Wednesday, June 22, 2011

திருவாசகத்தில் திருத்தசாங்கம் -


இறைவனது ஊர் எது?

நாம் ஏற்கனவே பாண்டிய நாட்டை இறைவனது நாடு என்று கண்டோம்.  சரி இறைவனது ஊர் எது.? மாணிக்கவாசகரின் திருவாசகத்தில் திருத்தசாங்கம் என்ற பகுதியில் இருக்கிறது இதற்கான விடை.

தாதாடு பூஞ்சோலைத் தத்தாய் நமையாளும்
மாதாடும் பாகத்தன் வாழ்பதி என்? – கோதாட்டிப்
பக்தரெல்லாம் பார்மேல்சிவபுரம் போல் கொண்டாடும்
உத்தரகோசைமங்கை ஊர்

ஆம்.  பக்தர்களெல்லாம் நிலவுலகச் சிவலோகமெனப் பாராட்டிச் சிறப்பாகப் போற்றும் திருஉத்தரகோசமங்கை தான் அந்த ஊர்.  சரி இந்த ஊர் எங்கே உள்ளது?  இராமநாதபுரத்திலிருந்து சில கல் தொலைவில் உள்ளது.  பேருந்து வசதி உள்ளது.  திருவாதிரைத் திருநாள் இங்கு மிகச் சிறப்பான திருவிழா ஆகும்.  கண்டு களித்து சொல்லுங்கள்.

சரி இறைவன் மகிழ்ந்து இருக்கும் ஆறு எது. ? இதோ திருத்தசாங்கத்தின் பதில்.

செய்யவாய்ப் பைஞ்சிறகிற் செல்வீ நம் சிந்தை சேர்
ஐயன் பெருந்துறையான் ஆறு உரையாய் – தையலாய்
வான்வந்த சிந்தை மலங்கழுவ வந்திழியும்
ஆனந்தங் காணுடையான் ஆறு.

பாசத்தை நீக்கிய பிறகு உள்ளத்தே ஞான அமுதம் ஆறு போல் ஓடும்.  பற்று அறுத்தவர்கள் அந்த பேரின்பத்தை உணர்வார்கள்.  அது தான் சிவபெருமானுடைய ஆறு ஆகும்.

இறைவனின் திருமணக் கோலங்கள் - Four types of sculptures regarding the marriage function of Lord Shiva

இறைவனின் திருமணக் கோலங்கள்

சிவபெருமான் தனது திருமணக் கோலத்தை அகத்தியருக்கும் பிற அன்பர்களுக்கும் பல இடங்களிலே காண்பித்து உள்ளார்.  அப்படிப்பட்ட இடங்களை மங்களபுரி, கல்யாணபுரங்கள் என்று அழைப்பார்கள்.  திருமணத் தடை இருந்தால் இப்படிப்பட்ட இடங்களுக்குப் போய்வாருங்கள் எனப் பெரியவர்களும் சோதிடர்களும் கூறுவது வழக்கம்.
     தென்னகத்தில் இப்படி இறைவனின் திருமணக்கோலங்கள் பல இடங்களில் உள்ளன.  இவற்றை நான்காகப் பிரிக்கலாம்.
சில இடங்கிளல் சிவபெருமான் பார்வதியின் வலக்கரத்தைக் தன் வலக்கரத்தில் தாங்கி நிற்க திருமால் நீர் வார்த்துத் தாரைவார்க்கும் கோலம் முதலாவது வகை.  மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவில் இப்படிப்பட்ட சிற்பம் மிகவும் சிறப்பானதாகும்.  திருவான்மியூர் மற்றும் திருஒற்றியூர் முதலிய ஊர்களில் இப்படிப்பட்ட உருவம் உலாத்திருமேனியாக உள்ளது என்று கூறுகிறார்கள்.
இரண்டாவது கோலம் பார்வதியின் கரத்தைப் பற்றிக் கெண்டு சிவபெருமான் தீவலம் செய்யும் வகையில் அமைந்த கோலம். இப்படிப்பட்ட திருக்கோலம் திருமணஞ்சேரி, வடக்காலத்தூர், வேள்விக்குடி ஆகிய இடங்களில் உள்ளதாகக் கூறப்படுகிறது.
     மூன்றாவது வகைத் திருக்கோலம் திருமணம் நிறைவுபெற்று மணமக்கள் உயர் இருக்கையில் வரம் தரும் திருக்கோலம் ஆகும்.  இதை உமாமகேசுவரக் கோலம் என்பர்.  இப்படிப்பட்ட திருக்கோலம் திருமறைக்காடு, இடும்பாவனம், திருவேற்காடு போன்ற இடங்களில் உள்ளதாகக் கூறப்படுகிறது.  திருமழிசையிலும் மூலவருக்குப் பின்புறம் கடுசர்க்கரை எனப்படும் சுதையால் இக்கோலம் உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
     நான்காவது வகைத் திருக்கோலம் மணமக்கள் ஊர்வலமாகப் போகும் திருக்கோலம்.  இப்படிப்பட்ட மணக்கோலம் திருமுல்லைவாயில்(சென்னையை அடுத்த ஆவடிக்கு அருகில்) மற்றும் திருவீழிமிழலைத் திருத்தலங்களில் உள்ளதாகத் தெரிகிறது

பரீட்சித்து பெயர்க் காரணம் - Srimath Bhagavatham - Parikshith - explanation for the name in tamil language


பரீட்சித்து பெயர்க் காரணம்
பாரதப் போரின் இறுதிக் கட்டத்தில் அசுவத்தாமன் அபாண்ட அத்திரம் என்ற அம்பை உபயோகித்து பாண்டவர்களை அவர்கள் வம்சத்துடன் கொல்ல ஏவுகிறான்.  சீறிப் பாய்கிறது அந்த அத்திரம்.  பாண்டவர்களை நோக்கிச் சீறிப் பாய்ந்த அந்த அத்திரத்தைக் கண்டு அச்சப்பட்டனர் பாண்டவர்கள்.  கண்ணன் அனைவரையும் அச்சப்பட வேண்டாம் எனக் கூறி தனது சக்கரப் படையால் அதைக் கிரகித்துக் கொண்டார்.  அதேபோல உத்தரையின் கர்ப்பத்தில் உள்ள கருவை அந்த அத்திரம் அழிக்க முற்பட்ட போதும் கண்ணன் அந்தக் கருவைக் காப்பாற்றினார்.  எப்படிக் காப்பாற்றினார்?  சங்கு சக்கரத்தை ஏந்தி குழந்தையைச் சுற்றி வந்து அந்த பிரம்மாத்திரத்தை நாசம் செய்தார்.  கருவிலிருந்த அந்தக் குழந்தை ஒளி வீசும் முகமுடைய இவர் யார் என்று யோசிக்கும் போதே மறைந்தார் கண்ணன்.  மாதங்கள் கடந்தன.  சுபத்திரைக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது.  தர்மர் அந்தணர்களை அழைத்து என்ன பெயர் வைக்கலாம் என்று வினவினார்.  அவர்கள்,“இவன் கருவில் இருக்கையில் விஷ்ணுவால் காப்பாற்றப்பட்டதால் இவனுக்கு விஷ்ணுராதன் என்று பெயரிடலாம்“ என்று கூறினார்கள்.  இவன் இராமனைப் போல சத்தியத்தைக் காப்பாற்றும் அரசனாகத் திகழ்வான் என்று அறுதியிட்டு உரைத்தனர்.  விஷ்ணுதரன் நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்தான்.  ஆனால் அவன் கருவில் கண்ட உருவம் அவன் மனக்கண் முன் அடிக்கடி வந்தது.  யாரைப் பார்த்தாலும் அவர் கருவில் கண்ட அந்த மனிதனாக இருப்பாரோ என்று பரீட்சித்துப் பார்த்தான்.  அடிக்கடி பலபேரை இப்படிப் பரீட்சித்துப் பார்த்தால் தான் இவருடைய பெயர் பரீட்சித்து மகராசா என்று வழங்கியது என்று கூறப்படுகிறது.

