Tuesday, August 2, 2011

story of vaali _வாலிவதைப் படலம்

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு


இச்சரத்தினை எய்தவன் யாராக இருக்க முடியும் என்று சிந்திக்கிறான் வாலி.

தேவரோ என அயிர்க்கும் அத்தேவர் இச்செயலுக்கு
ஆவரோ அவர்க்கு ஆற்றல் உண்டோ


எப்போதுமே எதிரியின் நெஞ்சைத் துளைத்துக் கொண்டு வேகமாக வெளியேறும் இராமபாணம்.  அதைத் தன் கையால் பிடித்து தடுத்து நிறுத்துகிறான் வாலி.  அந்த அம்பை உருவுகிறான்.  அதில் இராமனின் பெயர் இருந்ததைப் பார்க்கிறான். தன்து நெஞ்சில் பாய்ந்த அம்பு இராமனால் எய்யப்பட்டது என்று தெரிந்தவுடனேயே வாலி கூறும் வாசகம் நமது நெஞ்சில் நீங்காத வடுவாகப் பதிகிறது.

இல்லறம் துறந்த நம்பி எம்மனோர்க்காகத் தங்கள்
வில்லறம் துறந்த வீரன் தோன்றலால் வேதநூலில்
சொல்லறம் துறந்திலாத சூரியன் மரபும் தொல்லை
நல்லறம் துறந்தது

என்று கூறி நகைக்கிறான்.  பெருமுழக்கமிட்டுச் சிரிக்கிறான் வாலி.  இப்படிக் வாலி கூறக் கேட்ட இராமன் வாலி முன்னே தோன்றுகிறான்.  எல்லாம் தெரிந்த நீங்களே இப்படி செய்யலாகுமா என்று வினா தொடுக்கிறான் வாலி. “தீமை தான் பிறரைக் காத்துத் தான் செய்தால் தீங்கன்றாமோ” என்று நக்கலாகக் கேட்கிறான்.  “ஓவியத்து எழுத ஒண்ணா உருவத்தாய் – அமிழ்தின் வந்த தேவியைப் பிரிந்த பின்னை திகைத்தனை போலும்” என்று இராமனின் தவறுக்குத் தானே காரணமும் கூறுகிறான்.  “அரக்கர் தலைவன் தவறு செய்தால் குரங்குத் தலைவனைக் கொல்லுவதா” என்று கேட்கிறான் வாலி.

கூட்டு ஒருவரையும் வேண்டா கொற்றவ பெற்ற தாதை
பூட்டிய செல்வம் ஆங்கோர் தம்பிக்குக் கொடுத்துப் போந்து
நாட்டொரு கருமஞ் செய்தாய் எம்பிக்கு இவ்வரசை நல்கிக்
காட்டொரு கருமம் செய்தாய் கருமம் தான் இதன் மேல் உண்டோ

“உன் தந்தை உனக்குக் கொடுத்த அரச பதவியை பரதனுக்குக் கொடுத்து நாட்டில் ஒரு தருமம் செய்தாய்.  காட்டிலேயோ என் தந்தை எனக்குக் கொடுத்த அரச பதவியைப் பறித்து என் தம்பிக்குக் கொடுத்துள்ளாய்.  தருமத்தின் தலைவன் நீ தான்” என்று குத்திக் காட்டுகிறான்.  மறைந்து நின்று நீ கொன்றது ஒரு குற்றமே.  அப்படியிருக்க இராவணன் தவறு செய்தான் என்று எவ்வாறு நீ குற்றம் சாட்ட இயலும் என்றும் கேட்கிறான்.  அதுமட்டுமல்ல,

இருவர் போர் எதிரும் காலை இருவரும் நல் உற்றாரே
ஒருவர் மேல் கருணை தூண்டி ஒருவர் மேல் ஒளித்து நின்று
வரிசிலை குழைய வாங்கி வாய் அம்பு மருமத்து எய்தல்
தருமமோ” என்று வினவுகிறான்.  மறைந்து நின்று அம்பு எய்தது,

வீரம் அன்று விதி அன்று மெய்ம்மையின்
வாரம் அன்று நின் மண்ணினுகு என் உடல்
பாரம் அன்று பகை அன்று பண்பழிந்து
ஈரமின்றி இது என் செய்தவாறு அரோ

என மறைந்து நின்று அம்பு எய்த வீரமற்ற செயலைச் செய்த இராமனைக் கண்டிக்கிறான் வாலி.  சூரியன் மரபுக்கே களங்கத்தை ஏற்படுத்தி விட்டதாக வருத்தப்பட்டு பேசுகிறான்.

கார் இயன்ற நிறத்த களங்கம் ஒன்று
ஊர் இயன்ற மதிக்கு உளதாம் எனச்
சூரியன் மரபுக்கும் ஓர் தொன் மறு
ஆரியன் பிறந்து ஆக்கினை ஆம் அரோ

என்று கூறுகிறார் கம்பர்.  “மறைந்து நின்று அம்பு எய்து என்னைக் கொல்ல முயன்ற நீ இப்போது ஆண் சிங்கம் போல என் முன் வந்து நிற்கின்றாயே” எனக் கேட்கிறான் வாலி.  

பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்த இராமன் இப்போது தன்னுடைய வாதத்தை எடுத்து வைக்கின்றான். 

தன் மார்பில் பதிந்த அம்பு இராமனுடையது என்பதை அறிந்ததும் உயிர் போகும் நிலையிலும் வாய்விட்டு சிரித்து இராமன் நெறி பிறழ்ந்ததைச் சுட்டிக் காட்டுகிறான் வாலி.  இப்போது இராமனின் முறை.  தனது நியாயத்தை எடுத்துச் சொல்லுகிறான் இராமன்.  வாலி ஒரு மாயாவியுடன் போரிட குகை ஒன்றுக்குள் சென்று வெகுநாட்களாகப் போரிடுகிறான்.  வெளியில் சுக்கிரீவனும் அமைச்சர் பெருமக்களும் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.  நெடுநாள் ஆன காரணத்தால் அண்ணன் திரும்பி வராததைக் கண்டுத் திகைக்கிறான் சுக்கிரீவன்.  அண்ணனுக்கு ஆபத்து ஏற்பட்டிருக்குமோ என்று அஞ்சுகிறான்.  துணைக்குத் தானும் குகைக்குள் புக முயல்கிறான் சுக்கிரீவன்.  ஆனால் சுற்றி இருந்த பெரியவர்களும் அமைச்சர்களும்தடுத்து நிறுத்துகிறார்கள்.  மக்களைக் காக்கும் பொறுப்பு உள்ளதைச் சுட்டிக் காட்டுகிறார்கள்.  மறுக்கிறான் சுக்கிரீவன்.

வானம் ஆள என் தம்முனை வைத்தவன்
தானும் மாளக் கிளையின் இறத் தடிந்து
யானும் மாள்வேன் இருந்து அரசு ஆள்கிலேன்

என்று சுக்கிரீவன் கூற தடுத்தனர் முற்று உணர்ந்த முதியவர்களும் அமைச்சரும்.  அரசுரிமையை ஏற்று மக்களைக் காக்கும்படி வேண்டுகிறார்கள்.  எனவே வேறு வழியில்லாமல் சுக்கிரீவன் அரசுப் பொறுப்பை ஏற்கிறான்.  சிறிது காலம் சென்றபின் போரில் வெற்றி பெற்ற வாலி திரும்பி வருகிறான்.  தன் தம்பி அரசாள்வதைக் கண்டு வெகுண்டு எழுகிறான். கொதிக்கிறான்.  ஆனால் சுக்கிரீவன் அண்ணன் வரவு கண்டு அகமகிழ்கிறான்.  ஆணவமில்லாத சுக்கிரீவன் நடந்ததை எடுத்துக் கூறுகிறான்.  ஆனால் சினத்தில் இருந்த வாலி செவிமடுக்கவில்லை.  சினத்தின் காரணமாகச் சிந்தையைப் பறிகொடுத்து விட்டான் வாலி.  குற்றமற்றவன் என்று அவன் கூறிய சொற்களை ஏற்கவில்லை வாலி.  கோபத்தில் பொங்கினான்.  தொழுத கையோடு நின்றவனை ஆதரிக்காமல் கொல்லுவேன் என வாலி அடிக்க ஓடினான்.  நால் திசையிலும் ஓடினான் சுக்கிரீவன்.  விடவில்லை வாலி.  எனவே தான் முனிவரால் சாபமிடப்பட்டு வாலியால் வரமுடியாத பொன்மலைப்பகுதியை அடைந்தான்.(இப்பொன்மலைப் பகுதி தான் இருசிய முகமலை என இப்போது அழைக்கப்படுகிறது).  கர்நாடகத்தில் உள்ள ஹம்பிக்கு அருகே துங்கபத்திரா நதிக்கரையில் உள்ளது.  அதுமட்டுமல்ல  சுக்கிரீவனின் மனைவியையும் சொந்தம் கொண்டாடி உறவு கொள்கிறான்.  இவற்றையெல்லாம் எடுத்துக் கூறிய இராமர்,  “உனக்கு நியாயஅநியாயங்கள் பற்றி நன்றாகத் தெரியும்.  சிந்தித்துச் செயல்படவில்லை.  அதுமட்டுமல்ல சுக்கிரீவன் மனைவிளை ஆள்வது பாதகமான செய்ல் என்று உணர்ந்தவன் நீ.  ஆனால் சுக்கிரீவனின் மனைவியை நீ அடைந்தாய்.  இது மிகவும் நியாயமற்ற செயல்”

ஈரம் ஆவதும் இல்பிறப்பு ஆவதும்
வீரம் ஆவதும் கல்வியின் மெய்ந்நெறி
வாரம் ஆவதும் மற்றொருவன் புணர்
தாரம் ஆவதைத் தாங்கும் தருக்கரோ

(வாரம் என்றால் உரிய செயல், தருக்கு என்றால் பெருமை)

மறம் திறம்பல் வலியம் எனா மனம்
புறம் திறம்பல் எளியவர்ப் பொங்குதல்
அறம் திறம்பல் அருங்கடி மங்கையர்
திறம் திறம்பல் தெளிபுடையோர்க்கு எலாம்.

