Tuesday, November 9, 2010

YATCHAP PRASNA - MAHABARATHA STORY IN TAMIL

PRAISE YOUR MOTHER TONGUE - SPEAK IN MOTHER TONGUE - PRAY IN MOTHER TONGUE


தாத்தா:  விசயன் பாசுபதக் கணையை பெற்ற விபரத்தையும் வரம் பல பெற்ற அரக்கர்கள் பலரை - தனி ஒருவனாக நின்று விசயன் வெற்றி பெற்ற விவரத்தையும் உரோமச முனிவர் மூலம் கேட்ட தருமர் மிக்க உவகை கொண்டார்.  தம்பியுடையான் படைக்கு அஞ்சான் என்று மகிழ்ச்சி கொண்டார்.  பின்னர் காமியம் என்னும் மலையில் தங்கியிருந்த தருமர் உரோமச முனிவர் வழிகாட்டுத-ன்படி காந்தர்ப்பமலைச் சாரலை அடைந்தார்.  இமய மலையில் நதிகளைப் பற்றிக் கேட்க வேண்டுமா?  போகும் வழியில் எல்லாம் நதிகள்.  தருமர் எல்லாவற்றிலும் நீராடினார்.  இங்கு தான் விசயன் தவம் இயற்றினான் என்று கூறியவுடன் உளமகிழ்ந்து விசயனைக் கண்டது போல கூத்தாடினார்.  பின்னர் தசாங்கன் என்னும் முனிவர் தவம் புரியும் தபோவனத்தை அடைந்தார்.  விசயன் வானுலகி-ருந்து இறங்கப் போகும் இடம் இது தான் என்பதை அறிந்து கொண்டார் தருமர்.  இது தான் சிவபெருமான் வதியும் இடம் என்பதையும் அறிந்தார். "'இந்த வனம்தனக்கு எமை ஆள் உடையான் குன்றம் ஈர்-ஐம்பது யோசனை '' என்றும் " கந்தன் என எக் கலையும் வல்ல ஞானக் கடவுள் முனி விசாலயன் ஆலயமும்'' முருகனின் இருப்பிடத்தையும் கண்டார் தருமர்.  உரோமச முனிவர் இந்தக் காட்டில் ஓர் ஆண்டு இருக்கும்படி வேண்டினார்.  அப்படி அங்கு தங்கி இருக்கும் போது பொற்றாமரை மலர் ஒன்று திரௌபதியின் முன் வீழ்ந்தது.  அதைப்பார்த்து அதன் அழகில் சிந்தனையைப் பறிகொடுத்தாள் பாஞ்சா-.  அதை வீமனுக்குக் காட்டி இப்படிப்பட்ட மலர் ஒன்று தனக்கு வேண்டும் என்றும் சொன்னாள்.  இந்த மலர் குறித்து உரோமச முனிவரிடம் வீமன் தகவலைக் கேட்டான். அது இயக்கர்பதியான குபேரனின் தோட்டத்தில் உள்ளது என அந்த முனிவர் சொன்னார்.
சூர்யா:  அது என்ன பூ தாத்தா? குஷ்பூவா?
தாத்தா: வடமொழியில் குஷ்பூ என்றால் வாசனை மிக்க பூ என்று பொருள்.  அப்படிப்பட்ட அருமையான பூ தான் இது.  இதற்கு ஒரு கதை உள்ளது.  சொல்கிறேன்.  ஒரு தடவை கண்ணன் நரகாசுரனை அழித்த போது நரகாசுரனால் கவரப்பட்டட இந்திரனின் தாயான அதிதி தேவியின் குண்டலங்களைக் கண்டார்.  அதை இந்திரனிடம் கொடுக்கக் கருதி கண்ண பெருமான் கருடனின் மீது அமர்ந்து அமராவதிக்கு சத்தியபாமையுடன் சென்றார்.  இந்திராணி சகல உபசாரங்களைச் செய்த போதும் அவள் சூட்டியிருந்த அருமையான பூ போல தனக்குப் பூ ஒன்று தரவில்லையே என்று சத்தியபாமைக்கு ஒரே ஏக்கம்.  இந்திராணி சூடியிருந்தது பாரிசாதப்பூ.  இப்படிப்பட்ட பூவைத் தான் துவாரகைக்குக் கொண்டு போய் ஆகவேண்டும் என்று சத்தியபாமை விருப்பப்பட்டாள்.  உடனே கண்ணன் அங்கிருந்த பாரிசாதத் தருவை அப்படியே வேரோடு பிடுங்கினார்.  கருடன் மேல் அமர்ந்து புறப்பட்டார்.  இந்திராணி வெகுண்டு இந்திரனை உசுப்பிவிட்டாள்.  உடனே இந்திரன் அத்தனை தேவர்களுடனும் வந்து கண்ணனைத் தடுத்து போர் புரிந்தான்.  விடுவாரா கண்ணன்?  சங்கை எடுத்தார்.  ஊதினார் அவரது சங்கை.  அந்த ஒ-யில் அரண்டு தோற்றனர் அனைத்துத் தேவர்களும்.  அந்த பாரிசாதப் பூ அவ்வளவு சாமானியமாக யாரிடமும் கிடைக்காது என்று கூறினார் முனிவர்.  