Monday, June 20, 2011

திருமழிசை - Temples in Thirumazhisai near Chennai

நேற்று ஞாயிற்றுக் கிழமை.  காலையில் சென்னையில் உள்ள புலியூருக்குச் சென்றிருந்தேன்.  ஆம்.  இது தான் இன்றைய வடபழனி என்று அழைக்கப்படும் இடத்தின் பெயர்.  தாம்பரத்தில் இருந்து பேருந்தில் வந்தால் வடபழனி பேருந்து நிறுத்தத்தில் இறங்கியதும் ஒரு பெரிய கோபுரம் தெரியும்.  அதுதான் புலிக்கால் முனிவர் வழிபட்ட இடம் என்று சொல்கிறார்கள்.  எனவே தான் காரணப் பெயராக புலியூர் என்று இருந்திருக்கிறது.  புலியூர் சரோஜா என்றால் உங்களுக்கெல்லாம் நன்றாகத் தெரியும்.  ஆம் மானாட மயிலாட பார்த்து களிப்பவர்கள் தானே நீங்கள்.  அதில் நாட்டிய ஆசிரியர் இருப்பார்.  ஒருவேளை அவர்கள் இந்த பகுதியைச் சேர்ந்தவராக இருக்கலாம்.  சரி நான் சொல்ல வந்தததைச் சொல்கிறேன்.  வடபழனி பேருந்து நிற்குமிடம் வந்தது.  இறங்கினேன்.  ஒரு பழைய நூல்கள் விற்கும் நடைமேடைக் கடை இருந்தது.  அங்கே எனக்கு ஒரு நூல் கிடைத்தது.  நூலைத் திறந்தவுடன் தென்பட்ட பாடல்-

செய்யும் தொழில் சிறக்கும் செல்வ நலம் உயரும்
வையம் செழிப்புற்று வாழ்வு ஓங்கும் – தெய்வத்
திருமழிசைக் கோபுரநேர் தேவராசப் பேரார்
குருகணேசன் தாள் தொழுதக்கால்.

உடனே அந்த ஆலயத்தைக் காணவேண்டும் என்ற ஆவல் எழுந்தது.  அருகிலே விசாரித்தேன்.  பூந்தமல்லி வழியாக திருவள்ளூர் செல்லும் பேருந்து உள்ளதாகவும் வடபழனி பேருந்து நிலையத்தில் இருந்து போக முடியும் என்றும் சொன்னார்கள்.  விரைந்தேன்.  பேருந்து கிடைத்தது.  திருமழிசையில் கோயில் முன்பு பேருந்து நிறுத்தம் இருந்தது.  இறங்கினேன்.  இந்த தலம் சென்னை – பெங்களூரு நெடுஞ்சாலையில் பூவிருந்தவல்லியை அடுத்து மேற்கே திருவள்ளூர் வழியாகத் திருத்தணித்தணிக்குச்  செல்லும் சாலையில் அமைந்துள்ளது.
     ஒரு பெரியவரை அணுகினேன்.  இந்த ஊருக்குத் திருமழிசை எனப் பெயர் ஏன் வந்தது என வினவினேன்.  என்னை கோவிலில் அமரச் சொல்லி அவர் அந்த ஊரின் வரலாற்றையும் கோவில் வரலாற்றையும் கூறினார்.  முற்காலத்தில் இந்த இடம் அழிஞ்சல் காடாக இருந்துள்ளது.  அப்போது அகத்தியரும் புலத்தியரும் இங்கு சிவதரிசனம் கண்டுள்ளனர்.  செங்கல்பட்டு செங்கை எனப்படுவது போல சைதாப்பேட்டை சைதை எனப்படுவது போல திரு அழிசை என இந்த ஊர் அழைக்கப்பட்டுள்ளது.  திருஅழிசை திருவழிசை ஆனதாகவும் பின்னர் மருவி திருமழிசை ஆகிவிட்டதாகவும் அந்தப் பெரியவர் கூறினார்.  இப்படியெல்லாமா ஊர் பெயர் மாறும் என்று நான் கேட்டதற்கு.  ஏன் தம்பி பூவிருந்தவல்லியை பூந்தமல்லி என்று அரசு அழைக்கிறதே.  அதற்கு என்ன சொல்லுகிறீர்கள் என்று பதில் கேள்வி கேட்டார்.  நான் வாய்மூடி மௌனியாகி விட்டேன்.  இந்த ஊரில் உதித்த ஆழ்வார் பெயர் இந்த ஊரின் பெயராலேயே திருமழிசை ஆழ்வார் என்று வழங்கி வருவதையும் அவர் சுட்டிக் காட்டினார்.  சோழர்கள் காலத்தில் இது பெருநகரமாக இருந்ததாம்.  வைணவர்கள் இருந்த பகுதி அகரம் எனவும் சிவாலயம் இருந்த பகுதி அகத்தீசுவரம் என்ற பெயரிலும் அழைக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.  பின்னர் அகத்தீசுவரம் என்ற பெயரும் மாறி பத்திரங்களில் உடையவர் கோவில் என்று வழங்கியதாகவும் அவர் தெரிவித்தார்.  அகத்தியர் வழிபட்டதால் ஆதியில் அகத்தீசுவரம் என்றே அழைக்கப்பட்டுள்ளது.
     இந்த கோவிலைப் பற்றிய வரலாறு.   அகத்திய முனிவர் அழிஞ்சல் மரத்தின் கீழ் தமது சீடனான புலத்தியருடன் சிவலிங்கம் அமைத்து வழிபட்டு சிவபார்வதி திருமணக் கோலத்தைக் கண்டு மகிழ்ந்த வரலாறு.  அவர் மேலும் கூறியதாவது.  இப்பகுதியில் அழிஞ்சல் மரக்காடுகள் அந்தகாலத்தில் அதிகம் இருந்தன.  அதனையொட்டி இப்பகுதியில் அழிஞ்சல்வாக்கம், அழிசூர், அழிஞ்சங்காடு போன்ற ஊர்கள் இருப்பதாகவும்  ஏர்அழிஞ்சல் மரத்தின் கீழ் இருந்து இறைவனை வழிபட்டால் நினைப்பது சீக்கிரம் நடக்கும் என்றும் அவர் தகவல் கொடுத்தார்.  அழிசூரில் இப்போதும் அழிஞ்சல் மரம் உள்ளது என்றார் அவர்.   
     இந்த ஆலயத்திற்குக் கிழக்கிலும் தெற்கிலும் வாயில்கள் உள்ளன.  கிழக்கு வாயில் குளத்தினை ஒட்டி உள்ளது. தெற்கு வாயிலில் நெடிய கோபுரம் உள்ளது.  உள்ளே நுழைந்தவுடன் கணபதி சன்னிதானம்.  இவரை தேவராச கணபதி என அழைக்கிறார்கள்.  இவரைப் பற்றித் தான் நான் முதலில் வடபழனியில் படித்த பாடல் பாடப்பட்டுள்ளது.
செய்யும் தொழில் சிறக்கும் செல்வ நலம் உயரும்
வையம் செழிப்புற்று வாழ்வு ஓங்கும் – தெய்வத்
திருமழிசைக் கோபுரநேர் தேவராசப் பேரார்
குருகணேசன் தாள் தொழுதக்கால்.

