PRAISE YOUR MOTHER TONGUE - SPEAK IN MOTHER TONGUE - PRAY IN MOTHER TONGUE
தாத்தா: இன்றைக்கு தர்மம் இராசசூயயாகம் ஏன் செய்தார் என்பது பற்றி நான் கூறுகிறேன்.
சூர்யா: சரிங்க தாத்தா. கர்ணன் படத்தில் நாகபாசம் என்ற அம்புக்கு ஏன் கண்ணன் பயப்பட்டு குந்தியை விட்டு வரம் கேட்கச் சொன்னார் என்பதற்கு நீங்கள் நேற்று சொன்ன கதையில் தான் காரணம் இருக்கு. இப்படி இந்த மகாபாரதக் கதையைக் கேட்டால் தான் கண்ணன் எந்த அளவுக்கு இந்தப் பாண்டவர்களுக்கு உதவி செய்திருக்கிறார் - அவர் முறையாக முன்கூட்டி திட்டமிட்டு ஆட்டுவிக்கவில்லையென்றால் - குறைந்த படைபலம் உடைய பாண்டவர்கள் எப்படி கௌரவர்களை வென்றார்கள் என்று நமக்கு விளங்கும் போலும். இல்லாவிட்டால் பாண்டவர்கள் அசகாய சூரர்கள் என்ற மாயை தான் மிஞ்சும் தாத்தா.
தாத்தா: நீ சொன்னது தான் சரி. கண்ணன் இல்லையேல் மகாபாரதம் இல்லை. மகாபாரதம் என்பது ஐவரின் கதையோ நூற்றுவரின் கதையோ அல்ல. மாயவனின் மாயாசாலக் கதை. சரி நாம் கதைக்கு வருவோம். தருமர் முறையாக அரசோச்சிக் கொண்டிருந்த போது ஒருநாள் மயன் என்ற அரக்கர்களுக்கான தச்சன் வருகிறான். அவனைக் கண்ணன் காண்டவ வனத்தை எரித்த போது காப்பாற்றினார். காப்பாற்றியது விசயன் என்றாலும் ஒப்புதல் தந்தது கண்ணன் தான். அவன் வந்து உங்களுக்கு அரிய மண்டபம் ஒன்றை நன்றிக்கடனாக அமைத்துத் தர விரும்புகிறேன். குருகுலம் கண்டிராத ஒரு அருமையான மண்டபமாக இருக்கும் அது. ஒப்புதல் கொடுங்கள் என்று கேட்டான். தருமர் சரி என்று சொன்னவுடன் சில அரிய மணிகள் கைலாயமலையின் வடக்கில் மைநாகமலைக்கு அருகில் ஒரு குன்று இருப்பதாகவும் அந்த குன்றின் பெயர் இரணியசிருங்கம் என்றும் அந்த குன்றில் ஏராளமான வண்ணவண்ண மணிகள் உள்ளதாகவும் அதை மண்டபத்தில் பதித்தால் சிறப்பாக இருக்கும் என்றும் கூறுகிறான். தருமரும் ஆட்களை அனுப்பி அவைகளைக் கொண்டு வந்து தருகிறார். அந்த அருமையான மணிகளை வைத்து ஒரு சிறந்த மண்டபத்தையும் மாளிகையையும் அமைத்துத் தருகிறான் மயன். அதோடு ஒரு கதையும் சங்கும் பரிசாகவும் வழங்குகிறான்.
சூர்யா: கதையின் பெயர் என்ன தாத்தா? சங்கின் பெயர் என்ன?
தாத்தா: கதாயுதத்தின் பெயர் சத்துருகாதினி. சங்கின் பெயர் தேவதத்தம். அது வருணனுடையது. இதெல்லாம் பின்னர் போரின் போது பயன்படும். அதற்குத் தான் இந்த முன்னேற்பாடு. இந்த மயனால் அமைக்கப்பட்ட மாளிகை பதினான்கு லோகத்திலும் இல்லாத வகையில் அபூர்வமாக இருந்தது.
