.  அப்படிப்பட்டவனுக்கு ஒரு குரங்கின் துணை தேவையில்லை.  எனவே சுக்கிரீவனுடன் அவன் நட்பு கொண்டிருக்க முடியாது என வாதிடுகிறான்.

நின்ற பேருலகெலாம் நெருக்கி நேரினும்
வென்றி வெஞ்சிலையலால் பிறிது வேண்டுமோ
தன் துணை தன்னில் ஒருவரும் தன்னில் வேறிலான்
புன்தொழில் குரங்கொடு புணரு நட்பனோ

என்று அழகாகச் சொல்லுகிறார் கம்பர்.  (சிலை என்றால் வில்)

தம்பியர் தவிர தனக்கு வேறு உயிர் இல்லை எனக் கூறும் இராமன் என்னுடைய தம்பியும் நானும் மோதும் இடையில் வந்து அம்பு தொடுக்கமாட்டான் அருட்கடல் இராமன் என உறுதியாக நம்புகிறான்.

தம்பியர் அல்லது தனக்கு வேறு உயிர்
இம்பரின் இலது என எண்ணி ஏய்ந்தவன்
எம்பியும் யானும் உற்று உதிர்ந்த போரிடை
அம்பிடை தொடுக்குமோ அருளின் ஆழியான்.

(அருளின் ஆழியான் என்றால் அருட்கடல்.  ஆழி என்றால் கடல், இம்பரின் என்றால் இந்த உலகத்தில் என்று பொருள்)

இப்படியெல்லாம் வாலி கூறியவுடன் தாரை தடுப்பதற்கு அஞ்சுகிறாள்.  வாலி ஆரவாரம் செய்து கொண்டு கிளம்புகிறான்.  வாலியைக் கண்டவுடன் இராமன் ஆச்சரியம் அடைகிறான்.
“எவ்வேலை எம்மேகம் எக்காலொடு அக்காலவெந்தீ
வெவ்வேறு உலகத்து இவன் மேனியை மானும் என்றான்
என்று வியக்கிறான் இராமன்.  எந்த கடல், எந்த மேகம், எந்த காற்று, எந்த ஊழித்தீ இவன் மேனியை ஒத்திருக்கும் என்று கூறுகிறான் இராமன்.  (மானும் என்றால் ஒத்திருக்கும் என்று பொருள்).  வாலியைக் கண்டதும் இலக்குவன் திகைக்கிறான்.  மனம் மாறுகிறான்.  தன் அண்ணனையே கொல்ல நினைக்கும் இந்த சுக்கிரீவன் எப்படி நமக்கு உதவுவான் என்றே புரியவில்லை என்று கூறுகிறான் இலக்குவன்.  “மாற்றான் என தம் முனை கொல்லிய வந்து நின்றான் இவன் வேற்றார்கள் திறத்து தஞ்சம் என்என்கிறான்.  (தம் முனை என்றால் தம் முன்னவன் அதாவது அண்ணன்).  அண்ணன் இராமனோ “பித்துஆய விலங்கின் ஒழுக்கினைப் பேசல் ஆமோஎன்று பதில் சொல்கிறான்.  மிருகங்களின் ஒழுக்கத்தைக் குறித்துக் கவலைப்படத் தேவையில்லை என்கிறான் இராமன்.  இதிலிருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டிய கருத்து ஒன்று உள்ளது.  வாலியையோ சுக்கிரீவனையோ மனித இனமாகப் பார்க்கவில்லை இராமன்.  விலங்கினமாகத் தான் பார்க்கிறான்.  எனவே தான் மறைந்து இருந்து கொல்வதில் தவறில்லை எனத் துணிகிறான்.  அதுமட்டுல்ல, “எத்தாயர் வயிற்றினும் பின் பிறந்தார்கள் எல்லாம் ஒத்தால் பரதன் பெரிது உத்தமனாதல் உண்டோஎன்றும் கூறுகிறான்.  பின்னே பிறந்த தம்பியர் எல்லாம் அண்ணனோடு ஒற்றுமையாக வாழ்ந்தால் பரதன் மிகச் சிறந்த தம்பி என்ற பெயரைப் பெற்றுவிடமுடியுமா எனவும் கேட்கிறான்.  அரசபோகத்தை விடுத்து காட்டில் உடன் சுற்றும் தம்பி இலக்குவன் நல்லவன் என்று கூறவில்லை இராமன்.  பரதனைத் தான் உதாரணத்திற்கு எடுத்துக் கூறுகிறான்.  வாலியும் சுக்கிரீவனும் மோதுகிறார்கள்.  அவர்கள் மோதுவது குன்றோடு குன்று மோதுவது போல் இருந்தது.  ஒருவரையொருவர் கடித்துக் கொண்டார்கள்.  அடித்துக் கொண்டார்கள்.  புடைத்துக் கொண்டார்கள். குத்திக் கொண்டார்கள்.  கடித்துக் கொண்டதால் குருதி கொப்பளித்தது. ஒருவரை மற்றொருவர் தூக்கினர்.  தூக்கி எறிந்தனர்.  சிறிது நேரம் ஒருவருக்கொருவர் சளைக்காமல் சண்டையிட்டாலும் சிறிது நேரத்தில் வாலி
சுக்கிரீவனை நிலைகுலையச் செய்கிறான்.  வருந்திய சுக்கிரீவன் திரும்பி வந்து இராமனிடம் முறையிடுகிறான்.  அடையாளம் தெரிவதற்காக மாலை ஒன்றை அணிவிக்கிறார் இராமர்.  மாலையை அணிந்து கொண்ட சுக்கிரீவன் மீண்டும் வாலியுடன் மோதுகிறான்.  செங்கதிரோன் மகன் அடிபட்டு மிதிபட்டு இராமன் இருந்த திக்கை நோக்கிப் பார்க்கிறான்.  இராமன் வாலி மேல் “கோல் ஒன்று வாங்கித் தொடுத்து நாணொடு தோள் உறுத்து இராகவன் துரந்தான்  அம்பைச் செலுத்துகிறான் இராகவன்.  அம்பு வாலியின் மார்பைத் துளைக்கிறது.  மேருமலை வீழ்ந்தது போல் வீழ்கிறான் வாலி.  உடனே சுக்கிரீவனை விட்டுவிடுகிறான்.  தன்னைத் துளைத்த அம்பைப் பிடித்துக் கொள்கிறான்.  அவனது இந்த உறுதியைப் பார்த்து காலதேவனே திகைக்கிறான்.  வாலியின் வீரத்தைப் பாராட்டுகிறான் எமன்.  இச்சரத்தினை எய்தவன் யாராக இருக்க முடியும் என்று சிந்திக்கிறான் வாலி.

