Sunday, August 21, 2011

திருக்குறளும் விவேகசிந்தாமணியும் - VIVEKACHINTHAMANI

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு


நட்பு என்பதை விளக்க வரும் வள்ளுவர்,

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு

என்று சொல்வார்.  ஒரு நண்பனுக்கு இடுக்கண் வந்தால் அவன் வந்து “உதவி செய்” என்று முறையிடத் தேவையில்லை.  இடுப்பில் இருந்து ஆடை நழுவினால் கை தானே போய் சரி செய்வது போல தமது நண்பனுக்கு ஒரு துன்பம் என்றால் உடனே போய் உதவி செய்வது தான் நட்பின் அடையாளம்.  அது மட்டுமல்ல நண்பன் தீயவழியில் சென்றால் அதைத் தடுக்கும் துணிவும் நண்பர்களுக்கு இருக்க வேண்டும்.  அவனை நல்வழியில் நடத்திச் செல்லும் பொறுப்பும் நல்ல நண்பர்களுக்கு இருக்க வேண்டும்.  துன்பம் வந்தால் உடன் உதவ வேண்டும்.  இக்கருத்தை,

அழிவினை நீக்கி ஆறு உய்த்து அழிவின் கண்
அல்லல் உழப்பதாம் நட்பு

என்னும் குறள் மூலம் எடுத்து இயம்புகிறார் திருவள்ளுவர்.  சிரித்து மகிழுவதற்காக அல்ல நட்பு.  சிந்திக்கவும் வேண்டும்,  நண்பர்கள் நிலைதடுமாறினால் திருத்த வேண்டும் என்று திருவள்ளுவர் வலியுறுத்துவார்.

நகுதற் பொருட்டு அன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு

என்பது திருக்குறள்.  எனவே தான் நண்பர்களைத் தேர்ந்தெடுக்கும் போது மிகக் கவனமாக இருக்க வேண்டும்.  சிந்திக்காமல் சேர்பவர்களை எல்லாம் நாம் நண்பர்கள் என்று ஏற்றுக் கொள்ள முடியாது.  அவ்வாறு சிந்திக்காமல் பழகும் எல்லோரையும் நண்பர்கள் என்று ஏற்றுக்கொண்டால் நம் வாழ்வில் துன்பம் என்பது தொடர்கதையாகிவிடும்.

ஆய்ந்து ஆய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை
தான் சாந் துயரம் தரும்

என்பது திருக்குறள்.  பணம் இருக்கும் போது பத்து பேர் நம்மைச் சுற்றி இருப்பார்கள்.  எல்லோரும் நம்மை நண்பர் என்று அழைப்பார்கள்.  ஆனால் துன்பம் வரும் போது கல்லடி பட்ட காக்கை போல அனைவரும் பறந்து விடுவார்கள்.  துன்பம் நல்ல நண்பன் யார் என்பதைக் காட்டிவிடும்.

கேட்டினும் உண்டு ஓர் உறுதி கிளைஞரை
நீட்டி அளப்பதோர் கோல்

துன்பம் என்பது நட்பை அளக்க ஓர் அளவு கோல் என்கிறார் திருவள்ளுவர்.  இப்படி, நட்பு – நட்பு ஆராய்தல் – தீ நட்பு என்ற அதிகாரங்களில் பல அருமையான – தேவையான கருத்துப் பெட்டகங்கள் உள்ளன.

இப்படி ஒரு கருத்தை விவேக சிந்தாமணி என்னும் நூலில் ஒரு பாடலில் நான் கண்டேன்.  இதோ அந்தப் பாடல்.

அருமையும் பெருமை தானும் அறிந்து உடன் படுவர் தம்மால்
இருமையும் ஒருமையாகும் இன்புறற்கு ஏது உண்டாம்
பரிவில்லாச் சகுனி போலப் பண்புகெட்டவர்கள் தம்மால்
ஒருமையில் நிரயம் எய்தும் ஏதுவே உயரும் மன்னோ.

(நிரயம் என்றால் நரகம் என்று பொருள்)
நல்ல நண்பர்கள் கிடைத்தால் இம்மை மறுமைப் பயன்கள் எல்லாம் நமக்கு ஒன்றுசேர கிட்டும்.  ஆனால் சகுனி போல நம்மைத் தீய பாதையில் இட்டுச் செல்லும் நண்பர்கள் அமைந்தாலோ நிச்சயம் நரகம் தான் நமக்குக் கிட்டும்.

விவேகசிந்தாமணி VIVEKA CHINTHAMANI

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு

உழவினைச் சிறப்பித்துக் கூறும் வள்ளுவர்,

“உழுவார் உலக்த்தார்க்கு ஆணி அஃதற்றாது
எழுவாரை எல்லாம் பொறுத்து”

எனக் கூறுவார்.  உழவுத் தொழில் செய்வோர் உலகில் உயிர் வாழ்கின்ற அனைவரையும் தாங்குகிறார்கள்.  எனவே அவர்கள் உலகத்திற்கு அச்சாணி போன்றவர்கள் என்று கூறுகிறார் வள்ளுவர்.  அதுமட்டுமல்ல,

“உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
தொழுதுண்டு பின்செல்பவர்”
 என உழவர்களை மேன்மைப்படுத்துகிறார்.

உழவர்கள் பிறரிடம் போய் இரந்து உண்ணமாட்டார்கள்.  அதுமட்டுமல்ல யாராவது உதவி என்று கேட்டால் அவர்களுக்கு உதவும் எண்ணமும் கொண்டிருப்பர் என்னும் கருத்தை,

இரவார் இரப்பார்க்கு ஒன்று ஈவர் கரவாது
கைசெய்தூண் மாலையவர்.

என்னும் குளள் மூலம் விளக்குவார் வள்ளுவர்.  இப்படிப்பட்ட கருத்தை விவேக சிந்தாமணி என்னும் நூலில் ஒரு பாட்டு எடுத்து இயம்புகிறது.

அலகில்லா மறை விளங்கும் அந்தணர் ஆகுதி விளங்கும்
பலகலையாம் தொகை விளங்கும் பாவலர் தம் பா விளங்கும்
மலர்குலாம் திரு விளங்கும் மழை விளங்கும் மனு விளங்கும்
உலகெலாம் ஒளி விளங்கும் உழவர் உழும் உழவாலே.

எளிய தமிழில் அருமையான கருத்தைத் தந்துள்ளார் இப்புலவர்.  வேதம் விளங்க வேண்டுமா?  யாகங்கள் நடக்க வேண்டுமா?  கலைகள் செழிக்க வேண்டுமா?  கவிதைகள் வெளிவரவேண்டுமா?  திருமகள் பொலிவு பெறவேண்டுமா?  மனித குலம் உய்ய வேண்டுமா?  மழை உரியகாலத்தில் பெய்ய வேண்டுமா?  உலகம் சிறப்புற்றுத் திகழ வேண்டுமா?  எல்லாம் நடக்கும்.  எப்போது?  உழவர் உழும் உழவாலே தான் இத்தனை சிறப்புகளும் நமக்குக் கிடைக்கும்.

VIVEKA CHINTHAMANI - விவேகசிந்தாமணி

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு

ஆசை என்பது தான் அனைத்துத் துன்பங்களுக்கும் அடிப்படை என்பார் புத்தபெருமான்.  இக்கருத்தையே வலியுறுத்தும் வள்ளுவரும்,

அவா இல்லார்க்கு இல்லாகும் துன்பம் அஃதுண்டேல்
தவா அது மேன்மேல் வரும்.

(தவா என்றால் .  தொடர்ந்து மற்றும் நீங்காமல் என்று பொருள்.)  ஆசை இல்லை என்றால் துன்பம் இல்லை.  ஆசை வந்தால் துன்பம் தொடர்ந்து வரும் என்பார் வள்ளுவர்.  அதுமட்டுமல்ல,  ஆசை இருந்தால் துன்பம் மட்டுமல்ல மீண்டும் மீண்டும் பிறவித்துயரம் வரும்.

அவா என்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும்
தவா அப்பிறப்பு ஈனும் வித்து.

