Monday, July 25, 2011

குமரகுருபரர்-Kumaraguruparar Tamil poems


கற்க கசடற கற்று அவை கற்றபின்
நிற்க அதற்குத் தக
என்பார் திருவள்ளுவர்.  இது குறித்து குமரகுருபரர் என்ன கூறுகிறார்? பார்ப்போம்.

கற்றபின் அது போன்று நடவாதவனை என்றாவது ஒரு நாள் – ஒருவன் உறுதியாகக் கேட்பான்.  “ஏனப்பா, இவ்வளவு படித்திருக்கிறாயா?  இது கூடத் தெரியாதா?  படித்துப் பட்டம் பெற்ற நீ இப்படி நடக்கக் கூடாது” என ஒருவன் கேட்கும் நிலை வரும்.

கற்றுப் பிறருக்கு உரைத்துத் தாம் நில்லார் வாய்ப்படூஉம்
வெற்றுரைக்க உண்டோர் வலியுடைமை- சொற்ற நீர்
நில்லாதது என்னென்று நாண் உறைப்ப நேர்ந்து ஒருவன்
சொல்லாமே சூழ்ந்து சொலர்.
(வாய்ப்படூஉம் – வாயிலிருந்து வெளிப்படும், சொற்ற என்றால் சொன்ன)

இப்படியெல்லாம் நடக்க வேண்டும் என்று ஊருக்கு உபதேசம் கூறும் நீங்கள் அவ்வாறு நடக்கவில்லையே என்று கற்றவர் நாணும்படி வெளிப்படையாகவே குறிப்பாகவே யாராவது என்றாவது சொல்லத்தான் செய்வார்கள்.  எனவே பிறருக்கு உரைப்பது – உபதேசம் செய்வது மிகவும் எளிதான செயல்.  அதை யாரும் செய்யலாம்.  அப்படி நடந்து காட்ட வேண்டும்.  அது தான் கற்றவனுக்கு அழகு.

குமரகுருபரர்..“நீதிநெறி விளக்கம்”

சங்கே முழங்கு - எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு

இக்காலத்தில் பணம் செலவழித்து சுவரொட்டிகள் அச்சடித்து – மாநாடுகள் நடத்தித் தம்மைத் தாமே புகழ்ந்து கொள்ளும் அரசியல்வாதிகள் மலிந்துவிட்டார்கள்.  பழங்காலத்திலும் இப்படி இருந்திருப்பார்கள் போலும்.  எனவே தான் குமரகுருபரர் தமது “நீதிநெறி விளக்கம்” அக்காலத்திலேயே தற்புகழ்ச்சியைப் பற்றி அருமையான பாடலை நமக்குத் தந்து உள்ளார்.  தன்னைத் தானே புகழ்ந்து கொள்ளுதல் எரியும் நெருப்பை நீர் விட்டு அணைப்பது போல உள்ளது என்றும் இன்பத்தை விரும்பினால் துன்பம் வரும் எனவும் எனவே இன்பத்தை விரும்பக் கூடாது எனவும் எடுத்துக் கூறி உள்ளார்.

தன்னை வியப்பிப்ன் தற்புகழ்தல் தீச்சுடர்
நன்னீர் சொரிந்து வளர்த்தற்றால் – தன்னை
வியவாமை அன்றே வியப்பாவது? இன்பம்
நயவாமை அன்றே நலம்?

நீரைக் கொட்டினால் நெருப்பு வளருமா?  அணைந்து விடும்.  அதுபோல தன்னைத் தான் போற்றிக் கொள்ளுதல் புகழை குறைத்து விடும்.  தன்னைத் தான் புகழாமல் இருந்தால் அது ஒருவனது மதிப்பை வளர்க்கும்.  இன்பத்தை விரும்பாமை தான் இன்பத்தைத் தரும்.

Friday, July 22, 2011

குமரகுருபரர் - நீதிநெறி விளக்கம்

சங்கே முழங்கு - எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு

தமிழால் வாழ்பவர்கள் மலிந்து விட்ட இக்காலத்தில் தமிழுக்காக வாழ்ந்த பெருமகனார்கள் கூறிய கருத்துக்கள் பாடநூல்களில் குறைந்துகொண்டே வருகின்றன.  தமிழின்  பெருமையை வடநாட்டிற்குச் சென்று பறைசாற்றிய பெருமகனார் குமரகுருபரர்.  பேசாமகவாக இருந்த இவர் திருச்செந்தூர் தலத்தில் ஐந்து அகவை நிரம்பிய போதே பாடத் தொடங்கியவர்.  இவரது வரலாற்றை முதலில் நாம் பார்ப்போம்.