கதையை முனிவர் மூலம் கேட்ட வீமன் கண்ணனைப் போல் தானும் கொண்டுவர எண்ணி அளகை நகர் நோக்கிப் புறப்பட்டான்.  அளகை மன்னன் தான் வடதிசைக் காவலன்.  வழியில் காஞ்சன வனம்.  அதைக் கடந்தான் வீமன். பின்னர் ஒரு கத- வனம்.  அங்கிருந்த காவலர் எதிர்த்தனர்.  வீமன் சிங்கநாதம் செய்தான்.  அந்த காவலன் ஆவி பிறிந்தது.  அந்தப் பகுதியில் தான் அனுமன் இராமநாமம் சொல்-க் கொண்டு தவமிருந்தான்.  அவன் இந்த ஓசையைக் கேட்டான்.  வீமன் செல்லும் வழியில் அனுமன் போய் அமர்ந்தான்.  அங்கு போன வீமன் அனுமனைப் பார்த்து "யார் நீ'' என்று கேட்டான்.  அவரும் திருப்பி இதே கேள்வியைக் கேட்டார்.  வீமன் ஒரு குரங்குக்குப் போய் பதில் சொல்வதா என்று அனுமனின் வாலைக் கடந்து செல்ல எண்ணினான். அவன் எண்ணம் அனுமனுக்குப் புரிந்தது.  முடிந்தால் என் வாலைத் தாண்டிப் போயேன் என்று கூறினார்." வல்லையேல் என் வாலைக் கடந்து போ' என அனுமன் கூற,'அனுமன் வால் அன்றி, ஒரு குரங்கின் வாலைக் கடப்பது அரிதோ?'' என்றான் வீமன்.  ஒரு மனிதனைச் சுமந்து சென்று அவனுக்கு ஏவல் புரிந்தவன் தானே அனுமன் என்று அனுமன் தன்மைத் தானே தாழ்த்திச் சொன்னான்.  கோபம் வந்தது வீமனுக்கு.  "ஏய் குரங்கே - அனுமாரின் அருமை பெருமை உனக்குத் தெரியுமா?'' என்று கூறி அனுமனின் கதையைக் கூறி அப்படிப்பட்ட அனுமனின் தம்பி நான்.  நானும் வாயு குமாரன் அவரும் வாயு குமாரன் என்று தங்களுக்குள்ள உறவைக் கூறினான் வீமன்.  இவ்வாறு கூறியவுடன் அனுமன் தன்னைப் பற்றிய உண்மையை வெளியிட்டார்.  உடனே வீமன் அவரது திருவடிகளில் வீழ்ந்து வணங்கி தன்னைப் பொறுத்துக் கொள்ளும்படி வேண்டினான்.  அவனது வரவின் காரணத்தை அறிந்த அனுமன்,"கூறும் வாசகம் பொய்ப்பவர், கூர் தவம் முயலும்  பேறு இலாதவர், பேர் அருள் இலாதவர், பிறிதும்  ஆறு இலாதவர் தமக்கும்,-அங்கு அணுகுதல் '' அரிது என்பதை விளக்கி வீமனுக்கு அதை அடைய அனைத்துத் தகுதியும் உள்ளது என்று கூறினார்.  வில்-யாரின் சொல்-லே இதைக் கேட்க வேண்டும்."அறிவும், வாய்மையும், தூய்மையும், அன்பும், இன் அருளும்,  பொறையும், ஞானமும், கல்வியும், புரி பெருந் தவமும்,  நெறியும், மானமும், வீரமும், நின்ன; ஆதலினால்  பெற, உனக்கு அரிது ஆயது ஏது?''' .   "உனக்குக் கிடைக்கும் போ.  வெற்றியுடன் திரும்பிவா'' என அனுமன் வாழ்த்தினார்.'வேண்டும் வரம் கேள்' என்ற அனுமனிடம், 'பாரதப்போரில் விசயனது தேர்க் கொடியில் நீர் உவந்து ஆடவேண்டும்' என வீமன் வேண்டினார்.  வரமளித்தார் அனுமார். பின்னர் அனுமன் இலங்கையில் எடுத்த பெருஉருவைக் காட்டும்படி வீமன் வேண்ட அனுமார் பெருஉரு எடுத்தார்.  வீமனால் காண முடியவில்லை.  வடிவைச் சுருக்கிக்கொள்ளும்படி வேண்டினான் வீமன்." அந்தர வானும் அகண்டமும் ஒன்றா உந்திய மேனி ஒடுக்கினன் அம்மா! '' என்பார் வில்-யார்.  பின்னர் வீமனிடம் வழியைக் கேட்டுக் கொண்டு புறப்பாட்டான் வீமன்.  பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சக்கரமலை கடந்தான்.  திவாகர மலை கடந்தான்.  அப்போது புண்டரீகன் என்னும் அரக்கன் வந்து வீமனை எதிர்த்தான். அப்போது வானொ- ஒன்று வந்தது. " தோள்மிசை தோமரம் ஏவி, கொன்றிடுவாய், வாயு குமாரா!'' என்றது அசரீரி.
சூர்யா:  அசரீரி என்றால் என்ன தாத்தா?