வீரத்தில் இருந்து தவறுதல்,  எளியவர் மேல் பாய்தல், தருமத்தில் இருந்து தவறுதல், கற்பின் வலியை அழித்தல் போன்ற தவறுகளைச் செய்தவன் என்று இராமன் வாலி மேல் அடுக்கடுக்காகக் குற்றம் சாட்டுகிறான்.

தருமம் இன்னது எனும் தகைத் தன்மையும்
இருமையும் தெரிந்து எண்ணலை எண்ணினால்
அருமை உம்பிதன் ஆருயிர்த் தேவியைப்
பெருமை நீங்கினை எய்தப் பெறுதியோ

அறத்தைப் பற்றியோ இம்மை-மறுமை பற்றியோ நீ சிந்திக்கவில்லை.  எனவே தான் உன் தம்பியின் மனைவியை உனதாக்கிக் கொண்டாய்.  இப்படி நீ பல தவறுகளைச் செய்தாய்.  உன் தம்பியோ என்னைச் சரணடைந்தான்.  என் நண்பனானான்.  எளியவன் துன்பத்தை ஒழிப்பது என் கடமை.  எனவே தான் உன்னைக் கொல்லத் துணிந்தேன் என்கிறான் இராமன். தன்னுடைய செயலை இராமன் நியாயப் படுத்தியதும் வாலி மீண்டும் தன் பக்கத்து நியாயத்தை எடுத்து உரைத்து மறைந்திருந்து கொன்றது தவறே எனச் சுட்டிக் காட்டுகிறான்.

வாலி மிக அழகாக பதில் சொல்கிறான்.  நீங்கள் சொல்லிய அறச் செயல்கள் எல்லாம் மனித குலத்திற்கு உரியன.  நாங்களோ குரங்கு இனத்தைச் சேர்ந்தவர்கள்.  விருப்பமானபடி வாழ்தலே எங்கள் தருமம்.  எனவே மனித தருமத்து நியாயத்தை வைத்து நான் தவறு இழைத்ததாகக் கூற முடியாது என பதில் சொல்கிறான்.  ஒருவகையில் இதைக் கேட்டால் நியாயமாகத் தான் நமக்கும் தெரிகிறது.  இராமனும் ஏற்கனவே இலக்குவனிடம் “பித்து ஆய விலங்கு” என ஏற்கனவே வாலியைக் கூறி உள்ளான். “கற்புடைமை என்பது மனித குலத்திற்கு உரியதாகப் பிரமன் படைத்து விட்டான்.  மணந்து கொண்ட கணவனுடன் வாழுவது மனித தர்மம்.  குரங்குகளாகிய நாங்கள் நேர்ந்தால் நேர்ந்தபடி வாழுமாறு பிரமன் படைத்துவிட்டான்.  மனஉணர்ச்சி வழியே செல்கின்றவர்கள் நாங்கள்.  வேதமுறைப்படி வந்த திருமணமுறை எங்களுக்கு இல்லை.  எங்களுடைய பிறப்பின் தன்மை இப்படிப்பட்டது.  எனவே எங்கள் நியதிப்படி நான் குற்றம் ஒன்றையும் செய்யவில்லை” என்று தன் தரப்பை எடுத்து விளக்குகிறான் வாலி.  இராமன் நிதானமாகப் பதில் சொல்கிறான்.  “இறைவனைக் குறித்து தவம் செய்து வரம் பல பெற்றுள்ளாய்.  நீதி நியாயங்களைப் பேசத் தெரிகிறது.  அறவழிகளைப் பற்றி நன்றாக அறிந்துள்ளாய்.  வானவரின் புதல்வனாக உள்ளாய்.  வீரம் மிக்கவன் நீ.  இராவணனையே அடக்கியவன் நீ.  பாற்கடலைக் கடைந்து உள்ளாய்.  எனவே உன் பழக்க வழக்கத்தால் அறநெறியை நன்றாக அறிந்தவன் நீ.  அறவழி என்பது உடல் பற்றியதோ இனம் பற்றியதோ அல்ல.  அறநெறி அறிந்தவன் தவறு செய்துவிட்டு செய்யவில்லை எனச் சாதிக்கக் கூடாது.  அது அறமல்ல.” எனப் புத்தி புகட்டுகிறார் இராமர்.

பொறியின் யாக்கையதோ புலன் நோக்கிய
அறிவின் மேலது அன்றோ அறத்து ஆறு தான்
நெறியின் நோன்மையை நேரிது உணர்ந்த நீ
பெறுதியோ பிழை உற்று உறு பெற்றி தான்

என்கிறார் கம்பர்.  “தன் காலை ஒரு முதலை கவ்விய போது  திருமாலை நோக்கிக் “ஆதிமூலமே” எனக் அலறிய யானையை ஒரு விலங்கினமாகக் கொள்ள முடியாது.  எல்லா யானைகளும் ஆபத்துக் காலத்தில் இறைவனை அழைப்பதில்லை.  இராவணன் சீதையைத் தூக்கிக் கொண்டு போகும் போது அறவழியைப் பேசி இராவணனுடன் போரிட்ட ஜடாயு என்னும் கழுகு விலங்கினத்தைச் சேர்ந்தது அல்ல.  எல்லா கழுகுகளும் அவ்வாறு நியாயத்தை எடுத்துக் கூறி போரிட முடியாது.  விலங்குகள்  நன்மை தீமைகளைப் பற்றி அறியாது .  உனக்கோ நன்மை தீமையைப் பற்றி நன்றாகத் தெரிகிறது.  வரம் பல பெற்று உள்ளாய்.  உனக்குத் தெரியாத அறவழியே இல்லை.  எல்லா உயிரினங்களிலும் சிறந்ததான மனிதப் பிறவி எடுத்தாலும் தக்கது – தகாதது அறியவில்லை என்றால் அவர்கள் விலங்குகளே.  சிவபெருமானைக் குறித்து கடுமையான தவம் புரிந்து அருமையான வரங்களைப் பெற்றவன் நீ.  இப்படியெல்லாம் சிறப்புடைய நீ சுக்கிரீவனின் மனைவியின் கற்பின் சிறப்பை அழித்து விட்டாய்.  எனவே எப்படி பார்த்தாலும் நீ செய்தது குற்றமே” என்று இராமன் கூறுகிறான்.

நன்று தீது என்று இயல்நெறி நல்லறிவு
இன்றி வாழ்வதன்றோ விலங்கின் இயல்
நின்ற நன்னெறி நீ அறியா நெறி
ஒன்றும் இன்மை உன் வாய்மை உணர்த்துமால்.

தக்க இன்ன தகாதன இன்னவென்று
ஒக்க உன்னலர் ஆயின் உயர்ந்துள
மக்களும் விலங்கே மனுவின் நெறி
புக்கவேல் அவ்விலங்கும் புத்தேளிரே

இனையது ஆதலின் எக்குலத்து யாவர்க்கும்
வினையினால் வரும் மேன்மையும் கீழ்மையும்
அனைய தன்மை அறிந்தும் அழித்தனை
மனையின் மாட்சி என்றான் மனுநீதியான்.

என்பது கம்பர் வாக்கு.  அப்போதும் விடவில்லை வாலி.  “உங்கள் கூற்றுப்படி நான் விலங்கினத்தைச் சேர்ந்தவன் அல்ல.  நான் விலங்கு அல்ல என்றால் என்னுடன் நேருக்கு நேர் நின்று அன்றோ நீங்கள் போர் புரிந்திருக்க வேண்டும்.  விலங்கை வேடன் கொல்வது போல் மறைந்திருந்து என்னைத் தாக்கியது ஏன்” என்று வாலி கேட்கிறான்.  இதற்கு இராமனால் பதில் கூற முடியவில்லை.  ஆனால் இலக்குவன் உதவிக்கு வருகிறான்.  “உன் தம்பி ஏற்கனவே சரணடைந்து விட்டான்.  நேரில் வந்தால் நீயும் சரணடைவாய்.  அப்போது நீதியை நிலைநிறுத்த முடியாது.  எனவே என் அண்ணன் மறைந்திருந்து அம்பெய்தான்” என்று இலக்குவன் கூறுகிறான்.  இவையெல்லாம் கேட்டு ஒருவழியாக இறுதியில் சமாதானமடைகிறான் வாலி.  தவறை உணர்கிறான்.  இராமனை வணங்குகிறான் கவிக்குலத்து அரசன் வாலி.