தமிழ் இலக்கியத்தைத் தழைக்கச் செய்ததில் குமரகுருபரருக்குப் பெரும்பங்குண்டு.  வடநாடு சென்று தமிழின் பெருமையை உணர்த்தியவர் அவர்.  இவர் சீவைகுண்டம் என்னும் ஊரில் சைவ வேளாளர் மரபில் – சண்முகசிகாமணிக் கவிராயருக்கும் சிவகாமி அம்மையாருக்கும் மகனாகத் தோன்றினார்.  ஐந்தாண்டுகள் வரை பேசாக் குழந்தையாக – ஊமையாக இருந்தார் அவர்.  கவிராயர் மனமுருகி முருகனை வேண்டுவதற்காகத் திருச்செந்தூர் சென்றார்.  திருச்செந்தூர் முருகன் சன்னிதியில் இறைவன் திருவருளால் பேசும் திறன் பெற்றார்.  அக்கணமே முருகக் கடவுள் மீது “கந்தர் கலி வெண்பா” என்ற கவிதைத் தொகுப்பைப் பாடினார்.  அருமையான பொருள் பொதிந்த பாடல்கள் அவை.  முருகக் கடவுள் அவர் கனவில் தோன்றி “குமருகுருபர”  என்று அழைத்த காரணத்தால் இவர் குமரகுருபரர் என அழைக்கப்படுகிறார்.  இவர் மதுரை மாநகர் சென்று மன்னனின் முன்னிலையில் “மீனாட்சியம்மைப் பிள்ளைத் தமிழ்” என்ற நூலைப் பாடினார்.  இதைக் கேட்டு அங்கயற்கண்ணியே நேரில் வந்து ஒரு முத்துமாலையைக் கொடுத்ததாகக் கூறுவர்.  இதுதவிர மீனாட்சியம்மை குறம், மீனாட்சியம்மை இரட்டை மணிமாலை, மதுரைக் கலம்பகம் எனப் பல நூல்களைப் பாடினார்.  திருவாரூர் சென்று திருவாரூர் நான்மணிமாலை பாடினார்.  புள்ளிருக்குவேளூர் என்னும் வைத்தீஸ்வரன் கோவிலுக்குச் சென்று முத்துக்குமாரசாமி பிள்ளைத் தமிழ் என்னும் நூலைப் பாடினார்.  சிதம்பரம் சென்று சிதம்பர மும்மணிக் கோவை, சிதம்பரச் செய்யுள் கோவை, சிவகாமி இரட்டை மணிமாலை போன்ற நூல்களை தமிழுலத்திற்குத் தந்தார்.  தருமபுரம் சென்று ஞானதீட்சை அருளிய குருநாதர்  மாசிலாமணி மீது பண்டார மும்மணிக் கோவை என்னும் சிறுகாப்பியத்தை அருளினார்.  பின்னர் ஆசானின் ஆணைப்படி காசி சென்று காசிக் கலம்பகம் பாடினார்.  முகலாய மன்னனின் சோதனைகளை எதிர்கொண்டு பின்னர் அந்த மன்னனின் அன்பையும் அரவணைப்பையும் பெற்றார்.  அப்போது சகலகலாவல்லி மாலை என்னும் நூலை நமக்குத் தந்தார்.  இதைப்பாடி சரஸ்வதி தேவியின் அருள் பெற்று இந்துஸ்தானி மொழியில் பேசும் வல்லமையைப் பெற்ற அவர் கம்பராமாயணத்தை இந்துஸ்தானி மொழியில் காசியில் விரித்துரைத்தாராம்.  துளசிதாசர் இந்த உரையைக் கேட்டு இந்தியில் இராமாயணத்தை இயற்றியதாகச் சொல்வர்.  காசியில் வைகாசித் திங்கள் தேய்பிறை மூன்றாம் நாளில் அவர் இறைவனடி சேர்ந்தார்.  இப்படியாக குமரி முதல் இமயம் வரை தமிழைப் பரப்பிய பெருந்தகையாளர் குமரகுருபரர்.

இப்படி தமிழுக்காக வாழ்ந்து பெருமை அடைந்தவர்களும் உண்டு
தமிழ் வால்க என்று கூறித் தமிழால் வாழ்பவர்களும் இப்போது உண்டு

சரி குமரகுருபரர் இயற்றிய நீதிநூலான “நீதிநெறி விளக்க”த்திலிருந்து சில பாடல்களைப் பார்ப்போம்.

நீரில் குமிழி இளமை நிறைசெல்வம்
நீரில் சுருட்டும் நெடுந்திரைகள் – நீரில்
எழுத்தாகும் யாக்கை, நமரங்காள்- என்னே
வழுத்தாதது எம்பிரான் மன்று?

நம் வாழ்வில் இளமைப்பருவம் மிக முக்கியமானது.  ஆனால் அந்த பருவம் வரும் – சில நாட்களிலே பருவம் மாறி நாம் முதுமை அடைந்து விடுவோம்.  எனவே இளமை என்பதை நீரில் உள்ள குமிழி போன்ற பருவம் என்கிறார் குமரகுருபரர்.  நீரினில் காற்று அடித்தால் அலை எழும்.  ஆனால் மீண்டும் மறைந்து போகும்.  அது போல நிறைசெல்வம் என்பது நிரந்தரமானது அன்று.  அது சிலநாள் இருக்கும்.  பின்னர் மறைந்து விடும்.  நம்முடைய வாழ்வு எப்படிப்பட்டது.  அது நீரில் எழுதும் எழுத்துக்குச் சமமானது.  நீரில் எழுதினால் நிலைத்து நிற்குமா?  நிற்காது.  அப்படித்தான் நமது வாழ்வு நிலையானது அல்ல.  அழியக் கூடியது.  இப்படி எல்லாம் மறையக்கூடிய அல்லது அழியக்கூடியவைகளாக உள்ளன.  இவற்றை நாம் உணராமல் “நாம் தான் பெரியவர்கள்” என்று இறுமாப்பு கொண்டு அலைகிறோம்.  நம்மைப் படைத்த இறைவனை வணங்குவதை தலைக்குனிவு என்று சொல்லும் இறைமறுப்பாளர்களும் உள்ளனர்.  இந்த உடல் உள்ள போதே இறைவனை நாம் வணங்க வேண்டும்.  காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள வேண்டும்.  உடலில் உயிர்க்காற்று உள்ளபோதே இறைவனைத் துதித்து பிறவா நிலையை அடைய நாம் முயற்சிக்க வேண்டும்.

நெடுந்திரை என்றால் பெரிய அலைகள்.  திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்று ஒரு பழமொழியும் உண்டு.
யாக்கை என்றால் உடம்பு.
வழுத்தல் என்றால் வணங்குதல்
நமரங்காள் என்றால் நம்மவர்களே என்று பொருள்.