தாத்தா: சரீரம் என்றால் உடல்.  சரீரம் இல்லாதது அசரீரி.  உடல் தெரியாது.  ஆனால் குரல் கேட்கும்.  இதைத் தான் நான் வானொ- என்று கூறினேன்.  சரியா? வானொ- கூறியவாறு அவன் தோள் மீது தன் கதையால் அடித்தான் வீமன்.  அரக்கன் மாண்டான்.  பின்னர் அளகாபுரியை அடைந்தான்.  ஆயிரக்கணக்கான அரக்கர் சூழ்ந்தனர் வீமனை.  வீமன் அனைவரையும் அடித்துத் துவைத்தான்.  காவலாளிகள் ஓடினார்கள் குபேரனிடம்.  குபேரன் தன் தளபதி சங்கோடனை அழைத்து கட்டி இழுத்துவரும்படி ஆணையிட்டான்.  சங்கோடணன் சேனைகளுடன் வந்து தோற்றான்.  பின்னர் சங்கோடணன் குபேரனிடம் சென்று சமாதானம் செய்து கொள்ளும்படி கூறினான்.  வீமனின் விருப்பத்தை அறிய குபேரன் தன் மகன் உருத்திரசேனனை அனுப்பி வைத்தான்.  குபேரனின் மகன் வீமனுடன் பேசி வீமனின் வருகைக் காரணத்தை அறிந்து கொண்டு வீமனிடம் பூவினைக் கொடுத்து வெகுமதிகளோடு அனுப்பினான்.  இதற்குள் தருமர் வீமனைக் காணாமல் தவித்தார்.  அப்போது திரௌபதி பூ பற்றிய விபரத்தைக் கூறி அதைக் கொண்டுவர வீமன் போயிருக்கிறார் என்றும் கூறினாள்.  ஆபத்து நிறைந்த இடத்திற்கு தனியாகப் போய்விட்டானே வீமன் என்று வருந்தினார் தருமர்.  உடனே வீமனின் மகன் கடோற்கசனை மனதால் எண்ணினார். எண்ணிய மறுகணம் வந்து நின்றான் கடோற்கசன்.  விபரத்தைக் கூறியவுடன் தன் தோளில் அமரும்படி தருமரிடம் கூறி கடோற்கசன் புறப்பட்டான் வடதிசை நோக்கி.  நாலு நாழிகைக்குள் கடோற்கசன் வீமன் இருந்த இடத்தை அடைந்தான்.  வீமன் உடனே தருமரின் அடிகளில் வீழ்ந்து வணங்கி தான் பூ கொண்டு வந்த விபரத்தைக் கூறினான்.  மிகவும் சினந்தார் தருமார்.  பின்னர் சினம் தணிந்தபின் தம்பியர் இருக்கும் இடம் வந்தனர்.  கடோற்கசனுக்கு விடை கொடுத்து அனுப்பினர்.  உரோமச முனிவரிடம் தான் சென்று வந்த விபரத்தை வீமன் கூறினான்.  அவரும் மகிழ்ந்தார்.  பின்னர் அந்தப் பூவை தீயில் வந்த பூவையான திரௌபதியிடம் தந்தான் வீமன்.  பாஞ்சா-யும் மிக்க மகிழ்ச்சி கொண்டாள்.  மீதிக் கதையை நாளை கூறுகிறேன் சூர்யா.

தாத்தா: இன்று சடாசுரன் மரணமடைந்த கதையைச் சொல்கிறேன்.  காட்டில் தவம் புரிந்த முடினவர்கள் ஒரு நாள் தருமரைச் சந்தித்து அந்த கானகத்தில் சடாசுரன் என்று ஒரு கொடிய அரக்கன் உள்ளதாகவும் அவன் முனிவர்களின் தவத்தைக் குலைப்பதாகவும் இடையூறுகளையும் இன்னல்களையும் விளைவிப்பதாகவும் முறையிட்டனர்.  அவர்கள் குறையைத் தீர்த்து வைக்கும்படி தருமர் வீமனுக்குக் கட்டளையிட்டார்.  காட்டில் இருந்தாலும் அவர் ஒர் அரசர் தானே.  வீமன் முனிவர்களுடன் சென்றான். அவரது கடமை மக்களைக் காப்பது தானே.  வீமன் சென்றபிறகு  வஞ்சனை எண்ணம் கொண்ட சடாசுரன் அங்கு தோன்றி திரௌபதியைத் தூக்கிக்கொண்டு வானத்தில் பறந்தான்.  திகைத்தார் தருமர்.  ஆனால் நகுல சகாதேவர்கள் உடனே வில்லை எடுத்தனர்.  கணையைத் தொடுத்தனர்.  அரக்கனைத் தொடர்ந்தனர்.  இவர்கள் கணையின் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் அந்த அரக்கன் நகுலசகாதேவருடன் போர் புரிய ஆயத்தமானான்.  அப்போது அங்கு வீமனும் வந்து சேர்ந்தான்.  அவன் அந்த அரக்கனுடன் அடர்த்தான்.  அழன்ற அசுரன் திரௌபதியை விடுத்தான்.  வீமனுடன் பொருதினான்.  வீமன் அரக்கனுடன் பொருது அவனை அழித்தான்.  அதை இந்த காவியத்தில் வரும் பாடல் மிக அழகாக எடுத்துச் சொல்லும்.  " அரக்கனை அகலத்து அமுக்கியிட்டு, அவன்தன் அவயவம் யாவையும் ஒன்றாச் சுருக்கி, அந்தரத்தில் சுழற்றினன், எறிந்தான்-தொடு கழல் இராகவன் தம்பி குரக்கு நாயகன்முன் விரலினால் தெறித்த குன்று எனச் சிந்தி வீழ்ந்திடவே.'' .  பின்னர் திரௌபதியையும் தம்பியரையும் அழைத்துக் கொண்டு வீமன் தருமர் இருந்த இடத்திற்கு வந்து சேர்ந்தான்.  பின்னர் அனைவரும் சேர்ந்து பதரிகாச்சிரமத்தை அடைகிறார்கள்.  அங்கு எண்கோண முனிவர் ஒருவரைக் கண்டு அவன் தாளிணையில் பணிந்து தொழுகிறார்கள்.
சூர்யா: எண்கோண முனிவர் என்றால் யார் தாத்தா?
