Friday, June 24, 2011

Srimad Bhagavatham

திருமால் பத்து அவதாரங்கள் எடுத்ததாகத் தான் நாம் கதைகளின் மூலம் அறிகிறோம்.  ஆனால் ஸ்ரீமத் பாகவதத்தைப் படிப்பவர்கள் திருமால் உலகின் நன்மைக்காகப் பல அவதாரங்களை எடுத்து இருப்பதை அறியலாம்.

இந்த நிலவுலகத்தை நிலைநிறுத்த பாதாளத்தில் இருந்து பூமியை வெளிப்படுத்த எடுத்தது வராக அவதாரம்.
சனத்குமாரர்களாகத் தோன்றியவரும் நாராயணனே
தர்மன் என்னும் முனிவருக்கும் அவர் மனைவி கலைக்கும் மகன்களாக நரநாராயணன்களாக அவதாரம் எடுத்ததும் திருமாலே
ஆசூரி என்னும் முனிவருக்கு அழிந்து போன சாங்கிய சாத்திரத்தை உபதேசிப்பதற்காக எடுத்த அவதாரம் தான் கபில அவதாரம்
இறைவனே தனக்கு மகனாகப் பிறக்க வேண்டும் என அத்ரி முனிவர் நினைக்கிறார்.  அவர் ஆசையை நிறைவேற்ற அவருக்கும் அனசூயைக்கும் தத்தாத்ரேயன் என்ற மகனாக அவதரித்தவர் பாற்கடலில் பள்ளி கொண்ட பெருமாள் தான்.
ருசி என்ற பிரசாபதிக்கு ஆகூதியிடம் யக்ஞன் என்னும் மகனாகத் தோன்றியவர் அரங்கநாதரே.
நாபி என்பவருக்கும் அவர் மனைவி மேருக்கும் ரிஷபன் என்னும் பெயரில் மகனாக அவதரித்தவர் திருமாலே.
பூமாதேவியிடமிருந்து மருத்துவப் பொருட்களைப் பெற பிருது என்னும் மன்னனாக அவதரித்தவர் நெடுமாலே.
மதுரை மாநகரிலே கிருதுமால் நதியிலே மீன் அவதாரம் எடுத்ததும் பரந்தாமன் திருமாலே.
அமுதத்திற்காக தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்த போது ஆமையாக உருவெடுத்ததும் திருமாலே.
அப்படிக் கடலைக் கடக்கும் போது தன்வந்தரியாக வருவதும் பரந்தாமனே.
அசுரர்களை ஏமாற்றி அமுதத்தை தேவர்களுக்குக் கொடுக்க மோகினி அவதாரம் எடுப்பதும் வாசுதேவனே.
பிரகலாதனைக் காக்க நரசிம்ம அவதாரம் எடுத்ததும் திருமாலே.
பின்னர் பரசுராமராக, இராமராக, கண்ணனாக அவதரித்ததும் நெடுமாலே.
இப்படிப் பல அவதாரங்களின் சிறப்புகள் ஸ்ரீமத் பாகவதத்திலே கூறப்படுகின்றன.  பிறவித் தளையிலிருந்து விடுபட இறைவனின் புகழைப் போற்றும் பாகவதத்தைப் படியுங்கள்.