கல்வி இன்பமும் கலவி இன்பமும்

தொடங்குங்கால் துன்பமாய் இன்பம் பயக்கும்
மடம் கொன்று அறிவகற்றும் கல்வி – நெடுங்காமம்
முற்பயக்கும் சில்நீர இன்பத்தின், முற்றிழையாய்
பிற்பயக்கும் பீழை பெரிது

துவக்கத்தில் துன்பமாய்த் தெரியும் கல்வி.  இடர்பட்டு கல்வி கற்றால் பிற்காலத்தில் நல்ல வேலை கிடைத்து – சமூகத்தில் நல்ல அந்தஸ்து கிடைத்து நாம் இன்பமாக வாழ முடியும்.  இப்படி நாம் கடினமாக உழைத்துக் கற்ற கல்வி நம் அறியாமையை நீக்கும்.  அறிவை விருத்தியடைய்ச் செய்யும்.  இப்படி தொடங்குங்கால் துன்பமாய் இருந்தாலும் இன்பமே பயப்பது கல்வி.
சரி கலவி எப்படி?  தொடக்கத்தில் சிறிது இன்பம் கொடுக்கும் கலவி.  எனவே தான் இதைச் சிற்றின்பம் என்று கூறுகிறார்கள் பெரியோர்கள்.  இந்த இன்பத்திற்கு அடிமைப்பட்டு அந்த குளத்தில் குளிக்கப் போனால் பின்னர் அதனால் தொடரக்கூடிய துன்பங்கள் ஏராளம்-ஏராளம்.  முறையாக இருந்தால் சிறு குடும்பம்.  அதைக் காப்பாற்ற நாம் படும் துயரம்.  குழந்தைகளைப் பள்ளியில் சேர்க்க.  கல்லூரியில் சேர்க்க – திருமணம் செய்ய.  இப்படித் தொடர்வது துயரம்.  ஏன் என்றால் இவற்றுக்கெல்லாம் பொருள் ஈட்ட வேண்டும்.  முறையற்று ஆற்றிலும் சேற்றிலும் –  குளிக்க நினைத்தால்.  நம்மிடம் இருக்கும் பொருளை எல்லாம் பறிக்கும் பரத்தையர் கூட்டம் மிகுந்து விடும்.  கோவலன் கதி தான்.  பொருளை இழந்து பின்னர் உயிரையும் இழந்தான் கோவலன்.  அதுபோல துவக்கத்தில் இனித்தாலும் கலவி என்பது இறுதிவரை துன்பத்தையே தரும்.

மடம் என்றால் அறியாமை,  சில்நீர – சிறிதளவே உள்ள, இழை- ஆபரணம், பீழை- துன்பம்.

கல்வியா? செல்வமா?

எனைத்துணையரேனும் இலம்பட்டார் கல்வி
தினைத்துணையும் சீர்ப்பாடு இலவாம் – மனைத்துக்காள்
மாண்பிலள் ஆயின் மணமகன் நல்லறம்
பூண்ட புலப்படா போல்.

வறுமையில் வாடுபவர்கள் எவ்வளவு கல்வி கற்று திறமைசாலிகளாக இருந்தாலும் – மதிநுட்பத்துடன் செயல்பட்டாலும் – தினைத்துணை அளவும் பாராட்டப்பட மாட்டார்கள்.  பெருமைப்படுத்தப்பட மாட்டார்கள்.  எப்படி என்றால் -  மனைவியானவள் இல்லறத்திற்குத் தக்க மாட்சிமை இல்லாமல் இருந்தால், அவளுடைய கணவன் மேற்கொள்ளும் இல்லறம் சிறப்படையாது.  அதுபோல.

இதையே வள்ளுவப் பெருந்தகையும்,

“நற்பொருள் நன்கு உணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார்
சொற்பொருள் சோர்வுபடும்” என்று தனது குறளில் சுருக்கமாகத் தெளிவாகக் கூறி உள்ளார்.

இலம்பட்டார் என்றால் வறுமையுற்றார்
சீர்ப்பாடு என்றால் பெருமை

இன்சொல்லன் தாழ்நடையன் ஆயினும் ஒன்று இல்லானேல்
வன்சொல்லின் அல்லது வாய்திறவா - என்சொலினும்
கைத்துடையான் காற்கீழ் ஒதுங்கும் கடல்ஞாலம்
பித்துடைய அல்ல பிற.

ஒருவன் இனிய சொல்லைப் பேசுபவனாகவே இருக்கட்டும் – ஒழுக்கம் உடையவனாகவே இருக்கட்டும்.  அவனிடம் செல்வம் இல்லையேல் இந்த உலக மக்கள் கடுஞ்சொல் கொண்டு தாக்குவர் அவனை.  இனிய சொற்களைப் பேசமாட்டார்கள்.  இதற்கு மாறாக ஒரு செல்வந்தன் என்ன சொன்னாலும் அவன் காலின் கீழ் கட்டுண்டு கிடப்பர் இந்த உலக மக்கள்.  இதைப் பார்த்தால் கடல்சூழ்ந்த இந்த உலகம் மயக்கத்தில் உள்ளது என்பது விளங்குகிறது.  நல்லறிவு இல்லை.

தாழ்நடையன் – ஒழுக்கம் உள்ளவன்,  கைத்துடையான்- கையில் செல்வம் உடையவன்  ஞாலம் – உலகம், பித்து - பைத்தியம்

கற்றது கைம்மண் அளவு

முற்றும் உணர்ந்தவர் இல்லை – முழுவதும்
கற்றனம்  என்று களியற்க – சிற்றுளியால்
கல்லும் தகரும் – தகரா, கனங்குழாய்
கொல்லுலைக் கூடத்தினால்

எல்லாம் அறிந்தவர்கள் இந்த உலகத்தில் யாரும் இல்லை.  அனைத்தும் அறிந்தோம் என்று யாரும் செருக்கு கொள்ள முடியாது.  ஏனெனில் சிறு உளியும் பெரு மலையைத் தகர்த்து விடும்.  பெரு மலைகளை இன்று சிறு வெடிகளை வைத்து தகர்ப்பதைக் கண்கூடாகக் காண்கிறோம்.  பெருமலையை சம்மட்டி கொண்டு அடித்து சிதற வைக்க முடியாது.  ஆனால் சிறு உளியால் தகர்த்து விடலாம்.

களியற்க – செருக்கு  கொள்ள வேண்டாம்,  கல் என்பது இங்கே மலையைக் குறிக்கும்.  கூடம் என்பது சம்மட்டியைக் குறிக்கும்.
தமிழுக்கு அனுப்பப்பட்டு விட்டது

குமரகுருபரரின் நீதிநெறி விளக்கம் நமக்கு பல அற்புதமான கருத்துகளைத் தெரிவிக்கிறது.  கல்விச் செருக்கைப் பற்றிக் கூற வந்த மற்றொரு பாடலைப் பார்ப்போம்.