தேவரோ என அயிர்க்கும் அத்தேவர் இச்செயலுக்கு
ஆவரோ அவர்க்கு ஆற்றல் உண்டோ எனும் அயலோர்
எவரோ என நகை செய்யும் ஒருவனே இறைவர்
மூவரோடும் ஒப்பான் செயல் ஆம் என மொழியும்

இச்செயலைத் தேவர்கள் செய்ய முடியாது.  அவர்களுக்கு இந்த வல்லமை கிடையாது மூவருக்கும் இணையான ஒருவனே இச்செயலைச் செய்திருக்க முடியும் என நினைக்கிறான்.  நகைக்கிறான்.

நேமிதான் கொலோ நீலகண்டன் நெடும் சூலம்
ஆம் தான் கொலோ அன்று எனில் குன்று உரு அயிலும்
நாம் இந்திரன் வச்சிரப்படையும் என் நடுவண்
போம் எனும் துணைபோதுமோ யாது எனப் புழுங்கும்.

நேமி என்றால் சக்கரம்.  திருமால் தனது சக்கராயுதத்தை ஏவினானா?  அல்லது இது சிவனின் சூலமா? அல்லது இந்திரனின் வச்சிராயுதமா எனப் புழுங்குகிறான்.  தன் பலத்தை எல்லாம் பயன்படுத்தி ஒருவழியாக அந்த இராமபாணம் தன்னை ஊடுருவாதபடி தன் பலம் முழுவதையும் காட்டி உருவுகிறான் அந்த இராமபாணத்தை.  இதைக் கண்டு வானவரே பிரம்மிக்கின்றனர்.    அம்பைப் பிடுங்கியவுடன் குருதிக்கடல் கொப்பளிக்கிறது என்கிறார் கம்பர்.  குருதி பெருகி வருவதைக் கண்ட தம்பி சுக்கிரீவன் கலங்குகிறான்.  கலங்கி நிலத்திலே வீழ்ந்தான்.

வாசத் தாரவன் மார்பு எனும் மலை வழங்கு அருவி
ஓசைச் சோரியை நோக்கினன் உடன் பிறப்பு என்னும்
பாசத்தால் பிணிப்புண்ட அத்தம்பியும் பசுங்கண்
நேசத் தாரைகள் சொரிதர நெடுநிலம் வீழ்ந்தான்.
(தார் என்றால் மாலை, சோரி என்றால் குருதி வெள்ளம்)


பிடுங்கிய அம்பை முறித்துவிட முயல்கிறான் வாலி.  சாதாரணமான நிலையில் இருந்தால் அந்த அம்பை அவன் முறித்திருப்பான்.  எய்யப்பட்டதோ இராமபாணம்.  வாலி கிடப்பதோ குருதி வெள்ளத்தில்.  எனவே முறிக்க முடியவில்லை.  யாருடைய அம்பு என நோக்குகிறான்.  அதிலே இருந்தது இராமநாமம்.

மும்மைசால் உலகுக்கு எல்லாம் மூலமந்திரத்தை முற்றும்
தம்மையே தமர்க்கு நல்கும் தனிப்பெரும் பதத்தைத் தானே
இம்மையே எழுமை நோய்க்கு மருந்தினை இராம என்னும்
செம்மைசேர் நாமம் தன்னைக் கண்களிற் தெரியக் கண்டான்.

மூவுலகிற்கும் மூலமந்திரம் இராமநாமம்.  இராமநாமம் கூறித் துதித்தால் தம்மையே கொடுத்து விடுகிற மந்திரம்.  இப்பிறப்பிலேயே எல்லாப் பிறப்பிலும் பண்ணிய நோய்க்கு மருந்தாக விளங்கும் மந்திரம். அப்படிப்பட்ட செம்மையான “இராம” என்னும் நாமம் அந்த அம்பிலே பொறிக்கப்பட்டு இருந்தது.