வெளிப்பிரகாரத்தை வலம் வந்தேன்.  தென்மேற்கு மூலையில் ஒரு அலங்கார மண்டபம். அடுத்து வடக்குப் பிரகாரத்தில் கிழக்கு நோக்கியவாறு முருகன் சன்னதி.  கருவறையில் வள்ளியம்மை, தெய்வானையுடன் வீரவாகுத் தேவரும் உள்ளார்.  இதற்கு இணையாக தெற்கில் புலத்தியர் வழிபட்ட சிவலிங்கம் உள்ளது.  வடக்குப் பிரகாரத்தில் வாகன அறை.  அதையொட்டி சனீசுவரன் சன்னதி.  அருகிலே ஒரு கிணறு.  கல்யாணதீர்த்தம் என்று பெயர்.  இந்த கிணற்று நீரே கோவிலில் அபிடேகம் முதலியவற்றுக்குப் பயன்படுத்தப்படுவதாகச் சொல்கிறார்கள்.  கிழக்குப் பிரகாரத்தில் பலிபீடம், கொடிமேடை, நந்தி மண்டபம் உள்ளது.  வழிபட்டு பின்னர் உட்பிரகாரத்தை அடைந்தேன்.  இங்கே வடக்கில் தெற்கு நோக்கியவாறு மூன்று சன்னதிகள்.  நடுவில் கூத்தாடும் இறைவன் இறைவியுடன்.  அம்பிகை ஐயனை நோக்குகிறார்.  கிழக்கில் குளிர்ந்தநாயகி சன்னதி.  மேற்கில் காட்சிகொடுத்த நாயகர் சன்னதி.  வலம் வந்தால் மகாமண்டபத்தை அடைகிறோம்.  இங்கே தான் அகத்தியருக்கும் சோழமன்னருக்கும் காட்சி கொடுத்த ஒத்தாண்டேசுவரர் எனும் கைதந்த பிரான் சிவலிங்கத் திருமேனியாகக் காட்சி அளிக்கிறார்.  மேனி சிலிர்த்தது.  மூலவருக்கு நாகாபரணம் அணிவித்து மிக நேர்த்தியாக அலங்காரம் செய்திருந்தார்கள்.  இறைவனின் பின்புறம் ஒரு மாடம்.  அதிலே திருமணக்கோலத்தில் இறைவனும் இறைவியும்.  இறைவனின் திருமணக் கோலம் தான் நாம் காண்பது.  கண் குளிர்ந்தது.
     தமிழகத்தில் இறைவனின் திருமணக் கோலம் நான்கு வடிவங்களில் பல கோவில்களில் உள்ளது.  இதை நாளை நான் விளக்குகிறேன்.

சைவப் பாடல்கள் - Songs on Lord Shiva in Tamil

சைவப் பாடல்கள்

இறைவன் புகழை பன்னிருதிருமுறையும் நாலாயிர திவ்விய பிரபந்தமும் இனிக்க இனிக்கப் பாடின.  செந்தமிழால் பாடின.  தமிழ் என்று சொல்லிக் கொள்வதிலும் தமிழன் என்று சொல்லிக் கொள்வதிலும் பெருமை பட்டார்கள் நம் முன்னோர்கள்.  எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்று இருந்த காலம் அது.  நாம் சில பாடல்களைப் பார்ப்போம்.

திருவாசகம் என்னும் உயரிய சைவ நூலிலே திருத்தசாங்கம் என்று ஒரு பகுதி.  தசாங்கம் என்றால் என்ன?  தச என்றால் பத்து.  அங்கம் என்றால் உறுப்பு.  பத்து உறுப்புகள் என்று பொருள்.  அரசனைப் பற்றி புகழ்ந்து பாடும் போது,
பெயர்
நாடு
ஊர்
ஆறு
மலை
வாகனம்
படை எனும் ஆயுதம்
முரசு,
தார் என்ற சொல்லப்படுகிற மாலை
கொடி
ஆகியவை சிறப்பித்துப் பாடுவது வழக்கம்.  இங்கே மணிவாசகர் இறைவனைப் பற்றிப் பாடும் போது இவற்றை விவரித்துப் பாடுகிறார்.  பாடலை நோக்குவோமா?

முதல் பாடல்
ஏரார் இளங்கிளியே எங்கள் பெருந்துறைக்கோன்
சீரார் திருநாமம் தேர்ந்துரையாய் – ஆரூரன்
செம்பெருமான் வெண்மலரான் பாற்கடலான் செப்புவபோல்
எம்பெருமான் தேவர்பிரான் என்று.
 தாமரை மலரிலே அமர்ந்துள்ள அயனும் பாற்கடலில் பள்ளிகொண்டுள்ள அரியும் சிவபெருமானை செம்மைப்பெருமான், எம்பிரான், விண்ணவர் தலைவன் என்று போற்றுகின்றனர். அது போலவே பேர் ஆயிரம் உடைய இறைவனது திருப்பெயர்க்ளை பயன் அறிந்து சொல்ல வேண்டும்.

பேர் சொல்லியாகிவிட்டது.  நாட்டை பற்றிக் கூறவேண்டுமே.  இது சிவபெருமானுடைய நாடு?  இதோ பதில்.