என்கிறார் வள்ளுவர்.  இக்கருத்தையே வலியுறுத்தும் விவேகசிந்தாமணியில் ஒரு பாடல் இதோ.

பகையினை ஆக்கலும் பாவம் ஆக்கலும்
நகையினை ஆக்கலும் நவையை ஆக்கலும்
திகைமனம் ஆக்கலும் சிறுமை ஆக்கலும்
அகைதரு காமத்தின் அன்றி இல்லையே

பகையை உண்டாக்குவது – பாவத்தைக் கொண்டுவருவது – பிறர் நம்மைப் பார்த்து இகழும்படிச் செய்வது – குற்றங்களைச் செய்யத் தூண்டுவது – நம்மைத் திகைக்கவைத்துத் தடுமாற்றத்தை உண்டாக்குவது – சிறுமையைத் தருவது எல்லாம் எது?  ஆசை தான்.  அதிலும் பெண்ணாசை இருக்கிறதே அது எல்லாக் குற்றங்களையும் ஒன்றுசேர செய்யச் சொல்லும்.  இதே போன்ற கருத்தை விளக்கும் மற்றொரு விவேகசிந்தாமணிப் பாடலும் உண்டு.

கைதவம் இழைத்தலும் களவு செய்தலும்
ஐதுயிர் கோறலும் அறத்தைக் கோறலும்
பொய்தவ உரைத்தலும் பொருள் இழத்தலும்
எய்திய காமத்தின் அன்றி இல்லையே.

(கோறல் என்றால் அழிப்பது, சிதைப்பது, வதைப்பது எனப் பல பொருள் தரும் அருமையான சொல்) (ஐது என்றால் அழகு)  (தவ என்றால் அதிகமாக, மிகுதியாக என்று பொருள்)

நன்றியைக் கோறலும் நலனைக் கோறலும்
வென்றியைக் கோறலும் விவேகம் கோறலும்
துன்றிய ஒக்கலைத் துறந்து நிற்றலும்
கன்றிய காமத்தின் அன்றி இல்லையே.

(துன்றிய ஒக்கல் என்றால் பொருந்திய உறவினர் என்று பொருள்)

எளிய தமிழில் அற்புதமான கருத்துகளைத் தருகிறது விவேக சிந்தாமணி.

VIVEKA CHINTHAMANI POEMS

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு

இக்காலத்தில் நோய்கள் பெருகி எங்கு பார்த்தாலும் பணத்தைப் பிடுங்கும் மருத்துவ மனைகள் பெருகி வருகின்றன.  மருத்துவம் என்பது ஒரு சேவை என்ற கருத்தே மெல்ல மெல்ல மறைந்து வருகிறது.  சரி முன்னெச்சரிக்கையாக பிணி வராமல் நாம் தான் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.  எளிய உணவு – தேவையான அளவு உடற்பயிற்சி – யோகங்கள் என நம்மைநாமே பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.  சரி – இந்த நோய்கள் ஏன் வருகின்றன?  இதோ பதில் தருகிறது விவேக சிந்தாமணிப் பாடல் ஒன்று.

தன்னைத் தான் பேணாதாலும்
சரீரத்தின் தண்டிப்பாலும்
பின்னுற்ற விசாரத்தாலும்
பின் சலமலத்தினாலும்
அன்னத்தை ஒறுப்பதாலும்
அரையுடல் முழுகலாலும்
தன்மத்தை இகழ்வதாலும்
சரீரத்தில் வியாதி தோன்றும்

தன் உடம்பை முறையாகப் பராமரிக்கத் தவறுவது முதல் குற்றம்.  உடலுக்கு வேண்டிய உணவு, நீர் உரிய நேரத்தில் உரிய அளவில் தரத் தவறக் கூடாது.  கடுமையான வேலை பார்த்து நம் உடலுக்கு நாமே தண்டனை கொடுப்பது.  தேவையற்ற சிந்தனைகளைப் பெருக்கி அதன் காரணமாக மனத்துயர் அடைவது.  மனச்சோர்வு அடைவது.  மலசலம் கழிப்பதில் காலநேரம் தவறுவது.  இந்த உணவு பிடிக்காது – இந்த காய்காறி பிடிக்காது எனக் கூறி உணவுப் பண்டங்களை ஒதுக்கி சுவையாக உள்ளது என்பதற்காக நொறுக்குத் தீனியைத் தின்பது.  முழு உடலும் நனையும் படி குளிக்காமல் அரைகுறையாகக் குளிப்பது.  அறநெறிகளை இகழ்ந்து தீய வழிகளில் செல்வது.  இப்படி ஒவ்வொன்றாக சேர்ந்து சிறிது சிறிதாக நம் உடம்பைக் கெடுத்து நோய்கள் உடலுக்குள் நுழைகின்றன.  இவற்றையெல்லாம் நாம் உணர்ந்து நோய்களைத் தவிர்க்க வேண்டும்.

திருக்குறளில் இதே கருத்துகள் பல குறள்களில் உள்ளன.

மருந்தென் வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றின் உணின்.

ஏற்கனவே உண்ட உணவு செரித்த பின் வேண்டிய அளவு அளவறிந்து உண்ண வேண்டும்  அப்படி வாழப் பழகினால் மருந்தே வேண்டாம் என்கிறது திருக்குறள்.

மாறுபாடு இல்லாத உண்டி மறுத்து உண்ணின்
ஊறுபாடு இல்லை உயிர்க்கு

ஒவ்வாத உணவை நாம் ஒதுக்கி விட வேண்டும்.  மறுக்கப் பழக வேண்டும்.  நட்பு வட்டாரத்தில் இருக்கிறோம் எனக் கருதி நாகரிக்த்தின் பெயரால் ஒவ்வா உணவை ஏற்கக் கூடாது.  அப்படி இருந்தால் நோய்கள் வராது.  இப்படி பல அருமையான குறள்கள் மருந்து என்ற தலைப்பிலே வள்ளுவர் நமக்குக் கொடுத்துள்ளார்.

விவேகசிந்தாமணி பாடல்கள்

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு
என் பொருள், என் வீடு, என் நகை, என் சுற்றம் என இறுமாப்போடு, தன்முனைப்போடு, அகங்காரத்தோடு திரிகின்ற மக்களைப் பார்த்து சாகும் போது எதுவும் உடன் வராது என்ற கருத்தை ஒரு விவேகசிந்தாமணிப் பாடல் ஒன்று அருமையாக விளக்குகிறது.  இது போன்ற பல பாடல்களை நாம் பட்டினத்தார் பாடல்களில் நேற்று நாம் கண்டோம்.  இன்று விவேகசிந்தாமணியில் ஒரு பாடலைப் பார்ப்போம்.

என் பொருள் என் பொருள் என்று சீவன் விடு மனமே ஒன்று இயம்பக் கேளாய்
உன் பொருளானால் அதன்மேல் உன் நாமம் வரைந்துளதோ உன்றனோடும்
முன்பிறந்து வளர்ந்தது கொல் இனி உனைவிட்டு அகலாதோ முதிர்ந்து நீ தான்
பின்பு இறக்கும் போது அது தான் கூட இறந்திடும் கொல்லோ பேசுவாயே

“என் பொருள் என் பொருள்” என்று புலம்புகிறாயே – அந்த பொருளின் மேல் உன் பெயர் பொறிக்கப்பட்டுள்ளதா?  நீ பிறக்கும் போதே அது உன்னுடன் உடன்பிறந்ததா?  அல்லது நீ இறக்கும் போது உன்னுடன் அது வரப்போகிறதா?  சிந்தனை செய்து பார்.  எதுவும் நிரந்தரமல்ல என்பது உனக்குப் புரியும் என்கிறது இப்பாடல்.  சரிதானே.  இதை உணர்ந்தால் நிலம் வேண்டும் – அடுத்தவர் நிலத்தை அபகரிக்க வேண்டும் – பணம் சேர்க்க வேண்டும் – நகை சேர்க்க வேண்டும் என்ற எண்ணமே மக்களுக்கு வராதே.  துன்பங்களும் தொடராதே.