குமரகுருபரர் - நீதிநெறி விளக்கம் KUMARAGURUPARAR - TAMIL POEMS,

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு

ஒரு அரசன் எப்படியெல்லாம் நடந்து கொள்ள வேண்டும் என்பதை நீதிநெறி விளக்கத்தில் குமரகுருபரர் மிக அழகாக விளக்குகிறார்.

மக்கள் துயர்படும் போது இன்று பெற்றுக் கொள்ளக்கூடிய வரியை நாளை பெற்றுக் கொள்ள வேண்டும்.  மக்கள் குறையைச் சொல்ல வரும்போது அவர்களை எதிர்கொண்டு குறைகளைக் கேட்க வேண்டும்.  மக்களிடம் கோபம் கொள்ளக் கூடாது.

நின்று கொளற்பால நாளைக் கொளப் பொறான்
நின்று குறையிரப்ப நேர்படான் - சென்று ஒருவன்
ஆவன கூறின் எயிறு அலைப்பான் ஆறலைக்கும்
வேடலன் வேந்தன் அல்லன்

நேர்படான் என்றால் காட்சி தராதவன்.  எதிர்கொள்ளாதவன்
எயிறு என்றால் பல்
ஆறலைத்தல் என்றால் வழிப்பறி செய்தல்



Kumaraguruparar - tamil poems /குமரகுருபரர்-நீதிநெறி விளக்கம்

ஒருவன் நன்மதிப்பை எப்படி எல்லாம் பெறலாம்?  மூன்று வழிகளைச் சொல்கிறார் குமரகுருபரர் தனது “நீதிநெறி விளக்கத்தில்”.
·          மற்றவர்களுடைய பெருமைகளை மறைக்க முயலக் கூடாது
·          மற்றவர்கள் குறையை வெளியே சொல்லிக் கொண்டிருக்கக் கூடாது
·          எல்லோரிடத்திலும் பணிவாக இருக்க வேண்டும்

பிறரால் பெருஞ்சுட்டு வேண்டுவான் யாண்டும்
மறவாதே நோற்பது ஒன்று உண்டு பிறர்பிறர்
சீர் எல்லாம் தூற்றிச் சிறுமை புறங்காத்து
யார்யார்க்கும் தாழ்ச்சி சொலல்

பெருஞ்சுட்டு என்றால் பெருமதிப்பு
நோற்பது என்றால் கடைப்பிடிக்க வேண்டியது
புறங்காத்து என்றால் வெளியில் பரவாமல் தடுத்து

குமரகுருபரர்-நீதிநெறிவிளக்கம். KUMARAGURUPARAR - TAMIL POEMS,

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு

ஓர் அரசு எப்படி வரி வாங்க வேண்டும் அரசனின் தகுதி என்ன என்பனவற்றை குமரகுருபரர் தனது நீதி நெறி விளக்கத்தில் மிக அழகாக விளக்கி உள்ளார்.

வரியை எப்படி வசூலிக்க வேண்டும் என்று கூறும் போது மக்கள் விருப்பத்தோடு கொடுக்கும் வகையில் வரிவிதிப்பு செய்து வசூலித்தால் நன்றாக வசூலாகி கருவூலத்தில் பணம் விரைவில் சேரும் என்கிறார் குமரகுருபரர்.  மக்களை வருத்தி வரி வாங்கதல் கன்றை உடைய பசுவிடம் வருத்திப் பால் கறப்பதைப் போன்றது என்று விளக்குகிறார்.

குடிகொன்று இறைகொள்ளும் கோமகற்குக் கற்றா
மடிகொன்று பால் கொளலும் மாண்பே குடியோம்பிக்
கொள்ளுமா கொள்வோர்க்குக் காண்டுமே மாநிதியம்
வெள்ளத்தின் மேலும் பல.

(
இறை என்றால் வரி,  கற்றா என்றால் கன்று)

Kumaraguruparar tamil poems - குமரகுருபரர்

யார் யாருக்கு யார் தெய்வம் பேர்ன்றவர் என்று குமரகுருபரர் தமது நீதிநெறி விளக்கத்தில் அருமையாக விளக்குவார்.

குலமகட்குத் தெய்வம் கொழுநனே மன்ற
புதல்வர்க்குத் தந்தையும் தாயும் அறவோர்க்கு
அடிகளே தெய்வம், அனைவோர்க்கும் தெய்வம்
இலைமுகப் பைம்பூண் இறை.

எளிமையான தமிழ்.  பொருள் சொல்லத் தேவையில்லை.  மனைவிக்குக் கணவன் தெய்வம்.  புதல்வர்க்கும் புதல்விக்கும் பெற்றோரே தெய்வம்.  அறவோருக்கு ஆசானே தெய்வம்.  மற்ற எல்லோருக்கும் அரசனே தெய்வம்.
இதையொட்டித் தான் மாதா, பிதா, குரு தெய்வம் என்ற பழமொழி உள்ளது போலும்.