ஏதமிலா இன்சொல் மரகதமே ஏழ் பொழிற்கும்
நாதன் நமை ஆளுடையான் நாடுரையாய் – காதலவர்க்கு
அன்பு ஆண்டு மீளா அருள் புரிவான் நாடு என்றும்
தென்பாண்டி நாடே தெளி.

ஈசனைத் தேடி வடநாடு சென்று காசி, கயா, இமயமலை என்றெல்லாம் சுற்ற வேண்டிய அவசியமே இல்லை.  இறைவனின் நாடு தென்பாண்டி நாடு.  அவன் ஆண்ட இடம் மதுரை மாநகரம்.  ஆம்.  அங்கயற்கண்ணியை மணந்து அழகிய மதுரையை ஆண்டவன் அல்லவா ஈசன்.  மதுரை மாநகரில் பல திருவிளையாடல்களை நிகழ்த்தியவன் அல்லவா அந்த சிவபெருமான்.  எனவே தான் ஏழுலகிற்கும் தலைவனான சிவபெருமானது நாடு எது என்று கேட்டால் அன்பர்களின் அன்பினை ஏற்று பிறவித்தளையை அறுத்து மீண்டும் கருவில் உருவாகாதபடி பிறவி நோயை அகற்றி நமக்கெல்லாம் நன்மை செய்பவனது நாடு தெற்கின் கண் உள்ள பாண்டிய நாடே ஆகும்.

வைணவப் பாடல்கள் - Thirumangai Alwar thirukurunthandagam song

வைணவப் பாடல்கள்

நிதியினைப் பவளத் தூணை நெறிமையால் நினையவல்லார்
கதியினைக் கஞ்சன் மாளக் கண்டு முன் அண்டம் ஆளும்
மதியினை மாலை வாழ்த்தி வணங்கி என் மனத்து வந்த
விதியினைக் கண்டு கொண்ட தொண்டனேன் விடுகிலேனே.

திருமங்கை ஆழ்வார் நெடுமாலை எப்படியெல்லாம் புகழ்ந்து பாடுகிறார் பாருங்கள்.  எளிமையான தமிழ்.
செல்வக் குவியலை
பவளத்தூண் போன்றவனை
மனதை நெறிப்படுத்தி நினைக்க வல்லவர்களுக்கு துணையாய் இருப்பவனை
உலகெங்கும் அட்டூழியம் செய்த கம்சனை அழித்து பின்னர் உலகத்தை காப்பதிலே அக்கறை செலுத்தியவனை
திருமாலை
நான் வாழ்த்தி வணங்கி என் மனத்திலே நிறுத்தி என் விதியை மாற்றவல்லவன் இவன் என்ற காரணத்தால் தொண்டனாகிய நான் என் இறைவனை இனிவிட மாட்டேன்.  பிரியமாட்டேன்.

செல்வம் என்று சொல்லி இருக்கலாம்.  ஆனால் நிதி என்று ஆழ்வார் சொல்லுகிறார்.  நிதி என்பது செல்வக் குவியல்.  நிதியை நவநிதிகள் என்றும் சொல்லுவார்கள்.  நவநிதிகள் யாவை?  கச்சநிதி, கற்பநிதி, சங்கநிதி, பதுமநிதி, நந்த நிதி, நீல நிதி, மகாநிதி, மகாபதும நிதி, முகுந்த நிதி ஆகியவையே நவநிதிகள் ஆகும்
சரி.  இந்தப் பாடல் மூலம் நாம் கற்றுக் கொண்ட தமிழ்ச் சொற்கள் என்ன?
நிதி என்றால் பொருள், செல்வம்
கதி என்றால் வழி, மார்க்கம்
மதி என்றால் அறிவு
மால் என்றால் திருமால்
மேற்கண்ட பாடல் திருமங்கை ஆழ்வார் அவர்களின் திருக்குறுந்தாண்டகத்தில் முதல் பாடல்.

சரி அடுத்த பாடலுக்குப் போவோமா?

காற்றினைப் புனலைத் தீயைக் கடி மதிள் இலங்கை செற்ற
ஏற்றினை இமயமேய எழில் மணித்திரளை இன்ப
ஆற்றினை அமுதம் தன்னை அவுணர் ஆருயிரை உண்ட
கூற்றினை குணங்கொண்டு உள்ளம் கூறு நீ கூறுமாறே

காற்று-நீர்-தீ- நிலம்- வானம் ஆகியவை கட்டுக்கோப்புடன் இருந்த வலிமையான மதிள்கள் அமைந்த இலங்கையை அழித்த சிங்கத்தை
இமயமலையில் எழுந்தருளி இருக்கும் மணித்திரட்சியை,
பேரின்பப் பெருவெள்ளத்தை,
அமுதம் போன்றவனை,
அசுரர் உயிரை உண்ட கூற்றுவன் போன்றவனை
மனமே நீ அந்த இறைவனுடைய குணங்களை வகைப்படுத்திக் கூறு.
பொதுவாக ஐம்பூதங்களை இறைவனின் வடிவமாகக் காண்பது தமிழ் மரபு.  இறைவனைப் போற்றும் போது
பூ நிலாய ஐந்துமாய்
புனற்கண் நின்ற நான்குமாய்
தீநிலாய மூன்றுமாய்
சிறந்த காலிரண்டுமாய்,
மீநிலாய தொன்றுமாகி (திருச்சந்த விருத்தம்)
என்று வரிசைப்படுத்துவார்கள்.

ஒன்றினிற் போற்றிய விசும்பு நீயே
இரண்டின் உணரும் வளியும் நீயே
மூன்றின் உணரும் தீயும் நீயே
நான்கின் உணரும் நீரும்  நீயே
ஐந்துடன் முற்றிய நிலனும் நீயே
என்று பரிபாடல் பாட்டு ஒன்று கூறும்.
இந்தப் பாடல் மூலம் நாம் கற்றுக் கொண்ட தமிழ்ச் சொற்கள்
புனல்-நீர், கடி-காவல், ஏறு-காளை மற்றும் சிங்கம்