கலிபுருஷன் - Srimath Bhagavatham - entry of Kali purusha

கண்ணபெருமான் இந்த நிலவுலகை விட்டு நீத்ததும், பாண்டவர்களும் இந்த உலகத்தை விட்டுச் செல்ல முடிவெடுக்கிறார்கள்.  தருமர் அபிமன்யுவின் மகனான பரீட்சித்துவை அரசபீடத்தில் அமரவைத்து முடிசூட்டுகிறார்.  பின்னர் அனைவரும் விண்ணுலகம் செல்கின்றனர்.  தருமரால் முடிசூட்டப்பட்ட பரீட்சித்து சிறந்த முறையில் அரசோச்சுகிறான்.  அவன் உத்தரனுடைய பெண் இராவதியை மணந்து கொள்கிறான்.  இவனுக்கு சனமேசயன் முதலிய நான்கு குமாரர்கள் பிறக்கிறார்கள்.  இப்படி இருக்கும்போது பரீட்சித்து மகாராசா தன் நாட்டை சுற்றிப்பார்த்து வரும்போது ஒரு இடத்தில் மூன்று கால்களை இழந்து ஒற்றைக்காலில் நிற்கும் ஒரு காளையையும் அருகில் கண்ணீர்விட்டுக் கொண்டு நிற்கும் பசுவையும் இவைகளின் அருகே சாட்டையுடன் ஒருவன் நின்று காளையை அடிப்பதையும் காண்கிறான்.
     மூன்று காலை இழந்து நிற்கும் காளை தர்மதேவதை.  கிருதயுகத்தில் தர்மதேவதையான இந்த காளைக்கு நான்கு கால்கள்.  திரேதாயுகத்தில் தர்மம் குறைந்ததால் ஒரு கால் குறைந்து கால்கள் மூன்றானது.  துவாபரயுகத்தில் மற்றொரு காலை இழந்தது.  கலியுகத்தில் கலிபுருஷனிடம் அதர்மம் கூடியிருந்ததால் இன்னொரு காலையும் இழந்து ஒற்றைக் காலில் நிற்கிறது தர்மதேவதை.  அருகே நிற்கும் பசு தான் பூமாதேவி.  கலிபுருஷனின் அதர்ம ஆதிக்கத்தைக் கண்டு கண்ணீர் விடுகிறார் பூமித்தாய்.  தர்மதேவதையோ மனிதர்களைக் காப்பதற்காக உருவெடுத்து வந்துள்ளது.  ஆனால் மனிதர்களோ தர்மத்தை கொஞ்சம் கொஞ்சமாக காவு கொடுக்கிறார்கள்.  இதனால் காளையின் மூன்று கால்கள் இல்லாமல் போய்விட்டன.  சாட்டையுடன் காளையின் அருகில் நின்று காளையை மிரட்டி அடித்துக் கொண்டிருப்பவன் தான் கலிபுருஷன்.  தர்மத்தையே மிரட்டும் வலிமை கொண்டு அதர்மத்தை ஆட்சிபுரிய அனுமதித்தவன் தான் இந்த கலிபுருஷன்.  இதிலிருந்து நாம் தெரிந்து கொள்வது என்ன?  அதர்மத்தின் கை இந்த கலியுகத்தில் ஓங்கித் தான் நிற்கும்.  அதற்காக நாம் அதர்மத்தின் பக்கம் சாயத் தேவையில்லை.
     பரீட்சித்து மகாராசாவுக்குப் புரிந்து விட்டது.  எதிரே நிற்பவன் கலிபுருஷன்.  கண்ணபிரான் மறைந்தவுடன் நிலவுலகில் அதர்மத்தை நிலைநாட்ட அடி எடுத்து வைத்துவிட்டான்.  உடனே வில்லில் அம்பைப் பூட்டி நான் இருக்கும் வரையில் தருமம் அடிபடுவதை அனுமதிக்கமாட்டேன் என்று கூறி கணை தொடுக்கத் தயாராகிறான்.  கலிபுருஷன் அஞ்சுகிறான்.  பாண்டவர் வம்சத்தில் வந்தவன் இந்த பரீட்சித்து.  வில்வித்தையில் சிறந்தவன்.  கலிபுருஷன் பரீட்சித்து மகாராசாவிடம் சரணடைகிறான்.  சரணடைந்தவனைக் காப்பது தானே முறை.  எனவே கொல்லாமல் விடுகிறான் பரீட்சித்து.  கெஞ்சுகிறான் பரீட்சித்துவிடம். இந்த நிலவுலகில் ஏதாவது ஓர் இடத்தைக் காண்பியுங்கள்.  நான் அங்கே போய் பிழைத்துக் கொள்கிறேன்.
     பரீட்சித்து மகராசா நான்கு இடங்களை ஒதுக்கீடு செய்கிறான். 
1)      சூதாட்டம் ஆடும் இடம்
2)      மது அருந்தும் இடம்
3)      மங்கைகளிடம் அதிக ஆசை கொண்டு அவர்களுக்கு பணிபுரிபவர்கள் வசிக்கும் இடம்
4)      பிராணிகளை வதை செய்யும் இடம்
கலிபுருஷனுக்கு மனம் திருப்தி அடையவில்லை.  இந்த நான்கும் ஒன்று சேர்கிற இடத்தை எனக்குக் காட்டி அங்கேயும் வாசம் செய்ய அனுமதி கொடுக்க வேண்டும் என்று வேண்டினான்.  தங்கத்தை சுட்டிக்காட்டினான் பரீட்சித்து.
எனவே தான் கலிகாலத்தில் சூதாட்டம், மது அருந்துதல், பெண்டிர் சுகம், புலால் விரும்புதல், தங்க ஆபரண்ங்களை விரும்புதல் ஆகியவற்றிலிருந்து ஒதுங்கி இருக்கும்படி பெரியவர்கள் சொல்கிறார்கள். 
     யார் கேட்கிறார்கள்.  எல்லோரும் கலி புருஷனின் கட்டுப்பாட்டில் அல்லவா இருக்கிறோம்.  சமயம் கிடைக்கும் போதெல்லாம் இறைவனின் திருப்பெயரை உச்சரித்த வண்ணம் இருந்தால் இவற்றில் உள்ள ஆசை கொஞ்சம் கொஞ்சமாகக் குறையும்.  பற்றறுத்தல் என்ற நிலைக்குக் கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து பிறவித் தளையிலிருந்து நாம் விடுபடலாம்.