விவேகசிந்தாமணி

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு

இன்றைய காலகட்டத்தில் சில ஆயிரம் பணத்தைக் காட்டினால் சட்டத்தை மீறக் கூடிய பணியாளர்கள் உள்ளார்கள்.  ஆனால் உலகமே நமக்குக் கிடைத்தாலும் வழிதவறி நடக்கக் கூடாது என அறிவுறுத்துகிறார் ஒரு கவிஞர்.  இதோ அந்த விவேகசிந்தாமணிப் பாடல்.

தான் கெடினும் தக்கார்க்கு கேடு எண்ணற்க - தன் உடம்பின்
ஊன் கெடினும் உண்ணார் கைத்து உண்ணற்க - வான் கவிந்த
வையகம் எல்லாம் பெறினும் உரையற்க
பொய்யோடு இடைமிடைந்த சொல்.

தான் கெடுவதான நிலை ஏற்பட்டாலும் தக்கவர்கள் - நல்லவர்கள் கெட்டுப்போகும்படியான செயல்களைச் சிந்திக்கக் கூடாது.  செய்யக் கூடாது என்று கூடச் சொல்லவில்லை.  சிந்திக்கக் கூடாது என்றே தடை விதிக்கிறார்.  நாம் மடிவதாகவே இருந்தாலும் கெட்டவர்கள் கொடுக்கும் உணவை நாம் உண்ணக் கூடாது.  கைத்து என்றால் கையில் உள்ளது.  கெட்டவர்கள் கையால் கொடுக்கும் உணவை நாம் உண்ணக் கூடாது.  உலகமே கிடைப்பதானாலும் பொய் கலந்த வார்த்தைகளை விளையாட்டாகவும் சொல்லக்கூடாது.

விவேகசிந்தாமணி

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு

ஆசையே அனைத்து இன்னல்களுக்கும் காரணம் என்பார் புத்தர்.  அதிலும் பணத்தாசை, பொருளாசை இருக்கிறதே - அது மனிதனைப் பாடாய்ப் படுத்திவிடும்.  இந்த ஆசை வந்துவிட்டால் எப்படிப்பட்ட உயர்ந்த பதவியில் இருக்கும் மனிதன் என்றாலும் குற்றம் இழைப்பார்கள்.  கற்றவர்கள் கற்றபடி நிற்க மாட்டார்கள்.  இக்கருத்தை மிக அழகாக விவேகசிந்தாமணிப் பாடல் ஒன்று எடுத்தியம்புகிறது.


எவரையும் மனம் திரிப்பதும் ஈன்றவர் தமக்குத்
கவறு இழைத்திடப் புரிவதும் தையலார் தங்கள்
கவறில் கற்பினை ஒழிப்பதும் கற்கும் நூல் கலைகள்
அவை எல்லாம் கெடக் கெடுப்பதும் பொருள் விருப்பன்றே

மனதைக் கெடுக்கும்.  சூதாடும் கருவி உருள்வது போல் கற்புடை மனைவி கூட மனம் மாறுவாள்.  கற்றவர் கற்றபடி நிற்கமாட்டார்.  எல்லர்ம் பொருள் மேல் உள்ள ஆசை தான்.

விவேகசிந்தாமணி

சங்கே முழங்கு - எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு

பட்டினத்தாரின் கருத்தாழமிக்க பல பாடல்களை நாம் பார்த்தோம்.  விவேக சிந்தாமணியிலும் இக்கருத்தைக் கூறும் பாடல் ஒன்று உள்ளது.

பண்டம் பொய்க்கூரை பழகி விழுந்திடில்
உண்ட அப்பெண்டிரும் மக்களும் பின்செலார்
கொண்ட விரதமும் ஞானமும் அல்லது
மண்டி அவருடன் வழிநடவாதே

உடலை ஒரு குடிலாக - கூரையுள்ள வீடாகப் பார்க்கிறார் கவிஞர்.  அந்த வீடு விழுந்துவிட்டால் அவர் வாழ்ந்த அளவில் அவர் கடைப்பிடித்த விரதங்கள், தானதருமங்கள், அவர் பெற்ற ஞானம் ஆகியவையே அவரைப் பின்தொடர முடியும்.  அவர் உடலால் பந்தப்பட்டு அவர் உடலுடன் உறவாடிய மனைவி, மக்கள், உற்றார், உறவினர், நண்பர் யாரும் அவர் பின் செல்ல முடியாது.  அவரைத் தொடர்ந்து செல்ல முடியாது என்ற அருமையான கருத்தைச் சொல்கிறது இப்பாடல்

சித்தர் பாடல்களைப் புரிந்து கொள்ள சில விளக்கங்கள்

இறைவன் இந்த உலகத்தைப் படைக்கும் முன் குணமற்ற வெளியாய் இருந்தது.  உலகம் படைக்கப்பட்ட பின் மாயை தோன்றியது.  இது மாயை, அறியாமை, தன்முனைப்பு(அகங்காரம்) என மூன்று வகையானது.

மனித உடல் அவரவர் கையினால் எட்டு சாண் அளவு நீளம் உள்ளது என்று கூறப்படுகிறது.  நான்கு சாண் பருமனும், 96 விரற்கடைப் பிரமாணமும் உள்ளது என்று கூறுகிறார்கள்.

உடலின் வாயில்கள் ஒன்பது உள்ளதாகக் கருதப்படுகிறது.  அவையாவன
கண்கள் இரண்டு - செவிகள் இரண்டு - மூக்குத் துவாரங்கள் இரண்டு - வாய் ஒன்று - கருவாய் ஒன்று - மலவாய் ஒன்று.

ஐந்து பூதங்கள் யாவை?

நிலம் - புனல் - அனல் - கால் - விசும்பு

புனல் என்றால் நீர்
அனல் என்றால் தீ
கால் என்றால் காற்று
விசும்பு என்றால் ஆகாயம்.

ஐம்பொறிகள் யாவை?

மெய் - வாய் - கண் - மூக்கு - செவி

மெய் காற்றின் அம்சம்
வாய் நீரின் அம்சம்
கண் நெருப்பின் அம்சம்
மூக்கு மண்ணின் அம்சம்
செவி விசும்பின் அம்சம்

எனவே
காற்றின் அம்சமான மெய் குளிர்ச்சி, வெப்பம், மென்மை, வன்மை போன்றவற்றை உணர்ந்து அறியும்

நீரின் அம்சமான வாய் உப்பு, புளிப்பு, இனிப்பு, கைப்பு, கார்ப்பு, துவர்ப்பு என்னும் அறுசுவைகளை அறியும் வல்லமையை உடையது

கண் தீயின் அம்சம் என்பதால் ஒளியை கறுப்பு, சிகப்பு, நீலம், பச்சை எனவும் நீளம், குட்டை, பருமன், போன்ற வடிவங்களையும் அறியும்

மூக்கு மண்ணின் அம்சம் என்பதால் மணம், நாற்றம் போன்றவற்றை நுகர்ந்து அறியும்

ஐந்து தொழில் உறுப்புகள் யாவை?

வாய் - கை - கால் - மலவாய் - கருவாய்.  சரி இவற்றின் பணி என்ன?

வாய் சொல்வது என்னும் பணியைச் செய்கிறது
கை ஏற்றல் மற்றும் கொடுத்தல் என்னும் பணியைச் செய்கிறது
கால் நடத்தல் என்னும் பணியைச் செய்கிறது
மலவாய் கழித்தல் அல்லது விடுதல் என்னும் பணியைச் செய்கிறது
கருவாய் மகிழ்தல் என்னும் பணியைச் செய்கிறது


இவற்றைப் போன்றே அகக்கருவிகள்  நான்கு உள்ளன.

அவை மனம், அறிவு, நினைவு மற்றும் தன்முனைப்பு

மனம் நினைக்கும்
புத்தி முடிவு செய்யும்.  அதாவது அறிவு நிச்சயிக்கும்
தன்முனைப்பு நம்மை உசுப்பிவிடும்
நினைவு மூன்றுக்கும் காரணமாக இருக்கும்.
இதனால் தான் நினைப்பு பொழைப்பைக் கெடுக்கும் என்பார்கள்.  மூன்றுக்கும் அடிப்படையானது நினைப்பு தான்.