தாத்தா: அது தனிக் கதை.  பின்னால் சொல்கிறான்.  இப்போதைக்கு வடமொழியில் இவரை அட்டகோண மகா முனிவர் என்று அழைப்பார்கள் என்பதையும் இவர் திருமா-ன் அவதாரங்களில் ஒருவர் என்பதையும் தெரிந்து கொள்.  ஒவ்வொரு பிரம கற்பத்துக்கு ஒவ்வொரு உறுப்புக் கொணல் நிமிருமாறு நீண்ட வாழ்நாள் உடையவர் இவர்.  இதற்குள் விசயனும் விண்ணி-ருந்து வந்து சேருகிறான்.  அத்தினாபுரியில் இருந்த நூற்றுவர் தலைவனுக்கு பாண்டவர்களை எப்படியும் காட்டிலேயே ஒழித்து விட வேண்டும் என்ற எண்ணம்.  தொடர்ந்து தோல்வி தான்.  அசுரர்களை அனுப்பினாலும் பீமன் கொல்கிறான்.  என்ன செய்வது என்று தெரியவில்லை.  இப்போது கன்னன் மற்றும் மாமன் சகுனியுடன் ஆலோசனை நடத்துகிறான்.  அப்போது சகுனி ஒரு யாகம் செய்து ஒரு பூதத்தை அனுப்பினால் அது உறுதியாக ஐவரையும் கொல்லும் என்றும் ஆனால் அந்த யாகத்தைச் செய்ய காளமாமுனி என்பவரால் தான் முடியும் என்றும் சொல்கிறான்.  உடனே துரியோதனன் ஒரு முனிவரை அனுப்பி காளமாமுனிவரை அழைத்துவரச் சொல்கிறான்.  அவர் வந்தவுடன் அவருடைய தாளிணையில் பணிந்து வணங்குகிறான்.  அவர் தன்னை அழைத்த காரணத்தை வினவுகிறார்.  உடனே பாண்டவர்கள் அழிய வேள்வி ஒன்று நடத்தி பூதத்தை அனுப்ப வேண்டும் என வேண்டுகிறார்.  காளமாமுனிவர், " ஐவருடன் கண்ணன் உள்ளான்.  நான் என்ன முயற்சி செய்தாலும் அவன் காப்பாற்றுவான்.  எனவே உங்கள் முயற்சி ப-க்காது.  மாயக் கண்ணன் உங்களை மட்டுமல்ல - நான் அனுப்பும் பூதத்தையும் ஏமாற்றுவான்.  பூதம் போகும் போது அவர்கள் காணவில்லை என்றால் - இறந்து பட்டார்கள் என்றால் அதன் பசிக்கு அது என்னை வந்து உண்ணும்.  எனவே நன்றாக யோசனை செய்யுங்கள். உங்கள் முடிவை மாற்றுங்கள்'' என்று அறிவுறுத்தினார்.  ஆனால் கெடுவான் கேடு நினைப்பான் அல்லவா.  இவர்கள் முடிவை மாற்றிக் கொள்ளவில்லை.  எனவே முனிவர் வேள்வியைத் தொடங்கினார்.
சூர்யா: என்னங்க தாத்தா? ஐவரும் ப- தானா?
தாத்தா: கதையைக் கேளு.  இந்த பூதத்தைத் திசை திருப்ப அறக்கடவுள் திருவுளம் கொண்டார்.  அறக்கடவுள் ஒரு அந்தணச் சிறுவன் வடிவம் எடுத்து வந்து தன் அரணைக் கட்டையை ஒரு மான் எடுத்துக் கொண்டு ஓடுவதாகவும் உடனே மீட்டுத் தரும்படியும் வேண்டினான் அந்தணச் சிறுவன்.  மாயமானைத் தொடர்ந்தனர் ஐவரும்.  ஓடியது - ஓடியது - ஓடிக்கொண்டே இருந்தது.  வீமனின் கதைக்கோ விசயனின் கணைக்கோ அது இலக்காகவில்லை.  இறுதியில் தருமர் அது ஒரு மாய மான் என்பதைப் புரிந்து கொண்டார்..  அறக்கடவுள் ஒரு நச்சுப்பொய்கை உருவம் கொண்டு அமர்ந்தார். அவர் எண்ணத்தின்படி ஐவரும் இருந்த காட்டில் திடீர் என குடிநீர் இல்லாமல் போனது.  ஐவருக்கும் கடுமையான தாகம் உண்டானது.  உடனே தருமர் சகாதேவனை நோக்கி மரத்தில் ஏறி எங்காவது தண்ணீர் உள்ளதா என்று நோக்கும்படி ஆணையிட்டார்.  சகோதேவனும் மரமேறி பத்து திசையிலும் பார்த்தான்.  தூரத்தில் ஒரு குளம் இருப்பதைக் கண்டான்.  அண்ணனிடம் கூறினான்.  சென்று அனைவருக்கும் நீர் கொண்டுவரும்படி ஆணையிட்டார் தருமர்.  குளத்தருகே சென்றான் சகாதேவன்.  ஒரு மாயக்குரல் தடுத்து நிறுத்தியது.  "நான் கேட்கும் கேள்விக்குப் பதில் கூறி பின் நீர் அருந்து.  இல்லையேல் மரணமடைவாய்.  இது உறுதி'' என்றது.  கேட்கவில்லை சகாதேவன்  தாகம் அந்த அளவுக்கு அவனுக்கு இருந்தது.  அவசரப்பட்டு நீர் அருந்தினான்.  மாண்டான் உடனே.  சென்றவன் திரும்பவரவில்லை என்பதால் நகுலனை அனுப்பினார் தருமர்.  அவனும் வந்தான். மாண்டான்.  பின்னர் விசயனை அனுப்பினார் தருமர்.  விசயன் வந்தவுடன் மாயக்குரல் எச்சரிக்கை செய்தது.  வெகுண்டான் விசயன்.  குரல் வந்தால் கணை விட்டு மாய்க்கும் வித்தை அறிந்தவன் விசயன்.  எனவே கணை தொடுத்தான்.  வானெங்கும் கணைகள் பறந்தன.  கணைப்பந்தல் அமைத்தான்.  பின்னர் நீர் அருந்தினான்.  விசயனும் மாண்டான்.  எல்லோரும் தாமதம் செய்கிறார்கள் என்று கருதி தானே செல்லத் துணிந்தார் தருமர்.   தடுத்து நிறுத்தினான் வீமன்.  