Saturday, August 20, 2011

௦விவேகசிந்தாமணி

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு

விவேக சிந்தாமணியில் ஒரு அருமையான பாடல்.  இக்காலத்தில் அற்பனுக்கு வாழ்வு அரசியல் என்ற சாக்கடையால் வந்து விடுகிறது.  சில நல்லவர்களும் இதிலே மிகக் கடுமையாகப் பாடுபட்டு உயர் பதவிகளில் வந்து அமர்ந்து விடுவார்கள்.  பதவி வந்தவுடன் அந்த பதவியை வைத்து பணம் சம்பாதிக்க எண்ணுபவர்கள் அந்த நல்லவர்களைச் சுற்றி உறவு என்ற பெயரில் குவிவார்கள்.  அண்ணே என்று அழைப்பார்கள்.  மாப்பிள்ளே என்று அழைப்பார்கள்.  மாமா என்று அழைப்பார்கள்.  கூட்டம் கூட்டமாகக் கூடுவார்கள்.  பணமும் பதவியும் போய்விட்டால் காக்கைக் கூட்டம் போல் சூழ்ந்திருந்த இந்த வேடதாரிகள் அனைவரும் பறந்து ஓடிவிடுவார்கள்.  ஒருவகையில் இறைவன் நல்லவர்களை அடையாளம் கண்டு கொள்ளவே நல்லவர்களுக்கு இன்னலைக் கொடுக்கிறான்.  எனவே தான் இடுக்கண் வரும் போது நகைக்கும்படி கூறுகிறார் வள்ளுவர்.  வந்த இடுக்கண் - இன்னல் - துன்பம் - துயரம் இதெல்லாம் நல்லவர்களை அடையாளம் காட்டிவிடும்.  இதையெல்லாம் விளக்க ஓர் அருமையான பாடல் விவேகசிந்தாமணியில் உள்ளது.  பார்க்கலாமா?

பொன்னொடு மணி உண்டானால் புலையனும் கிளைஞன் என்று
தன்னையும் புகழ்ந்து கொண்டு சாதியின் மணமும் செய்வர்
மன்னராய் இருந்த பேர்கள் வகைகெட்டுப் போவாராகில்
பின்னையும் ஆரோ என்று பேசுவர் ஏசுவாரே.

எளிய பாடல் பொருள் எளிதில் விளங்குகிறது.  கிளைஞன் என்றால் உறவினன் - நண்பன் என்று பொருள்.  பொன்னும் மணியும் இருந்தால் இழிந்தவனும் உறவினன் என்று கூறிக்கொண்டு சுற்றிச்சுற்றி வருவான்.  அதுமட்டுமல்ல யார்யாரோ இந்த குடும்பத்தில் மணவினை புரியவும் துடியாய்த் துடிப்பர்.  ஆனால் பதவி இழந்துவிட்டாலோ “ இவன் யார்” என்று உடன் சுற்றித் திரிந்தவர்களே கேட்பர்.  எள்ளி நகையாடுவர்.  இயற்கை இது தான்.

விவேகசிந்தாமணி பாடல்கள்

விவேகசிந்தாமணியில் ஓர் அருமையான பாடல் மூடன் யார், முகடி என்பவன் யார், பசப்பன் யார், பாவி யார் என மிக அருமையாக விளக்கம் அளிக்கிறது.  இப்பாடல் மூலம் மறைந்து கொண்டிருக்கும் சில தமிழ்ச் சொற்களை நாம் படித்துத் தெரிந்து கொள்ள வாய்ப்பு கிடைப்பதோடு அருமையான கருத்துகளையும் படிக்க வாய்ப்பு கிடைக்கிறது.  பாடல் மிக எளிமையானது.  கருத்து நிறைந்தது.

கருதிய நூல் கல்லாதான் மூடன் ஆகும்
கணக்கறிந்து பேசாதான் கசடன் ஆகும்
ஒரு தொழிலும் இல்லாதான் முகடி ஆகும்
ஒன்றுக்கும் உதவாதான் சோம்பன் ஆகும்
பெரியோர்கள் முன்நின்று மரத்தைப் போலும்
   பேசாமல் இருப்பவனே பேயன் ஆகும்
பரிவு சொல்லித் தழுவினவன் பசப்பன் ஆகும்
பசித்தவருக்கு இட்டு உண்ணான் பாவியாமே