சூர்யா: அது என்னங்க தாத்தா 14 லோகம்?
தாத்தா: நிலவுலகின் மேல் ஏழு உலகம். நிலவுலகின் கீழ் ஏழு உலகம். மேலே உள்ள உலகம் எல்லாம் லோகம் என்று சொல்லப்படுகிறது. கீழே உள்ள உலகம் பூராவும் தலம் என்று அழைக்கப்படுகிறது. பூலோகம், புவர்லோகம், சுவர்லோகம், மகர்லோகம். ஜனலோகம், தபோலாகம் மற்றும் சத்யலோகம். அதேபோல அதலம், விதலம், சுதலம், தராதலம், ரசாதலம், மகாதலம், பாதலம். இந்த பதினாக்கு லோகத்திலும் இருந்த சிறந்த மணிகளை ஒரு அரக்கன் எடுத்து பிந்துசரசில் வைத்தது மயனுக்குத் தெரியும். ஏன் என்றால் அவன் அரக்கர்களுக்குத் தச்சன். அதனை எடுத்துத் தான் தருமருக்குத் தருகிறான். இப்படி ஆக்கிய மண்டபத்தில் மண்டபம் புகுவிழா நடத்தி தருமன் அங்கு போய் தங்குகிறான். இப்படி இருக்கும் போது ஒரு நாள் நாரதர் அங்கு வருகிறார்.
சூர்யா: நாரதர் வந்தால் ஏதாவது வில்லங்கமா செய்தி இருக்குமே?
தாத்தா: ஆமாம் ஆமாம் அவர் ஐவரின் தந்தை பாண்டுவிடம் இருந்து ஒரு செய்தியைக் கொண்டு வந்திருக்கிறார். மானேந்திய சிவன் நடனமாடும் போது இசை பாடும் நாரதர் என்று அறிமுகப்படுத்துகிறார் வில்-யார்.
சூர்யா: சிவனார் மான் ஏந்திய கதை என்னங்க தாத்தா? அவர் ஏன் மானை ஏந்துகிறார்? இதுக்கு கதை இருந்தால் சொல்லுங்க தாத்தா.
தாத்தா: இப்படி எல்லாம் கதை திசை திரும்பினா மகாபாரதத்தை முடிக்கவே முடியாது. நீண்ட நெடிய நெடுந்தொடராக மாறிவிடும். இருந்தாலும் இப்போ அந்தக் கதையைக் கூறுகிறேன். கேள். அந்தகாலத்தில் தாருகாவனம் தாருகாவனம் என்று ஒரு காடு இருந்தது. அந்த காட்டிலே இருந்த முனிவர்கள் தவம் செய்வதில் தாங்கள் வல்லவர்கள் என்றும் தங்கள் இல்லத்தரசிகள் கற்பில் சிறந்தவர்கள் என்றும் பெருமையடித்துக் கொண்டிருந்தார்கள். தற்பெருமை தவறல்லவா? எனவே இதைத் தகர்க்க வேண்டும் என்று எண்ணம் கொண்டார் இறைவன். ஒரு அழகிய சாமியார் வேடத்தில் வந்து பிச்சைக் கேட்க வந்தார். பிச்சைக் கேட்க வந்தவரின் அழகில் ஒரு நொடி முனிபுங்கவர்களின் மனைவிகள் மனதைப் பறிகொடுத்தார்கள். தவம் புரிந்த முனிவர்களுக்கு தெரிந்தது இந்தக் காட்சி. உடனே ஒரு அபிசார யாகம் என்று ஒரு யாகம் நடத்தினார்கள். இப்படிப்பட்ட யாகத்தை ஒருவனை ஒழிக்க வேண்டும் என்றால் நடத்துவார்கள் அந்தகாலத்தில். அதி-ருந்து நாகங்கள், பூதங்கள், மான், பு-, மண்டையோடுகள், முயலகன் என்று ஒரு அரக்கன் ஆகியோர் வந்தனர். முனிவர்கள் இவைகளைப் பார்த்து. சிவனைப் போய் ஒழித்துவிட்டு