நான் சென்று வருகிறறேன் என்று கூறி புறப்பட்டுச் சென்றான்.  மூவரும் வீழ்ந்து கிடந்தது கண்டான்.  இவனையும் எச்சரித்தது மாயக்குரல்.  சரி இதில் ஏதோ மர்மம் உள்ளது என்பதைப் புரிந்து கொண்டான்.  உடனே நடந்ததை அங்கே மண-ல் எழுதினான்.  பின்னர் நீர் அருந்தினான். மாண்டான் வீமன்.  போன வீமனும் வரவில்லையே.  ஏதோ நடந்திருக்கிறது.  விசயனும் வீமனும் சென்று ஒரு காரியம் நடக்கவில்லை என்றால் ஏதோ விபரீதம் உள்ளது என்று உள்ளுணர்வு கூறியது தருமருக்கு.  அவர் சிறிது தூரம் நடந்தார்.  தாகத்தால் மயக்கம் வந்தது.  அவரும் விழுந்தார்.  இந்த நேரம் நூற்றுவர் வேள்வி நடத்தி அதி-ருந்து வந்த பூதம் அங்கு வந்து சேர்ந்தது. .  நால்வரும் நச்சுப் பொய்கைக் கரையில் மாண்டு கிடப்பதைக் கண்டது.  இறந்து விட்டார்கள் என்பதை உறுதி செய்து கொண்டது.  சிறிது தூரத்தில் தருமரும் கிடந்தார்.  எனவே அவரும் இறந்து விட்டார் என்று நினைத்தது. எல்லோரும் தான் வரும் முன்னரே மாண்டு விட்டனர் என்று அது கருதியது.  சினமடைந்தது அந்தப் பூதம்.  உடனே திரும்பிச் சென்றது.  வேள்வி நடத்திய காளமாமுனியைத் தின்று தன் பசியை  ஆற்றிக் கொண்டது.  பூதம் திரும்பிச் சென்ற சிறிது நேரத்தில் தருமர் மயக்கம் தெளிந்தார்.  குளக்கரைக்கு வந்தார் தருமர்.  எல்லோரும் மாண்டு கிடப்பதைப் பார்த்தார்.  துக்கம் தொண்டையை அடைத்தது.  அரக்கர்களை - தேவர்களை வென்ற விசயனும் வீமனும் மாண்டார்களே - இனி நமக்கு விடிவுகாலம் இல்லை என்பதை உணர்ந்தார்.  ஏதோ அபூர்வ சக்தி ஒன்று தான் இந்த நிகழ்ச்சிக்குக் காரணம் என்பதைப் புரிந்து கொண்டார்.  தாகம் காரணமாக குளக்கரைக்குச் சென்றார்.  மாயக்குரல் இப்போதும் தடுத்தது.  யார் நீ என்று தருமர் கேட்க.  இந்தக் குளத்தைக் காவல் காக்கும் கொக்கு நான் என்றது அந்தக் குரல்.  கேள்வியைக் கேள் என்றார் தருமர்.  அறக்கடவுள் கேள்வியைக் கேட்டார்.  தருமர் பதில் கூறினார்.
சூர்யா: கேள்விகள் என்ன?  பதில் என்ன?
தாத்தா: இந்தப் பகுதியில் வில்-பாரதத்தில் வரும் கேள்விகளையும் - வியாசபாரதத்தில் வரும் யட்சப்பிரச்னா என்ற பகுதியில் உள்ள சில கேள்வி பதில்களையும் சொல்கிறேன்.  இவை எல்லாம் வேதத்தின் கருத்துகள்.  நாம் புரிந்து கொள்ள வேண்டிய உண்மைகள்.  அதனால் தான் மகாபாரதத்தையும் வேதமாக மதிக்கிறார்கள்.  மகாபாரதத்தில் இப்படி பல வேதக் கருத்துகள் உள்ளன.  வீடுமர் கூறுபவை - கண்ணன் உரை எல்லாம் வேதத்திற்குப் பொருள் சொல்வது போல் அமைந்தவை.  நன்றாகக் கேள் சூர்யா.
கேள்வி: சாத்திரங்களில் பெரியது எது?
தருமர்: அரிய மெய்ச் சுருதி.  மெய்ம்மைப் பொருளை நமக்கு உணர்த்தும் வேதமே சாத்திரங்களில் சிறந்தது.
கேள்வி: இல்லறத்திற்கு இன்றியமையாதது எது?
தருமர்: நற்குணங்கள் நிரம்பிய மனைவியே இல்லறத்திற்கு இன்றியமையாதவள்.
கேள்வி: சிறந்த பெரிய தவம் எது?
தருமர்: தம் குலத்திற்குரிய நல்லொழுக்கத்தைக் கடைப்பிடிப்பதே பெரிய தவம் ஆகும்.
கேள்வி: உலகப் பற்றைத் துறந்த முனிவர் குலம் தொழும் இறைவன் யார்?
தருமர்: துழாய் மாலை அணிந்த முகுந்தனே முனிவர் குலம் போற்றும் இறைவன்.
கேள்வி: மகளிருக்கு இருக்க வேண்டிய இன்றியமையாத குணம் என்ன?
தருமர்: நாணம் தான் இன்றியமையாத குணம்.
கேள்வி: செல்வம் மிக்கவருக்குப் பாதுகாவல் எது?
தருமர்: ஈகை தான் பாதுகாவல். தகுதி பொருந்திய தானமே பாதுகாவல்.
கேள்வி: செவிக்கு இனிமையைத் தரும் சொல் எது?
தருமர்: குழந்தைகளின் மழலைச் சொல்.
கேள்வி: நிலைத்து நிற்பது எது?
தருமர்: நீடு இசை என்னும் புகழ் தான் நிலைத்து நிற்கும்
கேள்வி: எதைக் கற்றுக் கொள்ள வேண்டும்?
தருமர்: கசடறக் கற்பதே கல்வி.  எது கற்றாலும் கசடறக் கற்க வேண்டும்.
கேள்வி: அற்பம் - சிறுமை என்பது எது?
தருமர்: ஏற்பது இகழ்ச்சி.  பிறரிடமிருந்து பெற்றுக் கொண்டால் அது தான் அற்பம். சிறுமை.
கேள்வி: பூமியை விட பொறுப்பவர் உண்டோ?
தருமர்: தாய் பூமியை விட மேலானவள்.  தன்னை வெறுக்கும் மகனையும் விரும்புவாள்.
கேள்வி: சுவர்க்கத்தை விட மேலானது எது?