சிறந்த நூல்கள் எனப் பெரியோர் கூறிய நூல்களைப் படிக்காதவன் மூடன்.
குறைந்த பேச்சு பேசாமல் வளவள எனப்பேசி நேரத்தை வீணடிப்பவன் கசடன் ஆகும்.  அலைபேசியைக் கையில் வைத்துக்கொண்டு மணிக்கணக்கில் பேசுபவர்கள் கவனித்துக்கொள்ள வேண்டும்.  வெள்ளை வேட்டி- வெள்ளை சட்டை - தொழில் ஒன்றும் இல்லை - ஆடம்பரமாக வண்டி வாகனங்களில் அடுத்தவர் சம்பாதிக்கும் பணத்தில் ஊர் சுற்றுதல் - இப்படி இருப்பவன் தான் முகடி.  முகடி என்றால் மூதேவி.  ஒருவனுக்கு சோம்பல் இருந்தால் அவனிடம் ஒரு வேலையும் நாம் சொல்லக் கூடாது.  அவன் செய்யமாட்டான்.  அவனை நம்பி நாம் ஏமாறக் கூடாது.  அவன் ஒரு உதவாக்கரை.  முற்றும் கற்றவன் போல வெளிவேடம் போட்டு கற்ற பெரியோர் கேட்கும் வினாக்களுக்கு பதில் சொல்லத் தெரியாமல் திருதிரு என முழிப்பவன் பேயன்.  இன்னலில் இருப்பவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்யாமல் பகட்டுக்காக - விளம்பரத்திற்காக அரவணைத்து நாளிதழ்களுக்கும் ஊடகங்களுக்கும் பேட்டி கொடுப்பவன் பசப்பன்.  பசிப்பவர்கள் எதிரில் இருக்க - அவர்களை வைத்துக்கொண்டே அவர்களுக்குக் கொடுக்காமல் உணவு உண்பவன் பெரும்பாவி.  இப்படி அருமையான கருத்துகளை தருகிறது இப்பாடல்  எழுதியவர் யார் என்று தெரியவில்லை.  இந்த நூல் நடைமேடையில் கிழிந்த நிலையில் இருந்தது.  இதிலே உள்ள கருத்துகளைப் படித்தவுடன் அனைவருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டும் போல் இருந்தது.  எனவே உங்கள் முன் படைக்கிறேன்.

Thursday, August 18, 2011

விவேக சிந்தாமணி

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு


தாய்ச் சொல்லைத் தட்டாதே என்று பெரியவர்கள் அறிவுரை கூறுவார்கள்.  வாலிப மிடுக்கில் இதையெல்லாம் யார் கேட்கிறார்கள்.   தாய் சொல்லைக் கேட்காதவர்களை இழிந்த பிறவிகள் என்று கூறுகிறார் ஒரு கவிஞர்.  விவேக சிந்தாமணியில் வரும் இப்பாடலைப் பார்ப்போம்.

நாய்வாலை அளவெடுத்துப் பெருக்கித் தீட்டின் நற்றமிழை     எழுத      எழுத்தாணி ஆமோ

பேய்வாழும் சுடுகாட்டைப் பெருக்கித் தள்ளிப் பெரிய விளக்கு ஏற்றிவைத்தால் வீடதாமோ?

தாய் வார்த்தை கேளாத சகசண்டிக்கு என் சாற்றிடினும் உலுத்தகுணம் தவிரமாட்டான்

ஈவாரை ஈயஒட்டான் இவனும் ஈயான் எழுபிறப்பினும் கடையாம் இவன் பிறப்பே


தாய்ச் சொல்லைக் கேட்காதவனை மூர்க்கன் என்கிறார் கவிஞர்.  தாய்ச் சொல்லைக் கேட்காதவன் தனது அற்ப கணத்தை என்றும் விட மாட்டான் என்றும்  பிறருக்கு ஈவதைத் தடுப்பான் என்றும் தானும் ஈயமாட்டான் என்றும் கூறும் கவிஞர் இவனுடைய பிறப்பை எழுபிறப்பிலும் ஈனமான கடைப்பிறப்பாக இருக்கும் என எச்சரிக்கிறார்.