வாருங்கள் என்று ஏவினர். இதைத்தான் ஏவல் வைப்பது என்று சொல்வார்கள். இப்படி ஏவப்பட்ட நாகங்களை சிவன் அணிகலனாக அணிந்தார். பூதங்களைத் தன் பணியாட்களாக வைத்துக் கொண்டார். பு-யின் தோலை உரித்து உடையாக வைத்துக் கொண்டார். முயலகனை வென்று அவன் வேண்டுதல்படி தன் காலடியில் வைத்துக் கொண்டார். மானைத் தன் கரத்தில் ஏந்தினார். இப்படியாக எதிர்க்க வந்தவர்களை ஒழித்து பயனற்றவைகளாக மாற்றினார் சிவனார். இது தான் சுருக்கமான கதை. சரியா. நாம் நாரதர் தருமரிடம் வந்த கதையைப் பார்ப்போம். நாரதர்,"தருமா, நான் தென்புலம் சென்றிருந்த போது உன் தந்தை பாண்டுவைப் பார்த்தேன்'' என்றார். தருமரும் உடனே "என் தந்தை நலமாக உள்ளாரா? அவர் ஏதாவது செய்தி சொன்னாரா? என்று கேட்டார்.
சூர்யா: தென்புலம் என்பது என்ன தாத்தா? ஏற்கனவே சொன்னமாதிரி இருக்கு. மறந்து போய்விட்டது.
தாத்தா: நம்மை விட்டு பிரிந்து போன - இறந்து போன முன்னோர்கள் வசிக்கும் இடம் தென்திசையில் உள்ளது. அதனால் தான் தென்புலம் என்கிறார்கள். அது தென்திசைக் காவலனான எமனால் ஆளப்படும் உலகம். இதைத் தான் பித்ருலோகம் என்று சொல்வார்கள். தமிழில் காலனூர் என்பார்கள். இறந்த நம் முன்னோர்களுக்காக நாம் அமாவாசை, சூரிய கிரகணம், சந்திரகிரகணம், அவர்கள் இறந்த தினம் ஆகியவற்றில் முன்னோர்களுக்கான பித்ரு பூசையை முறையாகச் செய்தால் அதன் பலனாக அவர்கள் தென்புலத்தி-ருந்து வடபுலம் நோக்கி நகர்ந்து இறைவனுடன் சேருவார்கள். அதற்காகத் தான் அமாவாசையன்று விரதம் இருந்து முன்னோர்களை நினைத்து அவர்களுக்காக உணவிட வேண்டும் - சிரத்தையுடன் செய்ய வேண்டிய சிரார்த்தங்களைச் செய்ய வேண்டும் என்று கூறுகிறார்கள். தெரிகிறதா? சாமி இல்லே பூதம் இல்லே என்று பேசி நம் முன்னோர்களையும் நாம் அவமதிக்கிறோம். சரி கதைக்கு வருவோம். நாரதரிடம் பாண்டு,"நீங்கள் பூமிக்குச் செல்லும் போது என் மக்களைப் பார்த்து இராசசூய வேள்வி செய்யும்படி கூறுங்கள்'' என்று கூறினாராம். இதைக் கேட்டவுடன் தருமர்,"என் தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுவது என் கடமை'' என்று கூறி கண்ணனிடம் இந்த வேள்வியை நடத்த உதவும்படி வேண்டினார். அப்போது கண்ணன் அந்த வேள்வையைச் செய்ய வேண்டும் என்றால் முத-ல் சராசந்தனைக் கொல்ல வேண்டும். அப்போது தான் அந்த வேள்வியை நடத்த முடியும் என்று கூறினார்.
சூர்யா: யார் இந்த சராசந்தன் தாத்தா?