தம்மின் மெலியாரை நோக்கித் தமது உடைமை
அம்மா பெரிது என்று அகம் மகிழ்க – தம்மினும்
கற்றாரை நோக்கிக் கருத்தழிக, கற்றதெல்லாம்
எற்றே இவர்க்கு நாம் என்று

நம்முடன் படித்தவர்கள் – உற்றார் – உற்வினர் இப்படி பலருடன் நாம் வாழ்கிறோம்.  அதிலே சிலர் பணம் படைத்தவர்களாகவும் சிலர் படிப்பிலே உயர்ந்தவர்களாகவும் இருப்பார்கள்.  நம்மை விட செல்வத்தில் குறைந்து உள்ளவர்களைப் பார்க்கும் போது நாம் “இறைவன் நமக்கு எவ்வளவு பெரிய செல்வத்தைக் கொடுத்து உள்ளான்” என நினைந்து இறைவனை வாழ்த்த வேண்டும்.  உள்ளத்திலே மகிழ்ச்சி கொள்ள வேண்டும்.  அதே சமயம் நம்மைவிட கற்றவர்களைக் காணும் போது “நாம் இன்னும் அதிகமாகக் கற்கவேண்டும் போல் உள்ளது.  இவர் இவ்வளவு படித்துள்ளாரே.  வாழ்க்கையை வீணாக்காமல் படித்து அறிவைப் பெருக்கிக்கொள்ள வேண்டும்” என்று நாம் எண்ண வேண்டும்.  இப்படி நாம் வாழ்ந்தோமானால் நம் வாழ்வு பொருளுடையதாக இருக்கும்.

மெலியார் – ஏழைகள் ,  கருத்தழிக – கர்வத்தை விடுக



செல்வம் இரண்டு வகைப்படும்.  கல்விச் செல்வம் ஒன்று.  பொருட் செல்வம் மற்றொன்று.  இவ்விரண்டும் நமக்கு வேண்டும் என்றால் உள்ளவரிடம் இரந்து நிற்க வேண்டும்.  செல்வம் படைத்தவன் அது கல்விச் செல்வம் என்றாலும் சரி – பொருட்செல்வம் என்றாலும் சரி அவன் உயர்ந்த இடத்தில் உள்ளான்.  இல்லாதவன் அவனிடத்தில் தாழ்ந்து போக வேண்டும்.  அப்போது தான் நமக்கு வேண்டிய செல்வம் நமக்குக் கிடைக்கும்.  இதை குமரகுரபரர் தமது நீதிநெறி விளக்கத்தில் விளக்கும் விதமே அலாதி.

கல்வி உடைமை பொருள் உடைமை என்று இரண்டு
செல்வமும் செல்வம் எனப்படும்-இல்லார்
குறையிரந்து தம் முன்னர் நிற்ப போல் நாமும்
தலைவணங்கித் தாழப் பெறின்.

குறையிரந்து என்றால் தாழ்ந்து எனப் பொருள்.


பொருட் செல்வம் மிகுந்து இருந்தாலும் சரி – கல்விச் செல்வம் மிகுந்து இருந்தாலும் சரி – இல்லாதவரைக் கண்டால் நாம் தான் தாழ்ந்து போக வேண்டும்.  ஒரு தராசு உள்ளது என்று வைத்துக் கொள்வோம்.  கனம் மிகுந்த பொருள் உள்ள தட்டு தாழ்ந்து தானே இருக்கும்.  குறைவாக உள்ள தட்டு மேல்நோக்கிப் போகும்.  இது உலக இயல்பு தானே.  அது போலத் தான் நம்மிடம் பொருட்செல்வம் அதிகம் இருந்தாலும் – கல்விச் செல்வம் அதிகம் இருந்தாலும் இல்லாதவரைக் கண்டால் நாம் தான் தாழ்ந்து போக வேண்டும்.  உயர்ந்தவர்கள் இறுமாப்பு கொள்ளக் கூடாது.  இதை குமரகுருபரர் தனது நீதிநெறி விளக்கத்தில் மிக அழகாகச் சொல்கிறார்.

ஆக்கம் பெரியார் சிறியார் இடைப்பட்ட
மீச்செலவு காணின் நனி தாழ்ப – தூக்கின்
மெலியது மேன்மேல் எழச் செல்லச் செல்ல
வலிதன்றே தாழும் துலைக்கு.

துலை என்றால் தராசு.  இராசிபலன் பார்க்கும்போது துலாராசி என்று பார்ப்பார்க்ள் அதில் தராசு படம் போட்டிருக்கும்.  அழகிய தமிழில் துலை என்ற சொல்கிறார் குமரகுருபரர்.  மீச்செலவு என்றால் வரம்பு மீறிய செயல்.



சில மக்களை நாம் தினந்தோறும் காணநேரிடும்.  மிக நல்லவர்களாக இருப்பார்கள்.  ஆனால் தான் நல்லவன் என்பதை எப்போது பார்த்தாலும் பறைசாற்றிக் கொண்டே இருப்பார்கள்.  தம்மைப் போல் மற்றவர் இல்லை என்பதை எடுத்துக்காட்ட பிறரை வைத்து ஒப்பிட்டுக் கொண்டே இருப்பார்கள்.  இப்படி ஒப்பீடு செய்து நல்லவர் என்று தன்னைத் தானே புகழ்தலும் நல்லதல்ல.  மிகவும் தீமையானது.  அவர்கள் செய்த நல்ல செயல்கள் பயனில்லாது போய்விடும்.  எனவே எப்போதும் தற்புகழ்ச்சியை நாம் விரும்பக்கூடாது.  இதை குமரகுருபரர் தனது நீதிநெறி விளக்கத்தில் மிக அழகாக விளக்குகிறார்.

விலக்கிய ஓம்பி விதித்தனவே செய்யும்
நலத்தகையார் நல்வினையும் தீதே – புலப்பகையை
வென்றனம் நல்லொழுக்கில் நின்றேம் பிறவென்று
தம்பாடு தம்மிற் கொளின்.

ஓம்பி என்றால் விலக்கிவிட்டு – விட்டுவிட்டு.  அதாவது விலக்கப்பட்டவைகளை ஒதுக்கிவிட்டு விதிக்கப்பட்டனவைகளையே செய்தாலும் அது தீதாக முடியும்.  தம் பாடு என்றால் தற்பெருமை.
புலப்பகை என்றால் ஐம்புலன்களுக்குப் பகையானவை அதாவது சுவை, ஒலி, ஊறு, ஓசை, நாற்றம் என்னும் ஐம்புலன்களால் சுவைக்கப்படுபவை – அனுபவிக்கப்படுபவை.