விவேக சிந்தாமணி

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு


தடாகத்தில் இருக்கும் தாமரைக்கு சூரியனும் தண்ணீரும் தந்தையும்  தாயும் போல உள்ளனர்.  இப்படிப்பட்ட தாயையோ தந்தையையோ பிரிந்தால் அழகிய அந்த தாமரையின் கதி என்ன?  தண்ணீரிலிருந்து தரைக்கு வந்தால் தந்தை போல இருக்கும் சூரியனே தகித்து காய வைத்து விடுவான்.  அந்த தாமரையையே பறித்து அதே நீரில் மீண்டும் போட்டாலும் அந்தத் தாமரை அழுகிவிடும்.  எனவே நமது நிலைக்குக் காரணமாக இருப்பவர்களுடன் ஒத்துப் போகவேண்டும்.  பகைத்தால் பாழ் நரகில் போய் விழவேண்டி வரும்.  அருமையான பாட்டின் மூலம் விவேக சிந்தாமணியில் இக்கருத்து வலியுறுத்தப்படுகிறது.


சங்கு வெண்தாமரைக்குத் தந்தை தாய் இரவி தண்ணீர்
அங்கு அதைக் கொய்து விட்டால் அழுகச் செய்து அந்நீர் கொல்லும்
துங்க வெண் கரையில் போட்டால் சூரியன் காய்ந்து கொல்வான்
தங்களின் நிலைமை கெட்டால் இப்படித் தயங்குவாரே.

தயங்குவாரே என்றால் திகைப்பாரே என்று பொருள்





விவேகசிந்தாமணி

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு


தமிழ்நாட்டிலே பிறந்திருப்பான்.  தமிழ் மொழியின் சிறப்பை அறிய மாட்டான்.  ஆனால் தமில் வால்க என்று முழக்கமிடவும் டாடி மம்மியுடன் பேசவும் செய்வான்.  தன் குழந்தைக்கு டாடி-மம்மியைக் கற்றுக்கொடுக்க சிரமப்படுவான்.  தன் குழந்தை ஆங்கிலத்தில் தன்னை டாடி என்று சொன்னால் மிக மகிழ்வான்.  எங்கோ வெளிநாட்டிலிருந்து - இத்தாலியில் இருந்து - ஆங்கில நாட்டிலிருந்து இங்கு வந்து தமிழ் மொழியின் சிறப்பை அறிந்து நான் ஒரு தமிழ் மாணாக்கன் என்று கூறுவதில் வெளிநாட்டினர் பெருமைப்படுகிறார்கள்.  இங்குள்ளவர்களோ ஆங்கிலத்தில் படித்தால் தான் வெளிநாட்டில் வேலை கிடைக்கும் என்று கூறி தமிழில் படிக்க மறுக்கிறார்கள்.  தாய்மொழியில் படித்து வெளிநாடுகளில் பணிபுரியும் சீனர்களை - சப்பானியர்களை இவர்கள் புரிந்து  கொள்வதே இல்லை.  ஆனால் அவர்களின் கண்டுபிடிப்புகளை - தயாரிப்புகளை வீட்டில் வைத்துப் பெருமைப்படுவார்கள்.  இதையெல்லாம் அன்றே உணர்ந்திருக்கிறார்கள் போலும்.  குட்டையில் - குளத்தில் வாழும் தாமரை- தவளையை வைத்து அருமையான கவிதை ஒன்றைத் தந்திருக்கிறார்கள்.  தாமரையும் தவளையும் ஒரே தடாகத்தில் தான் இருக்கும்.  ஆனால் தாமரையில் உள்ள தேனை தவளை சுவைக்காது.  கானகத்தில் வாழும் வண்டினங்கள் பல அந்த தடாகத்திற்கு வந்து தேனைச் சுவைக்கும்.  இதை உதாரணமாகக் காட்டுகிறார் கவிஞர்.

தண் தாமரையின் உடன்பிறந்தும் தண்தேன் நுகரா மண்டூகம்
வண்டோ கானத்திடை இருந்தும் வந்து கமலமது உண்ணும்
பண்டே பழகி இருந்தாலும் அறியார் புல்லர் நலலோரைக்
கண்டே களித்து அங்கு உறவாடித் தம்மிற் கலப்பர் கற்றோரே

மடையர்கள் சான்றோர் அருகில் இருந்தாலும் அவர்களைப் பாராட்டிப் பழக மாட்டார்கள்.  ஆனால் கற்றோர் கற்றோரைக் காமுறுவர்.  எங்கிருந்தாலும் அவர்களுடன் உறவாடுவர்.