மனம் காற்றின் அம்சம்.  காற்றைப் போல நினைப்பு- மறதி ஆகியவற்றுடன் காற்று போலவே அலைந்து திரியும்

புத்தி என்னும் அறிவு நெருப்பின் அம்சம்.  இது செயல்களை - பொருள்களை ஆராயும்.  நன்மை தீமைகளை பகுத்து அறியும்.

நினைப்பு என்பது நீரின் அம்சம்.  இது ஐம்பொறிகளில் சலனத்தை உண்டாக்கும்.  பொறிவழி பல விஷயங்களுக்கு நம்மை இழுத்துச் சென்று நம்மை ஆட்டிப் படைக்கும்.  இதையே மனம் என்றும் கூறுவார்கள்.

தன்முனைப்பு என்னும் அகங்காரம் இந்த உடலை “நர்ன்” என மயங்கச் செய்யும்.  செயல்களை ஆலோசிக்காமல் “நான்”  “எனது” என்ற எண்ணம் கொண்டு பாப புண்ணியங்களைச் செய்து கொண்டிருக்கும்.  இரண்டுமே மறுபிறவிக்கு வழிவகுக்கும்.  பாவம் செய்தாலும் பிறவி.  புண்ணியம் செய்தாலும் பிறவி.  எனவே தான் பெரியோர்கள் சும்மா இரு மனமே என்று கூறுகிறார்கள்.

ஐவகை உடம்புகள் என்ன?

உணவுடம்பு என்னும் பருவுடம்பு. இதைத் தான் வடமொழியில் அன்னமயகோசம் என்கிறார்கள்.

காற்று உடம்பு அல்லது வளியுடம்பு -  இதை வடமொழியில் பிராணமய கோசம் என்கிறார்கள்.

மனவுடம்பு.  இதைத்தான் வடமொழியில் மனோமய கோசம் என்கிறார்கள்.

அறிவுடம்பு - இதைத்தான் வடமொழியில் விஞ்ஞானமய கோசம் என்கிறார்கள்.

இன்ப உடம்பு - வடமொழியில் ஆனந்தமய கோசம் என்கிறார்கள்.

ஆக ஒன்று புரிகிறது நமக்கு.  கோசம் என்றால் உடம்பு என்பது.
சலம் என்றால் மலை என்பது போல.  வேதாசலம், வெங்கடாசலம் போல.

குணங்கள் மூன்று வகை என்கிறார்கள். அவை என்னென்ன?

மனஎழுச்சி -  ராஜசம்

மயல் அல்லது மயக்கம் - தாமசம்

நன்மை அல்லது அமைதி -  சாத்வீகம்


மூன்று மலங்கள் அல்லது மும்மலம் என்றால் என்ன?
ஆணவம், மாயை மற்றும் வினையே மும்மலங்கள்.

ஆணவம் ஆன்மாவின் அறிவை மறைக்கும்.  ‘நான்” “எனது” என்னும் அறியாமையைத் தோற்றுவிக்கும். மனைவி, மக்கள், சொத்து போன்றவற்றில் மயக்கம் உண்டாக்கும்.  தொடர்ந்து ஆசைகளை உண்டாக்கிக் கொண்டே இருக்கும்.  ஆசைகளை அனைத்துத் துன்பங்களுக்கும் காரணம்.

மாயை என்பது பிறர் உடமைகளை தனது என்று நினைக்கச் செய்வதாகும்.  அப்படி நினைத்தாலே தொடர்வது தொல்லை தானே.

வினை அல்லது கர்மம்.  மேலே உள்ள இரண்டையும் அனுசரித்து புண்ணிய பாவங்களை விளைவிக்கும்.


முக்குற்றங்கள் என்னும் முப்பிணிகள் யாவை?

வாதம், பித்தம், கபம் என்பவையே முக்குற்றங்கள் ஆகும்.

வாதம் என்றால் என்ன? பிராணவாயு மிகுந்து நீரும் நெருப்பும் கலந்தால் அது வாதம் எனப்படும்
செவி விசும்பின் அம்சம் என்பதால் ஒலிகள், ஓசைகள் ஆகியவற்றைக் கேட்டறியும்

தீயும் காற்றும் பெருகி இதயத்தில் ஊன்றினால் அது பித்தமாகும்

நீர், நெருப்பு, காற்று ஆகியவை உடலில் கலவாமல் கலங்கினால் அது கபம் ஆகும்.

ஆறு ஆதாரங்கள் என்று அடிக்கடி சொல்லுவார்கள். 

மூலம் - மூலாதாரம்
கொப்பூழ் - சுவாதிஷ்டானம்
மேல்வயிறு - மணிபூரகம்
நெஞ்சம் - அநாகதம்
மிடறு - விசுத்தம்
புருவநடு - ஆக்ஞேயம்

இவையே மனித உடலில் முக்கியமான ஆறு நிலைகளாகும்.  இந்த நிலைகளையே ஆதாரங்கள் என்று கூறுகிறார்கள்.

நாம் தினமும் நிமிடத்திற்கு பதினைந்து மூச்சுகள் விடுகிறோம் எனக் கூறப்படுகிறது.  வலது மூக்குத் துவாரம் வழியாகவும் இடது மூக்குத் துவாரம் வழியாகவும் நாம் மூச்சு விடுகிறோம்.  உள்ளுக்கு இழுக்கும் மூச்சு பூரகம் எனப்படும்.  வெளிவிடும் மூச்சு ரேசகம் எனப்படும்.  மூச்சைக் கட்டுதல் கும்பகம் எனப்படும்.

பூரகம், ரேசகம் என்னும் மூச்சை அடக்கி ஆள முடிந்தால் மனம், அறிவு, அகங்காரம் என்கிற தன்முனைப்பு, நினைப்பு ஆகியவற்றை அடக்கி ஆளலாம்.

தசவாயுக்கள் நம்முள் இருந்து நம்மை ஆட்டிவைப்பதாகக் கூறுவார்கள்.  அந்த பத்து காற்று என்னென்ன?

உயிர்க்காற்று என்னும் பிராணன்
மலக்காற்று என்னும அபானன்
தொழில்காற்று என்னும் வியானன்
ஒலிக்காற்று என்னும் உதானன்
நிரவுக்காற்று என்னும் சமானன்
விழிக்காற்று என்னும் நாகன்
இமைக்காற்று என்னும் கூர்மன்
தும்மல் காற்று என்னும் கிருகரன்
கொட்டாவிக்காற்று என்னும் தேவதத்தன்
வீங்கல்காற்று என்னும் தனஞ்சயன்


ஐந்து அவத்தைகள் என்றால் என்ன?

நனவு என்னும் சாக்கிரம்
கனவு என்னும் சொப்பனம்
உறக்கம் என்னும் சுழுத்தி
பேருறக்கம் என்னும் துரியம்
உயிர்ப்பு அடக்கம் என்னும் துரியாதீதம்.

தொடரும்.....