குமரகுருபரர்-Kumaraguruparar Tamil poems


கற்க கசடற கற்று அவை கற்றபின்
நிற்க அதற்குத் தக
என்பார் திருவள்ளுவர்.  இது குறித்து குமரகுருபரர் என்ன கூறுகிறார்? பார்ப்போம்.

கற்றபின் அது போன்று நடவாதவனை என்றாவது ஒரு நாள் ஒருவன் உறுதியாகக் கேட்பான்.  “ஏனப்பா, இவ்வளவு படித்திருக்கிறாயா?  இது கூடத் தெரியாதா?  படித்துப் பட்டம் பெற்ற நீ இப்படி நடக்கக் கூடாதுஎன ஒருவன் கேட்கும் நிலை வரும்.

கற்றுப் பிறருக்கு உரைத்துத் தாம் நில்லார் வாய்ப்படூஉம்
வெற்றுரைக்க உண்டோர் வலியுடைமை- சொற்ற நீர்
நில்லாதது என்னென்று நாண் உறைப்ப நேர்ந்து ஒருவன்
சொல்லாமே சூழ்ந்து சொலர்.
(வாய்ப்படூஉம் வாயிலிருந்து வெளிப்படும், சொற்ற என்றால் சொன்ன)

இப்படியெல்லாம் நடக்க வேண்டும் என்று ஊருக்கு உபதேசம் கூறும் நீங்கள் அவ்வாறு நடக்கவில்லையே என்று கற்றவர் நாணும்படி வெளிப்படையாகவே குறிப்பாகவே யாராவது என்றாவது சொல்லத்தான் செய்வார்கள்.  எனவே பிறருக்கு உரைப்பது உபதேசம் செய்வது மிகவும் எளிதான செயல்.  அதை யாரும் செய்யலாம்.  அப்படி நடந்து காட்ட வேண்டும்.  அது தான் கற்றவனுக்கு அழகு.

குமரகுருபரர்..“நீதிநெறி விளக்கம்”

சங்கே முழங்கு - எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு

இக்காலத்தில் பணம் செலவழித்து சுவரொட்டிகள் அச்சடித்து மாநாடுகள் நடத்தித் தம்மைத் தாமே புகழ்ந்து கொள்ளும் அரசியல்வாதிகள் மலிந்துவிட்டார்கள்.  பழங்காலத்திலும் இப்படி இருந்திருப்பார்கள் போலும்.  எனவே தான் குமரகுருபரர் தமது “நீதிநெறி விளக்கம் அக்காலத்திலேயே தற்புகழ்ச்சியைப் பற்றி அருமையான பாடலை நமக்குத் தந்து உள்ளார்.  தன்னைத் தானே புகழ்ந்து கொள்ளுதல் எரியும் நெருப்பை நீர் விட்டு அணைப்பது போல உள்ளது என்றும் இன்பத்தை விரும்பினால் துன்பம் வரும் எனவும் எனவே இன்பத்தை விரும்பக் கூடாது எனவும் எடுத்துக் கூறி உள்ளார்.

தன்னை வியப்பிப்ன் தற்புகழ்தல் தீச்சுடர்
நன்னீர் சொரிந்து வளர்த்தற்றால் தன்னை
வியவாமை அன்றே வியப்பாவது? இன்பம்
நயவாமை அன்றே நலம்?

நீரைக் கொட்டினால் நெருப்பு வளருமா?  அணைந்து விடும்.  அதுபோல தன்னைத் தான் போற்றிக் கொள்ளுதல் புகழை குறைத்து விடும்.  தன்னைத் தான் புகழாமல் இருந்தால் அது ஒருவனது மதிப்பை வளர்க்கும்.  இன்பத்தை விரும்பாமை தான் இன்பத்தைத் தரும்.

Friday, July 22, 2011

குமரகுருபரர் - நீதிநெறி விளக்கம்

சங்கே முழங்கு - எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு

தமிழால் வாழ்பவர்கள் மலிந்து விட்ட இக்காலத்தில் தமிழுக்காக வாழ்ந்த பெருமகனார்கள் கூறிய கருத்துக்கள் பாடநூல்களில் குறைந்துகொண்டே வருகின்றன.  தமிழின்  பெருமையை வடநாட்டிற்குச் சென்று பறைசாற்றிய பெருமகனார் குமரகுருபரர்.  பேசாமகவாக இருந்த இவர் திருச்செந்தூர் தலத்தில் ஐந்து அகவை நிரம்பிய போதே பாடத் தொடங்கியவர்.  இவரது வரலாற்றை முதலில் நாம் பார்ப்போம்.