இன்று நுனிநாக்கில் ஆங்கிலம் பேசி தமிழ் கவிதை மற்றும் பாடல்கள் படிக்கமுடியாதவை - கடினமானவை எனவே அவற்றைப் படிக்கமுடியவில்லை என்று கூறுபவர்கள் பெருகிவருகிறார்கள்.  தமிழ்பாடல்கள் மிக எளிமையானவையே.  நமக்குத் தமிழ் சொற்கள் தெரியவில்லை.  அதை நாம் ஒத்துக்கொள்ள வேண்டும்.  சித்திரமும் கைப்பழக்கம் என்பது போல் பாடல்களைத் தொடர்ந்து பொருளுடன் படித்தால் தமிழ்ப் பாடல்களில் உள்ள சுவை நன்றாகத் தெரியும்.  முயற்சி செய்யுங்கள்.

 

Thursday, July 21, 2011

பிட்சாலயாவின் காணொளிக் காட்சி


பம்பா சரோவரின் அழகான காணொளிக் காட்சி


ஆனேகுந்தியை முழுக்க முழுக்க சுற்றிப் பார்த்து விட்டு இராகவேந்திரர் தங்கியிருந்த சில இடங்களைச் சுற்றிப்பார்த்துவிட்டு இராகவேந்திரர் பிருந்தாவனம் உள்ள மந்திராலயம் சென்றடைந்தோம்.  பின்னர் அங்கிருந்து கோவைக்குத் திரும்பினோம்


அஞ்சனாத்ரி மலையில் சாளக்கிராம தரிசனம் - காணொளிக் காட்சி



இராகவேந்திரர் பிட்சாலயா எனனும் இடத்தில் பல ஆண்டுகள் தங்கி நெருப்பு இல்லாமல் மாணவர்கள் பிச்சை எடுத்து வந்த அரிசி மீது நீர் தெளித்து சோறு ஆக்கிய இடம் தான் பிட்சாலயா.  லயா என்றால் நெருப்பு.  நெருப்பு இல்லாமல் சோறு சமைத்த அந்த புனித இடத்தின் காணாளிக் காட்சி அடுத்த பதிவில் ......


நவபிருந்தாவன யாத்திரை - nAVANBIRUNTHAVAN YATRA AND ANJANATHRI HILLS

நவபிருந்தாவன யாத்திரை

திரு.அம்மன் சத்தியநாதன் அவர்கள் எழுதிய “நவநிதி நல்கும் நவபிருந்தாவனம்” என்னும் நூலைப் படித்த உடன் ஆனேகுந்தி பகுதியையும் நவபிருந்தாவனத்தையும் கண்டு மகிழ வேண்டும் என்ற எண்ணம் என்னை ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்தது.  அதற்கான வாய்ப்பும் கிடைத்து அந்த இடத்திற்குச் சென்றோம். 
ஆனேகுந்தி என்னும் இடம் துங்கபத்திரா நதிதீரத்தில் உள்ள ஹம்பியின் எதிர்கரையில் அமைந்துள்ளது.  இந்த இடத்தைப் பற்றிய முழுமையான தகவலை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் அவசியம் திரு.அம்மன் சத்தியநாதன் அவர்களின் நூலைப் படித்தே ஆகவேண்டும்.  அந்த நூலில் உள்ள படங்களும் செய்திகளும் படிப்போரின் மனத்தைக் கொள்ளை கொள்ளும். அவருடைய வார்த்தையில் ஆனேகுந்தியைப் பற்றிக் கூற வேண்டும் என்றால் – “நூற்றாண்டுகள் பல கடந்தும் கூட இன்னும் ஆனேகுந்தி பழமை மாறாமல் இருப்பதை நான் பலமுறை சுற்றிச் சுற்றி வந்து ரசித்திருக்கிறேன்.  நீர்வளமும் நிலவளமும் மலைவளமும்  கொண்ட ஆனேகுந்தி மற்றும் ஹம்பி பகுதிகளை இன்றும் நாம் நாள்கணக்கில் கண்டு ஆனந்தித்துக் கொண்டிருக்கலாம்”.  நூற்றுக்கு நூறு இந்த வார்த்தைகள் உண்மை.  பழமை மாறவில்லை.  ஒரு சிறுகிராமமாகத் தான் உள்ளது இந்த நகரம்.  அரிஅர-புக்கர் அமைத்த விசயசாம்ராஜ்யத்தின் முதல் தலைநகராக இது விளங்கியது என்றால் நம்ப முடியாது தான்.  இந்தப் பகுதியைச் சுற்றித் தான் அனுமன் அஞ்சனாத்தி மலைப்பகுதியில் வாழ்ந்திருக்கிறான் – வாலியும் சுக்கிரீவனும் வசித்திருக்கிறார்கள்.  இராமர் வாலியைக் கொன்ற இடம் உள்ளது.  சிந்தாமணி என்று இன்று அந்த இடம் அழைக்கப்படுகிறது.  இப்படி இராமாயணக் காலத்திற்கு நம்மை அழைத்துச்  செல்லும் அற்புதமான இடம் இது.  வாழ்நாளில் ஒருதடவை இங்கு அனைவரும் அவசியம் போய் வரவேண்டும்.  அரிஅர புக்கருக்கு வழிகாட்டியவர் வித்யாரண்யர் என்னும் தவசீலர்.  இங்கு தான் பின்னர் வியாசராசர் நரசப்ப மன்னனுக்கும் – வீரநரசிம்மனுக்கும் – கிருஷ்ணதேவராயருக்கும்  வழிகாட்டி இருக்கிறார்.   இவை எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தாற்போல இங்கு பிரகலாதன் தவம் புரிந்திருக்கிறான்.  தகவல் கேட்டவுடனேயே உடல் புல்லரித்தது. 
இங்கு தங்குவதற்கு இராகவேந்திரர் மடம் ஒன்றும் கோவிலும் சேர்ந்தே உள்ளன.  தங்குவதற்கு வசதி உள்ளது.  இதற்கு எதிரில் ஒரு நவநாகரிகமான தங்கும் விடுதியும் உள்ளது.  உணவு வசதியும் செய்து தருகிறார்கள்.  அங்கு அறை எடுத்து தங்கினோம்.  விடியற்காலையில் படகில் பூசை சாமான்கள், அபிடேகம் செய்வதற்கான பொருட்களை ஏற்றிக் கொண்டு எங்கள் குழு படகில் துங்கபத்திரா நதியின் நடுவில் அமைந்த மேட்டுப்பகுதியை நோக்கிப் பயணமானோம்.  நதியில் இப்படி மேட்டுப்பகுதி இருந்தால் அதை ரங்கம் என்று கூறுவார்களாம்.  மறுகரையில் இறங்கி விரைந்து – வளைந்து ஓடும் துங்கபத்திரா நதியில் குளித்தோம்.  பின்னர் நவபிருந்தாவனம் நோக்கிப் பக்திச் சிரத்தையுடன் காலெடுத்து வைத்தோம்.  அந்த வளாகத்திற்குள் கால்எடுத்து வைத்தவுடன் உடலும் உள்ளமும் அதிர்ந்தது. மிகப் பவித்திரமான இடம்.  ஒரு மேட்டுப்பகுதியில் அனுமார் நின்ற கோலத்தில் வாலில் அட்சய குமாரனை வைத்திருக்கும் கோலம்.  இன்னொரு சன்னதியில் பள்ளிகொண்ட பெருமாள்.  நவபிருந்தாவனம் எதிரில் ஒரு அனுமார் சன்னதி.  அற்புதமான இடம்.  சுற்றிலும் மலையும் நதியும்.   நவபிருந்தாவனத்தில் உள்ள ஒன்பது பிருந்தாவனங்கள் சுமார்  300 ஆண்டு கால இடைவெளியில் அமைந்ததாகக் கூறுகிறர்கள்.  முதல் பிருந்தாவனம் பத்மநாப தீர்த்தரின் பிருந்தாவனம்.  ஒன்பதாவது பிருந்தாவனம் சுதீந்திரரின் பிருந்தாவனம்.  பிரகலாதன் தவம் செய்த இடம் – அனுமார் சுற்றித் திரிந்த இடம்.  இங்குள்ள மகான்கள் யார்யார் என்று முதலில் நாம் தெரிந்து கொண்டு அதன்பின் சுற்றவேண்டும்.  யார்யார் என்பதை நான் கூறுகிறேன்.  அவர்கள் வரலாற்றை நீங்கள் அம்மன் சத்தியநாதன் எழுதிய நவபிருந்தாவனம் பற்றிய நூலைப் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டும்.