விவேக சிந்தாமணி

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு

குருவி இனத்திலே தூக்கணாங்குருவி என்று ஒரு பிரிவு.  அருமையாகக் கூடு கட்டும் அது.  ஆனால் கூட்டின் அருமைபெருமை தெரியாதவர்களுக்கு அது அறிவுரை கூற முற்பட்டால் அதன் கூடே பிய்ந்துவிடும்.  பகவத்கீதை மற்றும் பல சிறந்த நூல்களைப் படிக்கும் போது நம்பிக்கை இல்லாதவர்களுக்கு இதைக் கூறக்கூடாத என எடுத்த எடுப்பிலேயே கூறுவார்கள்.  காரணம்  நல்லவற்றை அற்பர்களுக்குக் கூறினால் கூறியவர்களுக்கு அதனால் துன்பமே ஏற்படும்.  இராமர் பாலத்தைக் கட்டினார்.  இலங்கைக்குச் சென்றார்.   இராவணனை வென்றார் என்று அற்பர்களிடம் சொன்னால் அவர் என்ன பொறியாளரா பாலம் கட்டுவதற்கு என்று எள்ளல் வார்த்தைகளைப் பேசும் அதிமேதாவிகளும் உண்டு இக்காலத்தில்.  இதையெல்லாம் கருத்தில் கொண்டு விவேகசிந்தாமணியில் அற்புதமான ஒரு பாடல் உள்ளது.

வானரம் மழைதனில் நனையத் தூக்கணம்
தான் ஒரு நெறி  சொலத் தாண்டிப் பிய்த்திடும்
ஞானமும் கல்வியும் நவின்ற நூல்களும்
ஈனருக்கு உரைத்திடில் இடரதாகுமே.

மிகத் தெளிவாக இப்பாடல் ஓர் உதாரண்த்தைக் காட்டி ஞானத்தையும், கல்வியையும்,  சிறப்பான நூல்நயத்தையும் அற்பர்களுக்கு - ஈனர்களுக்கு உரைக்கக் கூடாது என நமக்குத் தெரிவிக்கிறது.

விவேக சிந்தாமணி

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு

இன்றைய காலத்தில் நாம் நிதர்சனமாக பார்க்கும் ஓர் உண்மை.  பணமிருந்தால் உறவினர்கள் - நண்பர்கள் என்று தங்களைக் கூறிக்கொண்டு, அறிமுகப்படுத்திக் கொண்டு பலனடைய பலர் வந்து கூடுவர்.  அதே நேரத்தில் பணம் வற்றி விட்டால் -  துன்பம் தொடர்ந்து வந்தால் அனைவரும் காணாமல் போய்விடுவர்.  துன்பத்தை இறைவன் கொடுப்பதே நமககு வேண்டியவர் யார் என்பதை அறிந்து கொள்ளத்தான்.  எனவே துன்பம் வந்த காலத்தில் நமககு வேண்டியவர்கள் யார் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.  கூடா நட்பு கேடு தரும் என்பது கேடு வந்த பிறகு தானே தெரியவருகிறது.  இதையெல்லாம் முன்னமே பட்டு உணர்ந்திருப்பார் போல இந்தக் கவிஞர்.  அவர் பாடிய பாடல் இதோ.

ஆலிலை பூவும் காயும் அளிதரும் பழமும் உண்டேல்
சாலவே பட்சி எல்லாம் தம்குடி என்றே வாழும்
வாலிபர் வந்து தேடி வந்திப்பர் கோடாகோடி
ஆலிலை ஆதி போனால் அங்கு வந்து இருப்பார் உண்டோ?

ஆலமரம் செழிப்பாக இருக்கும் போது பறவைகள் பல அங்கு வந்து தங்கும்.  ஆனால் இலைகள் உதிர்ந்து மரம் பட்டுப் போய்விட்டால் அனைத்தும் குடிபெயர்ந்து செழிப்பான வேறு மரத்திற்குப் போய்விடும்.  அது போல பணம் இருக்கும் போது அதை அனுபவிக்க உறவினர்-உற்றார் எனப் பலர் வருவர்.  குழுமி இருப்பர்.  துன்பம் வரும் போது - செல்வம் சென்று விடும் போது அனைவரும் பறந்து விடுவர்.  உண்மை இது தானே.  அன்றும் இது தான் நடந்துள்ளது.  இப்போதும் இது தான் நடக்கிறது.