Tuesday, May 31, 2011

HAMPI - YANTHROTHTHARAGA HANUMAR TEMPLE_யந்த்ரோத்தாரக அனுமான்

யந்த்ரோத்தாரக அனுமான்

விருபாட்சிநாதர் ஆலயத்திலிருந்து கடைவீதி வழியாக நடந்து துங்கபத்திரா நதிக்கரை ஓரம் உள்ள மலைப்பகுதியை அடைந்து சின்ன சின்ன மலைகளின் மீது நடந்து குகை போன்ற அமைப்புகளைக் கடந்தால் நாம் சக்ர தீர்த்தம் என்னும் துங்கபத்திரா நதிக்கரைக்கு வந்து விடுகிறோம்.  மிக அழகிய காட்சிகள்.  பரந்து விரிந்து பாயும் துங்கபத்திரா நதி.  பரிசலில் செல்லும் உள்ளூர் மக்கள்.  எதிர்கரையில் தொலைவில் நமக்குத் தெரிவது அஞ்சனாத்ரி மலை.  ஆங்காங்கே மண்டபங்கள்.  மலை உச்சிகளில் கோவில்கள்.  கிருஷ்ணதேவராயர் காலத்தில் சிறந்திருந்த இந்த மதம் எப்படியெல்லாம் செழித்திருந்தது என்பது இங்கிருந்து பார்த்தாலே தெரியும்.  அவ்வளவும் சுல்த்தான் பேரரசர்கள் அழித்திருக்கிறார்கள்.  சின்னாபின்னப்படுத்தி உள்ளார்கள்.  இந்த கரையில் நின்று துங்கபத்திரா நதியையும் எதிரில் தெரியும் குன்றுகள் – மண்டபங்கள் – கோவில்கள் – சுழன்று ஓடும் நதிநீர்ப் பிரவாகம் இவைகளைப் பார்த்துக் கொண்டே இருந்தால் நேரம் போவதே தெரியாது.  இந்த இடத்தில் தான் சுக்கிரீவன் இராமபிரானிடம் சீதாதேவியின் நகைகளைக் காட்டியதாகத் தெரிவித்தார் வழிகாட்டி.  வியாசராசர் இந்த சக்கர தீர்த்தத்தில் குளித்துக் கொண்டிருந்த போது தான் இங்கு ஒரு கோவில் எழுப்பும்படி அனுமான் கூறினாராம்.  பக்தியுடன் இந்த சக்கரதீர்த்தத்தில் இருந்து நீர் எடுத்து தலையில் தெளித்துக் கொண்டோம்.  பின்னர் இராமர் கோவிலை அடைந்து பரந்தாமனைத் தொழுதோம்.  அங்கிருந்து சில படிகள் ஏறினால் நாம் அனுமன் சன்னதியை அடையலாம்.  வியாசராசர் இந்த சிலாவடிவத்தை வடிக்க மிகவும் பிரயத்தனப்பட்டதாக கோவில் அர்ச்சகர் தெரிவித்தார்.  கரிக்கட்டையால் அனுமன் படம் வரைந்தவுடன் ஓவியம் காணாமல் போய்விடுமாம்.  பின்னர் ஒரு அனுமாரின் வாலை இன்னொரு அனுமன் பிடித்துக் கொண்டிருப்பது போன்று அமைத்து அதன்  நடுவில் முக்கோணங்கள் அமைத்து யந்திரம் படைத்து அதன் நடுவில் அனுமனை வடித்து அங்கு பிரதிட்டை செய்துள்ளதாகத் தெரிவித்தார்கள்.  மிகவும் சக்திவாய்ந்த அனுமன் என்றும் வேண்டியதைத் தருவார் என்றும் கூறினார் அர்ச்சகர்.  நாங்கள் எல்லோரும் அந்த கோவிலில் அமர்ந்து அவர் கூறிய வரலாற்றைக் கேட்டோம்.  பிறகு தீப ஒளியில் அனுமாரைக் காட்டி அனுமன் துதியை எங்களைக் கூற வைத்தார் அந்த வயதான பூசாரி.  பின்னர் அங்கிருந்து நாங்கள் எங்கள் வேன் எண் 5ஐத் தேடி வந்து அமர்ந்தோம்.  அங்கிருந்து விசயநகர சாம்ராஜ்யத்தின் தலைநகரின் பிற பகுதிகளைப் பார்க்கக் கிளம்பினோம்.