தமிழ் இலக்கியத்தைத் தழைக்கச் செய்ததில் குமரகுருபரருக்குப் பெரும்பங்குண்டு.  வடநாடு சென்று தமிழின் பெருமையை உணர்த்தியவர் அவர்.  இவர் சீவைகுண்டம் என்னும் ஊரில் சைவ வேளாளர் மரபில் சண்முகசிகாமணிக் கவிராயருக்கும் சிவகாமி அம்மையாருக்கும் மகனாகத் தோன்றினார்.  ஐந்தாண்டுகள் வரை பேசாக் குழந்தையாக ஊமையாக இருந்தார் அவர்.  கவிராயர் மனமுருகி முருகனை வேண்டுவதற்காகத் திருச்செந்தூர் சென்றார்.  திருச்செந்தூர் முருகன் சன்னிதியில் இறைவன் திருவருளால் பேசும் திறன் பெற்றார்.  அக்கணமே முருகக் கடவுள் மீது “கந்தர் கலி வெண்பா என்ற கவிதைத் தொகுப்பைப் பாடினார்.  அருமையான பொருள் பொதிந்த பாடல்கள் அவை.  முருகக் கடவுள் அவர் கனவில் தோன்றி “குமருகுருபர  என்று அழைத்த காரணத்தால் இவர் குமரகுருபரர் என அழைக்கப்படுகிறார்.  இவர் மதுரை மாநகர் சென்று மன்னனின் முன்னிலையில் “மீனாட்சியம்மைப் பிள்ளைத் தமிழ்என்ற நூலைப் பாடினார்.  இதைக் கேட்டு அங்கயற்கண்ணியே நேரில் வந்து ஒரு முத்துமாலையைக் கொடுத்ததாகக் கூறுவர்.  இதுதவிர மீனாட்சியம்மை குறம், மீனாட்சியம்மை இரட்டை மணிமாலை, மதுரைக் கலம்பகம் எனப் பல நூல்களைப் பாடினார்.  திருவாரூர் சென்று திருவாரூர் நான்மணிமாலை பாடினார்.  புள்ளிருக்குவேளூர் என்னும் வைத்தீஸ்வரன் கோவிலுக்குச் சென்று முத்துக்குமாரசாமி பிள்ளைத் தமிழ் என்னும் நூலைப் பாடினார்.  சிதம்பரம் சென்று சிதம்பர மும்மணிக் கோவை, சிதம்பரச் செய்யுள் கோவை, சிவகாமி இரட்டை மணிமாலை போன்ற நூல்களை தமிழுலத்திற்குத் தந்தார்.  தருமபுரம் சென்று ஞானதீட்சை அருளிய குருநாதர்  மாசிலாமணி மீது பண்டார மும்மணிக் கோவை என்னும் சிறுகாப்பியத்தை அருளினார்.  பின்னர் ஆசானின் ஆணைப்படி காசி சென்று காசிக் கலம்பகம் பாடினார்.  முகலாய மன்னனின் சோதனைகளை எதிர்கொண்டு பின்னர் அந்த மன்னனின் அன்பையும் அரவணைப்பையும் பெற்றார்.  அப்போது சகலகலாவல்லி மாலை என்னும் நூலை நமக்குத் தந்தார்.  இதைப்பாடி சரஸ்வதி தேவியின் அருள் பெற்று இந்துஸ்தானி மொழியில் பேசும் வல்லமையைப் பெற்ற அவர் கம்பராமாயணத்தை இந்துஸ்தானி மொழியில் காசியில் விரித்துரைத்தாராம்.  துளசிதாசர் இந்த உரையைக் கேட்டு இந்தியில் இராமாயணத்தை இயற்றியதாகச் சொல்வர்.  காசியில் வைகாசித் திங்கள் தேய்பிறை மூன்றாம் நாளில் அவர் இறைவனடி சேர்ந்தார்.  இப்படியாக குமரி முதல் இமயம் வரை தமிழைப் பரப்பிய பெருந்தகையாளர் குமரகுருபரர்.

இப்படி தமிழுக்காக வாழ்ந்து பெருமை அடைந்தவர்களும் உண்டு
தமிழ் வால்க என்று கூறித் தமிழால் வாழ்பவர்களும் இப்போது உண்டு

சரி குமரகுருபரர் இயற்றிய நீதிநூலான “நீதிநெறி விளக்க”த்திலிருந்து சில பாடல்களைப் பார்ப்போம்.

நீரில் குமிழி இளமை நிறைசெல்வம்
நீரில் சுருட்டும் நெடுந்திரைகள் நீரில்
எழுத்தாகும் யாக்கை, நமரங்காள்- என்னே
வழுத்தாதது எம்பிரான் மன்று?

நம் வாழ்வில் இளமைப்பருவம் மிக முக்கியமானது.  ஆனால் அந்த பருவம் வரும் சில நாட்களிலே பருவம் மாறி நாம் முதுமை அடைந்து விடுவோம்.  எனவே இளமை என்பதை நீரில் உள்ள குமிழி போன்ற பருவம் என்கிறார் குமரகுருபரர்.  நீரினில் காற்று அடித்தால் அலை எழும்.  ஆனால் மீண்டும் மறைந்து போகும்.  அது போல நிறைசெல்வம் என்பது நிரந்தரமானது அன்று.  அது சிலநாள் இருக்கும்.  பின்னர் மறைந்து விடும்.  நம்முடைய வாழ்வு எப்படிப்பட்டது.  அது நீரில் எழுதும் எழுத்துக்குச் சமமானது.  நீரில் எழுதினால் நிலைத்து நிற்குமா?  நிற்காது.  அப்படித்தான் நமது வாழ்வு நிலையானது அல்ல.  அழியக் கூடியது.  இப்படி எல்லாம் மறையக்கூடிய அல்லது அழியக்கூடியவைகளாக உள்ளன.  இவற்றை நாம் உணராமல் “நாம் தான் பெரியவர்கள்என்று இறுமாப்பு கொண்டு அலைகிறோம்.  நம்மைப் படைத்த இறைவனை வணங்குவதை தலைக்குனிவு என்று சொல்லும் இறைமறுப்பாளர்களும் உள்ளனர்.  இந்த உடல் உள்ள போதே இறைவனை நாம் வணங்க வேண்டும்.  காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள வேண்டும்.  உடலில் உயிர்க்காற்று உள்ளபோதே இறைவனைத் துதித்து பிறவா நிலையை அடைய நாம் முயற்சிக்க வேண்டும்.