SUNDARAKANDAM IN BRIEF - IN TAMIL LANGUAGE

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு

சுந்தர காண்டம் என்று கம்பராமாயணத்தில் ஒரு அருமையான பகுதி.  இப்பகுதியைத் தினசரி படிப்பதால் நன்மைகள் பல கிடைக்கும் என்று எல்லோரும் சொல்லுவார்கள்.  காரணம் கானகத்தில் சீதையைப் பிரிந்த இராமபிரானுக்கு உதவ அனுமன் இலங்கைக்குச் சென்று சீதையைக் கண்டு திரும்ப வந்து “கண்டின் சீதையை” எனச் சொல்லி இராமரின் மனதைக் குளிர வைக்கும் நிகழ்ச்சி நடப்பது இங்கே தான். பின்னர் நடப்பது தான் இராம-இராவண போர் நிகழ்ச்சி.  இராமரின் வெற்றி.  சீதையை மீட்பது.  மீண்டும் முடியை சூட்டிக்கொள்ளும் நிகழ்ச்சிகள்.  எனவே தான் இதைப் படிததால் வாழ்வில் நம்பிக்கை கிடைக்கும்.  துக்கங்கள் அகலும்.  சரி.  எனக்குப் படிக்க நேரம் இல்லை என்று சொல்லும் அன்பர்களுக்காக எளிதில் படிக்க - பயன்பெற ஒரு சிறு முயற்சி.

வாயுகுமாரன் - அஞ்சனை புதல்வன்  கடலைத் தாண்ட சாம்பவான் அவனது பலத்தை ஞாபகப்படுத்துகிறான்.  அது கேட்டு அனுமன் கடலைத் தாண்ட ஆயத்தமானான்.  உடன் இருந்த வானரங்கள் வழி அனுப்பினர்.  வழியில் மைநாக மலை கடலில் எழுந்து உபசரித்தது.  ஏற்றுக் கொண்டார்.  பின்னர் வந்த தடைகள் அத்தனையையும் தகர்த்து எறிந்தார்.  இலங்கையின் எழிலைக் கண்டார்.  தடுக்க வந்த காவல் தேவதையை வென்றார்.  பல மாளிகைகளில் சீதையைத் தேடினார்.  இறுதியில் அசோக வனத்தில் அரக்கிகள் நடுவில் அமர்ந்திருந்த சீதையைக் கண்டார்.  சிம்சுபா மரத்தின் நிழலில் அன்னை சீதை.  தவக்கோலத்தில் இருந்தாள்  சீதை.  இராவணன் மிரட்டுவதைக் கண்டார். பின் தான் யார் என்பதைத் தெரிவித்து இராமனின் நிலையை விளக்குகிறார்.  அன்னை சீதையிடம் சூடாமணியைப் பெற்றுக் கொள்கிறான் அனுமன்.  பின்னர் தன் இயல்பான குறும்பைக் காட்ட அரக்கர்கள் எதிர்க்கிறார்கள்.  அழிக்கிறான் அத்தனை பேரையும்.  இந்திரனையே வென்ற இராவணனின் மகன் வருகிறான்.  பிரம்மாத்திரத்தைத் தொடுக்கிறான்.  பணிகிறான் அனுமன்.  கட்டுண்டான்.  இராவணன் சபையில் சென்று இராமனின் புகழ்பாடி அறிவுரை கூறுகிறான்.  வெகுண்டான் இராவணன்.  அனுமனின் வாலுக்குத் தீ வைக்க ஆணையிட்டான்.  அந்த தீயை இலங்கை முழுவதும் வைத்தான் அனுமன்.  ஆகாய வழியில் திரும்பினான்.  செய்தியை தன் தோழர்களிடம் பகிர்ந்து கொண்டு பின்னர் அனைவரும் இராமர் இருந்த இடத்தை அடைந்தனர்.  “கண்டேன் சீதையை” என்று கூறி இராமனின் மனதைக் குளிர வைக்கிறான் அனுமன்.  மகிழ்ந்த இராமர் மைதிலியை மீட்கப் புறப்பட்டார்.  கடலில் பாலம் அமைத்தார்.  வானரப் படை கடலைக் கடந்தது.  கடுமையான போர் நடந்தது.  இறுதிப் போரில் இராவணன் மாண்டான்.  சீதையை மீட்டார் இராமர்.  தந்தை தசரதன் இறக்கும் தருவாயில் “கைகேயி என் மனைவியும் அல்ல - பரதன் என் மகனும் அல்ல” என இரண்டு கொடுமொழியைக் கூறிவிட்டு மறைந்தார்.  எனவே அவரை வரவழைக்க சீதையைத் தீயில் இறங்க உத்தரவிட்டான்.  வானுலகத்தில் இருந்த தசரதர் வந்தார்.  சீதை உத்தமி எனக் கூறி ஏற்கும்படி உத்தரவிட்டார்.  இராமர் அவரிடம் அன்னை கைகேயியையும் பரதனையும் மன்னித்து சாபவிமோசனம் வழங்கும்படி வேண்டினார். கைகேயியின்  இரண்டு வரத்தால் காட்டுக்கு வந்த இராமர் தசரதனிடம் இரண்டு வரங்கள் வாங்கி கைகேயியையும் பரதனையும் மன்னிக்க வைத்தார்.  நாடு திரும்பினார்.  மணிமுடி சூடினார்.