தாயென உயிர்க்கு நல்கித் தருமமும் தகவும் சால்பும்
நீயென நின்ற நம்பி நெறியினில் நோக்கும் நேர்மை
நாயென நின்ற எம்மால் நவையற உணரலாமே
தீயென பொறுத்தி என்றான் சிறியன சிந்தியாதான்.

உயர்ந்த நன்னெறியை நாய் போன்ற என்னால் உணர முடியவில்லை.  மன்னிக்க வேண்டுகிறேன் என்று கூறிகிறான் சிறியன சிந்தியாதான்.  அதோடு நிற்கவில்லை.  “மரணத்தருவாயில் எனக்கு நல்லறிவைக் கொடுத்துள்ளாய்.  “மூவர் நீ முதல்வன் நீ முற்றும் நீ மற்றும் நீ பாவம் நீ தருமம் நீ பகையும் நீ உறவும் நீ”  என்று இராமனைப் போற்றுகிறான்.  சிந்திக்கிறான்.  ஒரு தடவை விலங்கு அல்ல என்கிறான்.   ஆனால் விலங்கைக் கொல்வது போல மறைந்து நின்று கொன்றது நியாயம் என்று சொல்லுகிறான் இந்த இராமன்.  எதிர்காலத்தில் என் தம்பிக்கோ என் மகனுக்கோ இதே கதி வந்துவிடக்கூடாது” என்று நினைக்கிறான்.  எனவே இராமரிடம் சில வரங்கள் சில வேண்டுகிறான்.
“பிறவி நோய்க்கும் அருமருந்து அனைய ஐயா – வரந்தரு வள்ளால் ஒன்று கேள் என மறித்தும் சொல்வான்”.  நீங்கள் உண்மையிலேயே பெரிய வீரர் தான்.  முப்புரம் எரித்த சிவபெருமானும் பிற தேவர்களும் கொடுத்த வரங்களால் வலிமை கொண்ட என் மார்பையே துளைக்கும் வண்ணம் சரம் தொடுத்தவரன்றோ நீங்கள்.   வரங்களை அள்ளித் தரும் சிவபெருமானே உங்கள் நாமத்தைக் கூறி அன்றோ வரம் தரும் வள்ளல்தன்மையை அடைந்துள்ளார்.  உயர்திணை அஃறிணைப் பொருட்களாக – ஆறுவகைப் பருவங்களாக – மலரும் அதில் உள்ள மணமுமாக எல்லாவற்றிலும் நீங்கள் நீக்கமறக் கலந்து உள்ளீர்கள்.  உங்கள் அம்பினால் மாளும் நான் முக்தி அடைவது உறுதி.

“யாவரும் எவையுமாய் இருதுவும் பயனுமாய்ப்
பூவும் நல்வெறியும் ஒத்து ஒருவரும் பொதுமையாய்”  இருப்பவன் இராகவன் என்பது கம்பர் வாக்கு.  (இருது(ருது எனும் வடசொல் தமிழ் மொழியில் வந்துள்ளது) என்றால் பருவகாலம்.  வெறி என்றால் மணம்.).  நான் செய்த தீமைகளுக்கெல்லாம் தண்டனை கொடுத்து எனக்கு முக்தி அளித்து விட்டாய் “தருமமே உருவமாய் உடையவ”.  “வானினும் உயர்ந்த மானக் கொற்றவனே, குரங்குகளுடன் ஆலோசனை செய்து எனது தம்பிக்கு பயனற்ற வெற்று அரசைக் கொடுத்து எனக்கு தண்டனை மூலம் வீட்டுப் பேற்றினை அளித்து உள்ளாய்.  ஓவிய உருவத்தினனே, ஒருவேளை என் தம்பி இனப் பழக்கத்தால் என்றேனும் மது அருந்தி தவறு செய்தால் என் மேல் சரம் எய்தது போல் என் தம்பி மேல் சரம் தொடுக்கக் கூடாது என வேண்டுகிறேன்.  அண்ணனைக் கொன்றவன் இவன் என்று உன் தம்பிமார்கள் என் தம்பியை இகழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.  என்னிடம் உதவி கேட்டிருந்தால் என் வாலில் இராவணனைக் கட்டி வந்து உன் துணைவியை மீட்டிருப்பேன்.  காலம் கடந்துவிட்டது.  நான் மரணத்தின் வாசலில் உள்ளேன்.  கடந்ததைச் சொல்லிப் பயன் இல்லை.  ஆனால் அப்பணியைச் செய்ய வல்லமை உள்ளவன் அனுமன் இங்கே உள்ளான்.

.....மாய அரக்கனை வாலில் பற்றிக்
கொற்றவ நின் கண் தந்து குரக்கியல் தொழிலும் காட்டப்
பெற்றிலென் கடந்த சொல்றிப் பயனிலைப் பிறிது ஒன்றேனும்
உற்றது செய்க என்றாலும் உரியன் இவ்வனும்ன்

என்றான்.  அதுமட்டுமல்ல அனுமனை உன்னடைய வில் போல் நினைத்திடல் வேண்டும்.  வில் வளைத்தால் எதையும் சாதிக்கும் வல்லமை படைத்தவன் நீ.  அதே போல் அனுமன் நினைத்தால் நினைத்ததை முடிப்பான்.  என்னுடைய தம்பியை உன்னுடைய தம்பியாகக் கருத வேண்டும்.  இவர்கள் உதவியால் உன் துணைவியை நீ மீண்டும் அடையலாம். என்று கூறுகிறான் வாலி.

பின்னர் சுக்கிரீவனை அழைத்து அறிவுரை கூறுகிறான்.  “பரம்பொருளே வில்லேந்தி உன் முன் இராமனாக நிற்கிறான்.  முக்திச் செல்வம் வேண்டும் என எண்ணுவோர் இராகவனையே துதிக்கிறார்கள்.  இவருக்குப் பணி செய்து நீயும் முக்தி பெறலாம்.  இராமபிரான் கட்டளையை தலைமேற்கொண்டு அக்கறையுடன் பணி செய்ய வேண்டும்.  அவர் கருதியதை நீ முடித்துக் காட்ட வேண்டும்.  குற்றம் பொறுப்பார்கள் என்று கருதி தவறு இழைக்கக் கூடாது.” என்று சுக்கிரீவனை அறிவுறுத்திப் பின் தன் மகன் அங்கதனை அழைக்கிறான்.    அங்கதன் வரும் காட்சியும் அழுது புலம்பும் காட்சியும் மனக் கண்ணால் பார்க்கும் வண்ணம் கம்பர் சொல்லோவியமாகத் தந்துள்ளார்

சுடருடை மதியம் என்னத் தோன்றினன் தோன்றி யாண்டும்
இடர் உடை உள்ளத்தோரை எண்ணினும் உணர்ந்திலாதான்”

துன்பத்தையே இதுவரை காணாதவன் அங்கதன்.  தந்தை குருதிக் கடலில் விழுந்து கிடப்பதைக் கண்டவுடன் புலம்புகிறான்.  தந்தையின் மீது வீழ்ந்து அழுகிறான்.

கண்டனன் கலுழி நீரும் குருதியும் காலை மாலைக்
குண்டலம் அலம்புகின்ற குவவுத்தோட் குரிசில் திங்கள்
மண்டலம் உலகில் வந்து கிடந்ததம் மதியின் மீதா
விண்தலம் தன்னின் இன்று ஓர் மீன் விழுந்தென்ன வீழ்ந்தான்.
என்கிறார் கம்பர்.
“எந்தையே எந்தையே இவ்வெழுதிரை வளாகத்து யார்க்கும்
சிந்தையால் செய்கையால் ஓர் தீவினை செய்திலாதாய்” என விளித்து  “நின் முகம் நோக்கிக் கூற்றம் வந்ததே அன்றோ அஞ்சாது” எனத் துடிக்கிறான்.   சிறியன சிந்தியாதான என்று அழைக்கப்படும் வீரனான வாலி சிந்தையால் செய்கையால் ஓர் தீவினை செய்யாதவன் என அங்கதன் மொழிகிறான்.   “பூமியைக் காக்க எண்புறமும் நிற்கும் யானைகளைத் தேர்ற்கடித்த இராவணன் கூட உன் வாலின் வீரத்தை நீனைத்த போதெல்லாம் அஞ்சினானே.  அப்படிப்பட்ட பெருவீரனாகிய நீ மரம் சாய்ந்தது போல் வீழ்ந்து கிட்க்கிறாயே.  இனி தேவர்களோ அசுரர்களோ பாற்கடலைக் கடைய வேண்டும் என்றால் யாருடைய வலிமையை நம்பி கடைய முடியும்.  பாற்கடலைக் கடைந்து அமுதத்தை அடைய உதவினாய்.  உனக்கு அந்த அமுதத்தைத் தரவில்லையே அந்தத் தேவர்கள்.  நீயும் அந்த அமுதத்தைப் பெறவேண்டும் என்று நினைக்கவில்லையே.  நீ இப்போது இறக்கும் தருவாயில் உள்ளாயே.  உன்னைப் போன்ற வள்ளல் யாரும் உண்டோ?” என்று மனம் பதைபதைத்துப் புலம்புகிறான் அங்கதன்.  வாலி தன் மகன் அங்கதனைத் தேற்றுகிறான்.  இராமனால் மரணத்தைத் தழுவிக்கொண்டு இருப்பது புண்ணியத்தின் பயனே என்பதை உறுதி செய்து தன் மகனுக்குத் தெரிவிக்கிறான்.  பின்னர் தன் மகனுக்கு சில அறிவுரைகளைக் கூறுகிறான்.  “தந்தையாகிய என் சொல்லைக் கேட்பாயாக.  இளமைப் பருவத்தின் விளையாட்டுத் தன்மையை விட்டுவிட வேண்டும்.  இந்த இராகவன் பிறவி நோய்க்கு மருந்து போன்றவன்.  இவன் கட்டளைய்ச செயல்படுத்தி நடந்து கொள்” என்று கூறிவிட்டு இராமனிடம் “இவன் குற்றமற்றவன்.  இவனையும் உன் அடைக்கலமாக ஏற்றுக் கொள்ளவேண்டும்” என வேண்டுகிறான்.  அடைக்கலம் என்று வந்தவரை இராமன் எப்பாடு பட்டும் காப்பாற்றுவான் என்பது வாலிக்கு நன்றாகப் புரிந்து விட்டது.  எனவே தன் மகன் அங்கதனுக்கு யாராலும் பாதகம் வரக்கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு அடைக்கலமாக ஏற்றுக் கொள்ளும்படி இராமனிடம் வேண்டுகிறான்.  இராமனும் அவ்வாறே அங்கதனை அடைக்கலமாக ஏற்று அதற்கு அடையாளமாகத் தன் வாளை அவனிடம் தருகிறான்.  இது கண்டு வாலி திருப்தி அடைகிறான்.  அவன் இராமபாணத்தைப் பிடித்திருந்த பிடி நழுவுகிறது.  தளர்கிறது.  உடனே அந்த பாணம் வாலியின் மார்பைத் துளைத்துக் கொண்டு உயர எழுந்து இராமனின் அம்பறாத்தூணியில் சேர்ந்தது.    