நெடுந்திரை என்றால் பெரிய அலைகள்.  திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்று ஒரு பழமொழியும் உண்டு.
யாக்கை என்றால் உடம்பு.
வழுத்தல் என்றால் வணங்குதல்
நமரங்காள் என்றால் நம்மவர்களே என்று பொருள்.



கல்வி இன்பமும் கலவி இன்பமும்

தொடங்குங்கால் துன்பமாய் இன்பம் பயக்கும்
மடம் கொன்று அறிவகற்றும் கல்வி நெடுங்காமம்
முற்பயக்கும் சில்நீர இன்பத்தின், முற்றிழையாய்
பிற்பயக்கும் பீழை பெரிது

துவக்கத்தில் துன்பமாய்த் தெரியும் கல்வி.  இடர்பட்டு கல்வி கற்றால் பிற்காலத்தில் நல்ல வேலை கிடைத்து சமூகத்தில் நல்ல அந்தஸ்து கிடைத்து நாம் இன்பமாக வாழ முடியும்.  இப்படி நாம் கடினமாக உழைத்துக் கற்ற கல்வி நம் அறியாமையை நீக்கும்.  அறிவை விருத்தியடைய்ச் செய்யும்.  இப்படி தொடங்குங்கால் துன்பமாய் இருந்தாலும் இன்பமே பயப்பது கல்வி.
சரி கலவி எப்படி?  தொடக்கத்தில் சிறிது இன்பம் கொடுக்கும் கலவி.  எனவே தான் இதைச் சிற்றின்பம் என்று கூறுகிறார்கள் பெரியோர்கள்.  இந்த இன்பத்திற்கு அடிமைப்பட்டு அந்த குளத்தில் குளிக்கப் போனால் பின்னர் அதனால் தொடரக்கூடிய துன்பங்கள் ஏராளம்-ஏராளம்.  முறையாக இருந்தால் சிறு குடும்பம்.  அதைக் காப்பாற்ற நாம் படும் துயரம்.  குழந்தைகளைப் பள்ளியில் சேர்க்க.  கல்லூரியில் சேர்க்க திருமணம் செய்ய.  இப்படித் தொடர்வது துயரம்.  ஏன் என்றால் இவற்றுக்கெல்லாம் பொருள் ஈட்ட வேண்டும்.  முறையற்று ஆற்றிலும் சேற்றிலும்   குளிக்க நினைத்தால்.  நம்மிடம் இருக்கும் பொருளை எல்லாம் பறிக்கும் பரத்தையர் கூட்டம் மிகுந்து விடும்.  கோவலன் கதி தான்.  பொருளை இழந்து பின்னர் உயிரையும் இழந்தான் கோவலன்.  அதுபோல துவக்கத்தில் இனித்தாலும் கலவி என்பது இறுதிவரை துன்பத்தையே தரும்.

மடம் என்றால் அறியாமை,  சில்நீர சிறிதளவே உள்ள, இழை- ஆபரணம், பீழை- துன்பம்.

கல்வியா? செல்வமா?

எனைத்துணையரேனும் இலம்பட்டார் கல்வி
தினைத்துணையும் சீர்ப்பாடு இலவாம் மனைத்துக்காள்
மாண்பிலள் ஆயின் மணமகன் நல்லறம்
பூண்ட புலப்படா போல்.

வறுமையில் வாடுபவர்கள் எவ்வளவு கல்வி கற்று திறமைசாலிகளாக இருந்தாலும் மதிநுட்பத்துடன் செயல்பட்டாலும் தினைத்துணை அளவும் பாராட்டப்பட மாட்டார்கள்.  பெருமைப்படுத்தப்பட மாட்டார்கள்.  எப்படி என்றால் -  மனைவியானவள் இல்லறத்திற்குத் தக்க மாட்சிமை இல்லாமல் இருந்தால், அவளுடைய கணவன் மேற்கொள்ளும் இல்லறம் சிறப்படையாது.  அதுபோல.

இதையே வள்ளுவப் பெருந்தகையும்,

“நற்பொருள் நன்கு உணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார்
சொற்பொருள் சோர்வுபடும்என்று தனது குறளில் சுருக்கமாகத் தெளிவாகக் கூறி உள்ளார்.

