Showing posts with label - விவேகசிந்தாமணி. Show all posts
Showing posts with label - விவேகசிந்தாமணி. Show all posts

Sunday, August 21, 2011

திருக்குறளும் விவேகசிந்தாமணியும் - VIVEKACHINTHAMANI

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு


நட்பு என்பதை விளக்க வரும் வள்ளுவர்,

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு

என்று சொல்வார்.  ஒரு நண்பனுக்கு இடுக்கண் வந்தால் அவன் வந்து “உதவி செய்” என்று முறையிடத் தேவையில்லை.  இடுப்பில் இருந்து ஆடை நழுவினால் கை தானே போய் சரி செய்வது போல தமது நண்பனுக்கு ஒரு துன்பம் என்றால் உடனே போய் உதவி செய்வது தான் நட்பின் அடையாளம்.  அது மட்டுமல்ல நண்பன் தீயவழியில் சென்றால் அதைத் தடுக்கும் துணிவும் நண்பர்களுக்கு இருக்க வேண்டும்.  அவனை நல்வழியில் நடத்திச் செல்லும் பொறுப்பும் நல்ல நண்பர்களுக்கு இருக்க வேண்டும்.  துன்பம் வந்தால் உடன் உதவ வேண்டும்.  இக்கருத்தை,

அழிவினை நீக்கி ஆறு உய்த்து அழிவின் கண்
அல்லல் உழப்பதாம் நட்பு

என்னும் குறள் மூலம் எடுத்து இயம்புகிறார் திருவள்ளுவர்.  சிரித்து மகிழுவதற்காக அல்ல நட்பு.  சிந்திக்கவும் வேண்டும்,  நண்பர்கள் நிலைதடுமாறினால் திருத்த வேண்டும் என்று திருவள்ளுவர் வலியுறுத்துவார்.

நகுதற் பொருட்டு அன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு

என்பது திருக்குறள்.  எனவே தான் நண்பர்களைத் தேர்ந்தெடுக்கும் போது மிகக் கவனமாக இருக்க வேண்டும்.  சிந்திக்காமல் சேர்பவர்களை எல்லாம் நாம் நண்பர்கள் என்று ஏற்றுக் கொள்ள முடியாது.  அவ்வாறு சிந்திக்காமல் பழகும் எல்லோரையும் நண்பர்கள் என்று ஏற்றுக்கொண்டால் நம் வாழ்வில் துன்பம் என்பது தொடர்கதையாகிவிடும்.

ஆய்ந்து ஆய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை
தான் சாந் துயரம் தரும்

என்பது திருக்குறள்.  பணம் இருக்கும் போது பத்து பேர் நம்மைச் சுற்றி இருப்பார்கள்.  எல்லோரும் நம்மை நண்பர் என்று அழைப்பார்கள்.  ஆனால் துன்பம் வரும் போது கல்லடி பட்ட காக்கை போல அனைவரும் பறந்து விடுவார்கள்.  துன்பம் நல்ல நண்பன் யார் என்பதைக் காட்டிவிடும்.

கேட்டினும் உண்டு ஓர் உறுதி கிளைஞரை
நீட்டி அளப்பதோர் கோல்

துன்பம் என்பது நட்பை அளக்க ஓர் அளவு கோல் என்கிறார் திருவள்ளுவர்.  இப்படி, நட்பு – நட்பு ஆராய்தல் – தீ நட்பு என்ற அதிகாரங்களில் பல அருமையான – தேவையான கருத்துப் பெட்டகங்கள் உள்ளன.

இப்படி ஒரு கருத்தை விவேக சிந்தாமணி என்னும் நூலில் ஒரு பாடலில் நான் கண்டேன்.  இதோ அந்தப் பாடல்.

அருமையும் பெருமை தானும் அறிந்து உடன் படுவர் தம்மால்
இருமையும் ஒருமையாகும் இன்புறற்கு ஏது உண்டாம்
பரிவில்லாச் சகுனி போலப் பண்புகெட்டவர்கள் தம்மால்
ஒருமையில் நிரயம் எய்தும் ஏதுவே உயரும் மன்னோ.