பட்டினத்தார் பாடல்கள் - நிலையாமை

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு

இக்காலத்தில் அரசியல்வாதிகளாகட்டும் செல்வந்தர்களாகட்டும் பணத்தை அதிக அளவில் ஈட்டும் கணிப்பொறியாளர்கள் ஆகட்டும்.  பணம் வந்தவுடன் பகட்டான வாழ்க்கை வாழவேண்டும் என்று நினைக்கிறார்கள்.  மனைவி-மக்களுக்காக வீடுகள், நகைகள் போன்றவற்றை வாங்கிக் குவிக்கிறார்கள்.  ஏழைஎளியவர்களுக்கு உதவி செய்வதிலோ அறச்செயல்களைச் செய்வதிலோ இறைவனைத் துதிப்பதிலோ அக்கறை காட்டுவதே இல்லை.  சரி திடீரென்று உயிர் பிரிந்து விட்டால் என்ன நடக்கும் என்பதைச் சிந்தித்துப் பார்ப்பதே இல்லை.  மரணம் வந்தால் – மரணத்திற்குப் பின் யார்யார் உடன்வருவார் என்று சிந்தித்துப் பார்ப்பதே இல்லை.  அதனால் செய்யக் கூடாத தவறுகளை எல்லாம் துணிந்து செய்யத் துணிகிறார்கள்.  அடுத்த நொடியில் கூட மரணம் வரலாம்.  அப்போது சேர்த்து வைத்த சொத்து உடன் வருமா?  இன்பம் தரப்போகிறாள் என்று கருதி நகைகள் பூட்டி அழகு பார்த்த அந்த மங்கை உடன் வருவாளா?  மக்கள் தான் உடன் வருவார்களா?  யாரும் வரமாட்டார்கள்.  தாம் உணர்ந்த உண்மைகளை சித்தர்களும் புலவர்களும் நமக்கு எடுத்துக் காட்டி உள்ளார்கள்.  அவற்றை நாம் படித்துப்பார்த்தால் தவறுகளைச் செய்யும் போது அச்சப்படுவோம்.  சரி பட்டினத்தார் பாடிய சில பாடல்களை நாம் பார்ப்போம்.  அதிலிருந்து நல்ல கருத்துகளைத் தெரிந்து கொள்வோம்.  தவறுகளைத் தவிர்ப்போம்.

இந்த உடல் என்பது என்ன?

“அங்கோடு இங்கோடு அலமருங்க கள்வர்
ஐவர் கலகமிட்டு அலைக்குங் கானகம்
சலமலப் பேழை – இருவினைப் பெட்டகம்
வாத பித்தம் கோழை குடிபுகுஞ் சீறூர்
ஊத்தைப் புன்தோல் உதிரக் கட்டளை
நாற்றப் பாண்டம் – நான் முழத்து ஒன்பது
பீற்றல் துண்டம் – பேய்ச்சுரைத் தோட்டம்
அடலைப் பெரிய சுடலைத் திடருள்
ஆசைக் கயிற்றில் ஆடும் பம்பரம்
ஓயா நோக்கிடம்- ஓடும் மரக்கலம்
மாயா விகாரம் – மரணப் பஞ்சரம்
சோற்றுத் துருத்தி – தூற்றும் பத்தம்
காற்றில் பறக்கும் கானப் பட்டம்
விதிவழித் தருமன் வெட்டும் கட்டை
சதுர்முகப் பாணன் தைக்கும் சட்டை
ஈமக் கனலில் இடுசில விருந்து
காமக் கனலில் கருகும் சருகு
கிருமி கிண்டும் கிழங்கு”
.......
“நீரில் குமிழி – நீர் மேல் எழுத்து
கண்துயில் கனவில் கண்ட காட்சி”

என்று நிலையில்லா இந்த உடலை – இந்த உலக வாழ்வை மிக அழகாக விவரிப்பார் பட்டினத்தார்.

இதுமட்டுமல்ல..

“ஐம்பொறி மயக்கமும் இடும்பையும் பிணியும் இடுக்கிய ஆக்கையை
உயிர் எனும் குருகு விட்டு ஓடும் குரம்பையை
எலும்பொடு நரம்பு கொண்டு இடையில் பிணித்துக்
கொழுந்தசை வேய்ந்தும் ஒழுக்கு விழுங் குடிலைச்
,,,,,,
ஐம்புலப் பறவை அடையும் பஞ்சரத்தை(பஞ்சரம் என்றால் கூண்டு)
....
ஆசைக் கயிற்றில் ஆடும் பம்பரத்தைக்
காசில் பணத்தில் சுழலும் காற்றாடியை”
.....
“காமக் காற்றெடுத்து அலைப்பக்
கெடுவழிக் கரைசேர் கொடுமரக்கலத்தை
இருவினை விலங்கொடும் இயங்கு புற்கலனைக்
நடுவன் வந்து அழைத்திட நடுங்கும் யாக்கையைப்”

“ஒன்பதுவாய்த் தோல்பைக்கு ஒருநாளைப் போலவே
அன்பு வைத்து அலைந்தாய் நெஞ்சமே”

“எத்தனை நாள் கூடி எடுத்த சரீரம் இவை
அத்தனையும் மண் தின்பதில்லையோ”

“ஆங்காசப் பொக்கிசம் – கோபக் களஞ்சியம் – ஆணவத்தால்
நீங்கா அரண்மனை – பொய் வைத்த கூடம் – விண்நீடி வளர்
தேங்கார் பெருமதில் – காமவிலாசம் – இத்தேகம் கந்தல்”

“விடக்கே – பருந்தின் விருந்தே – கமண்டல வீணன் இட்ட
முடக்கே – புழு வந்து உறையிடமே – நலம் முற்றும் இலாச்
சடக்கே – கருவி தளர்ந்து விட்டால் பெற்ற தாயும் தொடாத்
தொடக்கே” என்கிறார் நமது உடலை.

(விடக்கு என்றால் தசைப்பிண்டம், முடக்கு என்றால் சிறு குடில், கமண்டல வீணன் என்றால் பிரமன், )

இப்படி நமது உடலை வர்ணிக்கும் பட்டினத்தார் மரணம் வந்தால் என்ன நிகழும் என்பதையும் பல பாட்டுகளில் நமக்கு விளக்குகிறார்.

“கட்டி அணைத்திடும் பெண்டிரும் மக்களும் காலத்தச்சன்
வெட்டி முறிக்கும் மரம் போல் சரீரத்தை வீழ்த்தி விட்டால்
கொட்டி முழக்கி அழுவார் – மயானம் குறுகி அப்பால்
எட்டி அடிவைப்பரோ?”   என்று கேள்வி கேட்கிறார் பட்டினத்தார்
மயானத்திற்குப் பிறகு யார் வரப்போகிறார்கள்?  யாரும் வரமாட்டார்கள்.

“காதற்ற ஊசியும் வாராது காணுங் கடை வழிக்கே”
என்றும்,


“மனையாளும் மக்களும், வாழ்வும் தனமும் தன் வாயில் மட்டே
இனமான சுற்றம் மயானம் மட்டே-வழிக்கேது துணை?
தினாயாம் அளவு எள் அளவாகிலும் முன்பு செய்தவம்
தனையாள என்றும் பரலோகம் சித்திக்கும் சத்தியமே”

“அத்தமும் வாழ்வும் அகத்து மட்டே – விழி அம்பொழுக
மெத்திய மாதரும் வீதி மட்டே – விம்மி விம்மி இரு
கைத்தலம் மேல்வைத்து அழும் மைந்தரும் சுடுகாடு மட்டே
பற்றித் தொடரும் இருவினைப் புணிணிய பாவமுமே”

என்று நற்செயலாம் தவத்தைச் செய்யச் சொல்கிறார்.

இறந்த பின் நமது உடலை சொந்தம் கொண்டாடுபவர் யார் யார் என்று மிக விளக்கமாகப் பட்டினத்தார்ல ஒரு பாடலிலே சொல்கிறார்.

“எரி எனக்கென்னும் – புழுவோ எனக்கென்னும் – இந்த மண்ணும்
சரி எனக்கென்னும் – பருந்தோ எனக்கென்னும் – தான் புசிக்க
நரி எனக்கென்னும் – புன்னாய் எனக்கென்னும் – இந்நாறுடலைப்
பிரியமுடன் வளர்த்தேன் – இதனால் என்ன பேறு எனக்கே?

எரியும் நரியும், புழுவும் பருந்தும் நாயும் சொந்தம் கொண்டாடப் போகும் இந்த உடலை நாம் எப்படி எல்லாம் போற்றி வாசனைத் திரவியங்கள் – அழகிய ஆடைகள் – சுவையான உணவுகள் கொடுத்துப் பேணிக் கொண்டிருக்கிறோம்.  நற்செயல்களைப் புறந்தள்ளி ஆடை அலங்காரத்தில் நகைநட்டில் கவனம் செலுத்துகிறோம்.  அறச்செயல்களை விரும்புவதில்லை நாம்.  சிந்தித்துப் பார்க்க வேண்டிய கருத்துகள்.

இறக்கும் தருவாயில் ஞானத் தெளிவு வந்து மனிதன் எப்படி எல்லாம் தனக்குள் புலம்புவான் என்பதை பட்டினத்தார் மிக அழகாகத் தொகுத்துத் தந்துள்ளார்.