இலம்பட்டார் என்றால் வறுமையுற்றார்
சீர்ப்பாடு என்றால் பெருமை

இன்சொல்லன் தாழ்நடையன் ஆயினும் ஒன்று இல்லானேல்
வன்சொல்லின் அல்லது வாய்திறவா - என்சொலினும்
கைத்துடையான் காற்கீழ் ஒதுங்கும் கடல்ஞாலம்
பித்துடைய அல்ல பிற.

ஒருவன் இனிய சொல்லைப் பேசுபவனாகவே இருக்கட்டும் ஒழுக்கம் உடையவனாகவே இருக்கட்டும்.  அவனிடம் செல்வம் இல்லையேல் இந்த உலக மக்கள் கடுஞ்சொல் கொண்டு தாக்குவர் அவனை.  இனிய சொற்களைப் பேசமாட்டார்கள்.  இதற்கு மாறாக ஒரு செல்வந்தன் என்ன சொன்னாலும் அவன் காலின் கீழ் கட்டுண்டு கிடப்பர் இந்த உலக மக்கள்.  இதைப் பார்த்தால் கடல்சூழ்ந்த இந்த உலகம் மயக்கத்தில் உள்ளது என்பது விளங்குகிறது.  நல்லறிவு இல்லை.

தாழ்நடையன் ஒழுக்கம் உள்ளவன்,  கைத்துடையான்- கையில் செல்வம் உடையவன்  ஞாலம் உலகம், பித்து - பைத்தியம்

கற்றது கைம்மண் அளவு

முற்றும் உணர்ந்தவர் இல்லை முழுவதும்
கற்றனம்  என்று களியற்க சிற்றுளியால்
கல்லும் தகரும் தகரா, கனங்குழாய்
கொல்லுலைக் கூடத்தினால்

எல்லாம் அறிந்தவர்கள் இந்த உலகத்தில் யாரும் இல்லை.  அனைத்தும் அறிந்தோம் என்று யாரும் செருக்கு கொள்ள முடியாது.  ஏனெனில் சிறு உளியும் பெரு மலையைத் தகர்த்து விடும்.  பெரு மலைகளை இன்று சிறு வெடிகளை வைத்து தகர்ப்பதைக் கண்கூடாகக் காண்கிறோம்.  பெருமலையை சம்மட்டி கொண்டு அடித்து சிதற வைக்க முடியாது.  ஆனால் சிறு உளியால் தகர்த்து விடலாம்.

களியற்க செருக்கு  கொள்ள வேண்டாம்,  கல் என்பது இங்கே மலையைக் குறிக்கும்.  கூடம் என்பது சம்மட்டியைக் குறிக்கும்.
தமிழுக்கு அனுப்பப்பட்டு விட்டது

குமரகுருபரரின் நீதிநெறி விளக்கம் நமக்கு பல அற்புதமான கருத்துகளைத் தெரிவிக்கிறது.  கல்விச் செருக்கைப் பற்றிக் கூற வந்த மற்றொரு பாடலைப் பார்ப்போம்.

தம்மின் மெலியாரை நோக்கித் தமது உடைமை
அம்மா பெரிது என்று அகம் மகிழ்க தம்மினும்
கற்றாரை நோக்கிக் கருத்தழிக, கற்றதெல்லாம்
எற்றே இவர்க்கு நாம் என்று

நம்முடன் படித்தவர்கள் உற்றார் உற்வினர் இப்படி பலருடன் நாம் வாழ்கிறோம்.  அதிலே சிலர் பணம் படைத்தவர்களாகவும் சிலர் படிப்பிலே உயர்ந்தவர்களாகவும் இருப்பார்கள்.  நம்மை விட செல்வத்தில் குறைந்து உள்ளவர்களைப் பார்க்கும் போது நாம் “இறைவன் நமக்கு எவ்வளவு பெரிய செல்வத்தைக் கொடுத்து உள்ளான்என நினைந்து இறைவனை வாழ்த்த வேண்டும்.  உள்ளத்திலே மகிழ்ச்சி கொள்ள வேண்டும்.  அதே சமயம் நம்மைவிட கற்றவர்களைக் காணும் போது “நாம் இன்னும் அதிகமாகக் கற்கவேண்டும் போல் உள்ளது.  இவர் இவ்வளவு படித்துள்ளாரே.  வாழ்க்கையை வீணாக்காமல் படித்து அறிவைப் பெருக்கிக்கொள்ள வேண்டும்என்று நாம் எண்ண வேண்டும்.  இப்படி நாம் வாழ்ந்தோமானால் நம் வாழ்வு பொருளுடையதாக இருக்கும்.

மெலியார் ஏழைகள் ,  கருத்தழிக கர்வத்தை விடுக



செல்வம் இரண்டு வகைப்படும்.  கல்விச் செல்வம் ஒன்று.  பொருட் செல்வம் மற்றொன்று.  இவ்விரண்டும் நமக்கு வேண்டும் என்றால் உள்ளவரிடம் இரந்து நிற்க வேண்டும்.  செல்வம் படைத்தவன் அது கல்விச் செல்வம் என்றாலும் சரி பொருட்செல்வம் என்றாலும் சரி அவன் உயர்ந்த இடத்தில் உள்ளான்.  இல்லாதவன் அவனிடத்தில் தாழ்ந்து போக வேண்டும்.  அப்போது தான் நமக்கு வேண்டிய செல்வம் நமக்குக் கிடைக்கும்.  இதை குமரகுரபரர் தமது நீதிநெறி விளக்கத்தில் விளக்கும் விதமே அலாதி.