இயன்றால் அருள்கூர்ந்து கம்பராமாணத்தில் – கிட்கிந்தா காண்டத்ல் ஏழாவது படலமாக வரும் வாலி வதைப்படலத்தை ஒருமுறை படித்துப் பாருங்கள்.  தமிழின் பெருமையை உணரலாம்.  பல நியாயங்கள் மோதுவதைப் படித்து இரசிக்கலாம்.

Tuesday, July 26, 2011

Kambaramayanam _ வாலிவதைப் படலம்

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு

பாகம் இரண்டு

தன்து நெஞ்சில் பாய்ந்த அம்பு இராமனால் எய்யப்பட்டது என்று தெரிந்தவுடனேயே வாலி கூறும் வாசகம் நமது நெஞ்சில் நீங்காத வடுவாகப் பதிகிறது.

“இல்லறம் துறந்த நம்பி எம்மனோர்க்காகத் தங்கள்
வில்லறம் துறந்த வீரன் தோன்றலால் வேதநூலில்
சொல்லறம் துறந்திலாத சூரியன் மரபும் தொல்லை
நல்லறம் துறந்தது”

என்று கூறி நகைக்கிறான்.  பெருமுழக்கமிட்டுச் சிரிக்கிறான் வாலி.  இப்படிக் வாலி கூறக் கேட்ட இராமன் வாலி முன்னே தோன்றுகிறான்.  எல்லாம் தெரிந்த நீங்களே இப்படி செய்யலாகுமா என்று வினா தொடுக்கிறான். “தீமை தான் பிறரைக் காத்துத் தான் செய்தால் தீங்கன்றாமோ” என்று நக்கலாகக் கேட்கிறான்.  “ஓவியத்து எழுத ஒண்ணா உருவத்தாய் – அமிழ்தின் வந்த தேவியைப் பிரிந்த பின்னை திகைத்தனை போலும்” என்று இராமனின் தவறுக்குத் தானே காரணமும் கூறுகிறான்.  “அரக்கர் தலைவன் தவறு செய்தால் குரங்குத் தலைவனைக் கொல்லுவதா” என்று கேட்கிறான் வாலி.

கூட்டு ஒருவரையும் வேண்டா கொற்றவ பெற்ற தாதை
பூட்டிய செல்வம் ஆங்கோர் தம்பிக்குக் கொடுத்துப் போந்து
நாட்டொரு கருமஞ் செய்தாய் எம்பிக்கு இவ்வரசை நல்கிக்
காட்டொரு கருமம் செய்தாய் கருமம் தான் இதன் மேல் உண்டோ

உன் தந்தை உனக்குக் கொடுத்த அரச பதவியை பரதனுக்குக் கொடுத்து நாட்டில் ஒரு தருமம் செய்தாய்.  காட்டிலேயோ என் தந்தை எனக்குக் கொடுத்த அரச பதவியைப் பறித்து என் தம்பிக்குக் கொடுத்துள்ளாய்.  தருமத்தின் தலைவன் நீ தான் என்று குத்திக் காட்டுகிறான்.  மறைந்து நின்று நீ கொன்றது ஒரு குற்றமே.  அப்படியிருக்க இராவணன் தவறு செய்தான் என்று எவ்வாறு நீ குற்றம் சாட்ட இயலும் என்றும் கேட்கிறான்.  அதுமட்டுமல்ல,

“இருவர் போர் எதிரும் காலை இருவரும் நல் உற்றாரே
ஒருவர் மேல் கருணை தூண்டி ஒருவர் மேல் ஒளித்து நின்று
வரிசிலை குழைய வாங்கி வாய் அம்பு மருமத்து எய்தல்
தருமமோ” என்று வினவுகிறான்.  மறைந்து நின்று அம்பு எய்தது,

வீரம் அன்று விதி அன்று மெய்ம்மையின்
வாரம் அன்று நின் மண்ணினுகு என் உடல்
பாரம் அன்று பகை அன்று பண்பழிந்து
ஈரமின்றி இது என் செய்தவாறு அரோ

என மறைந்து நின்று அம்பு எய்த வீரமற்ற செயலைச் செய்த செயலைக் கண்டிக்கிறான் வாலி.  சூரியன் மரபுக்கே களங்கத்தை ஏற்படுத்தி விட்டதாக வருத்தப்பட்டுத் தெரிவிக்கிறான்.

கார் இயன்ற நிறத்த களங்கம் ஒன்று
ஊர் இயன்ற மதிக்கு உளதாம் எனச்
சூரியன் மரபுக்கும் ஓர் தொன் மறு
ஆரியன் பிறந்து ஆக்கினை ஆம் அரோ

என்று கூறுகிறார் கம்பர்.  மறைந்து நின்று அம்பு எய்து என்னைக் கொல்ல முயன்ற நீ இப்போது ஆண் சிங்கம் போல என் முன் வந்து நிற்கின்றாயே எனக் கேட்கிறான் வாலி. 

பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்த இராமன் இப்போது தன்னுடைய வாதத்தை எடுத்து வைக்கின்றான். 

தொடரும்.


வாலி வதைப் படலம் – பாகம் 3

தன் மார்பில் பதிந்த அம்பு இராமனுடையது என்பதை அறிந்ததும் உயிர் போகும் நிலையிலும் வாய்விட்டு சிரித்து இராமன் நெறி பிறழ்ந்ததைச் சுட்டிக் காட்டுகிறான் வாலி.  இப்போது இராமனின் முறை.  தனது நியாயத்தை எடுத்துச் சொல்லுகிறான் இராமன்.  வாலி ஒரு மாயாவியுடன் போரிட குகை ஒன்றுக்குள் சென்று வெகுநாட்களாகப் போரிடுகிறான்.  வெளியில் சுக்கிரீவனும் அமைச்சர் பெருமக்களும் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.  நெடுநாள் ஆன காரணத்தால் தானும் குகைக்குள் புக முயல்கிறான் சுக்கிரீவன்.  தடுத்து நிறுத்துகிறார்கள் அமைச்சர்கள்.

வானம் ஆள என் தம்முனை வைத்தவன்
தானும் மாளக் கிளையின் இறத் தடிந்து
யானும் மாள்வேன் இருந்து அரசு ஆள்கிலேன்

என்று சுக்கிரீவன் கூற தடுத்தனர் முற்று உணர்ந்த முதியரும் அமைச்சரும்.  அரசுரிமையை ஏற்று மக்களைக் காக்கும்படி வேண்டுகிறார்கள்.  எனவே வேறு வழியில்லாமல் சுக்கிரீவன் அரசுப் பொறுப்பை ஏற்கிறான்.  சிறிது காலம் சென்றபின் போரில் வெற்றி பெற்ற வாலி திரும்பி வருகிறான்.  தன் தம்பி அரசாள்வதைக் கண்டு கொதிக்கிறான்.  ஆனால் சுக்கிரீவன் அண்ணன் வரவு கண்டு அகமகிழ்கிறான்.  நடந்ததைக் கூறி ஆணவமில்லாத சுக்கிரீவன் நடந்ததை எடுத்துக் கூறுகிறான்.  ஆனால் சினத்தில் இருந்த வாலி செவிமடுக்கவில்லை.  குற்றமற்றவன் என்று அவன் கூறிய சொற்களை ஏற்கவில்லை வாலி.  கோபத்தில் பொங்கினான்.  தொழுத கையோடு நின்றவனை ஆதரிக்காமல் கொல்லுவேன் என வாலி அடிக்க ஓடினான்.  நால் திசையிலும் ஓடினான் சுக்கிரீவன்.  விடவில்லை வாலி.  எனவே தான் முனிவரால் சாபமிடப்பட்டு வாலியால் வரமுடியாத பொன்மலைப்பகுதியை அடைந்தான்.(இப்பொன்மலைப் பகுதி தான் இருசிய முகமலை என இப்போது அழைக்கப்படுகிறது).  கர்நாடகத்தில் உள்ள ஹம்பிக்கு அருகே துங்கபத்திரா நதிக்கரையில் உள்ளது.  அதுமட்டுமல்ல  சுக்கிரீவனின் மனைவியையும் நீ அடைந்தாய்.  உனக்கு நியாயஅநியாயங்கள் பற்றி நன்றாகத் தெரியும்.  அடுத்தவன் மனைவியை ஆள்வது பாதகமான செய்ல் என்று உணர்ந்தவன் நீ.  ஆனால் சுக்கிரீவனின் மனைவியை நீ அடைந்தாய்.