“வார்த்தைத் திறமில்லா மனிதருக்குப் புன் சொல்லாம்
சாத்திரங்கள் சொல்லிச் சதுர் இழந்து கெட்டேனே

மெத்த மெத்தச் செல்வாக்கில் வேறு மருள் எடுத்துத்
தத்தித் தலை கீழாய்த் தான் நடந்து கெட்டேனே

வழக்கத் தலங்களினும் மண் பெண் பொன் ஆசையினும்
பழக்கம் தவிராமல் பதி இழந்து கெட்டேனே

ஆணி பொருந்தும் அரும்பூமி அத்தனையும்           (ஆணி என்றால் முதன்மை)                                                       
காணில் நமது என்று கனம் பேசிக் கொண்டேனே

ஆசாரம் இல்லாத அசடருடன் கூடிப்
பாசாங்கு பேசிப் பதி இழந்து கெட்டேனே

குருமார்க்கம் இல்லாக் குருடருடன் கூடிக்
கருமார்க்கத்துள்ளே கருத்தழிந்து கெட்டேனே

ஆலம் அருந்தும் அரன் பெருமை எண்ணாமல்
பாலர் பெண்டிர் மெய் என்று பதி இழந்து கெட்டேனே

பிணவாசம் உற்ற பெரும்காயம் மெய் என்று
பண ஆசையாலே பதி இழந்து கெட்டேனே

கண்ட புலவர் கனக்கவே தான் புகழ
உண்ட உடம்ல்லாம் உப்பரித்துக் கெட்டேனே

எண்ணிறந்த சென்மம் எடுத்துச் சிவபூசை
பண்ணிப் பிழையாமல் பதி இழந்து கெட்டேனே

சிற்றெறும்பு சற்றும் தீண்டப் பொறா உடம்மை
உற்றுருக்கவும் சுடவும் ஒப்பித்து மாண்டேனே

தன் உடம்பு தானே தனக்கும் பகையாம் என்று
எண்ணும் உணர்வு இல்லாமல் இன்பம் என்று மாண்டேனே

தோல் எலும்பு மாமிசமும் தொல் அன்னத்தால் வளரும்
மேல் எலும்பும் சுத்தமென்று வீறாப்பாய் மாண்டேனே

போக்குவரத்தும் பொருள்வரத்தும் காணாமல்
வாக்கழிவு சொல்லி மனம் மறுகிக் கெட்டேனே”

என்று மனம் புலம்ப  பிரியப் போகும் உயிர் உடலைப் பார்த்து கிண்டல் செய்கிறது.  வாழத் தவறிவிட்டாய் மனிதனே எனச் சுட்டிக் காட்டுகிறது.  இறைவனை துதிக்கத் தவறினாயே எனப் பழி சுமத்துகிறது.

“உடக்கை ஒருக்கி உயிரை அடைத்து வைத்த
சடக்கைச் சதம் என்று சார்ந்து அங்கு இறுமாந்தை
உடக்கைத் தகர்த்தே உயிரை எமன் கொள்கையிலே
அடக்கமாய் வைத்த பொருள் அங்கு வரமாட்டாதே

(உடக்கு என்றால் சுற்றாணி  சடக்கு என்றால் தேகம்)

தித்திக்கும் தேனைத் தெவிட்டாத தெள்ளமுதை
முத்திக்கு வித்தான முப்பாழைப் போற்றாமல்
பற்றிப் பிடித்து இயமன் பாசத்தால் கட்டும் வண்ணம்
சுற்றி இருக்கும் வினை சூழ்ந்தனையே நெஞ்சமே

அஞ்செழுத்தாய் எட்டெழுத்தாய் ஐம்த்தோர் அட்சரமாய்ப்
பிஞ்செழுத்தாய் நின்ற பெருமானைப் போற்றாமல்
வஞ்சகமாய் உற்ற முறை மாதல் வலைக்குள்ளாகிப்
பஞ்சரித்துத் தேடிப் பாழுக்கு இறைத்தோமே
(பஞ்சரித்து என்றால் கெஞ்சிப்பேசி)

அக்கு அறுகு கொன்றை தும்பை அம்புலியும் சூடுகின்ற
சொக்கர் திருத்தாளைத் தொழுது வணங்காமல்
மக்கள் பெண்டிர் சுற்றமுடன் வாழ்வை மிக நம்பி அன்பாய்
எக்காலமும் உண்டென்று எண்ணினையே நெஞ்சமே
(அக்கு என்றால் ருத்ராட்சம்)

ஆண்ட குருவின் அருளை மிகப் போற்றி
வேண்டும் கயிலாய வீட்டுவழி பாராமல்
பூண்ட குழல் மாது நல்லார் பொய் மாய்கைக்கு உள்ளாகித்
தூண்டில் அகப்பட்டுத் துடிகெண்டை ஆனேனே

பூவாணர் போற்றும் புகழ் மதுரைச் சொக்கரது
சீர்பாதம் போற்றிச் சிவலோகம் சேராமல்
தாவாரம் தோறும் தலைபுகுந்த நாய்போலே
ஆகாத நெஞ்சமே அலைந்து திரிந்தாயே

 ஞானம் பிறக்கிறது நெஞ்சுக்குள்.  செய்ய மறந்ததைப் பட்டியலிடுகிறான் மனிதன்.  அருமையான பாடல்கள்.

மூலத்து உதித்து எழுந்த முக்கோணச் சக்கரத்துள்
வாலைதனைப் போற்றாமல் மதி மறந்தேன் பூரணமே

உந்திக் கமலத்து உதித்து நின்ற பிருமாவைச்
சந்தித்துக் காணாமல் தட்டழிந்தேன் பூரணமே

நாவிக் கமல நடுநெடுமால் காணாமல்
ஆவிகெட்டு யானும் அறிவிழந்தேன் பூரணமே

உருத்திரனை இருதயத்தில் உண்மையுடன் பாராமல்
கருத்தழிந்து நானும் கலங்கினேன் பூரணமே

விசுத்தி மகேசுவரனை விழி திறந்து பாராமல்
பசித்துருகி நெஞ்சம் பதறினேன் பூரணமே

நெற்றி விழியுடைய நிர்மல சதாசிவத்தைப்
புத்தியுடன் பாராமல் பொறி அழிந்தேன் பூரணமே

நாதவிந்து தன்னை நயமுடனே பாராமல்
போதம் மயங்கிப் பொறி அழிந்தேன் பூரணமே

உச்சி வெளியை உறுதியுடன் பாராமல்
அச்சமுடன் நானும் அறிவிழந்தேன் பூரணமே

மூக்குமுனையை முழித்திருந்து பாராமல்
ஆக்கை கெட்டு நானும் அறிவிழந்தேன் பூரணமே

இடைபிங்கலையின் இயல்பு அறிய மாட்டாமல்
தடையுடனே யானும் தயங்கினேன் பூரணமே

ஊனுக்குள் நீ நின்று உலாவினதைக் காணாமல்
நான் என்று இருந்து நலன் அழிந்தேன் பூரணமே

மெய்வாழ்வை மிக விரும்பி மிக வாழாமல்
பொய்வாழ்வை நம்பிப் புலம்பினேன் பூரணமே

பெண்டு பிள்ளை தந்தை தாய் பிறவியுடன் சுற்றம் இவை
உண்டென்று நம்பி உடல் அழிந்தேன் பூரணமே

தண்டிகை பல்லக்குடனே சகல சம்பத்துகளும்
உண்டென்று நம்பி உணர்வு அழிந்தேன் பூரணமே

இந்த உடல் உயிரை எப்போதும் தான் சதமாய்ப்
பந்தமுற்று நானும் பதம் அழிந்தேன் பூரணமே

மாதர் பிரபஞ்ச மயக்கத்திலே விழுந்து
போதம் மயங்கிப் பொறி அழிந்தேன் பூரணமே

மண் பெண் பொன் ஆசை மயக்கத்திலே விழுந்து
கண் கெட்ட மாடு அது போல் கலங்கினேன் பூரணமே

தனிமுதலைப் பார்த்துத் தனித்திருந்து வாழாமல்
அநியாயமாப் பிறந்து இங்கு அலைந்து நின்றேன் பூரணமே