விவேக சிந்தாமணி

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு

நாம் அடிக்கடி கேட்ட வார்த்தைகள் தான்.  நாயைக் குளிப்பாட்டி நடுவீட்டில் வைத்தாலும் -- என்று அடிக்கடி யாராவது தவறு செய்தால் கோபப்பட்டு நாம் பேசுவதுண்டு.  அதையே விவேக சிந்தாமணியில் அற்புதமாகக் கூறியுள்ளார்கள்.

குக்கலைப் பிடித்து நாவிக்கூண்டினில் அடைத்து வைத்து
மிக்கதோர் மஞ்சள் பூசி மிகுமணம் செய்தாலும் தான்
அக்குலம் வேறதாமோ?  அதனிடம் புனுகுண்டாமோ?
குக்கலே குக்கலல்லால் குலந்தனில் பெரியதாமோ?

நாம் நறுமணம் மிக்க புனுகு விற்கும் கடைகளில் பார்த்தால் ஒரு கூண்டு இருக்கும்.  பூனை போன்ற ஒரு பிராணி சுற்றிக்கொண்டிருக்கும்.  அதனிடமிருந்து புனுகு கிடைக்கிறது.  இந்த கூண்டைத் தான் நாவிக் கூண்டு  என்று கூறி உள்ளார்கள்.  அப்படிப்பட்ட கூண்டில் ஒரு நாயைக் குளிப்பாட்டி மஞ்சள் பூசி அழகு செய்து வாசனைத் திரவியங்களைத் தடவி வைத்தாலும் அந்த நாயிடமிருந்து புனுகு கிடைக்குமா?  கிடைக்காது.  ஏனென்றால் அது புனுகுப் பூனை அல்ல.  நாய் தான்.  குக்கல் என்றால் நாய்.  எளிமையான தமிழ்.  அருமையான கருத்து.  

poems in tamil - Viveka chinthamani

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு

விவேக சிந்தாமணி என்னும் அருமையான நூலை நான் படிக்க நேர்ந்தது.  எளிய தமிழ்.  எண்ணற்ற கருத்துகள்.  அது பற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

நன்மை நல்காதவை எவை எவை என்பதை பற்றி மிக அழகாக விளக்குகிறார்.  எழுதியவர் யார் என்று தெரியவில்லை.  அனுபவித்து எழுதியிருக்கிறார்.  தந்தைக்கு அல்லது தாயாருக்கு ஒரு ஆபத்து வரும்போது உதவ முன்வராத பிள்ளை - பசியோடு இருக்கும் போது உண்ண உதவாத உணவுப் பொருள் - கடுமையான தாகம் இருக்கும் போது அதைத் தீர்க்க உதவாத தண்ணீர் - துணையென குடும்பத்தில் நுழையும் மனைவி வீட்டில் உள்ள பற்றாக்குறையைப் பற்றிக் கவலைப்படாமல் தாராளமாகச் செலவு செய்தால் அப்படிப்பட்ட மனைவி - கோபத்தை அடக்கிக் கொள்ளாமல் உடனுக்குடன் கொதிக்கும் மன்னவன் - குருவின் ஆணையை மீறும் மாணவன் - பாபத்தைப் போக்கோத தீர்த்தம், நதி, கடல் ஆகியவை -  இவையெல்லாம் பயனற்றவை என்கிறது இந்த விவேக சிந்தாமணிப் பாடல்.  நீங்களும் படித்து இன்புறுங்கள்.

ஆபத்துக்கு உதவாப் பிள்ளை - அரும்பசிக்கு உதவா அன்னம்
தாகத்தைத் தீராத் தண்ணீர் - தரித்திரம் அறியாப் பெண்டிர்
கோபத்தை அடக்கா வேந்தன் - குருமொழி கொள்ளாச் சீடன்
பாபத்தைத் தீராத் தீர்த்தம் பயன்இலை ஏழும் தானே