தருமர்: தந்தை என்பவர் சுவர்க்கத்தை விட மேலானவர்.
கேள்வி: காற்றை விட வேகமானது எது?
தருமர்: மனம் காற்றை விட வேகமானது.
கேள்வி: புல்லை விட அளவற்றது எது?
தருமர்: நமது எண்ணங்கள் உலகத்தில் உள்ள புற்களை விட அளவற்றவை.
கேள்வி: அறிவு என்பது எது?
தருமர்: இறைவனைப் பற்றி அறிவதே உண்மையான அறிவு.
கேள்வி: அமைதி எப்போது வரும்?
தருமர்: மனம் திருப்தி அடைந்தால் அமைதி தானாகவே வரும்.
கேள்வி: ஐயம் என்பது என்ன&
தருமர்: ஒன்றை மற்றொன்றாகக் கற்பனை செய்வதே ஐயம்.
கேள்வி: சூரியனை உதிக்கச் செய்வது யார்?
தருமர்: பிரம்மா
கேள்வி: சூரியனை மறையச் செய்வது யார்?
தருமர்: தருமதேவதை மறைக்கச் செய்கிறது.
கேள்வி: சூரியனுடன் யார் உள்ளார்கள்?
தருமர்: கடவுள்
கேள்வி: பிராமணனுக்குச் சிறப்பு எப்படிக் கிடைக்கிறது?
தருமர்: அவன் கற்கும் வேதமும் அவனது இறை நம்பிக்கையுமே அவனுக்குச் சிறப்பை உண்டாக்குகின்றன.
கேள்வி: சத்திரியனுக்கு சிறப்பு என்ன&
தருமர்: ஆயுதங்கள் மற்றும் ஆயுதப் பயிற்சியில் சிறப்பு பெற்றிருந்தால் சத்திரியனுக்குப் பெருமை.  வேள்விகள் நடத்த வேண்டும் அவன்.  அதன் மூலம் சிறப்பு பெறலாம்.  குடிகளைக் காக்க வேண்டும்.  அடைக்கலம் என்று வந்தவர்களைப் பாதுகாக்க வேண்டும்.
கேள்வி: உழவுக்கு இன்றையமையாதவை எவை?
தருமர்: நிலம் - மழை.
கேள்வி: உறக்கத்திலும் கண் மூடாதது எது?
தருமர்: மீன்.
கேள்வி: புவியில் பிறந்த பின்னும் அசையாதது எது?
தருமர்: முட்டை
கேள்வி: இதயமில்லாதது எது?
தருமர்: கல்லுக்கு இதயமில்லை
கேள்வி: நாட்டை விட்டு வெளியேறுபவனுக்குத் துணை யார்?
தருமர்: நண்பர்கள்.
கேள்வி: வீட்டில் துணை யார்?
தருமர்: இûணாக உள்ள மனைவி
கேள்வி: நோயுள்ளவனுக்குத் துணை யார்?
தருமர்: மருத்துவர்
கேள்வி: மனிதனுக்கு மரணத் தருவாயில் துணை எது?
தருமன்: அவன் செய்த தான தருமம் அவனுக்குத் துணை.
கேள்வி: எல்லா உயிரினங்களுக்கும் விருந்தினன் யார்?
தருமர்: நெருப்பு
கேள்வி: மீண்டும் மீண்டும் பிறப்பது எது?
தருமர்: சந்திரன்
கேள்வி: குளிரைப் போக்குவது எது?
தருமர்: வெப்பம்
கேள்வி: மானுடனின் உற்ற துணை யார்?
தருமர்: அவனது மனைவி.
கேள்வி: போற்றத் தக்கது எது?
தருமர்:  திறமை போற்றப்பட வேண்டும்
கேள்வி: அடைய வேண்டியது என்ன?
தருமர்: அறிவு
கேள்வி: சிறந்த செல்வம் எது?
தருமர்: நோயற்ற வாழ்வு சிறந்த செல்வம்
கேள்வி: வாழ்க்கை எப்போது மகிழ்ச்சியாக இருக்கும்?
தருமர்: தற்பெருமை இல்லாமல் இருத்தல் - அழுக்காறு அவா அகற்றுதல் - வெகுளியை நீக்குதல் - பிறரை இகழாமை இவையெல்லாம் இருந்தால் வாழ்க்கை என்றும் மகிழ்ச்சியாக இருக்கும்
கேள்வி: உலகைச் சூழ்ந்திருப்பது எது?
தருமர்: இருள்
கேள்வி: ஒரு பொருளை அறிய விடாமல் தடுப்பது எது?
தருமர்: புற இருளும் அக இருளும் ஒரு பொருடை அறிய அனுமதிக்காது
கேள்வி: நண்பர்களை எப்போது இழக்கிறோம்?
தருமர்: பேராசை நம்மை ஆட்கொள்ளும் போது நண்பனை இழக்கிறோம்
கேள்வி: சொர்க்கத்துக்குப் போவதை எது தடை செய்கிறது?
தருமர்: இந்த உலகத்தின் மீது உள்ள பற்று.  இந்த உலகத்தில் உள்ள பொருட்களின் மீது உள்ள பற்று.
கேள்வி: இறந்ததாக எதைக் கருதலாம்?
தருமர்: பணம் இல்லையேல் ஒரு மனிதன் பிணம். அரசன் இல்லாத அரசு இறந்து விட்டதாகக் கருதலாம். கற்றறியாத பூசாரியால் நடத்தப்படும் இறைத் தொழுகை இறந்து விடும். பயனற்றது.  அந்தணனுக்கு பரிசுகள் இல்லாமல் முடிக்கப்படும் வேள்வி இறந்ததாகக் கருதப்படும்.
கேள்வி: பகைமையைக் குறைப்பது எது?
தருமர்: மன்னிப்பு
கேள்வி: ஆத்திகம் என்பது என்ன?
தருமர்: தான் பற்றி இருக்கும் நம்பிக்கையை விடாமல் இருப்பது ஆத்திகம்
கேள்வி: மறைந்திருக்கும் பகை எது?
