Sunday, October 17, 2010

SAKTHI THUTHIGAL - VETRITH THIRUNAAL VILAKKAM

PRAISE YOUR MOTHER TONGUE - SPEAK IN MOTHER TONGUE - PRAY IN MOTHER TONGUE

ஒன்பது நாள் இரவுத் திருவிழா முடிந்து வெற்றித் திருநாள் வந்து விட்டது.   கோவில்களில் கூட்டம் அலைமோதியது.   இறைவியை அழகு படுத்தி அலங்காரவல்லியாக மக்கள் கண்டு களித்தனர்.   இந்த ஒன்பது நாளும் நான் பாரதியாரின் தோத்திரதைச் சொன்னேன்.   உள்ளம் எங்கிலும் புத்துணர்ச்சி பொங்கியது.இதோ அந்த தோத்திரம்.
எடுத்த காரியம் யாவினும் வெற்றி,
எங்கு நோக்கினும் வெற்றி
மற்று ஆங்கே
விடுத்த வாய்மொழிக்கு எங்கணும் வெற்றி
வேண்டினேனுக்கு அருளினள் காளி,
தடுத்து நிற்பது தெய்வதமேனும்
சாரு மானுடவாயினும் அதைப்
படுத்து மாய்ப்பள் அருட்பெருங் காளி,
பாரில் வெற்றி எனக்குறுமாறே
என்னும் எண்ணங்கள் யாவினும் வெற்றி,
எங்கும் வெற்றி எதனினும் வெற்றி,
கண்ணும்   ஆருயிரும் என நின்றாள்
காளித்தாய் இங்கு  எனக்கருள் செய்தாள்,
மண்ணும் காற்றும் புனலும் அனலும்
வானும் வந்து வணங்கி நில்லாவோ?
விண்ணு ளோர்  பணிந்து  ஏவல் செய்யாரோ?
வெல்க காளி பதங்கள் என்பார்க்கே.
-
மகாகவி பாரதி

இந்த இறைவியைத் தான் எப்படி எல்லாம் கவிஞர்கள் போற்றுகிறார்கள் - அதையும் இன்று பார்ப்போமே. புராணங்களில் இறைவியின் திரு அவதாரமும்,  பெருமைகளும்  கூறப்படுகின்றன. அதன் ஒரு பகுதியாக, அன்னை பராசக்தியின் ஆயிரம் திருநாமங்களைக் கூறும் லலிதா ஆயிரம் திருநாமம் என்னும் தோத்திரம் உள்ளது. அயக்ரீவர் என்ற மகரிஷி (திருமாலின் திருஅவதாரமாகக் கூறப் படுவதும் உண்டு) பொதிகையில் வாழ்ந்த தமிழ் முனிவர் என்று போற்றப்படுகிற அகத்திய முனிவருக்கு உபதேசம் செய்வதாக 183 பாடல்கள் அடங்கிய இந்த நூல் அமைக்கப் பட்டுள்ளது. அகத்தியரும், அவரது மனைவிலோபாமுத்திரையும் சக்தி வழிபாட்டு நெறிகளை உருவாக்கிய குருமார்களில் முதன்மையாக வைத்துப் போற்றப் படுபவர்கள் (உ லோபாமுத்திரையால் போற்றப் பட்டவள் என்றே ஒரு நாமம் லலிதா ஆயிரம்திருநாமத்தில் உண்டு).  இதிலே வரும் சில போற்றிகளை நாம் இன்று பார்ப்போம்.
 அறிவாகிய அக்னி குண்டத்தில் தோன்றியவளே போற்றி
 ஆசை வடிவான பாசக்கயிற்றை ஏந்தியவளே போற்றி
தீமையைப் பொசுக்கும் கோப வடிவான அங்குசத்தை கையில் ஏந்தி ஒளிர்பவளே போற்றி
 மனமாகிய கரும்புவில்லை உடையவளே போற்றி 
ஐந்து புலன்களாலும் உணரப்படும் ஒலி, தொடுகை, உருவம், ரசம், மணம் என்ற ஐந்து தன்மாத்திரைகளையும், ஐந்து மலர்க்கணைகளகாக் கொண்டவளே போற்றி
பாசக்கயிற்றால் உயிர்களை ஆசையில் பிணிப்பவளே போற்றி
 பின்  அங்குசத்தால் பாசத்தை- ஆசையை  வெட்டி எறிபவளே போற்றி.
 நீண்ட கண்களையுடையவளே போற்றி
 சிவப்பொளி வெள்ளத்தில் அண்டங்கள் அனைத்தையும் மூழ்கச் செய்பவளே போற்றி
 கால் நகங்களின் ஒளியால் வணங்குவோர் அகத்திலுள்ள இருட்குணங்களை அகற்றுபவளே போற்றி
 அவள் பாதகமலத்தின் தூசியே வேத மங்கையின் வகிட்டில் விளங்கும் குங்குமம்
 அனைத்து ஆகமங்களாகிய சிப்பிகளுக்கும் உள்ளிருக்கும் நன்முத்தே போற்றி 
 கண்களை இமைத்து மூடுவதால் புவனங்களை ஆக்கி அழிப்பவளே போற்றி
கலியின் களங்கங்களை நாசம் செய்பவளே போற்றி
 ஆசையற்றவளே போற்றி
ஆசையைப் போக்குபவளே போற்றி
மோகமற்றவளே போற்றி
மோகத்தை நாசம் செய்பவளே போற்றி
பாவமற்றவளே போற்றி
பாவத்தை நாசம் செய்பவளே போற்றி
வேற்றுமையில்லாதவளே போற்றி
வேற்றுமையைப் போக்குபவளே போற்றி போற்றி
காமனுக்கு உயிரூட்டிய மருந்தே போற்றி
நினைத்த வடிவத்தைத் தகுபவளே போற்றி
உயிர்களிடத்தில் உணர்வாக இருப்பவளே போற்றி 
அன்பே வடிவானவளே போற்றி
அன்பைப் பொழிபவளே போற்றி
 விலங்கியல்பில் வாழ்வோருக்கு பயங்கரமானவளே போற்றி
 கலைகளின் இருப்பிடமானவளே போற்றி
 கலைகளை மாலையாகத் தரித்தவளே போற்றி 
 வீராங்கனையே போற்றி
 வீரர்களின்  அன்னையே போற்றி
 என்றும் வெல்லும் சேனைகளை உடையவளே போற்றி
ஞான ஆனந்த ஒளியே போற்றி
படைப்பைச் செய்பவளே  போற்றி
 பிரம்மன் வடிவானவளே போற்றி
காப்பவளே போற்றி
கோவிந்தன் வடிவானவளே போற்றி 
அழிப்பவளே போற்றி
 மறைப்பவளே போற்றி