(நிரயம் என்றால் நரகம் என்று பொருள்)
நல்ல நண்பர்கள் கிடைத்தால் இம்மை மறுமைப் பயன்கள் எல்லாம் நமக்கு ஒன்றுசேர கிட்டும்.  ஆனால் சகுனி போல நம்மைத் தீய பாதையில் இட்டுச் செல்லும் நண்பர்கள் அமைந்தாலோ நிச்சயம் நரகம் தான் நமக்குக் கிட்டும்.

VIVEKA CHINTHAMANI - விவேகசிந்தாமணி

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு

ஆசை என்பது தான் அனைத்துத் துன்பங்களுக்கும் அடிப்படை என்பார் புத்தபெருமான்.  இக்கருத்தையே வலியுறுத்தும் வள்ளுவரும்,

அவா இல்லார்க்கு இல்லாகும் துன்பம் அஃதுண்டேல்
தவா அது மேன்மேல் வரும்.

(தவா என்றால் .  தொடர்ந்து மற்றும் நீங்காமல் என்று பொருள்.)  ஆசை இல்லை என்றால் துன்பம் இல்லை.  ஆசை வந்தால் துன்பம் தொடர்ந்து வரும் என்பார் வள்ளுவர்.  அதுமட்டுமல்ல,  ஆசை இருந்தால் துன்பம் மட்டுமல்ல மீண்டும் மீண்டும் பிறவித்துயரம் வரும்.

அவா என்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும்
தவா அப்பிறப்பு ஈனும் வித்து.

என்கிறார் வள்ளுவர்.  இக்கருத்தையே வலியுறுத்தும் விவேகசிந்தாமணியில் ஒரு பாடல் இதோ.

பகையினை ஆக்கலும் பாவம் ஆக்கலும்
நகையினை ஆக்கலும் நவையை ஆக்கலும்
திகைமனம் ஆக்கலும் சிறுமை ஆக்கலும்
அகைதரு காமத்தின் அன்றி இல்லையே

பகையை உண்டாக்குவது – பாவத்தைக் கொண்டுவருவது – பிறர் நம்மைப் பார்த்து இகழும்படிச் செய்வது – குற்றங்களைச் செய்யத் தூண்டுவது – நம்மைத் திகைக்கவைத்துத் தடுமாற்றத்தை உண்டாக்குவது – சிறுமையைத் தருவது எல்லாம் எது?  ஆசை தான்.  அதிலும் பெண்ணாசை இருக்கிறதே அது எல்லாக் குற்றங்களையும் ஒன்றுசேர செய்யச் சொல்லும்.  இதே போன்ற கருத்தை விளக்கும் மற்றொரு விவேகசிந்தாமணிப் பாடலும் உண்டு.

கைதவம் இழைத்தலும் களவு செய்தலும்
ஐதுயிர் கோறலும் அறத்தைக் கோறலும்
பொய்தவ உரைத்தலும் பொருள் இழத்தலும்
எய்திய காமத்தின் அன்றி இல்லையே.

(கோறல் என்றால் அழிப்பது, சிதைப்பது, வதைப்பது எனப் பல பொருள் தரும் அருமையான சொல்) (ஐது என்றால் அழகு)  (தவ என்றால் அதிகமாக, மிகுதியாக என்று பொருள்)

நன்றியைக் கோறலும் நலனைக் கோறலும்
வென்றியைக் கோறலும் விவேகம் கோறலும்
துன்றிய ஒக்கலைத் துறந்து நிற்றலும்
கன்றிய காமத்தின் அன்றி இல்லையே.

(துன்றிய ஒக்கல் என்றால் பொருந்திய உறவினர் என்று பொருள்)

எளிய தமிழில் அற்புதமான கருத்துகளைத் தருகிறது விவேக சிந்தாமணி.