விருபாட்சி கோயில் முன்பு

அனுமார் கோயில் செல்லும் வழி

அனுமார் கோயில் செல்லும் வழியில் பிற கோவில்கள்




உக்ர நரசிம்ஹர்   கோயில் முன்பு

உக்ர நரசிம்ஹர்   கோயில் முன்பு

உக்ர நரசிம்ஹர்   கோயில் முன்பு

படாவி லிங்கம்

படாவி லிங்க சன்னதி முன்பு


உக்ர நரசிம்ஹர் கோயில் முன்பு

விஜய நகர சாம்ராஜ்ய மதில் சுவர்

சக்ர தீர்த்தம் முன்பு

சக்ர தீர்த்த padithurai

துங்கப்ற நதிகரையில் ஆங்காங்கே  கோயில்கள் மண்டபங்கள்


சகர தீர்த்த பகுதியில் சூரிய நாராயணர் கோயில்

யந்த்ரோத்தாரக அனுமார் கோயில் சன்னதி

யந்த்ரோத்தாரக அனுமார் கோயில் சன்னதி

அனுமார் கோயில் முன்பு

அனுமார் கோயில் கல் கொடிமரம்




தொடரும்

Monday, May 30, 2011

நவபிருந்தாவன் Navabirundhavan - jeevasamadhi of nine acharyars


நலம் தரும் நவபிருந்தாவனம்

கடந்த மாதம் என் நண்பர் கோவை இராமநாதபுரம் பகுதியில் இரகுமான்சேட் காலனிப் பகுதியில் உள்ள திரு.கணேசன் அவர்களுடன் நான் காலையில் நடைப்பயிற்சிக்காகச்  சென்று கொண்டிருந்தேன்.  அப்போது அவர் நவபிருந்தாவனம் என்னும் திருத்தலத்திற்குச் சென்று வந்ததாகவும் துங்கபத்திரா நதியின் நடுவில் உள்ள அந்த சீவசமாதிக்குச்  சென்ற போது இறைஉணர்வு மிகஅதிகமாக மேலிட்டதாகக் கூறி அந்த இடம் குறித்த ஒரு நூலை என்னிடம் கொடுத்தார்.  நூலின் தலைப்பு ‘நவநிதி நல்கும் நவபிருந்தாவனம்’.  இந்த அருமையான நூலை எழுதியவர் அம்மன் சத்தியநாதன் என்னும் வித்தகர்.  மிக அருமையான நூல்.  படங்களுடன் மிக அருமையாகப் பல தகவல்களைத் தந்துள்ளார் அந்த நூலில்.  சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள அருள்மிகு அம்மன் பதிப்பகத்தின் வெளியீடு.  படித்த உடனேயே அந்த திருத்தலத்திற்குச்  செல்ல வேண்டும் என்ற ஆவலைத் தூண்டும் வண்ணம் இருந்தது அவரது கைவண்ணம்.  பல நாட்களாக எனக்கு இருந்த பல ஐயங்களைத் தீர்த்து வைத்தது இந்த அருமையான நூல்.  படித்த உடனேயே என் நண்பர் திரு.கணேசனைத் தொடர்பு கொண்டு நவபிருந்தாவனம் செல்ல வேண்டும் என்னும் என் ஆவலை வெளியிட்டேன்.  அவர் தன்னுடைய இரு சக்கர வண்டியில் உடனே வந்தார்.  என்னை ஸ்ரீ இராகவேந்திரர் சேவா டிரஸ்ட் என்னும் இடத்திற்கு அழைத்துப் போனார். (தொலைபேசி எண் ௦0422 2245454).  அந்த அலுவலகமே ஒரு கோவில் போல இருந்தது.  பல தெய்வங்களின் படங்கள்.  நெய் தீபங்கள் எல்லா இறைப் படங்கள் முன்னும் மிளிர்ந்தன.  அலுவலகத்தில் இருந்த எழுத்தரிடம் நவபிருந்தாவனம் செல்ல வேண்டும் என்ற என் விருப்பத்தினைத் தெரிவித்தேன்.  உடனே அவர் மே 10ஆம் தேதி செல்லவிருப்பதாகக் கூறினார்.  உடனே என் பெயரையும் என் துணைவியின் பெயரையும் பதிந்தேன்.  மே 10ஆம் தேதி காலை 8 மணி அளிவில் குர்லா விரைவுவண்டியில் பெங்களூரு நோக்கி பயணித்தோம்.  பெங்களூரிலிருந்து இரவு ஹோஸ்பேட் செல்லும் விரைவு வண்டியில் பயணித்து 11ஆம் தேதி காலை 7.30 மணிக்கு ஹோஸ்பேட் அடைந்தோம்.  அங்கிருந்து வேன் மூலம் ஹம்பி நோக்கிப் பயணித்தோம்.  நாங்கள் மொத்தம் 90 பேர் சென்றிருந்தோம்.  அனைவருக்கும் தலையில் அணிய ஒரு ஆரஞ்சு வண்ண தொப்பி அடையாளத்திற்காகக் கொடுக்கப்பட்டது.  வண்டி ஓட்டுநர்களுக்கும் ஆரஞ்சு வண்ண தொப்பியும் பனியனும் கொடுத்தார்கள்.  பயணிகள் எளிதில் ஓட்டுநர்களை அடையாளம் கண்டுகொள்ள வேண்டும் என்ற நல்லெண்ணத்துடன.   மொத்தம் 9 வான்கள் மற்றும் ஒரு மகிழுந்து.  எங்களுக்கு வேன் எண் 5 ஒதுக்கப்பட்டது.  எங்களுடன் அந்த வேனில் சேலத்தைச் சேர்ந்த நண்பர் நெடுஞ்செழியன் மற்றும் குடும்பத்தினர், கோவையைச் சேர்ந்த பேராசிரியர் கருணாநிதி மற்றும் அவர் மக்கள் மற்றும் இயற்கை மருத்துவர் மற்றும் புகைப்பட வல்லுநர் கோவையைச் சேர்ந்த திரு.இரமேஷ் அவர்கள் வந்தனர்.  சிறிது நேரத்தில் துங்கபத்திரா நதிக்கரையை அடைந்தோம்.  அருமையான படித்துரை.  அசத்தலான குளியல்.  காலைச் சிற்றுண்டி.  முடிந்ததும் அங்கிருந்த விருபாட்சர் கோவிலை நோக்கி நடந்தோம்.
விருபாட்சர் கோவில் மண்டபத்தின் நெற்றிப் பகுதியில் அழகிய வேலைப்பாடு

துங்கபத்திரா நதியின் படித்துரை

ஹம்பியில் துங்கபத்திரா நதிக்கரை

ஹம்பியில் துங்கபத்திரா நதிக்கரையில் உள்ள விருபாட்சர் கோவில் கோபுரம்
தொடரும்.
தொடரும்....












Saturday, January 22, 2011

tirupugal song no. 2

PRAISE YOUR MOTHER TONGUE - SPEAK IN MOTHER TONGUE - PRAY IN MOTHER TONGUE


அருணகிரிநாதரின்
திருப்புகழ் - பாடல் 2
பக்கரைவி சித்ரமணி
(விநாயகர் துதி)
தத்ததன தத்ததன தத்ததன தத்ததன      தத்ததன தத்ததன ...... தனதான   .
........ பாடல் .........  
பக்கரைவி சித்ரமணி பொற்கலணை யிட்டநடை      பட்சியெனு முக்ரதுர ...... கமுநீபப்  
பக்குவம லர்த்தொடையும் அக்குவடு பட்டொழிய      பட்டுருவ விட்டருள்கை ...... வடிவேலும்  
திக்கதும திக்கவரு குக்குடமும் ரட்சைதரு      சிற்றடியு முற்றியப ...... னிருதோளும்  
செய்ப்பதியும் வைத்துயர்தி ருப்புகழ்வி ருப்பமொடு      செப்பெனஎ னக்கருள்கை ...... மறவேனே  
இக்கவரை நற்கனிகள் சர்க்கரைப ருப்புடனெய்      எட்பொரிய வற்றுவரை ...... இளநீர்வண்  
டெச்சில்பய றப்பவகை பச்சரிசி பிட்டுவெள      ரிப்பழமி டிப்பல்வகை ...... தனிமூலம்  
மிக்கஅடி சிற்கடலை பட்சணமெ னக்கொளொரு      விக்கிநச மர்த்தனெனும் ...... அருளாழி  
வெற்பகுடி லச்சடில விற்பரம ரப்பரருள்      வித்தகம ருப்புடைய ...... பெருமாளே.  
......... சொல் விளக்கம் .........  
பக்கரை விசித்திர மணி பொன் க (ல்) லணை இட்ட நடை பட்சி எனும் உக்ர துரகமும் நீபப்  பக்குவ மலர்த் தொடையும்
அக் குவடு பட்டு ஒழிய பட்டு உருவ விட்டு அருள் கை வடி வேலும் 
திக்கு அது மதிக்க வரு குக்குடமும் ரட்சை தரும் சிற்று அடியும்
முற்றிய பன்னிரு தோளும் 
செய்ப்பதியும் வைத்து உயர் திருப்புகழ் விருப்பமொடு செப்பு என எனக்கு அருள்கை மறவேனே 
இக்கு அவரை நற்கனிகள் சர்க்கரை பருப்புடன் நெய் எள் பொரி அவல் துவரை இள நீர் வண்டு  எச்சில் பயறு அப்ப வகை பச்சரிசி பிட்டு வெளரிப்பழம் இடிப் பல்வகை தனி மூலம்  மிக்க அடிசில் கடலை பட்சணம் எனக் கொள் ஒரு விக்கிந சமர்த்தன் என்னும் அருள் ஆழி  வெற்ப
குடிலச் சடில வில் பரமர் அப்பர் அருள் வித்தக மருப்பு உடைய பெருமாளே. 