தருமர்: ஒருவனது கோபம்
கேள்வி: தீராத நோய் எது?
தருமர்: பேராசை
கேள்வி: அறிவீனம் என்பது என்ன?
தருமர்: தனது கடமையை அறியாமல் இருப்பதே அறிவீனம்
கேள்வி: சோம்பேறி என்பவன் யார்?
தருமர்: தனது கடமையைச் செய்யாமல் இருப்பவனே சோம்பேறி
கேள்வி: எது துயரத்தைத் தரும்?
தருமர்: மடமை துயரத்தைத் தரும்
கேள்வி: தூய்மை என்பது என்ன?
தருமர்: சிந்தனை செம்மையாக  இருந்தால் அது தான் தூய்மை. சிந்தனையில் அழுக்கு இல்லையேல் எவனுக்கும் இழுக்கு வராது.
கேள்வி: கருணை என்பது என்ன?
தருமர்: உயிரினங்களைப் பாதுகாத்தல்
கேள்வி: கற்றவன் என்பவன் யார்?
தருமர்: தனது கடமையை அறிந்து அதைச் செய்பவன் கற்றவன்.  கடமையைச் செய்யாதவன் கல்லாதவன்.
கேள்வி: நாத்திகன் யார்?
தருமர்: நாத்திகன் என்பவன் மடையன்.
கேள்வி: ஆசை என்பது எது?
தருமர்: எதையும் தான் பெற வேண்டும் என்பதே ஆசை.
கேள்வி: நற்குணம் - இலாபம் - ஆசை இவை ஒன்றுக்கொன்று முரணானவை.  அவை ஒன்றாக இணைய வாய்ப்பு உள்ளதா?
தருமர்: ஒரு மனைவி நற்குணமுடையவளாக இருந்தால் இவை எல்லாம் ஒன்று சேரும். நற்குணமுள்ள மனைவி அமைந்தால் அவள் மீது ஆசை வரும்.  ஆசை வந்தாலே குழந்தைச் செல்வம் என்னும் இலாபம் கூடவே வருமே.
கேள்வி: மீளாத நரகத்திற்கு எவன் செல்வான்?
தருமர்: பரிசுகள் தருகிறேன் என்று அந்தணனை வரவழைத்து யாகம் செய்து முடித்தபின் ஒன்றும் இல்லையே என்று சொன்னால் - ஒரு வேலையை வாங்கி அதற்குரிய கூ-யைத் தராமல் விட்டால் -வேதம் கற்றவன் அதன் பிரகாரம் நடந்து கொள்ளாவிட்டால் - வேதத்தைக் கற்று அதன்படி நிற்காவிடில் -முன்னோர் வழிபாடு செய்யாதவர்கள் அதாவது பித்ருக்களை வழிபடாதவர்கள் - பணம் படைத்தும் பிறருக்கு ஈயாதவர்கள் இவர்கள் அனைவரும் மீளாநரகத்தில் அழுந்துவார்கள்.
கேள்வி: பிராமணன் என்னும் சிறப்பு பிறப்பால் வருகிறதா - நடத்தையால் வருகிறதா - படிப்பால் வருகிறதா?
தருமர்: பிறப்பாலோ படிப்பாலோ பிராமணன் என்னும் சிறப்பை அடைவதில்லை.  தன் நடத்தையால் மட்டுமே அந்த சிறப்பினை எய்தமுடியும்.  நடத்தை நன்றாக இல்லை என்றால் அந்த தகுதியை அவன் இழக்கிறான்.  வேதத்தைக் கற்று தீயவழியில் சென்றால் அவன் பிராமணன் அல்ல.  எரியோம்பி நல்ல நடத்தையுடன் நடப்பவன் எவனோ அவனே பிராமணன்.
கேள்வி: யார் யாருக்கு எவற்றால் என்னென்ன சிறப்பு கிடைக்கும்?
தருமர்: எல்லோரும் மகிழப் பேசுபவனுக்கு மக்களிடம் மதிப்பு கிடைக்கும்.  நீதியைப் பேசி அதன்படி நடப்பவனுக்கு அவன் நினைத்தது கிடைக்கும்.  நல்ல நண்பர்களை உடையவனுக்கு மகிழ்ச்சி கிடைக்கும்.  வாய்மையைக் கடைப்பிடிப்பவனுக்கு சொர்க்கம் கிடைக்கும். 
இப்படி கேட்ட கேள்விகளுக்கெல்லாம் உடனுக்குடன் பதில் கிடைத்தவுடன் கொக்கு வடிவில் இருந்த யட்சன் மகிழ்ந்தான்.  ஒரு மறையைக் கூறி அதைக் கூறினால் ஒருவனை உயிரெழுப்பலாம் என்றான் அந்த யட்சன். உடனே தருமர் அந்த மறையை (மந்திரத்தை) கூறி சகாதேவனை உயிர் எழுப்பினார்.  உடனே அந்த யட்சன் நிகரற்ற வீரர்கள் வீமனும் விசயனும்.  அவர்களை எழுப்பாமல் சகாதேவக்கு உயிர் அளித்துள்ளாயே ஏன் என்று வினவியது.  அதற்குத் தருமர் என்னுடைய தாயான குந்தியின் மூன்று மகன்களில் நான் உயிரோடு உள்ளேன்.  என் சிறிய தாயாரின் மகன்களில் - அதாவது நகுல சகாதேவர்களில் ஒருவருக்கு உயிர் கொடுப்பது தான் முறை.  அப்போது தான் என்னுடைய தாயார் என்னுடைய சித்திக்கு கொடுத்த வாக்குறுதி நிறைவேறும் என்றார்.  மகிழ்ந்த அந்த யட்சன் தான் யார் என்பதை பின்னர் தெரிவித்தான்.  அறக்கடவுளே மாறு வேடங்கள் போட்டு இவ்வளவு செயல்களையும் நடத்தி உள்ளது இப்போது தருமனுக்குத் தெரிகிறது.  துரியோதன் செய்த வேள்வியின் பலனாக ஐவரும் மரணமடையக்கூடாது என்பதற்காகத் தான் இந்த நாடகம் அரங்கேறியது என்பதும் அவருக்குப் புலப்படுகிறது.  பின்னர் அறக்கடவுள் கானில் பன்னிராண்டு வாழ்நாள் கழிந்து விட்டது.  இனி ஒருவரும் அறியாவண்ணம் மறைந்து ஓர் ஆண்டு வாழ வேண்டும் எனத் தெரிவித்தது.  பின்னர் ஐவரும் திரும்பி வந்து பாஞ்சா-யிடம் நடந்த நிகழ்ச்சியை விளக்கினார்கள்.