ஈரம் ஆவதும் இல்பிறப்பு ஆவதும்
வீரம் ஆவதும் கல்வியின் மெய்ந்நெறி
வாரம் ஆவதும் மற்றொருவன் புணர்
தாரம் ஆவதைத் தாங்கும் தருக்கரோ

(வாரம் என்றால் உரிய செயல், தருக்கு என்றால் பெருமை)

மறம் திறம்பல் வலியம் எனா மனம்
புறம் திறம்பல் எளியவர்ப் பொங்குதல்
அறம் திறம்பல் அருங்கடி மங்கையர்
திறம் திறம்பல் தெளிபுடையோர்க்கு எலாம்.

வீரத்தில் இருந்து தவறுதல்,  எளியவர் மேல் பாய்தல், தருமத்தில் இருந்து தவறுதல், கற்பின் வலியை அழித்தல் போன்ற தவறுகளைச் செய்தவன் என்று இராமன் வாலி மேல் அடுக்கடுக்காகக் குற்றம் சாட்டுகிறான்.

தருமம் இன்னது எனும் தகைத் தன்மையும்
இருமையும் தெரிந்து எண்ணலை எண்ணினால்
அருமை உம்பிதன் ஆருயிர்த் தேவியைப்
பெருமை நீங்கினை எய்தப் பெறுதியோ

அறத்தைப் பற்றியோ இம்மை-மறுமை பற்றியோ நீ சிந்திக்கவில்லை.  எனவே தான் உன் தம்பியின் மனைவியை உனதாக்கிக் கொண்டாய்.  இப்படி நீ பல தவறுகளைச் செய்தாய்.  உன் தம்பியோ என்னைச் சரணடைந்தான்.  என் நண்பனானான்.  எளியவன் துன்பத்தை ஒழிப்பது என் கடமை.  எனவே தான் உன்னைக் கொல்லத் துணிந்தேன் என்கிறான் இராமன். தன்னுடைய செயலை இராமன் நியாயப் படுத்தியதும் வாலி மீண்டும் தன் பக்கத்து நியாயத்தை எடுத்து உரைக்கிறான்.

தொடரும்.

Monday, July 25, 2011

வாலியும் அர்ச்சுனனும் - சுக்கிரீவனும் கர்ணனும்- இராமாயணம் - வாலி வதைப்படலம்Ramayanam - Story of Vaali

திருமால் எடுத்த அவதாரங்களில் இராம அவதாரமும் கிருஷ்ண அவதாரமும் மிக முக்கயமானவை.    எப்படி வாழ வேண்டும் என்பதை விளக்குவது இராமாயணம்.  எப்படி வாழக்கூடாது என்பதை விளக்குவது மகாபாரதம்.  இந்த இரு காப்பியங்களிலும் வீரம் செறிந்த வாலியும் கர்ணனும் வஞ்சகமாகக் கொல்லப்படுகிறார்கள்.

இராமாயணத்தில் சூரியனின் மகன் சுக்கிரீவன்.  இந்திரனின் மகன் வாலி.  இராமாயணத்தில் இந்திரனின் மகனான வாலி வஞ்சகமாகக் கொல்லப்படுகிறான்.  இராமர் மறைந்திருந்து அம்பு விடுத்து வாலியைக் கொல்கிறார்.  இதற்குப் பரிகாரமாக மகாபாரதத்தில் சூரியன் மகனான கர்ணனை வஞ்சகமாகக் கொல்கிறார் கிருஷ்ணன்.  வீரத்தின் விளைநிலம் கர்ணன்.  வெல்லமுடியாது அவனை.  ஆனால் கிருஷ்ணர் பல மாயங்களைச் செய்து - ஏமாற்றி கர்ணனைக் கொல்கிறார்.  மகாபாரதத்தில் அர்ச்சுனன் இந்திரன் மகன்  இந்திரனின் மகனுக்குச் சாதகமாகச் செயல்படுகிறார்.  இப்போது கூட்டணிகளில் கட்சிகள் மாறி மாறி கூட்டணிகளில் சேர்வது போல உள்ளது இது.

வாலிவதைப் படலத்தைச் சுருக்கமாகப் பார்ப்போம் இப்போது.

வாலியை கம்பர் ;“சிறியன சிந்தியாதான்” என ஏத்திக் கூறுகிறார்.

தாய் என உயிர்க்கு நல்கித் தருமமும் தகவும் சால்பும்
நீ என நின்ற நம்பி நெறியினில் நோக்கும் நேர்மை
நாய் என நின்ற எம்மால் நவையற உணரல் ஆமே
தீயன பொறுத்தி என்றான் சிறியன சிந்தியாதான்.

இராமன் மறைந்திருந்து அம்பை எய்கிறான்.  இராமபாணத்தால் தாக்கப்பட்ட வாலி மரம் போல் சாய்கிறான்.  இராமபாணத்திற்கு ஒரு பெருமை.  எய்தால் உடனே எதிரியை வீழ்த்தி விட்டுத் திரும்பி விடும்.  அப்படிப் பெருமைமிக்க அந்த இராமபாணம் தன் உடலை ஊடுருவிச் செல்லாதபடி பிடித்துக் கொள்கிறான்.  அது மட்டுமல்ல, அந்த பாணத்தை உருவி அது யாரால் எய்யப்பட்டது என்பதைக் காண்கிறான்.  பின்னர் இராமனோடு சொற்போர் நடத்துகிறான்.  இறுதியில் சமாதானமடைந்து கூறும்போது, “இராமபிரானே, நீ உலகத்தில் வாழும் உயிர்களுக்கெல்லாம் தாயைப் போல் திகழ்கிறாய்.  அறம், நடுநிலைமை, நற்குணநிறைவு போன்ற குணங்களின் மொத்த வடிவமாகத் திகழ்கிறாய்.  உனது உயர்ந்த எண்ணங்களை நாய் போன்ற என்னால் உணர முடியுமா?  எனவே நான் செய்த தீச்செயல்களைப் பொறுத்துக் கொள்ள வேண்டும்”என்கிறான் சிறியன சிந்தியாதான் என அழைக்கப்படும் வாலி.  இப்படிப் பெருமைமிக்க வாலியின் வதம் எப்படி கம்பரால் சித்தரிக்கப்படுகிறது என்பதை நாம் பார்ப்போம்.

வனத்தில் சீதையை இழந்து வாடி வரும் இராமரை அனுமன் சந்தித்து சுக்கிரீவனைப் பற்றிக் கூறி அவனுக்கு அபயம் அளிக்க வைக்கிறான்.  சொல்லின் செல்வன் அல்லவா அனுமன்.  எப்படி தன் வாதத்தை எடுத்து வைக்க வேண்டுமோ அப்படி எடுத்து வைத்து இராமரின் ஆதரவைப் பெற்று விடுகிறான்.  பின்னர் சுக்கிரீவன், அனுமன் மற்றும் இராம இலக்குவர்கள் மலைச்சாரல் வழியே செல்கிறார்கள்.  அவர்கள் செல்வது எப்படி உள்ளது என்பதை கம்பர் விளக்குகிறார்.
வெங்கண் ஆளி ஏறும், மீளி மா இரண்டும் வேகநாகமும்
சிங்க ஏறு இரண்டொடும் திரண்ட அன்ன செய்கையார்
தங்க சாலம், மூலம், ஆர் தமாலம், ஏலம், வாழை, மாப்
பொங்கு நாகமும் துவன்று சாரல் ஊடு போயினார்.

ஆண் யாளி ஒன்று, வீரமிக்க புலிகள் இரண்டு, வேகமாகப் போகும் யானைகள் இரண்டு ஆகியவை இரண்டு ஆண் சிங்கங்களுடன் சென்றது போல சுக்கிரீவன் தன் அமைச்சர்களுடன் இராமஇலக்குவர்களோடு மரங்கள் அடர்ந்த மலைச்சாரல் வழியே சென்றார்கள்.
        இராமஇலக்குவர்கள் விரைந்து வருவதைக் கண்டு மேகங்கள் சிதறி ஓடுகின்றன – நீர் பெருகி ஓடுகிறது – பாம்புகள் ஓடுகின்றன – யானைகள் ஓடுகின்றன – சிங்கங்கள் ஓடுகின்றன.  ஓடைகளில் உள்ள வாளை மீன்களும் நீர்ப்பாம்புகளும் கூட ஓடுகின்றன. வேங்கைகளும் கருங்குரங்குகளும் ஓடுகின்றன.  இப்படி பிற உயிரினங்கள் எல்லாம் ஓடுவதை கம்பர் மிக அழகாக எடுத்துக் கூறுகிறார்.

