Saturday, January 22, 2011

tirupugal song no. 2

PRAISE YOUR MOTHER TONGUE - SPEAK IN MOTHER TONGUE - PRAY IN MOTHER TONGUE


அருணகிரிநாதரின்
திருப்புகழ் - பாடல் 2
பக்கரைவி சித்ரமணி
(விநாயகர் துதி)
தத்ததன தத்ததன தத்ததன தத்ததன      தத்ததன தத்ததன ...... தனதான   .
........ பாடல் .........  
பக்கரைவி சித்ரமணி பொற்கலணை யிட்டநடை      பட்சியெனு முக்ரதுர ...... கமுநீபப்  
பக்குவம லர்த்தொடையும் அக்குவடு பட்டொழிய      பட்டுருவ விட்டருள்கை ...... வடிவேலும்  
திக்கதும திக்கவரு குக்குடமும் ரட்சைதரு      சிற்றடியு முற்றியப ...... னிருதோளும்  
செய்ப்பதியும் வைத்துயர்தி ருப்புகழ்வி ருப்பமொடு      செப்பெனஎ னக்கருள்கை ...... மறவேனே  
இக்கவரை நற்கனிகள் சர்க்கரைப ருப்புடனெய்      எட்பொரிய வற்றுவரை ...... இளநீர்வண்  
டெச்சில்பய றப்பவகை பச்சரிசி பிட்டுவெள      ரிப்பழமி டிப்பல்வகை ...... தனிமூலம்  
மிக்கஅடி சிற்கடலை பட்சணமெ னக்கொளொரு      விக்கிநச மர்த்தனெனும் ...... அருளாழி  
வெற்பகுடி லச்சடில விற்பரம ரப்பரருள்      வித்தகம ருப்புடைய ...... பெருமாளே.  
......... சொல் விளக்கம் .........  
பக்கரை விசித்திர மணி பொன் க (ல்) லணை இட்ட நடை பட்சி எனும் உக்ர துரகமும் நீபப்  பக்குவ மலர்த் தொடையும்
அக் குவடு பட்டு ஒழிய பட்டு உருவ விட்டு அருள் கை வடி வேலும் 
திக்கு அது மதிக்க வரு குக்குடமும் ரட்சை தரும் சிற்று அடியும்
முற்றிய பன்னிரு தோளும் 
செய்ப்பதியும் வைத்து உயர் திருப்புகழ் விருப்பமொடு செப்பு என எனக்கு அருள்கை மறவேனே 
இக்கு அவரை நற்கனிகள் சர்க்கரை பருப்புடன் நெய் எள் பொரி அவல் துவரை இள நீர் வண்டு  எச்சில் பயறு அப்ப வகை பச்சரிசி பிட்டு வெளரிப்பழம் இடிப் பல்வகை தனி மூலம்  மிக்க அடிசில் கடலை பட்சணம் எனக் கொள் ஒரு விக்கிந சமர்த்தன் என்னும் அருள் ஆழி  வெற்ப
குடிலச் சடில வில் பரமர் அப்பர் அருள் வித்தக மருப்பு உடைய பெருமாளே. 


பக்கரை விசித்திர மணி பொன் க (ல்) லணை இட்ட நடை பட்சி எனும் உக்ர துரகமும் ...  அங்க அடி, அழகிய மணி, பொன்நிறமான சேணம் இவைகளுடன் மிகக் கம்பீரமாக நடக்கின்ற மயிலாகிய மிடுக்கான குதிரையையும் 

நீபப் பக்குவ மலர்த் தொடையும் ... கடம்ப மரத்தில் பூத்த சிறந்த மலைர்களால் தொடுக்கப்பட்ட மலர்மாலையையும்

அக் குவடு பட்டு ஒழிய பட்டு உருவ விட்டு அருள் கை வடி வேலும் ... அந்த கிரௌஞ்ச மலையே அழிந்துவிடும்படி அந்த மலையை ஊடுருவிச் செல்லும்படி விடப்பட்ட முருகன் கையில் உள்ள கூர்மையான வேலையும்