தாத்தா: மகத தேசத்தில் முன்னொரு காலத்தில் ஒரு அரசன் இருந்தான். அவன் தேவர்களுக்குப் பகைவன். அவன் பெயர் பிருகத்ரதன். அவனுக்குக் குழந்தைகள் இல்லை. எனவே காட்டிற்குச் சென்று ஒரு முனிவனை வேண்டினார். முனிவரின் பெயர் சண்டகௌசிகன். அவர் ஒரு மாமரத்தின் அடியில் தவம் செய்து கொண்டிருந்தார். அவர் அந்த மரத்தி-ருந்து ஒரு மாம்பழத்தை எடுத்து இந்த அரசன் கையில் கொடுத்து,"இதை உன் மனைவிக்குக் கொடு. குழந்தை கிடைக்கும்'' என்று கூறி மீண்டும் தவநிலைக்குப் போய்விட்டார். இந்த அரசனுக்கோ இரண்டு மனைவி. சந்தேகத்தைக் கேட்கலாம் என்றார் முனிவர் தவநிலைக்குச் சென்றுவிட்டார். எனவே அரண்மனைக்கு வந்து அந்த காசிராசன் இரண்டு மனைவிகளுக்கும் பாதிபாதியாகப் பிரித்துச் சாப்பிடும்படிக் கூறிவிட்டார். இரண்டு மனைவிகளுக்கும் இரண்டு பாதி பாதி உருவம் உள்ள பிண்டங்களாகப் பிறந்தன. "மாசு அற்று இலங்கும் மகவு இருவர்வயினும் பகிர்ந்து வளர்ந்ததன் பின், பாசத்துடனே ஓர் ஒருவர் பயந்தார், வடிவில் பப்பாதி.'' குழந்தையாகப் பிறக்காமல் பிண்டமாக இருந்ததால் அவற்றை ஊருக்கு வெளியே எறியும்படி அரசன் கட்டளை இட்டான். அந்த ஊர் கிராம தேவதை பேர் சரை. அவள் இரவில் இந்த பிண்டங்களைக் கண்டாள். இரண்டையும் ஒன்றாகப் பொருத்தினாள். பொருத்துதலுக்கு வடமொழியில் சந்தம் என்று பெயர். சரை பொருத்தியதால் சராசந்தன் என்று பெயர். அந்தப் பெயரிலேயே அவன் வளர வேண்டும் என்றும் அவனுக்கு ஏராளமான பலத்தைத் தான் கொடுத்துள்ளதாகவும் சரை என்ற அந்த கிராம தேவதை கூறினாள். அத் தனயன்தன்னை, "சராசந்தன் என்னா அழைத்தி' என, மகதத்து இறைவற்கு அளித்து'. இந்த சராசந்தன் தான் பின்னாளில் பெரியவன் ஆனபிறகு கிரிவிரசம் என்னும் தலைநகரை வைத்துக் கொண்டு அரசாண்டான். அவனுக்கு இரண்டு பெண்கள். அஸ்தி - பிராஸ்தி என்று பெயர். இந்த இருவரையும் கண்ணனின் மாமனாகிய கம்சனுக்கு மணமுடித்து வைத்திருந்தான். கம்சன் இந்த சராசந்தனுக்குச் சம்பந்திமுறை. இவன் பல மன்னர்களை வென்று அவர்களை சிறையில் இட்டு அவர்கள் அரசையெல்லாம் பிடுங்கிக்கொண்டு அரசாண்டு கொண்டிருந்தான். கம்சனைக் கண்ணன் கொன்று விட்டான் அல்லவா? அதனால் கண்ணன் மேல் சராசந்தனுக்குப் பகை? ஆமாம் தன் பெண்களை விதவைகள் ஆக்கியவன் மேல் யாருக்குத் தான் கோபம் இருக்காது? பெரும்படையைத் திரட்டிக் கொண்டு வந்து மதுராபுரியை வளைத்துப் பெரும்போர் புரிந்தான். ஆனால் வெற்றிபெற