நீடு நாகமூடு மேகம் ஓட நீரும் ஓட நேர்
ஆடு நாகம் ஓட மான யானை ஓட ஆளி போம்
மாடு நாகம் நீடு சாலர் வாளை ஓடும் வாவியோடு
ஓடு நாகம் ஓட வேங்கை ஓடும் ஊகம் ஓடவே

(நீடு நாகமூடு என்றால் உயர்ந்த வானத்தில் எனப் பொருள்
நேர் ஆடு நாகம் என்றார் நேரே படமெடுத்து ஆடும் இயல்புள்ள பாம்புகள் எனப் பொருள்
வாவி என்றால் சுனை, ஊகம் என்றால் கருங்குரங்கு)

இப்படி வளம் பொருந்திய மலைகள் உள்ள பகுதியைக் கடந்து வாலி வாழ்ந்த இடத்தை அடைகிறார்கள்.  அங்கே ஆலோசனை நடத்துகிறார்கள்.  வாலியின் வலிமை என்ன என்பதை அனுமன் எடுத்து உரைக்கிறான்.  வாலிக்கும் சுக்கிரீவனுக்கும் இடையே பகை வரக் காரணம் என்ன என்பதை சுக்கிரீவன் கூறுகிறான்.  எல்லாவற்றையும் கேட்ட இராமர் தன் கருத்தைக் கூறுகிறார்.

அவ்விடத்து இராமன் நீ அழைத்து வாலி ஆனது ஓர்
வெவ்விடத்தின் வந்து போர் விளைக்கும் ஏல்வை வேறு நின்று
எவ்விடத் துணிந்து அமைந்தது என் கருத்து இது என்றனன்
தெவ்வடங்கும் வென்றியானும் நன்று இது என்று சிந்தியா.

பகைவர்களை அடக்கி வெற்றி கொள்ளும் இயல்பினை உடைய இராமன் நன்கு சிந்தித்து “நீ சென்று வாலியைப் போர் செய்யக் கூப்பிடு.  வாலியாகிய  கொடிய விடத்துடனே எதிர்த்துப் போர் செய்கின்ற நேரத்தில் நான் ஓரிடத்தில் மறைந்து நின்று அம்பை எய்து கொல்வேன்” எனத் தன் கருத்தைத் தெரிவிக்கிறான்.

(வெவ்விடம் என்றால் கொடிய விஷம்
எவ்விடம்  என்றால் அம்பைச் செலுத்துதல்  எ என்றால் அம்பு என்ற பொருளுண்டு.
கம்பர் காலத்தில் ஜ, ஷ, ஸ, ஹ போன்ற வட எழுத்துக்களை உபயோகிப்பதற்கு யோசித்து இருக்கிறார்கள்.  இப்போது இவற்றைச் சேர்த்து எழுதுவது நாகரிகம் என்று நாம் யோசிக்கிறோம்.  இதனால் பல தமிழ்ச் சொற்களை இழந்தோம்.  விஷம் என்பதை விடம் என்று அழகாகத் தமிழில் கூறுகிறார்கள்.  கஷ்டம் என்பதைக் கட்டம் என்றும் நஷ்டம் என்பதை நட்டம் என்றும் கூறியிருக்கிறார்கள் அந்தக் காலத்தில்.  வடமொழி எழுத்துகளுக்குப் பதிலாக தமிழ் எழுத்துகளை எப்படி உபயோகிக்க வேண்டும் என தமிழ் இலக்கணத்தில் அழகாகச் சொல்லப்பட்டு உள்ளது.  நாம் தான் படித்துப் புரிந்து கொள்வதில்லை.  வடமொழிச் சொற்களையும் ஆங்கிலச் சொற்களையும் அள்ளி அள்ளித் தமிழில் புகுத்தி அதற்கு இணையான பல தமிழ்ச் சொற்களை இழந்து நிற்கிறோம்.)

இராமபிரானின் இந்த வார்த்தைகளைக் கேட்டவுடன் சுக்கிரீவன் துள்ளிக் குதிக்கிறான்.  ஆரவாரம் செய்கிறான்.  எப்படி என்பதை கம்பரின் சொல்லிலேயே பார்ப்போம்.

வார்த்தை அன்னது ஆக வான் இயங்கு தேரினான் மகன்
நீர்த்தரங்க வேலை அஞ்ச நீலமேகம் நாணவே
வேர்த்து மண்உளோர் இரிந்து விண் உளோர்கள் விம்ம மேல்
ஆர்த்த ஓசை ஈசன் உண்ட அண்டம் முற்றும் உண்டதே

இராமபிரானின் சொற்களைக் கேட்டவுடன் கடல் அஞ்சும் படியாக – மேகங்கள் வெட்கமடையும்படியாக – மண்ணில் உள்ளோரும் விண்ணில் உள்ளோரும் அஞ்சி ஓடும் வண்ணம் பேராரவாரம் செய்தான் கதிரவன் மகன் சுக்கிரீவன்.

(வான் இயங்கு தேரினான் மகன் என்றால் கதிரவன் மகன் எனப் பொருள்.  இராமாயணத்தில் கதிரவன் மகனுக்கு ஆதரவாக போரிட்டு இந்திரன் மகனான வாலியை மறைந்து நின்று வஞ்சகமாகக் கொல்கிறான் திருமாலின் அவதாரமான இராமன்.  மகாபாரதத்தில் இதற்குப் பரிகாரமாக இந்திரனின் மகனான அர்ச்சுனன் பக்கம் நின்று தேரோட்டி மாயைகள் பல புரிந்து வஞ்சகமாகக் கதிரவன் மகனான கர்ணனைக் கொல்லக் காரணமாக செயல்படுகிறான் திருமாலின் அவதாரமான கண்ணன்)  தரங்க வேலை என்றால் அலைகள் வீசும் கடல் எனப் பொருள்.  இரிந்து என்றால் ஓடும்படி எனப் பொருள்)

ஆரவாரம் செய்தததோடு நின்றானா சுக்கிரீவன்.  தேர்தல் காலங்களில் அரசியல்வாதிகள் மேடைகளில் தராதரமின்றி சவால் விடுவது போலப் பேசுகிறான்.  எப்படி?

இடித்து உரப்பி வந்து போர் எதிர்த்தியேல் அடர்ப்பன் என்று
அடித்தலங்கள் கொட்டி வாய் மடித்து அடுத்து அலங்க தோள்
புடைத்து நின்று உளைத்த பூசல் புக்கது என்ப மிக்கு இடம்
துடிப்ப அங்கு உறங்கு வாலி திண் செவித் தொளைக்கணே

உறங்கிக் கொண்டிருக்கின்ற வாலியின் காதைத் துளைக்கும் வண்ணம் குரல் கொடுத்து, “என்னுடைன் போரிய வா.  உன்னைக் கொன்று விடுவேன்.” என்று ஆரவாரம் செய்து தொடைகளையும் தோள்களையும் தட்டுக் கொண்டு கூறுகிறான் சுக்கிரீவன்.

(அடர்ப்பன் என்றால் கொல்வேன் என்று பொருள்.  உளைத்த என்றால் வலிய போருக்கு அழைத்த என்று பொருள்)

யானையின் பிளிறலைக் கேட்ட சிங்கம் போல தனது படுக்கையில் படுத்திருந்த வாலி சுக்கிரீவனின் ஆரவார ஓசையைக் கேட்டான்.  வாலிக்குச் சிரிப்பு வந்தது.   அந்த சிரிப்பைக் கேட்டு ஈரேழு உலகத்தில் உள்ளவர்களும் அஞ்சினார்கள்.

சிரித்தனன் அவ்வொலி திசையின் அப்புறத்து
இரித்தது அல்வுலகம் ஓர் ஏழொடு ஏழையும்

(இரித்தது என்றால் அஞ்சி ஓடும்படி செய்தது,  ஏழொடு ஏழையும் என்றால் பதினான்கு உலகத்தையும் என்று பொருள்)

எழுந்தான் வாலி.  தோள்களைத் தட்டினான்.  சுக்கிரீவனை அழிக்க விரைந்து புறப்பட்டான்.  அவனது நடையால் அதிர்ந்தது கிஷ்கிந்தா பகுதி முழுவதும்.  மலை முகடுகள் சாய்ந்தன.  “வந்தனென் வந்தனென்” என்று கூவிக் கொண்டே வருகிறான் வாலி.  எண்திசையிலும் முழங்கியது அவன் குரல்.  இக்குரல் கேட்டு வானவர் நிலைகுலைந்தனர்.