 இப்படி ஆயிரம் திருநாமங்களிலே பல கதைகள் போற்றிகள் உண்டு.  இப்படிப் போற்றி வளர்ந்த காரணத்தாலேயே அழைத்தால் வருவாள் என்ற உறுதியுடன் அபிராமி மீது திருக்கடையூரில் பக்தர் ஒருவர் அபிராமி அந்தாதியைப் பாடுகிறார்.  உரிமையுடன் அழைக்கிறார். 
 ஒன்றாய் அரும்பிப் பலவாய் விரிந்து இவ் உலகு எங்குமாய்
நின்றாள்
அனைத்தையும் நீங்கி நிற்பாள்
என்றன் நெஞ்சின் உள்ளே
பொன்றாது நின்று
புரிகின்றவாறு இப்பொருள் அறிவார்
அன்று ஆல் இலையில் துயின்ற பெம்மானும் என் ஐயனுமே.
என்று நமக்கு எடுத்துக் கூறுகிறார்.   அவர் பாடிய பாடலைக் கேட்டு சந்திரனை உதிக்கச் செய்தாள் இறைவி. 
பாரதியாரோ தான் புரிந்து கொண்ட இறைவியை நம் மனக்கண் முன் நிறுத்தும் போது
யாதுமாகி நின்றாய் காளி!
யாதிலும் நீ நிறைந்தாய்.
இயற்கையென் றுனையுரைப்பார்
சிலர் இணங்கும் ஐம்பூதங்க ளென்று இசைப்பார்
செயற்கையின் சக்தி யென்பார்
ஆதிப் பரம்பொருளின் ஊக்கம்
 அதை அன்னையெனப் பணிதல் ஆக்கம்
மூலப் பழம்பொருளின் நாட்டம்
 இந்த மூன்று புவியும் அதன் ஆட்டம்.
துன்பமிலாத நிலையே சக்தி
தூக்கமிலாக் கண் விழிப்பே சக்தி
அன்பு கனிந்த கனிவே சக்தி
ஆண்மை நிறைந்த நிறைவே சக்தி
இன்ப முதிர்ந்த முதிர்வே சக்தி
எண்ணத்திருக்கு மெரியே சக்தி
முன்பு நிற்கின்ற தொழிலே சக்தி
முக்தி நிலையின் முடிவே சக்தி

என்றெல்லாம் நமக்கு விளக்குவார். இப்படி நமக்கு எல்லாமாக உள்ளவள் அந்த இறைவி.  அவளுக்கு ஆயிரம் திருநாமங்கள்.  அவளைத் துதிப்பதால் அவள் நமக்கு என்ன தருவாள்.  இது பாமரனின் கேள்வி.  அபிராமி அந்தாதியை நமக்கு அருளியவர் கூறுவார்:
தனம் தரும், கல்வி தரும்,
ஒருநாளும் தளர்வு அறியா மனம் தரும்,
தெய்வ வடிவும் தரும்,
நெஞ்சில் வஞ்சம் இல்லா இனம் தரும்,
நல்லன எல்லாம் தரும்.
 இப்படி நல்லனவற்றை எல்லாம் தந்து தீமையை அளிக்கும் அந்த சக்தியை - இறைவியை நாம் போற்றித் துதிக்கும் திருநாளே இந்த வெற்றி விழா.  துதியுங்கள் - பலனடயுங்கள்.
  

No comments:

Post a Comment