வாசிதனைப் பார்த்து மகிழ்ந்து உனைத் தான் போற்றாமல்
காசிவரைப் போய்த் திரிந்து கால் அலுத்தேன் பூரணமே
(வாசி என்றால் பிராணவாயு)

உடலுக்குள் நீ நின்று உலாவினதைக் காணாமல்
கடல் மலை தோறும் திரிந்து கால் அலுத்தேன் பூரணமே

எத்தேச காலமும் நாம் இறவாது இருப்பம் என்று
உற்று உனைத்தான் பாராமல் உருவழிந்தேன் பூரணமே

எத்தனை தாய் தந்தை இவர்களிடத்தே இருந்து
பித்தனாய் யானும் பிறந்து இறந்தேன் பூரணமே

பெற்று அலுத்தார் தாயார் பிறந்து அலுத்தேன் யானும் உன்றன்
பொன்துணைத்தாள் தந்து புகல் அருள்வாய் பூரணமே

உற்றார் அழுது அலுத்தார் உறன்முறையார் சுட்டு அலுத்தார்
பெற்று அலுத்தால் தாயார் பிறந்து அலுத்தேன் பூரணமே

பிரமன் படைத்து அலுத்தான் பிறந்து இறந்து அலுத்தேன் நான்
உரமுடைய அக்கினி தான் உண்டு அலுத்தான் பூரணமே

என்னை அறியாமல் எனக்குள்ளே நீ இருக்க
உன்னை அறியாமல் உடல் இழந்தேன் பூரணமே

கருவாய் உருவாய்க் கலந்து உலகெலாம் நீயாய்
அருவாகி நின்றது அறிகிலேன் பூரணமே

செம்பொன் கமலத் திருவடியைப் போற்றாமல்
பம்பை கொட்ட ஆடும் பிசாசானேன் பூரணமே

எனக்குள்ளே நீ இருக்க உனக்குள்ளே நான் இருக்க
மனக்கவலை தீர வரம் அருள்வாய் பூரணமே

குலம் ஒன்றாய் நீ படைத்த குறியை அறியாமல்
மலபாண்டத்துள் இருந்து மயங்கினேன் பூரணமே

ஐந்து பொறியை அடக்கி உனைப் போற்றாமல்
நைந்துருகி நெஞ்சம் நடுங்கினேன் பூரணமே

என்னைத் திருக்கூத்தால் இப்படி நீ ஆட்டுவித்தாய்
உன்னை அறியாது உடல் அழிந்தேன் பூரணமே

நரம்பு தசை தோல் எலும்பு நாற்றத்துக்குள்ளிருந்து
வரம்பறிய மாட்டாமல் மயங்கினேன் பூரணமே

உள்ளும் புறம்புமாய் உடலுக்குள் நீயிருந்தது
எள்ளளவும் நான் அறியாது இருந்தேனே பூரணமே

தாயாகித் தந்தையாய்த் தமர் கிளைஞர் சுற்றம் எல்லாம்
நீயாகி நின்ற நிலை அறியேன் பூரணமே

விலங்கு புள் ஊர்வன அசரம் விண்ணவர் நீர்ச்சாதி
மனுக்குலங்கள் எழுவகையில் நின்ற குறிப்பறியேன் பூரணமே

ஆணாகிப் பெண்யாய் அலியாகி வேற்றுருவய்
மாணாகி நின்ற வகையறியேன் பூரணமே

வாலையாய்ப் பக்குவமாய் வளர்ந்து கிழம் தானாகி
பாலையாய் நின்ற பயன் அறியேன் பூரணமே

கொல்வாய் பிறப்பிப்பாய் கூட இருந்தே சுகிப்பாய்
செல்வாய் பிறர்க்குள் செயல் அறியேன் பூரணமே

ஒன்றாய் உயிராய் உடல்தோறும் நீ இருந்தும்
என்றும் அறியார்கள் ஏழைகள் தாம் பூரணமே

என்ன தான் கற்றால் என்?  எப்பொருள் பெற்றால் என்?
உன்னை அறியாதார் உய்வரோ? பூரணமே

கற்றறிவோம் என்பார் காணார்கள் உன்பதத்தை
பெற்று அறியார் தங்களுக்கு புறப்பு அறுமோ பூரணமே

வான் என்பார் அண்டம் என்பார் வாய்ஞானமே பேசித்
தான் என்பார் வீணர் தனை அறியார் பூரணமே

மூச்சு என்பார் உள்ளம் என்பார் மோனம் எனும் மோட்சம் என்பார்
பேச்சு என்பார் உன்னுடைய பேர் அறியார் பூரணமே

வாயார வாழ்த்தி மகிழ்ந்து உனைத்தான் போற்றாமல்
காயம் எடுத்துக் கலங்கினேன் பூரணமே

சந்திரனை மேகமது தான் மறைத்தவாரது போல்
பந்தமுற யானும் உனைப் பார்க்கிலேன் பூரணமே
நீர்மேல் குமிழி போல் நிலையற்ற காயம் இதைத்
தாரகம் என்று எண்ணி நான் தட்டழிந்தேன் பூரணமே

எள்ளுக்குள் எண்ணெய் போல எங்கும் நிறைந்திருந்து
உள்ளம் அறியாது உருகினேன் பூரணமே

பூசையுடன் புவன போகம் எனும் போக்கியத்தால்
ஆசையுற்றே நானும் அறிவிழந்தேன் பூரணமே

படைத்தும் அழித்திடுவாய் – பார்க்கில் பிரமா எழுத்தைத்
துடைத்துச் சிரஞ்சீவியாய்த் துலங்குவிப்பாய் பூரணமே

பாவபுண்ணியம் என்னும் பகுப்பாய்ப் படைத்து அழித்து இங்கு
ஆவலை உண்டாக்கி வைத்த அருள் அறியேன் பூரணமே

சாந்தம் என்றும் கோபம் என்றும் சாதி பேதங்கள் என்றும்
பந்தம் என்றும் புத்தி என்றும் படைத்தனையே பூரணமே

நானே நீ - நீயே நான் – நாம் இரண்டும் ஒன்றானால்
தேனில் ருசியது போல் தெவிட்டாய் நீ பூரணமே

கண்ணிழந்த பிறகு சூரிய வணக்கம் செய்ய நினைப்பது போல சாகும் தருவாயில் ஞானம் பிறக்கிறது.  பிறந்து என்ன பயன்.  சிறிது நேரத்தில் சாகப் போகிறோம்.


செத்த பின்னால் என்னென்ன நடக்கிறது.  கற்பனைக் கண் கொண்டு பார்க்கிறார் பட்டினத்தார். அன்றும் அது தான் நடந்தது.  இன்றும் அது தான் நடக்கிறது.  இது ஓர் உலக உண்மை.  உலக உண்மையை உணர்ந்தவர்கள் இப்படிக் கூறுவார்கள்-

“முன் தொடர்பில் செய்த முறைமையால் வந்த செல்வம்
இற்றை நாள் பெற்றோம் என்று எண்ணாது பாழ்மனமே
அற்றவர்க்கும் ஈயாமல் அரன் பூசை ஓராமல்
கற்றவர்க்கும் ஈயாமல் கண் மறைந்து விட்டனையே”

பொன்னும் பொருளும் உடன் வராது என்பதை கற்றறிந்த பெரியவர்கள் எல்லோரிடமும் கூறுவார்கள்.

“மாணிக்கம் முத்து வயிரப் பணி பூண்டு
ஆணிப்பொன் சிங்காதனத்தில் இருந்தாலும்
காணித்துடலை நமன் கட்டியே கைப்பிடித்தால்
காணிப்பொன் கூட வரக் காண்கிலமே நெஞ்சமே”

“கற்கட்டும் மோதிரம் நல்கடுக்கண் அரைஞாண் பூண்டு
திக்கு எட்டும் போற்றத் திசைக்கு ஒருத்தர் ஆனாலும்
பற்கிட்ட எமன் உயிர் பந்தாடும் வேளையிலே
கைச்சட்டம் கூடவரக் காண்கிலமே நெஞ்சமே”

“முன்னம் நீ செய்த தவம் முப்பாலும் சேரும் அன்றிப்
பொன்னும் பணிதிகழும் பூவையும் அங்கே வருமோ”

“உற்றார் ஆர்?  பெற்றார் ஆர்?  உடன்பிறப்பு ஆர்? பிள்ளைகள் ஆர்?
மற்றார் இருந்தால் என்?  மாளும் போது உதவுவரோ?”