ஞாலமும் நால்திசைப் புனலும் நாகரும்
மூலமும் முற்றிட முடிவில் தீக்குமக்
காலமும் ஒத்தனன் கடலின் தான் கடை
ஆலமும் ஒத்தனன் எவரும் அஞ்சவே

மண்ணுலகும் நால்திசையில் உள்ள கடல்களும் அழியும்படி வந்தான் வாலி.  ஆலகால கடும்விடத்தைப் போலத் தோன்றினான் அவன்.  வேகமாகக் கிளம்பிய வாலியைத் தடுக்கிறாள் தாரை.  “விலக்கலை விடுவிடு” என்றும் சுக்கிரீவன் “இன்உயிர் குடித்து ஒல்லை மீள்குவன் மலைக்குல மயிலே” என்று கூறி வாலி கிளம்புகிறான்.  (ஒல்லை என்றால் உடனே என்று பொருள்).  ஆனால் தாரையோ அவன் புதிய வலிமை பெறவில்லை ஆனால் புதிய துணையைப் பெற்றுள்ளான்.  அதனால் தான் அவன் ஆரவாரம் எழுப்பி அழைக்கிறான் எனத் தெரிவிக்கிறாள்.  வாலியோ தன் வலிமையை எடுத்துக் கூறுகிறான்.  தாரை கூறுவதை ஏற்க மறுக்கிறான்.
மூன்று என முற்றிய முடிவு இல் பேருலகு
ஏன்று உடன் உற்றன எனக்கு நேர் எனத்
தோன்றினும் தோற்று அவை தொயும் என்றலின்
சான்று உள அன்னவை தையல் கேட்டியால்

மூவுலகத்திலுன் உள்ள சக்திகள் ஒன்றாகச் சேர்ந்து வந்து எதிர்த்தாலும் அவை தோற்று அழியும்.  அதற்குச் சான்றுகள் உள்ளன என்று எடுத்துரைக்கிறான் வாலி.  தான் பாற்கடலைக் கடைந்த வல்லமையை எடுத்து உரைக்கிறான்.  தன்னை எதிர்ப்பவரின் பலத்தில் பாதி தனக்கு வந்து விடும் என்பதையும் எடுத்துக் காட்டுகிறான்.  உடனே தாரை “இராமன் என்பவன் உன்னுயிர் கோடலுக்கு உடன் வந்தான்” எனத் தெரிவிக்கிறாள்.  இராமன் பற்றி மிகப் பெருமையாகக் கூறி இராமரை நீ அவமதித்து விட்டாயே – இராமர் இப்படி செய்யமாட்டார் என உறுதியாகக் கூறுகிறான் வாலி. “இருமையும் நோக்குறும் இயல்பினாற்கு இது பெருமையோ” என்று நவில்கிறான்.  “தருமமே தவிர்க்குமோ தன்னைத் தானரோ” என்கிறான் வாலி.  தர்மம் தன்னைத் தானே அழித்துக் கொள்ளுமா என்று கேட்கிறான். சிறிய தாயின் கட்டளைக்கு இணங்கி அரசுரிமையைத் தன் இளவலுக்கு அளித்தவன் அவன்.  அப்படிப்பட்ட இராமனைப் போற்றாமல் சுக்கிரீவனுக்குத் துணையாக வந்துள்ளான் எனக் கூறித் தூற்றுகிறாயே என்று கொதிக்கிறான் வாலி.  “உலகமே எதிர்த்தாலும் தன் வில்லான கோதண்டம் கொண்டு வெற்றி பெறுவான் இராமன்.  அப்படிப்பட்டவனுக்கு ஒரு குரங்கின் துணை தேவையில்லை.  எனவே சுக்கிரீவனுடன் அவன் நட்பு கொண்டிருக்க முடியாது என வாதிடுகிறான்.

நின்ற பேருலகெலாம் நெருக்கி நேரினும்
வென்றி வெஞ்சிலையலால் பிறிது வேண்டுமோ
தன் துணை தன்னில் ஒருவரும் தன்னில் வேறிலான்
புன்தொழில் குரங்கொடு புணரு நட்பனோ

என்று அழகாகச் சொல்லுகிறார் கம்பர்.  (சிலை என்றால் வில்)

தம்பியர் தவிர தனக்கு வேறு உயிர் இல்லை எனக் கூறும் இராமன் என்னுடைய தம்பியும் நானும் மோதும் இடையில் வந்து அம்பு தொடுக்கமாட்டான் அருட்கடல் இராமன் என உறுதியாக நம்புகிறான்.

தம்பியர் அல்லது தனக்கு வேறு உயிர்
இம்பரின் இலது என எண்ணி ஏய்ந்தவன்
எம்பியும் யானும் உற்று உதிர்ந்த போரிடை
அம்பிடை தொடுக்குமோ அருளின் ஆழியான்.

(அருளின் ஆழியான் என்றால் அருட்கடல்.  ஆழி என்றால் கடல், இம்பரின் என்றால் இந்த உலகத்தில் என்று பொருள்)

இப்படியெல்லாம் வாலி கூறியவுடன் தாரை தடுப்பதற்கு அஞ்சுகிறாள்.  வாலி ஆரவாரம் செய்து கொண்டு கிளம்புகிறான்.  வாலியைக் கண்டவுடன் இராமன் ஆச்சரியம் அடைகிறான்.
“எவ்வேலை எம்மேகம் எக்காலொடு அக்காலவெந்தீ
வெவ்வேறு உலகத்து இவன் மேனியை மானும் என்றான்”
என்று வியக்கிறான் இராமன்.  எந்த கடல், எந்த மேகம், எந்த காற்று, எந்த ஊழித்தீ இவன் மேனியை ஒத்திருக்கும் என்று கூறுகிறான் இராமன்.  (மானும் என்றால் ஒத்திருக்கும் என்று பொருள்).  வாலியைக் கண்டதும் இலக்குவன் திகைக்கிறான்.  மனம் மாறுகிறான்.  தன் அண்ணனையே கொல்ல நினைக்கும் இந்த சுக்கிரீவன் எப்படி நமக்கு உதவுவான் என்றே புரியவில்லை என்று கூறுகிறான் இலக்குவன்.  “மாற்றான் என தம் முனை கொல்லிய வந்து நின்றான் இவன் வேற்றார்கள் திறத்து தஞ்சம் என்” என்கிறான்.  (தம் முனை என்றால் தம் முன்னவன் அதாவது அண்ணன்).  அண்ணன் இராமனோ “பித்துஆய விலங்கின் ஒழுக்கினைப் பேசல் ஆமோ” என்று பதில் சொல்கிறான்.  மிருகங்களின் ஒழுக்கத்தைக் குறித்துக் கவலைப்படத் தேவையில்லை என்கிறான் இராமன்.  இதிலிருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டிய கருத்து ஒன்று உள்ளது.  வாலியையோ சுக்கிரீவனையோ மனித இனமாகப் பார்க்கவில்லை இராமன்.  விலங்கினமாகத் தான் பார்க்கிறான்.  எனவே தான் மறைந்து இருந்து கொல்வதில் தவறில்லை எனத் துணிகிறான்.  அதுமட்டுல்ல, “எத்தாயர் வயிற்றினும் பின் பிறந்தார்கள் எல்லாம் ஒத்தால் பரதன் பெரிது உத்தமனாதல் உண்டோ” என்றும் கூறுகிறான்.  பின்னே பிறந்த தம்பியர் எல்லாம் அண்ணனோடு ஒற்றுமையாக வாழ்ந்தால் பரதன் மிகச் சிறந்த தம்பி என்ற பெயரைப் பெற்றுவிடமுடியுமா எனவும் கேட்கிறான்.  அரசபோகத்தை விடுத்து காட்டில் உடன் சுற்றும் தம்பி இலக்குவன் நல்லவன் என்று கூறவில்லை இராமன்.  பரதனைத் தான் உதாரணத்திற்கு எடுத்துக் கூறுகிறான்.  வாலியும் சுக்கிரீவனும் மோதுகிறார்கள்.  அவர்கள் மோதுவது குன்றோடு குன்று மோதுவது போல் இருந்தது.  ஒருவரையொருவர் கடித்துக் கொண்டார்கள்.  அடித்துக் கொண்டார்கள்.  புடைத்துக் கொண்டார்கள். குத்திக் கொண்டார்கள்.  கடித்துக் கொண்டதால் குருதி கொப்பளித்தது. ஒருவரை மற்றொருவர் தூக்கினர்.  தூக்கி எறிந்தனர்.  சிறிது நேரம் ஒருவருக்கொருவர் சளைக்காமல் சண்டையிட்டாலும் சிறிது நேரத்தில் வாலி
சுக்கிரீவனை நிலைகுலையச் செய்கிறான்.  வருந்திய சுக்கிரீவன் திரும்பி வந்து இராமனிடம் முறையிடுகிறான்.  அடையாளம் தெரிவதற்காக மாலை ஒன்றை அணிவிக்கிறார் இராமர்.  மாலையை அணிந்து கொண்ட சுக்கிரீவன் மீண்டும் வாலியுடன் மோதுகிறான்.  செங்கதிரோன் மகன் அடிபட்டு மிதிபட்டு இராமன் இருந்த திக்கை நோக்கிப் பார்க்கிறான்.  இராமன் வாலி மேல் “கோல் ஒன்று வாங்கித் தொடுத்து நாணொடு தோள் உறுத்து இராகவன் துரந்தான்”  அம்பைச் செலுத்துகிறான் இராகவன்.  அம்பு வாலியின் மார்பைத் துளைக்கிறது.  மேருமலை வீழ்ந்தது போல் வீழ்கிறான் வாலி.  உடனே சுக்கிரீவனை விட்டுவிடுகிறான்.  தன்னைத் துளைத்த அம்பைப் பிடித்துக் கொள்கிறான்.  அவனது இந்த உறுதியைப் பார்த்து காலதேவனே திகைக்கிறான்.  வாலியின் வீரத்தைப் பாராட்டுகிறான் எமன்.  இச்சரத்தினை எய்தவன் யாராக இருக்க முடியும் என்று சிந்திக்கிறான் வாலி.