1)                   பத்மநாப தீர்த்தர்
2)                   கவீந்திர தீர்த்தர்
3)                   வாகீச தீர்த்தர்
4)                   வியாசராச தீர்த்தர்
5)                   இரகுவர்ய தீர்த்தர்
6)                   சீனிவாச தீர்த்தர்
7)                   இராம தீர்த்தர்
8)                   சுதீந்திர தீர்த்தர் – இராகவேந்திரரின் குருநாதர்.  இவருடைய பிருந்தாவனத்திற்கு மறுபக்கம் இராகவேந்திரருக்கு நாமம் சாற்றி வழிபடும் வழக்கம் இன்றளவும் உள்ளது.  இராகவேந்திரரே இங்கு வந்ததாகக் கூறுகிறார்கள்.  இருப்பதாகவும் கூறுகிறார்கள்.
9)                   கோவிந்த உதையரு 

மனத்தை உருக்கும் இவர்களது மகாத்மியத்தை அம்மன் சத்தியனாதரின் நூலைப் படித்துப் பார்த்தால் கண்ணில் நீர் பெருகும்.

இங்கு அருமையான அபிஷேக ஆராதனைகள் நடந்தன.  மனமுருகி வணங்கினோம். இத்துடன் காணொளிக் காட்சி உள்ளது.  அருள்கூர்ந்து பார்க்கவும்.    பின்னர் வெளியில் வந்தபோது அபிஷேகப் பொருட்கள் பிரசாதமாக வழங்கப்பட்டன.  மிக்க மகிழ்வுடன் ஏற்று உண்டோம்.  படகில் ஆனேகுந்தி வந்தடைந்தோம்.  என் மனதில் இருந்த சந்தேகத்தை தங்கும் விடுதி நடத்துபவரிடம் கேட்டேன். இந்த ஊருக்கு ஆனேகுந்தி என்ற பெயர் ஏன் வந்தது என்று கேட்டேன்.  அவர் யானைகள் கட்டப்பட்ட தெருவாக விளங்கியதால் ஆனகோந்தி என இருந்ததாகவும் இப்போது ஆனேகுந்தியாக உள்ளது என மருவியுள்ளதாகவும் கூறினார்.  பின்னர் அங்கிருந்து சிந்தாமணிக்குச் சென்று சிவாலயத்தைத் தரிசித்து, இராமர் வாலியைக் கொன்ற இடத்தைப் பார்த்தோம்.  பின்னர் அனுமர் வாழ்ந்த அஞ்சனாத்தி மலையையும் பம்பா சரோவர் என்ற இடத்தையும் பார்த்தோம்.  இந்தியாவில் நான்கு சரோவர்கள் உள்ளன.  மானசரோவர், பிந்துசரோவர், நாராயண சரோவர் மற்றும் பம்பா சரோவர்.  இது ஒரு சிறிய குளம் தான்.  ஆனால் நீர் எந்த காலத்திலும் வற்றாத குளம்.
        காலம் கனிந்தால் ஒரு முறை ஹம்பியையும் ஆனேகுந்தியையும் நவபிருந்தாவனத்தையும் தரிசனம் செய்துவிட்டு வாருங்கள்.  அஞ்சனாத்தி மலையிலிருந்து - அனுமார் வாழ்ந்த மலையிலிருந்து காட்சிகள்





நவபிருந்தாவன் வளாகக் காட்சிகள்



நவபிருந்தாவனத்தில் அபிஷேகம் செய்தபின் - காணொளி


நவபிருந்தாவன் வளாகத்தில் அலங்காரம் ஆராதனை முடிந்த பிறகு பஜனை செய்த போது எடுத்த காணொளிக் காட்சி



கட்டுரை தொடரும் அடுத்த பதிவில்.......