கல்வி உடைமை பொருள் உடைமை என்று இரண்டு
செல்வமும் செல்வம் எனப்படும்-இல்லார்
குறையிரந்து தம் முன்னர் நிற்ப போல் நாமும்
தலைவணங்கித் தாழப் பெறின்.

குறையிரந்து என்றால் தாழ்ந்து எனப் பொருள்.


பொருட் செல்வம் மிகுந்து இருந்தாலும் சரி கல்விச் செல்வம் மிகுந்து இருந்தாலும் சரி இல்லாதவரைக் கண்டால் நாம் தான் தாழ்ந்து போக வேண்டும்.  ஒரு தராசு உள்ளது என்று வைத்துக் கொள்வோம்.  கனம் மிகுந்த பொருள் உள்ள தட்டு தாழ்ந்து தானே இருக்கும்.  குறைவாக உள்ள தட்டு மேல்நோக்கிப் போகும்.  இது உலக இயல்பு தானே.  அது போலத் தான் நம்மிடம் பொருட்செல்வம் அதிகம் இருந்தாலும் கல்விச் செல்வம் அதிகம் இருந்தாலும் இல்லாதவரைக் கண்டால் நாம் தான் தாழ்ந்து போக வேண்டும்.  உயர்ந்தவர்கள் இறுமாப்பு கொள்ளக் கூடாது.  இதை குமரகுருபரர் தனது நீதிநெறி விளக்கத்தில் மிக அழகாகச் சொல்கிறார்.

ஆக்கம் பெரியார் சிறியார் இடைப்பட்ட
மீச்செலவு காணின் நனி தாழ்ப தூக்கின்
மெலியது மேன்மேல் எழச் செல்லச் செல்ல
வலிதன்றே தாழும் துலைக்கு.

துலை என்றால் தராசு.  இராசிபலன் பார்க்கும்போது துலாராசி என்று பார்ப்பார்க்ள் அதில் தராசு படம் போட்டிருக்கும்.  அழகிய தமிழில் துலை என்ற சொல்கிறார் குமரகுருபரர்.  மீச்செலவு என்றால் வரம்பு மீறிய செயல்.



சில மக்களை நாம் தினந்தோறும் காணநேரிடும்.  மிக நல்லவர்களாக இருப்பார்கள்.  ஆனால் தான் நல்லவன் என்பதை எப்போது பார்த்தாலும் பறைசாற்றிக் கொண்டே இருப்பார்கள்.  தம்மைப் போல் மற்றவர் இல்லை என்பதை எடுத்துக்காட்ட பிறரை வைத்து ஒப்பிட்டுக் கொண்டே இருப்பார்கள்.  இப்படி ஒப்பீடு செய்து நல்லவர் என்று தன்னைத் தானே புகழ்தலும் நல்லதல்ல.  மிகவும் தீமையானது.  அவர்கள் செய்த நல்ல செயல்கள் பயனில்லாது போய்விடும்.  எனவே எப்போதும் தற்புகழ்ச்சியை நாம் விரும்பக்கூடாது.  இதை குமரகுருபரர் தனது நீதிநெறி விளக்கத்தில் மிக அழகாக விளக்குகிறார்.

விலக்கிய ஓம்பி விதித்தனவே செய்யும்
நலத்தகையார் நல்வினையும் தீதே புலப்பகையை
வென்றனம் நல்லொழுக்கில் நின்றேம் பிறவென்று
தம்பாடு தம்மிற் கொளின்.

ஓம்பி என்றால் விலக்கிவிட்டு விட்டுவிட்டு.  அதாவது விலக்கப்பட்டவைகளை ஒதுக்கிவிட்டு விதிக்கப்பட்டனவைகளையே செய்தாலும் அது தீதாக முடியும்.  தம் பாடு என்றால் தற்பெருமை.
புலப்பகை என்றால் ஐம்புலன்களுக்குப் பகையானவை அதாவது சுவை, ஒலி, ஊறு, ஓசை, நாற்றம் என்னும் ஐம்புலன்களால் சுவைக்கப்படுபவை அனுபவிக்கப்படுபவை.

இன்று நுனிநாக்கில் ஆங்கிலம் பேசி தமிழ் கவிதை மற்றும் பாடல்கள் படிக்கமுடியாதவை - கடினமானவை எனவே அவற்றைப் படிக்கமுடியவில்லை என்று கூறுபவர்கள் பெருகிவருகிறார்கள்.  தமிழ்பாடல்கள் மிக எளிமையானவையே.  நமக்குத் தமிழ் சொற்கள் தெரியவில்லை.  அதை நாம் ஒத்துக்கொள்ள வேண்டும்.  சித்திரமும் கைப்பழக்கம் என்பது போல் பாடல்களைத் தொடர்ந்து பொருளுடன் படித்தால் தமிழ்ப் பாடல்களில் உள்ள சுவை நன்றாகத் தெரியும்.  முயற்சி செய்யுங்கள்.