தேவரோ என அயிர்க்கும் அத்தேவர் இச்செயலுக்கு
ஆவரோ அவர்க்கு ஆற்றல் உண்டோ எனும் அயலோர்
எவரோ என நகை செய்யும் ஒருவனே இறைவர்
மூவரோடும் ஒப்பான் செயல் ஆம் என மொழியும்

இச்செயலைத் தேவர்கள் செய்ய முடியாது.  அவர்களுக்கு இந்த வல்லமை கிடையாது மூவருக்கும் இணையான ஒருவனே இச்செயலைச் செய்திருக்க முடியும் என நினைக்கிறான்.  நகைக்கிறான்.

நேமிதான் கொலோ நீலகண்டன் நெடும் சூலம்
ஆம் தான் கொலோ அன்று எனில் குன்று உரு அயிலும்
நாம் இந்திரன் வச்சிரப்படையும் என் நடுவண்
போம் எனும் துணைபோதுமோ யாது எனப் புழுங்கும்.

நேமி என்றால் சக்கரம்.  திருமால் தனது சக்கராயுதத்தை ஏவினானா?  அல்லது இது சிவனின் சூலமா? அல்லது இந்திரனின் வச்சிராயுதமா எனப் புழுங்குகிறான்.  தன் பலத்தை எல்லாம் பயன்படுத்தி ஒருவழியாக அந்த இராமபாணம் தன்னை ஊடுருவாதபடி தன் பலம் முழுவதையும் காட்டி உருவுகிறான் அந்த இராமபாணத்தை.  இதைக் கண்டு வானவரே பிரம்மிக்கின்றனர்.    அம்பைப் பிடுங்கியவுடன் குருதிக்கடல் கொப்பளிக்கிறது என்கிறார் கம்பர்.  குருதி பெருகி வருவதைக் கண்ட தம்பி சுக்கிரீவன் கலங்குகிறான்.  கலங்கி நிலத்திலே வீழ்ந்தான்.

வாசத் தாரவன் மார்பு எனும் மலை வழங்கு அருவி
ஓசைச் சோரியை நோக்கினன் உடன் பிறப்பு என்னும்
பாசத்தால் பிணிப்புண்ட அத்தம்பியும் பசுங்கண்
நேசத் தாரைகள் சொரிதர நெடுநிலம் வீழ்ந்தான்.
(தார் என்றால் மாலை, சோரி என்றால் குருதி வெள்ளம்)


பிடுங்கிய அம்பை முறித்துவிட முயல்கிறான் வாலி.  சாதாரணமான நிலையில் இருந்தால் அந்த அம்பை அவன் முறித்திருப்பான்.  எய்யப்பட்டதோ இராமபாணம்.  வாலி கிடப்பதோ குருதி வெள்ளத்தில்.  எனவே முறிக்க முடியவில்லை.  யாருடைய அம்பு என நோக்குகிறான்.  அதிலே இருந்தது இராமநாமம்.

மும்மைசால் உலகுக்கு எல்லாம் மூலமந்திரத்தை முற்றும்
தம்மையே தமர்க்கு நல்கும் தனிப்பெரும் பதத்தைத் தானே
இம்மையே எழுமை நோய்க்கு மருந்தினை இராம என்னும்
செம்மைசேர் நாமம் தன்னைக் கண்களிற் தெரியக் கண்டான்.

மூவுலகிற்கும் மூலமந்திரம் இராமநாமம்.  இராமநாமம் கூறித் துதித்தால் தம்மையே கொடுத்து விடுகிற மந்திரம்.  இப்பிறப்பிலேயே எல்லாப் பிறப்பிலும் பண்ணிய நோய்க்கு மருந்தாக விளங்கும் மந்திரம். அப்படிப்பட்ட செம்மையான “இராம” என்னும் நாமம் அந்த அம்பிலே பொறிக்கப்பட்டு இருந்தது.


குமரகுருபரர் - நீதிநெறி விளக்கம் KUMARAGURUPARAR - TAMIL POEMS,

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு

ஒரு அரசன் எப்படியெல்லாம் நடந்து கொள்ள வேண்டும் என்பதை நீதிநெறி விளக்கத்தில் குமரகுருபரர் மிக அழகாக விளக்குகிறார்.

மக்கள் துயர்படும் போது இன்று பெற்றுக் கொள்ளக்கூடிய வரியை நாளை பெற்றுக் கொள்ள வேண்டும்.  மக்கள் குறையைச் சொல்ல வரும்போது அவர்களை எதிர்கொண்டு குறைகளைக் கேட்க வேண்டும்.  மக்களிடம் கோபம் கொள்ளக் கூடாது.

நின்று கொளற்பால நாளைக் கொளப் பொறான்
நின்று குறையிரப்ப நேர்படான் - சென்று ஒருவன்
ஆவன கூறின் எயிறு அலைப்பான் ஆறலைக்கும்
வேடலன் வேந்தன் அல்லன்

நேர்படான் என்றால் காட்சி தராதவன்.  எதிர்கொள்ளாதவன்
எயிறு என்றால் பல்
ஆறலைத்தல் என்றால் வழிப்பறி செய்தல்



Kumaraguruparar - tamil poems /குமரகுருபரர்-நீதிநெறி விளக்கம்

ஒருவன் நன்மதிப்பை எப்படி எல்லாம் பெறலாம்?  மூன்று வழிகளைச் சொல்கிறார் குமரகுருபரர் தனது “நீதிநெறி விளக்கத்தில்”.
·          மற்றவர்களுடைய பெருமைகளை மறைக்க முயலக் கூடாது
·          மற்றவர்கள் குறையை வெளியே சொல்லிக் கொண்டிருக்கக் கூடாது
·          எல்லோரிடத்திலும் பணிவாக இருக்க வேண்டும்

பிறரால் பெருஞ்சுட்டு வேண்டுவான் யாண்டும்
மறவாதே நோற்பது ஒன்று உண்டு – பிறர்பிறர்
சீர் எல்லாம் தூற்றிச் சிறுமை புறங்காத்து
யார்யார்க்கும் தாழ்ச்சி சொலல்

பெருஞ்சுட்டு என்றால் பெருமதிப்பு
நோற்பது என்றால் கடைப்பிடிக்க வேண்டியது
புறங்காத்து என்றால் வெளியில் பரவாமல் தடுத்து

குமரகுருபரர்-நீதிநெறிவிளக்கம். KUMARAGURUPARAR - TAMIL POEMS,

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு

ஓர் அரசு எப்படி வரி வாங்க வேண்டும் – அரசனின் தகுதி என்ன என்பனவற்றை குமரகுருபரர் தனது நீதி நெறி விளக்கத்தில் மிக அழகாக விளக்கி உள்ளார்.

வரியை எப்படி வசூலிக்க வேண்டும் என்று கூறும் போது – மக்கள் விருப்பத்தோடு கொடுக்கும் வகையில் வரிவிதிப்பு செய்து வசூலித்தால் நன்றாக வசூலாகி கருவூலத்தில் பணம் விரைவில் சேரும் என்கிறார் குமரகுருபரர்.  மக்களை வருத்தி வரி வாங்கதல் கன்றை உடைய பசுவிடம் வருத்திப் பால் கறப்பதைப் போன்றது என்று விளக்குகிறார்.

குடிகொன்று இறைகொள்ளும் கோமகற்குக் கற்றா
மடிகொன்று பால் கொளலும் மாண்பே – குடியோம்பிக்
கொள்ளுமா கொள்வோர்க்குக் காண்டுமே மாநிதியம்
வெள்ளத்தின் மேலும் பல.

(
இறை என்றால் வரி,  கற்றா என்றால் கன்று)

Kumaraguruparar tamil poems - குமரகுருபரர்

யார் யாருக்கு யார் தெய்வம் பேர்ன்றவர் என்று குமரகுருபரர் தமது நீதிநெறி விளக்கத்தில் அருமையாக விளக்குவார்.

குலமகட்குத் தெய்வம் கொழுநனே – மன்ற
புதல்வர்க்குத் தந்தையும் தாயும் – அறவோர்க்கு
அடிகளே தெய்வம், அனைவோர்க்கும் தெய்வம்
இலைமுகப் பைம்பூண் இறை.

எளிமையான தமிழ்.  பொருள் சொல்லத் தேவையில்லை.  மனைவிக்குக் கணவன் தெய்வம்.  புதல்வர்க்கும் புதல்விக்கும் பெற்றோரே தெய்வம்.  அறவோருக்கு ஆசானே தெய்வம்.  மற்ற எல்லோருக்கும் அரசனே தெய்வம்.
இதையொட்டித் தான் மாதா, பிதா, குரு தெய்வம் என்ற பழமொழி உள்ளது போலும்.