பக்கரை விசித்திர மணி பொன் க (ல்) லணை இட்ட நடை பட்சி எனும் உக்ர துரகமும் ...  அங்க அடி, அழகிய மணி, பொன்நிறமான சேணம் இவைகளுடன் மிகக் கம்பீரமாக நடக்கின்ற மயிலாகிய மிடுக்கான குதிரையையும் 

நீபப் பக்குவ மலர்த் தொடையும் ... கடம்ப மரத்தில் பூத்த சிறந்த மலைர்களால் தொடுக்கப்பட்ட மலர்மாலையையும்

அக் குவடு பட்டு ஒழிய பட்டு உருவ விட்டு அருள் கை வடி வேலும் ... அந்த கிரௌஞ்ச மலையே அழிந்துவிடும்படி அந்த மலையை ஊடுருவிச் செல்லும்படி விடப்பட்ட முருகன் கையில் உள்ள கூர்மையான வேலையும்

திக்கு அது மதிக்க வரு குக்குடமும் ... எண் திசைகளும் மதிக்கும்படி கொடியிலே எழுந்தருளியிருக்கும் சேவலையும் 

ரட்சை தரும் சிற்று அடியும் முற்றிய பன்னிரு தோளும் ... நம்மையெல்லாம் காத்து அருளும் சிறிய திருவடிகளையும், திரண்ட பன்னிரண்டு தோள்களையும் 

செய்ப்பதியும் வைத்து உயர் திருப்புகழ் விருப்பமொடு செப்பு என எனக்கு அருள்கை மறவேனே ... வயலூரையும் பாட்டிலே வைத்து திருப்புகழ் பாடிடுக என்று முருகன் கூறி அருள் புரிந்ததை நான் என்றும் மறக்க மாட்டேன். 

இக்கு அவரை நற்கனிகள் சர்க்கரை பருப்புடன் நெய் ... கரும்பு, அவரை, நல்ல பழங்கள், சர்க்கரை, பருப்பு, நெய் 

எள் பொரி அவல் துவரை இள நீர் வண்டு எச்சில் ... எள், பொரி, அவல், துவரை, இளநீர், தேன், 

பயறு அப்ப வகை பச்சரிசி பிட்டு வெளரிப்பழம் ... பயறு, அப்ப வகைகள், பச்சரிசி, பிட்டு, வெள்ளரிப்பழம், 

இடிப் பல்வகை தனி மூலம் மிக்க அடிசில் கடலை பட்சணம் எனக் கொள் ...பல வகையான மாவு வகைகள், ஒப்பற்ற கிழங்குகள், சிறந்த உணவு வகைகள், கடலை போன்றவற்றைப் பட்சணமாகக் கொள்ளும்  

ஒரு விக்கிந சமர்த்தன் என்னும் அருள் ஆழி வெற்ப ... ஒப்பற்ற, வினைகளைப் போக்க வல்லவர் என்று சொல்லப்படும் அருட் கடலே, கருணை மலையே,

குடிலச் சடில வில் பரமர் அப்பர் அருள் வித்தக ... வளைந்த சடையையும், பினாகம் எனப்படும் வில்லையும் கொண்ட இறைவன் சிவபெருமான் பெற்றருளிய வித்தகனே - சிறப்புடையவனே,

மருப்பு உடைய பெருமாளே. ... ஒற்றைக் கொம்பினை உடைய பெருமானே   

  * திருவண்ணாமலையில் 'முத்தைத்தரு' என்ற முதல் பாட்டைப் பாடிய பின்னர் அருணகிரிநாதரை வயலூர் என்ற 'செய்ப்பதி'க்கு முருகன் வரப்பணித்தார். அங்கு தமது மயிலையும், கடப்ப மாலையையும், வேலையும், சேவலையும், பன்னிரு தோள்களையும், திருவடிகளையும், வயலூரையும் வைத்துப் பாடல் பாடக் கூறினார். அந்த அபூர்வமான பாடல்தான் இது.  ** மேருமலையில் முன்னர் 'வியாசர்' விநாயகரிடம் தாம் பாரதத்தைச் சொல்லச் சொல்ல வேகமாக ஏட்டில் எழுதப் பணித்தார். எழுதுகோலாக தனது கொம்புகளின் ஒன்றை ஒடித்து விநாயகர் எழுதத் தொடங்கினார். எனவே அவருக்கு 'ஏகதந்தன்' (ஒற்றைக் கொம்பர்) என்ற பெயர் வந்தது. 
இன்று நாம் கற்றுக் கொண்டா புதிய சொற்கள்

துரகம் - குதிரை
நீபம் - கடம்பம்
தொடை - மலர்மாலை
குவடு - மலை
குக்குடம் - சேவல்
இக்கு - கரும்பு
கனிகள் - பழங்கள்
வண்டு எச்சில் - தேன்
ஆழி - கடல்
வெற்பு - மலை
மருப்பு - கொம்பு

Thursday, January 20, 2011

tiruppugal - song number 1

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு

தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவ வேண்டும் என்ற அவா எல்லோர் மனதில் இருந்தாலும் - நாம் திரும்பிய பக்கமெல்லாம் - ஊடகங்களில் தமிழ் குறைந்து ஆங்கில ஆதிக்கம் ஓங்கிக் கொண்டிருக்கிறது.  இதனால் வழக்கில் இருந்த பல தமிழ்ச் சொற்கள் இன்று மெல்ல மெல்ல மறைந்து கொண்டிருக்கின்றன.  இளைய தலைமுறையினருக்குப் பல தமிழ்ச் சொற்களைப் புரிந்து கொள்ளவே முடியவில்லை.
சரி - நாம் வழக்கில் இருந்த தமிழ்ச் சொற்களை மறப்பதைத் தடுக்க தினமும் சில தமிழ்ப் பாடல்களை பொருளுடன் படித்துப் பார்ப்போம்.  அதில் உள்ள சொற்களைத் தொகுத்து அறிந்து கொள்வோம்.  ஒரு சிறிய முயற்சி தான் ...
அருணகிரி நாதர் அவர்கள் அருளிய திருப்புகழ் பாடல்களி-ருந்து சில பாடல்களை முத-ல் படிப்போம்.  கணபதியைத் துதிக்க ஒப்பற்ற பாடல் இது.  இசைத் தமிழில் பாடவும் வசதியாக எப்படிப் பாட வேண்டும் என்ற விளக்கத்துடன் உள்ள தமிழ்ப் பாடல்களை அருணகிரிநாதர் அருளி உள்ளார்.