Friday, June 24, 2011

Srimad Bhagavatham

திருமால் பத்து அவதாரங்கள் எடுத்ததாகத் தான் நாம் கதைகளின் மூலம் அறிகிறோம்.  ஆனால் ஸ்ரீமத் பாகவதத்தைப் படிப்பவர்கள் திருமால் உலகின் நன்மைக்காகப் பல அவதாரங்களை எடுத்து இருப்பதை அறியலாம்.

இந்த நிலவுலகத்தை நிலைநிறுத்த பாதாளத்தில் இருந்து பூமியை வெளிப்படுத்த எடுத்தது வராக அவதாரம்.
சனத்குமாரர்களாகத் தோன்றியவரும் நாராயணனே
தர்மன் என்னும் முனிவருக்கும் அவர் மனைவி கலைக்கும் மகன்களாக நரநாராயணன்களாக அவதாரம் எடுத்ததும் திருமாலே
ஆசூரி என்னும் முனிவருக்கு அழிந்து போன சாங்கிய சாத்திரத்தை உபதேசிப்பதற்காக எடுத்த அவதாரம் தான் கபில அவதாரம்
இறைவனே தனக்கு மகனாகப் பிறக்க வேண்டும் என அத்ரி முனிவர் நினைக்கிறார்.  அவர் ஆசையை நிறைவேற்ற அவருக்கும் அனசூயைக்கும் தத்தாத்ரேயன் என்ற மகனாக அவதரித்தவர் பாற்கடலில் பள்ளி கொண்ட பெருமாள் தான்.
ருசி என்ற பிரசாபதிக்கு ஆகூதியிடம் யக்ஞன் என்னும் மகனாகத் தோன்றியவர் அரங்கநாதரே.
நாபி என்பவருக்கும் அவர் மனைவி மேருக்கும் ரிஷபன் என்னும் பெயரில் மகனாக அவதரித்தவர் திருமாலே.
பூமாதேவியிடமிருந்து மருத்துவப் பொருட்களைப் பெற பிருது என்னும் மன்னனாக அவதரித்தவர் நெடுமாலே.
மதுரை மாநகரிலே கிருதுமால் நதியிலே மீன் அவதாரம் எடுத்ததும் பரந்தாமன் திருமாலே.
அமுதத்திற்காக தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்த போது ஆமையாக உருவெடுத்ததும் திருமாலே.
அப்படிக் கடலைக் கடக்கும் போது தன்வந்தரியாக வருவதும் பரந்தாமனே.
அசுரர்களை ஏமாற்றி அமுதத்தை தேவர்களுக்குக் கொடுக்க மோகினி அவதாரம் எடுப்பதும் வாசுதேவனே.
பிரகலாதனைக் காக்க நரசிம்ம அவதாரம் எடுத்ததும் திருமாலே.
பின்னர் பரசுராமராக, இராமராக, கண்ணனாக அவதரித்ததும் நெடுமாலே.
இப்படிப் பல அவதாரங்களின் சிறப்புகள் ஸ்ரீமத் பாகவதத்திலே கூறப்படுகின்றன.  பிறவித் தளையிலிருந்து விடுபட இறைவனின் புகழைப் போற்றும் பாகவதத்தைப் படியுங்கள்.

