Showing posts with label விவேகசிந்தாமணி. Show all posts
Showing posts with label விவேகசிந்தாமணி. Show all posts

Sunday, August 21, 2011

விவேகசிந்தாமணி

சங்கே முழங்கு - எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு

பட்டினத்தாரின் கருத்தாழமிக்க பல பாடல்களை நாம் பார்த்தோம்.  விவேக சிந்தாமணியிலும் இக்கருத்தைக் கூறும் பாடல் ஒன்று உள்ளது.

பண்டம் பொய்க்கூரை பழகி விழுந்திடில்
உண்ட அப்பெண்டிரும் மக்களும் பின்செலார்
கொண்ட விரதமும் ஞானமும் அல்லது
மண்டி அவருடன் வழிநடவாதே

உடலை ஒரு குடிலாக - கூரையுள்ள வீடாகப் பார்க்கிறார் கவிஞர்.  அந்த வீடு விழுந்துவிட்டால் அவர் வாழ்ந்த அளவில் அவர் கடைப்பிடித்த விரதங்கள், தானதருமங்கள், அவர் பெற்ற ஞானம் ஆகியவையே அவரைப் பின்தொடர முடியும்.  அவர் உடலால் பந்தப்பட்டு அவர் உடலுடன் உறவாடிய மனைவி, மக்கள், உற்றார், உறவினர், நண்பர் யாரும் அவர் பின் செல்ல முடியாது.  அவரைத் தொடர்ந்து செல்ல முடியாது என்ற அருமையான கருத்தைச் சொல்கிறது இப்பாடல்

Saturday, August 20, 2011

௦விவேகசிந்தாமணி

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு

விவேக சிந்தாமணியில் ஒரு அருமையான பாடல்.  இக்காலத்தில் அற்பனுக்கு வாழ்வு அரசியல் என்ற சாக்கடையால் வந்து விடுகிறது.  சில நல்லவர்களும் இதிலே மிகக் கடுமையாகப் பாடுபட்டு உயர் பதவிகளில் வந்து அமர்ந்து விடுவார்கள்.  பதவி வந்தவுடன் அந்த பதவியை வைத்து பணம் சம்பாதிக்க எண்ணுபவர்கள் அந்த நல்லவர்களைச் சுற்றி உறவு என்ற பெயரில் குவிவார்கள்.  அண்ணே என்று அழைப்பார்கள்.  மாப்பிள்ளே என்று அழைப்பார்கள்.  மாமா என்று அழைப்பார்கள்.  கூட்டம் கூட்டமாகக் கூடுவார்கள்.  பணமும் பதவியும் போய்விட்டால் காக்கைக் கூட்டம் போல் சூழ்ந்திருந்த இந்த வேடதாரிகள் அனைவரும் பறந்து ஓடிவிடுவார்கள்.  ஒருவகையில் இறைவன் நல்லவர்களை அடையாளம் கண்டு கொள்ளவே நல்லவர்களுக்கு இன்னலைக் கொடுக்கிறான்.  எனவே தான் இடுக்கண் வரும் போது நகைக்கும்படி கூறுகிறார் வள்ளுவர்.  வந்த இடுக்கண் - இன்னல் - துன்பம் - துயரம் இதெல்லாம் நல்லவர்களை அடையாளம் காட்டிவிடும்.  இதையெல்லாம் விளக்க ஓர் அருமையான பாடல் விவேகசிந்தாமணியில் உள்ளது.  பார்க்கலாமா?

பொன்னொடு மணி உண்டானால் புலையனும் கிளைஞன் என்று
தன்னையும் புகழ்ந்து கொண்டு சாதியின் மணமும் செய்வர்
மன்னராய் இருந்த பேர்கள் வகைகெட்டுப் போவாராகில்
பின்னையும் ஆரோ என்று பேசுவர் ஏசுவாரே.