சூர்யா: கானகத்தில் வீமனைப் பாம்பு பிடித்துக் கொள்ளும் என்று ஒருதடவை நீங்கள் கூறினீர்கள்.  அது எப்போது தாத்தா?
தாத்தா: அது விசயன் தவம் செய்யப் போனபிறகு நடக்கும் கதை.  அது வியாசபாரதத்தில் வரும் கதை.  பீமனை ஒரு பாம்பு பிடித்துக் கொள்ளும்.  பலமுள்ள வீமனால் அந்த பாம்பிடமிருந்து தப்பிக்க முடியாது.  குரல் கொடுத்து கூவுகிறான்.  உடனே தருமர் வருவார் அங்கே.  அந்த பாம்பிடம் வேறு இரை தருகிறேன் விட்டுவிடு என் தம்பியை என்று கெஞ்சுவார்.  அந்த பாம்பு ஒப்புக்கொள்ளாது.  அந்த பாம்பு யார் என்றால் நகுடன் என்று இந்த குருவம்சத்தின் முன்னோர்களில் ஒருவர்.  இந்திரனுக்கு நிகரான வ-மை உடையவராக இருந்தார்.  இந்திராணி மீது மோகம் கொண்டு பல்லக்கை சுமந்த அகத்தியரை அடித்து நகுட நகுட என்று கூறினார்.  அதனால் பாம்பாக அதாவது நகுடனாக மாறும்படி அகத்தியர் சாபமிட்டார்.  அந்தப் பாம்பு தான் இது.  அந்த பாம்பு பேசியது.  கேள்விக்குச் சரியான பதில் கொடுத்தால் விட்டுவிடுவதாகக் கூறியது. அந்த கேள்வியையும் பதிலையும் நான் படித்ததை அப்படியே கொடுக்கிறேன்.

"ந : எவன் பிராமணன்? எது அறியத்தகுந்தது?
யு : சத்யம், தயை, பொறுமை, நல்ல நடத்தை, பூர்ணமாக ஹிம்ஸையை விலக்குதல், புலனடக்கம், கருணை என்ற குணங்கள் கொண்டவனே பிராமணன். சுக துக்கங்களைக் கடந்த பிரம்மமே அறியத்தக்கது. அதை அறிவதால் ஒருவன் பூர்ணத்துவம் பெறுகிறான்.
ந : இந்த குணங்கள் ஒரு சூத்திரனிடம் இருந்தால் அவன் பிராமணனா? பிரம்மம் என்பது சுகதுக்கங்கள் இல்லாதது என்றால், சுகதுக்கங்களை கடந்த நிலை இருக்கும் என்று தோன்றவில்லையே!
யு : சத்தியம் முதலான நான் சொன்ன குணங்கள் ஒரு சூத்திரனிடம் இருக்குமானால் அவன் சூத்திரன் அல்லன். இந்த குணங்கள் ஒரு பிராமணரிடம் இல்லையென்றால் அவன் பிராமணன் அல்லன். ஓ, சர்ப்பமே, இந்த குணங்கள் கொண்டிருக்கும் மனிதன் பிராமணன் என்றே ஆகிறான். இக்குணங்கள் இல்லாமல் இருப்பவன் சூத்திரனே.
சுகதுக்கங்கள் இல்லாத நிலை இல்லை என்று சொல்வது கர்மத்தால் விளைந்த அனைத்துக்கும் பொருந்தும். நீர் எப்படி இயற்கையில் உஷ்ணமாகாதோ, நெருப்பு எப்படி இயற்கையில் குளிர்ந்திருக்காதோ அப்படியே அறியாமை அகன்ற சத்தியத்தில் சுகதுக்கங்கள் இல்லை.
ந : குணங்களே பிராமணனை தீர்மானிக்குமானால், இக்குணங்கள் இல்லா பிராமணின் பிறப்பு முக்கியமற்று போகிறதே.
யு : பல குணங்கள் கலந்துவிட்ட இக்காலத்தில் பிறப்பால் பிராமணனை காண்பது கஷ்டம். எல்லாரும் பிறப்பில் சூத்திரர்களே. சில சம்ஸ்காரங்களாலும், வேதம் படிப்பதாலும் பிராமண குணங்கள் கிடைத்து பிராமணனாகிறான். ஸ்வாயம்புவ மனு சொல்வதும் இப்படியே. எல்லா சம்ஸ்காரங்களும் செய்தும், வேதம் படித்தும் அவனுக்கு இக்குணங்கள் கொள்ளாவிட்டால் அவன் பல குணங்கள் கலந்தவன் என்று அறிந்துகொள். சாத்திரங்களின் முடிவான தீர்மானம் இது. தன் சம்ஸ்காரங்களால் நற்குணங்கள் மேலெழும்பி இருப்பவனே பிராமணன்.
யுதிஷ்டிரனின் இந்த பதில்களால் சந்தோஷப்பட்ட நகுஷன் பீமசேனனை விடுவிக்கிறான்.''
சரி சூர்யா நான் மீதிக் கதையை நாளை கூறுகிறேன்.  இன்று அதிக நேரம் ஆகிவிட்டது. நாளை பார்க்கலாம்.

No comments:

Post a Comment