திருப்புகழ்

அருணகிரிநாதரின்
திருப்புகழ் - பாடல் 1
கைத்தலம் நிறைகனி
(விநாயகர் துதி)
தந்தன தனதன தந்தன தனதன      தந்தன தனதன ...... தனதான  
......... பாடல் .........  
கைத்தல நிறைகனி யப்பமொ டவல்பொரி      கப்பிய கரிமுக ...... னடிபேணிக்  
கற்றிடு மடியவர் புத்தியி லுறைபவ      கற்பக மெனவினை ...... கடிதேகும்  
மத்தமு மதியமும் வைத்திடு மரன்மகன்      மற்பொரு திரள்புய ...... மதயானை  
மத்தள வயிறனை உத்தமி புதல்வனை      மட்டவிழ் மலர்கொடு ...... பணிவேனே  
முத்தமி ழடைவினை முற்படு கிரிதனில்      முற்பட எழுதிய ...... முதல்வோனே  
முப்புர மெரிசெய்த அச்சிவ னுறைரதம்      அச்சது பொடிசெய்த ...... அதிதீரா  
அத்துய ரதுகொடு சுப்பிர மணிபடும்      அப்புன மதனிடை ...... இபமாகி  
அக்குற மகளுட னச்சிறு முருகனை      அக்கண மணமருள் ...... பெருமாளே. 
கைத்தலம் நிறைகனி அப்ப மொடு அவல் பொரி கப்பிய கரிமுகன் அடிபேணி
கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவ கற்பகம் எனவினை கடிதேகும்
மத்தமும் மதியமும் வைத்திடும் அரன்மகன் மற்பொரு திரள்புய மதயானை
மத்தள வயிறனை உத்தமி புதல்வனை மட்டு அவிழ் மலர்கொ (ண்) டு பணிவேனே
முத்தமிழ் அடைவினை முற்படு கிரிதனில் முற்பட எழுதிய முதல்வோனே
முப்புரம் எரி செய்த அச்சிவன் உறை ரதம் அச்சு அது பொடிசெய்த அதிதீரா
அத்துயர் அது கொ (ண்) டு சுப்பிரமணி படும் அப்புனம் அதனிடை இபமாகி
அக்குற மகளுடன் அச்சிறு முருகனை அக்கணம் மணம் அருள் பெருமாளே    
 ......... சொல் விளக்கம் .........  
கைத்தலம் நிறைகனி அப்ப மொடு அவல் பொரி கப்பிய கரிமுகன் அடிபேணி ... கைகளிலே பழம், அப்பம், அவல், பொரி ஆகியவற்றை நிறைய எடுத்துக் கொண்டு அவற்றை வாரி உண்ணும் யானை முகக் கடவுளின் திருவடிகளை விரும்பி  
கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவ கற்பகம் எனவினை கடிதேகும் ... அறிவு நூல்களை ஆவலுடன் கற்கும் அடியார்களின் மனதில் நீங்காமல் என்றும் உறைபவன் கணபதிக் கடவுள்.  நாம் எண்ணியதை எண்ணியபடி உடனுக்குடன் நமக்கு வழங்கும் கற்பகமரம் போன்ற வள்ளல் கணபதிக் கடவுள்.  இப்படிப்பட்ட கணபதிக் கடவுளை நாம் துதி செய்தால் நம்மை அண்டி உள்ள வினைகள் யாவும் அஞ்சி நம்மை விட்டு ஓடிவிடும்.  
மத்தமும் மதியமும் வைத்திடும் அரன்மகன் மற்பொரு திரள்புய மதயானை ...   ஊமத்த மலரையும் பிறைச் சந்திரனையும் தனது சடையிலே அழகாக வைத்துக் கொண்டவர் சிவபெருமான்.  அந்த அரனாரின் மகன் தான் கணபதிக் கடவுள்.  மற்போர் புரிய ஏற்ற வகையில் திரண்ட தோள்களை உடையவர் அவர்.  மதயானையை ஒத்த பலம் உடையவர் கணபதி.   
மத்தள வயிறனை உத்தமி புதல்வனை மட்டு அவிழ் மலர்கொ (ண்) டு பணிவேனே ... மத்தளம் போன்ற பெருவயிறு உடையவர் கணபதி.  உத்தமியாகிய பார்வதியின் மைந்தன் அவர்.  தேன் வடியும் புத்தம் புதிய மலர்களைப் பறித்து நான் அவரை வணங்குவேன்.
முத்தமிழ் அடைவினை முற்படு கிரிதனில் முற்பட எழுதிய முதல்வோனே ... முத்தமிழ் என்று போற்றப்படுகிற இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழ் நூல் முறைமையை  மலைகளுள் முத-ல் தோன்றிய மலையான மேரு மலையில் முதன் முதல் எழுதி வைத்த முதன்மைக் கடவுள் கணபதி.
முப்புரம் எரி செய்த அச்சிவன் உறை ரதம் அச்சு அது பொடிசெய்த அதிதீரா ...  நினைத்த இடங்களில் எல்லாம் பறக்க வல்ல வல்லமை பெற்ற மூன்று நகரங்களைப் பெற்று அனைவரையும் அச்சுறுத்திய அசுரர்களின் கொட்டத்தை அடக்க சிவபெருமான் புறப்பட்ட போது தன்னைத் துதிக்காமல் புறப்பட்டதால் அவர் புறப்பட்ட தேரின் அச்சினை ஒடித்துத் தூளாக்கிய தீரன் கணபதி.
அத்துயர் அது கொ (ண்) டு சுப்பிரமணி படும் அப்புனம் அதனிடை இபமாகி ... வள்ளி மீது கொண்ட காதலால் வாடி துயர்பட்ட தனது தம்பியாகிய கந்தன் இருந்த தினைப்புனத்திலே யானை வடிவத்தில் தோன்றி  அக்குற மகளுடன் அச்சிறு முருகனை அக்கணம் மணம் அருள் பெருமாளே. ... அந்தக் குறமகளாகிய வள்ளியையும் தன் தம்பி முருகன் மணம்புரிய திருவருள் செய்த பிரான் கணபதி.    

கரிமுகன் என்றால் யானைமுகத்தை உடையவன் என்று பொருள்.  கரி என்றால் யானை.
உறைபவர் என்றால் தங்குபவர் என்று பொருள்.  உறைவிடம் என்றால் தங்குமிடம் என்று பொருள்.
கடிது ஏகும் என்றால் விரைந்து ஓடும் என்று பொருள்.  ஏகும் என்றால் போகும் என்று பொருள்.
மத்தம் என்றால் ஊமத்தைப் பூ
மதியம் என்றால் நிலவு
மற்போர் என்பது போரில் ஒரு வகை.  ஆயுதங்கள் இல்லாமல் கையால் போரிடும் கலை அது.  பின்னாளில் அது குஸ்தி என்று வடமொழி வரலால் மாறி இன்று மற்போர் என்றால் நமது வழக்கில் மறைந்து விட்டது.
இபம் என்றால் யானை.
இன்று நாம் கற்றுக் கொண்ட சொற்கள் கரி, இபம், உறைதல், கடிது, ஏகும், மத்தம், மதியம், மற்போர்.
இறைவனையும் துதிப்போம்.  தமிழையும் கற்போம்.
============================================================================================================