எளிய பாடல் பொருள் எளிதில் விளங்குகிறது.  கிளைஞன் என்றால் உறவினன் - நண்பன் என்று பொருள்.  பொன்னும் மணியும் இருந்தால் இழிந்தவனும் உறவினன் என்று கூறிக்கொண்டு சுற்றிச்சுற்றி வருவான்.  அதுமட்டுமல்ல யார்யாரோ இந்த குடும்பத்தில் மணவினை புரியவும் துடியாய்த் துடிப்பர்.  ஆனால் பதவி இழந்துவிட்டாலோ “ இவன் யார்” என்று உடன் சுற்றித் திரிந்தவர்களே கேட்பர்.  எள்ளி நகையாடுவர்.  இயற்கை இது தான்.

விவேகசிந்தாமணி பாடல்கள்

விவேகசிந்தாமணியில் ஓர் அருமையான பாடல் மூடன் யார், முகடி என்பவன் யார், பசப்பன் யார், பாவி யார் என மிக அருமையாக விளக்கம் அளிக்கிறது.  இப்பாடல் மூலம் மறைந்து கொண்டிருக்கும் சில தமிழ்ச் சொற்களை நாம் படித்துத் தெரிந்து கொள்ள வாய்ப்பு கிடைப்பதோடு அருமையான கருத்துகளையும் படிக்க வாய்ப்பு கிடைக்கிறது.  பாடல் மிக எளிமையானது.  கருத்து நிறைந்தது.

கருதிய நூல் கல்லாதான் மூடன் ஆகும்
கணக்கறிந்து பேசாதான் கசடன் ஆகும்
ஒரு தொழிலும் இல்லாதான் முகடி ஆகும்
ஒன்றுக்கும் உதவாதான் சோம்பன் ஆகும்
பெரியோர்கள் முன்நின்று மரத்தைப் போலும்
   பேசாமல் இருப்பவனே பேயன் ஆகும்
பரிவு சொல்லித் தழுவினவன் பசப்பன் ஆகும்
பசித்தவருக்கு இட்டு உண்ணான் பாவியாமே

சிறந்த நூல்கள் எனப் பெரியோர் கூறிய நூல்களைப் படிக்காதவன் மூடன்.
குறைந்த பேச்சு பேசாமல் வளவள எனப்பேசி நேரத்தை வீணடிப்பவன் கசடன் ஆகும்.  அலைபேசியைக் கையில் வைத்துக்கொண்டு மணிக்கணக்கில் பேசுபவர்கள் கவனித்துக்கொள்ள வேண்டும்.  வெள்ளை வேட்டி- வெள்ளை சட்டை - தொழில் ஒன்றும் இல்லை - ஆடம்பரமாக வண்டி வாகனங்களில் அடுத்தவர் சம்பாதிக்கும் பணத்தில் ஊர் சுற்றுதல் - இப்படி இருப்பவன் தான் முகடி.  முகடி என்றால் மூதேவி.  ஒருவனுக்கு சோம்பல் இருந்தால் அவனிடம் ஒரு வேலையும் நாம் சொல்லக் கூடாது.  அவன் செய்யமாட்டான்.  அவனை நம்பி நாம் ஏமாறக் கூடாது.  அவன் ஒரு உதவாக்கரை.  முற்றும் கற்றவன் போல வெளிவேடம் போட்டு கற்ற பெரியோர் கேட்கும் வினாக்களுக்கு பதில் சொல்லத் தெரியாமல் திருதிரு என முழிப்பவன் பேயன்.  இன்னலில் இருப்பவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்யாமல் பகட்டுக்காக - விளம்பரத்திற்காக அரவணைத்து நாளிதழ்களுக்கும் ஊடகங்களுக்கும் பேட்டி கொடுப்பவன் பசப்பன்.  பசிப்பவர்கள் எதிரில் இருக்க - அவர்களை வைத்துக்கொண்டே அவர்களுக்குக் கொடுக்காமல் உணவு உண்பவன் பெரும்பாவி.  இப்படி அருமையான கருத்துகளை தருகிறது இப்பாடல்  எழுதியவர் யார் என்று தெரியவில்லை.  இந்த நூல் நடைமேடையில் கிழிந்த நிலையில் இருந்தது.  இதிலே உள்ள கருத்துகளைப் படித்தவுடன் அனைவருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டும் போல் இருந்தது.  எனவே உங்கள் முன் படைக்கிறேன்.