திக்கு அது மதிக்க வரு குக்குடமும் ... எண் திசைகளும் மதிக்கும்படி கொடியிலே எழுந்தருளியிருக்கும் சேவலையும் 

ரட்சை தரும் சிற்று அடியும் முற்றிய பன்னிரு தோளும் ... நம்மையெல்லாம் காத்து அருளும் சிறிய திருவடிகளையும், திரண்ட பன்னிரண்டு தோள்களையும் 

செய்ப்பதியும் வைத்து உயர் திருப்புகழ் விருப்பமொடு செப்பு என எனக்கு அருள்கை மறவேனே ... வயலூரையும் பாட்டிலே வைத்து திருப்புகழ் பாடிடுக என்று முருகன் கூறி அருள் புரிந்ததை நான் என்றும் மறக்க மாட்டேன். 

இக்கு அவரை நற்கனிகள் சர்க்கரை பருப்புடன் நெய் ... கரும்பு, அவரை, நல்ல பழங்கள், சர்க்கரை, பருப்பு, நெய் 

எள் பொரி அவல் துவரை இள நீர் வண்டு எச்சில் ... எள், பொரி, அவல், துவரை, இளநீர், தேன், 

பயறு அப்ப வகை பச்சரிசி பிட்டு வெளரிப்பழம் ... பயறு, அப்ப வகைகள், பச்சரிசி, பிட்டு, வெள்ளரிப்பழம், 

இடிப் பல்வகை தனி மூலம் மிக்க அடிசில் கடலை பட்சணம் எனக் கொள் ...பல வகையான மாவு வகைகள், ஒப்பற்ற கிழங்குகள், சிறந்த உணவு வகைகள், கடலை போன்றவற்றைப் பட்சணமாகக் கொள்ளும்  

ஒரு விக்கிந சமர்த்தன் என்னும் அருள் ஆழி வெற்ப ... ஒப்பற்ற, வினைகளைப் போக்க வல்லவர் என்று சொல்லப்படும் அருட் கடலே, கருணை மலையே,

குடிலச் சடில வில் பரமர் அப்பர் அருள் வித்தக ... வளைந்த சடையையும், பினாகம் எனப்படும் வில்லையும் கொண்ட இறைவன் சிவபெருமான் பெற்றருளிய வித்தகனே - சிறப்புடையவனே,

மருப்பு உடைய பெருமாளே. ... ஒற்றைக் கொம்பினை உடைய பெருமானே   

  * திருவண்ணாமலையில் 'முத்தைத்தரு' என்ற முதல் பாட்டைப் பாடிய பின்னர் அருணகிரிநாதரை வயலூர் என்ற 'செய்ப்பதி'க்கு முருகன் வரப்பணித்தார். அங்கு தமது மயிலையும், கடப்ப மாலையையும், வேலையும், சேவலையும், பன்னிரு தோள்களையும், திருவடிகளையும், வயலூரையும் வைத்துப் பாடல் பாடக் கூறினார். அந்த அபூர்வமான பாடல்தான் இது.  ** மேருமலையில் முன்னர் 'வியாசர்' விநாயகரிடம் தாம் பாரதத்தைச் சொல்லச் சொல்ல வேகமாக ஏட்டில் எழுதப் பணித்தார். எழுதுகோலாக தனது கொம்புகளின் ஒன்றை ஒடித்து விநாயகர் எழுதத் தொடங்கினார். எனவே அவருக்கு 'ஏகதந்தன்' (ஒற்றைக் கொம்பர்) என்ற பெயர் வந்தது. 
இன்று நாம் கற்றுக் கொண்டா புதிய சொற்கள்

துரகம் - குதிரை
நீபம் - கடம்பம்
தொடை - மலர்மாலை
குவடு - மலை
குக்குடம் - சேவல்
இக்கு - கரும்பு
கனிகள் - பழங்கள்
வண்டு எச்சில் - தேன்
ஆழி - கடல்
வெற்பு - மலை
மருப்பு - கொம்பு

No comments:

Post a Comment