“வீடிருக்க தாயிருக்க வேண்டும் மனையாள் இருக்க
பீடிருக்க ஊன் இருக்கப் பிள்ளைகளும் தாம் இருக்க
மாடிருக்கக் கன்றிருக்க வைத்த பொருளிருக்கக்
கூடிருக்க நீ போன கோலமென்ன கோலமே”

“காற்றைத் துருத்தி கடிய வினைக்கு உள்ளான
ஊற்றைச் சடலத்தை உண்டு என்று இறுமாந்து
பார்த்து இரங்கி அன்னம் பசித்தோருக்கு ஈயாமல்
ஆற்று வெள்ளம் போல அளாவினையே நெஞ்சமே”

“என் பெற்ற தாயாரும் என்னைப் பிணமென்று இகழ்ந்து விட்டார்
பொன் பெற்ற மாதரும் போம் என்று சொல்லிப் புலம்பி விட்டார்
கொன் பெற்ற மைந்தரும் பின்வலம் வந்து குடம் உடைத்தார்”
என்றும்

 அழகாகச் சொல்லுகிறார்.



“ஊரும் சதமல்ல – உற்றார் சதமல்ல – உற்றுப் பெற்ற
பேருஞ் சதமல்ல – பெண்டில் சதமல்ல – பிள்ளைகளுஞ்
சீரும் சதமல்ல – செல்வம் சதமல்ல – தேசத்திலே
யாரும் சதமல்ல”



என்று நிலையாமையை அழகாக எடுத்துக் கூறுவார் பட்டினத்தார்.

பிறப்புக்கும் இறப்புக்கும் இடைக்காலத்தில் ஆசையுடன் திரியும் மனிதன் என்ன செய்கிறான்?

“பொன்னை நினைந்து வெகுவாய்த் தேடுவார் – பூவை அன்னாள்
தன்னை நினைந்து வெகுவாய் உருகுவர்”

வாழ்க்கை உருண்டு ஓடும்.  விரைவில் மரணம் வரும்.  சங்கு ஊதுவது நிச்சம்.  சங்கிலே எத்தனை வகை?  அதையும் விளக்குகிறார் பட்டினத்தார்.

இறந்து போனபின் ஊதும் சங்குக்கு கூட ஒரு பாடல் உண்டு.  சங்குகளில் எத்தனை வகை.  அருமையான விளக்கம் இது.

முதற்சங்கம் அமுதூட்டும்
மொய்குழலார் ஆசை நடுச்சங்கம் நல்விலங்கு பூட்டும்
கடைச்சங்கம் ஆம்போது அது ஊதும்
அம்மட்டோ இம்மட்டோ நாம் வாழ்ந்த நலம்.
(முதல் சங்கு என்பது பால்புகட்டும் சங்கு,  இடைச்சங்கு என்பது திருமண நேரத்தில் வாத்தியத்தில் ஒன்றாய் அமைந்தது, கடைச்சங்கு என்பது இறந்த பின் ஊதப்படும் சங்கு)

இப்படி யெல்லாம் கூறியபின் நமக்கு அருமையான அறிவுரையைத் தருகிறார் பட்டினத்தார்.

“இருப்பது பொய்  போவது மெய் என்று எண்ணி நெஞ்சே
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே – பருத்த தொந்தி
நம்மதென்று நாம் இருப்ப – நாய் நரிகள் பேய் கழுகு
தம்மதென்று தாம் இருக்கும் தான்”

இந்த உலகத்திலே நாம் இருக்கப் போகிறோம் என்ற அகம்பாவத்தோடு திரிகிறோம்.  அது பொய்.  நாம் போவது – நாம் இறப்பது மெய்.  இதைத் தான் பட்டினத்தார் பாடல் நமக்குத் தெரிவிக்கிறது.  ஆனால் ஆத்மஞானம் வந்த பிறகு “இருப்பது மெய் போவது பொய்” என்பது நமக்குத் தெரிந்து விடும்.  இந்த உலகத்தில் அழியாமல் இருப்பவையே மெய்யானவை.  அழியப்போகின்றவை அத்தனையும் பொய்.  இந்த உடல் அழியும்.  நம் செல்வம் அழியும்.  உற்றார் அழிவர்.  உறவினர் அழிவர்.  நண்பர் அழிவர்.  நாம் பெற்ற  பட்டங்கள் அழியும்.  எனவே இவை எல்லாம் பொய்.  என்றும் இருப்பது நம் ஆத்மா.  ஆத்மா என்பது இறைவனின் ஒரு துளி.  அந்த துளி தான் ஒவ்வொரு உயிரிலும் பரவி உள்ளது.  மரமானாலும் – விலங்கானாலும் – மனிதன் ஆனாலும் எல்லாவற்றுக்கும் ஆன்மா உண்டு.  அது தான் அழியாதது.  கஷ்டநஷ்டங்களை இந்த உடல், மரம், விலங்குகள்  தாங்குகின்றன.  காரணம் அவைகளின் விருப்பங்கள்.  இரட்டைகளான இரவு-பகல், கஷ்டம்-நஷ்டம்,  இன்பம்-துன்பம்,  போன்றவற்றைக் கடந்தவன் இறைவன்.  ஆன்மா என்பதையும் இரட்டைகளைக் கடந்ததே.  எனவே பொய்யான இந்த உடல் மாள்வது திண்ணம்.

உடல் தீக்கிரையாவது திண்ணம்.  எனவே அதற்கு முன் நாம் செய்ய வேண்டியது என்ன?

“ஆவியொடு காயம் அழிந்தாலும் மேதினியில்
பாவியென்று நாமம் படையாதே – மேவிய சீர்
வித்தாரமும் கடம்பும் வேண்டா மடநெஞ்சே
செத்தாரைப் போலத் திரி”

“இன்னம் பிறக்க இசைவையோ நெஞ்சமே?
மன்னர் இவர் என்று இருந்து வாழ்ந்தாரை – முன்னம்
எரிந்த கட்டை மீதில் இணைக்கோவணத்தை
உரிந்து உருட்டிப் போட்டது கண்டு”

“நீர்க்குமிழி ஆம் உடலை நித்தியமாய் எண்ணுதே
ஆர்க்கும் உயர் ஆசை அழியேனே என்குதே
கண்ணுக்கு கண் எதிரே கட்டையில் வேகக் கண்டும்
எண்ணும் திரமாய் இருப்போம் என்று எண்ணுதே”

என்று புலம்பி,

“அன்ன விசாரம் அது அற்ற இடம் கிட்டாதோ?
சொர்ண விசாரம் தொலைந்த இடம் கிட்டாதோ?
உலக விசாரம் ஒழிந்த இடம் கிட்டாதோ?
செப்புதற்கும் எட்டா தெளிந்த இடம் கிட்டாதோ?”

என்று இறைவனிடம் வேண்டுகிறார் பட்டினத்தார்.

எல்லர்ம் கிட்டும்.  இறைவனின் திருவடியை உளமாற நினைந்து அல்லும் பகலும் அனவரதமும் அவனைத் துதித்து வந்தால் மீண்டும் கருவில் வந்து பிறவாத நிலை வரும்.  பிறவிப் பெருங்கடலை நாம் நீந்தி இறைவன் திருவடியை அடைந்து விடலாம்.  பிறப்பு-இறப்பு எனும் மாயச் சுழலில் சிக்காது கரையேறலாம். 

எனவே ஆசையே அனைத்து அல்லல்களுக்கும் காரணம் என்பதை அறிந்து பற்றற்ற வாழ்வை நாம் மேற்கொள்வோம்.