முடியவில்லை. பின்னர் ஒரு யவன மன்னனைத் தூண்டிவிட்டி அவனை ஒரு புறம் தாக்கச் சொல்- தான் மறுபுறம் தாக்குவது என முடிவெடுத்தான். இருமுனைத் தாக்குத-ல் வெற்றிபெய முடியாது - மக்கள் சிரமப்படுவார்கள் என்று கண்ணனுக்குத் தெரியும். எனவே கடலுக்கு நடுவில் ஒரு புதிய நகரத்தை நிர்மாணிக்கும்படி கடலரசனைப் பணித்தான் கண்ணன். அந்த நகரின் பெயர் தான் துவாரகை. இதைத் தான் தமிழ் இலக்கியத்தில் துவரை என்றும் கண்ணனை துவரைநாயகன் என்றும் சொல்லுவார்கள். அதுமுதல் கண்ணன் துவாரகையில் வசித்து வருகிறார். அவரே இந்த சராசந்தனை அழித்திருக்கலாம். ஆனால் வீமனால் மரணம் அடையவேண்டும் என்பது விதி. எனவே ஊழ்வினையின் உண்மையை உணர்ந்து இருந்த கண்ணன் சராசந்தனைக் கொல்லவில்லை. ஆனால் எல்லோரும் சராசந்தனுக்குப் பயந்து கண்ணன் ஓடிவிட்டான் என்று பழி பேசுவார்கள். உண்மை அதுவல்ல. ஊழ்வினையை மதித்தார் கண்ணன். அதனால் தான் இப்போது சராசந்தனை ஒழிக்கத் திட்டமிடுகிறார். சராசந்தனை ஒழித்தால் பல மன்னர்களை விடுவிக்கலாம். அவனிடம் உள்ள பொருள் தருமருக்குக் கிடைக்கும். வேள்வி புரிய அது உதவும் என்பது கண்ணனுடைய எண்ணம். கண்ணனுடன் ஐவரும் வேதியர் வடிவத்துடன் சராசந்தன் அரண்மனைக்குச் சென்று சராசந்தனைக் காணுகிறார்கள். இவர்கள் முகத்தைப் பார்த்தவுடனேயே இவர்கள் வேதியர் அல்ல என்பது சராசந்தனுக்குப் புரிந்து விட்டது. "யார் நீங்கள்? ஏன் வேதியர் வடிவத்துடன் என் அரண்மனைக்கு வந்திருக்கிறீர்கள்?'' என்று கேட்டான். கண்ணன் இப்போது தன் உண்மை வடிவம் எடுத்து தாம் வந்த காரணத்தைக் கூறுகிறான். உடனே சராசந்தன் வீமனைப் போருக்கு அழைக்கிறான். போருக்கு முன்னரே தன் மகன் சகதேவனுக்கு முடிசூட்டுகிறான் சராசந்தன். வீமன் தன் பலத்தால் சராசந்தனை வென்று உடலை இரு கூறாகப் பிளந்து விட்டெறிகிறான். ஆனால் பிளவுபட்ட சராசந்தனின் உடற்கூறுகள் மீண்டும் மீண்டும் ஒன்று சேர்ந்து விடுகின்றன. மீண்டும் மீண்டும் போருக்கு வருகிறான் சராசந்தன். மாயக் கண்ணனை நோக்குகிறான் வீமன். உதவி புரியும்படி கண்ணால் கண்ணனிடம் கேட்கிறான். கண்ணன் ஒரு தர்ப்பையை ஒடித்து அடி-முடி மாற்றிக் காட்டுகிறார். புரிந்துவிட்டது வீமனுக்கு. இந்த தடவை உடலைப் பிளந்தவுடன் அடி-முடி மாறுபடும்படி வைத்துவிடுகிறான். இவ்வாறு சராசந்தன் மடிகிறான். மீதிக் கதையை நாளைக்குச் சொல்லட்டுமா?
No comments:
Post a Comment