கலிபுருஷன் - Srimath Bhagavatham - entry of Kali purusha

கண்ணபெருமான் இந்த நிலவுலகை விட்டு நீத்ததும், பாண்டவர்களும் இந்த உலகத்தை விட்டுச் செல்ல முடிவெடுக்கிறார்கள்.  தருமர் அபிமன்யுவின் மகனான பரீட்சித்துவை அரசபீடத்தில் அமரவைத்து முடிசூட்டுகிறார்.  பின்னர் அனைவரும் விண்ணுலகம் செல்கின்றனர்.  தருமரால் முடிசூட்டப்பட்ட பரீட்சித்து சிறந்த முறையில் அரசோச்சுகிறான்.  அவன் உத்தரனுடைய பெண் இராவதியை மணந்து கொள்கிறான்.  இவனுக்கு சனமேசயன் முதலிய நான்கு குமாரர்கள் பிறக்கிறார்கள்.  இப்படி இருக்கும்போது பரீட்சித்து மகாராசா தன் நாட்டை சுற்றிப்பார்த்து வரும்போது ஒரு இடத்தில் மூன்று கால்களை இழந்து ஒற்றைக்காலில் நிற்கும் ஒரு காளையையும் அருகில் கண்ணீர்விட்டுக் கொண்டு நிற்கும் பசுவையும் இவைகளின் அருகே சாட்டையுடன் ஒருவன் நின்று காளையை அடிப்பதையும் காண்கிறான்.
     மூன்று காலை இழந்து நிற்கும் காளை தர்மதேவதை.  கிருதயுகத்தில் தர்மதேவதையான இந்த காளைக்கு நான்கு கால்கள்.  திரேதாயுகத்தில் தர்மம் குறைந்ததால் ஒரு கால் குறைந்து கால்கள் மூன்றானது.  துவாபரயுகத்தில் மற்றொரு காலை இழந்தது.  கலியுகத்தில் கலிபுருஷனிடம் அதர்மம் கூடியிருந்ததால் இன்னொரு காலையும் இழந்து ஒற்றைக் காலில் நிற்கிறது தர்மதேவதை.  அருகே நிற்கும் பசு தான் பூமாதேவி.  கலிபுருஷனின் அதர்ம ஆதிக்கத்தைக் கண்டு கண்ணீர் விடுகிறார் பூமித்தாய்.  தர்மதேவதையோ மனிதர்களைக் காப்பதற்காக உருவெடுத்து வந்துள்ளது.  ஆனால் மனிதர்களோ தர்மத்தை கொஞ்சம் கொஞ்சமாக காவு கொடுக்கிறார்கள்.  இதனால் காளையின் மூன்று கால்கள் இல்லாமல் போய்விட்டன.  சாட்டையுடன் காளையின் அருகில் நின்று காளையை மிரட்டி அடித்துக் கொண்டிருப்பவன் தான் கலிபுருஷன்.  தர்மத்தையே மிரட்டும் வலிமை கொண்டு அதர்மத்தை ஆட்சிபுரிய அனுமதித்தவன் தான் இந்த கலிபுருஷன்.  இதிலிருந்து நாம் தெரிந்து கொள்வது என்ன?  அதர்மத்தின் கை இந்த கலியுகத்தில் ஓங்கித் தான் நிற்கும்.  அதற்காக நாம் அதர்மத்தின் பக்கம் சாயத் தேவையில்லை.
     பரீட்சித்து மகாராசாவுக்குப் புரிந்து விட்டது.  எதிரே நிற்பவன் கலிபுருஷன்.  கண்ணபிரான் மறைந்தவுடன் நிலவுலகில் அதர்மத்தை நிலைநாட்ட அடி எடுத்து வைத்துவிட்டான்.  உடனே வில்லில் அம்பைப் பூட்டி நான் இருக்கும் வரையில் தருமம் அடிபடுவதை அனுமதிக்கமாட்டேன் என்று கூறி கணை தொடுக்கத் தயாராகிறான்.  கலிபுருஷன் அஞ்சுகிறான்.  பாண்டவர் வம்சத்தில் வந்தவன் இந்த பரீட்சித்து.  வில்வித்தையில் சிறந்தவன்.  கலிபுருஷன் பரீட்சித்து மகாராசாவிடம் சரணடைகிறான்.  சரணடைந்தவனைக் காப்பது தானே முறை.  எனவே கொல்லாமல் விடுகிறான் பரீட்சித்து.  கெஞ்சுகிறான் பரீட்சித்துவிடம். “இந்த நிலவுலகில் ஏதாவது ஓர் இடத்தைக் காண்பியுங்கள்.  நான் அங்கே போய் பிழைத்துக் கொள்கிறேன்.”
     பரீட்சித்து மகராசா நான்கு இடங்களை ஒதுக்கீடு செய்கிறான். 
1)      சூதாட்டம் ஆடும் இடம்
2)      மது அருந்தும் இடம்
3)      மங்கைகளிடம் அதிக ஆசை கொண்டு அவர்களுக்கு பணிபுரிபவர்கள் வசிக்கும் இடம்
4)      பிராணிகளை வதை செய்யும் இடம்
கலிபுருஷனுக்கு மனம் திருப்தி அடையவில்லை.  இந்த நான்கும் ஒன்று சேர்கிற இடத்தை எனக்குக் காட்டி அங்கேயும் வாசம் செய்ய அனுமதி கொடுக்க வேண்டும் என்று வேண்டினான்.  தங்கத்தை சுட்டிக்காட்டினான் பரீட்சித்து.
எனவே தான் கலிகாலத்தில் சூதாட்டம், மது அருந்துதல், பெண்டிர் சுகம், புலால் விரும்புதல், தங்க ஆபரண்ங்களை விரும்புதல் ஆகியவற்றிலிருந்து ஒதுங்கி இருக்கும்படி பெரியவர்கள் சொல்கிறார்கள். 
     யார் கேட்கிறார்கள்.  எல்லோரும் கலி புருஷனின் கட்டுப்பாட்டில் அல்லவா இருக்கிறோம்.  சமயம் கிடைக்கும் போதெல்லாம் இறைவனின் திருப்பெயரை உச்சரித்த வண்ணம் இருந்தால் இவற்றில் உள்ள ஆசை கொஞ்சம் கொஞ்சமாகக் குறையும்.  பற்றறுத்தல் என்ற நிலைக்குக் கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து பிறவித் தளையிலிருந்து நாம் விடுபடலாம்.

‘தமிழன் என்று சொல்லடா - Songs of Boothathazhvar

‘தமிழன் என்று சொல்லடா
தலைநிமிர்ந்து நில்லடா‘


அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
இனிபுருகு சிந்தை இடு திரியா – நன்புருகி
ஞானச் சுடர் விளக்கேற்றினேன் நாரணற்கு
ஞானத் தமிழ் புரிந்த நான்.
(தகளி-தகழி, அகல் விளக்கு, நன்பு – அன்பு, ஆத்மா)
இயல், இசை மற்றும் நாடகத்திற்கு ஏற்றது தமிழ் மொழி.  இனிய மொழி.  இறைவன் விரும்பிய மொழி.  இப்படிப்பட்ட தமிழ் மொழி பயின்று வளர்ந்த பூதத்தாழ்வார் தமிழைப் பயின்றதற்காகப் பெருமைப்படுகிறார்.  தமிழை ஞானத்தமிழ் என்று ஏத்துகிறார்.  தனது அன்பு எனும் அகல்விளக்கில் ஆசை என்னும் நெய்யை இட்டு, மனத்தைத் திரியாக இட்டு உள்ளம் உருக திருமாலுக்கு ஞானச் சுடர் ஏற்றியதாகக் கூறுகிறார் ஆழ்வார்.

தமிழால் பாடல் பாடி இறைவனைத் துதிப்பதைப் பெருமையாகக் கருதியிருக்கிறார்கள் பண்டைய நாளில். பூதத்தாழ்வார் பிறிதொரு பாடலில் கூறுகிறார் பாருங்கள்.

யானே தவஞ் செய்தேன் ஏழ் பிறப்பும் எப்பொழுதும்
யானே தவமுடையேன் எம்பெருமான் – யானே
இருந்தமிழ் நன்மாலை இணையடிக்கே சொன்னேன்
பெருந்தமிழன் அல்லேன் பெரிது.

எம்பெருமானே ஏழ்பிறப்பும் யான் தவம் செய்தேன்.  எனவே இரு தமிழ் மாலை இணை அடிக்கே சொன்னேன்.  பெரிது நல்லேன்.  பெருந்தமிழன் நானே என்று கூறி பெருமைப்படுகிறார் பூதத்தாழ்வார்.

பூதத்தாழ்வார் வழியில் நின்று
‘தமிழன் என்று சொல்லடா
தலைநிமிர்ந்து நில்லடா‘