‘தமிழன் என்று சொல்லடா - Songs of Boothathazhvar

‘தமிழன் என்று சொல்லடா
தலைநிமிர்ந்து நில்லடா‘


அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
இனிபுருகு சிந்தை இடு திரியா நன்புருகி
ஞானச் சுடர் விளக்கேற்றினேன் நாரணற்கு
ஞானத் தமிழ் புரிந்த நான்.
(தகளி-தகழி, அகல் விளக்கு, நன்பு அன்பு, ஆத்மா)
இயல், இசை மற்றும் நாடகத்திற்கு ஏற்றது தமிழ் மொழி.  இனிய மொழி.  இறைவன் விரும்பிய மொழி.  இப்படிப்பட்ட தமிழ் மொழி பயின்று வளர்ந்த பூதத்தாழ்வார் தமிழைப் பயின்றதற்காகப் பெருமைப்படுகிறார்.  தமிழை ஞானத்தமிழ் என்று ஏத்துகிறார்.  தனது அன்பு எனும் அகல்விளக்கில் ஆசை என்னும் நெய்யை இட்டு, மனத்தைத் திரியாக இட்டு உள்ளம் உருக திருமாலுக்கு ஞானச் சுடர் ஏற்றியதாகக் கூறுகிறார் ஆழ்வார்.

தமிழால் பாடல் பாடி இறைவனைத் துதிப்பதைப் பெருமையாகக் கருதியிருக்கிறார்கள் பண்டைய நாளில். பூதத்தாழ்வார் பிறிதொரு பாடலில் கூறுகிறார் பாருங்கள்.

யானே தவஞ் செய்தேன் ஏழ் பிறப்பும் எப்பொழுதும்
யானே தவமுடையேன் எம்பெருமான் யானே
இருந்தமிழ் நன்மாலை இணையடிக்கே சொன்னேன்
பெருந்தமிழன் அல்லேன் பெரிது.

எம்பெருமானே ஏழ்பிறப்பும் யான் தவம் செய்தேன்.  எனவே இரு தமிழ் மாலை இணை அடிக்கே சொன்னேன்.  பெரிது நல்லேன்.  பெருந்தமிழன் நானே என்று கூறி பெருமைப்படுகிறார் பூதத்தாழ்வார்.

பூதத்தாழ்வார் வழியில் நின்று
‘தமிழன் என்று சொல்லடா
தலைநிமிர்ந்து நில்லடா‘

Wednesday, June 22, 2011

திருவாசகத்தில் திருத்தசாங்கம் -


இறைவனது ஊர் எது?

நாம் ஏற்கனவே பாண்டிய நாட்டை இறைவனது நாடு என்று கண்டோம்.  சரி இறைவனது ஊர் எது.? மாணிக்கவாசகரின் திருவாசகத்தில் திருத்தசாங்கம் என்ற பகுதியில் இருக்கிறது இதற்கான விடை.

தாதாடு பூஞ்சோலைத் தத்தாய் நமையாளும்
மாதாடும் பாகத்தன் வாழ்பதி என்? கோதாட்டிப்
பக்தரெல்லாம் பார்மேல்சிவபுரம் போல் கொண்டாடும்
உத்தரகோசைமங்கை ஊர்

ஆம்.  பக்தர்களெல்லாம் நிலவுலகச் சிவலோகமெனப் பாராட்டிச் சிறப்பாகப் போற்றும் திருஉத்தரகோசமங்கை தான் அந்த ஊர்.  சரி இந்த ஊர் எங்கே உள்ளது?  இராமநாதபுரத்திலிருந்து சில கல் தொலைவில் உள்ளது.  பேருந்து வசதி உள்ளது.  திருவாதிரைத் திருநாள் இங்கு மிகச் சிறப்பான திருவிழா ஆகும்.  கண்டு களித்து சொல்லுங்கள்.

சரி இறைவன் மகிழ்ந்து இருக்கும் ஆறு எது. ? இதோ திருத்தசாங்கத்தின் பதில்.

செய்யவாய்ப் பைஞ்சிறகிற் செல்வீ நம் சிந்தை சேர்
ஐயன் பெருந்துறையான் ஆறு உரையாய் தையலாய்
வான்வந்த சிந்தை மலங்கழுவ வந்திழியும்
ஆனந்தங் காணுடையான் ஆறு.

பாசத்தை நீக்கிய பிறகு உள்ளத்தே ஞான அமுதம் ஆறு போல் ஓடும்.  பற்று அறுத்தவர்கள் அந்த பேரின்பத்தை உணர்வார்கள்.  அது தான் சிவபெருமானுடைய ஆறு ஆகும்.

இறைவனின் திருமணக் கோலங்கள் - Four types of sculptures regarding the marriage function of Lord Shiva

இறைவனின் திருமணக் கோலங்கள்

சிவபெருமான் தனது திருமணக் கோலத்தை அகத்தியருக்கும் பிற அன்பர்களுக்கும் பல இடங்களிலே காண்பித்து உள்ளார்.  அப்படிப்பட்ட இடங்களை மங்களபுரி, கல்யாணபுரங்கள் என்று அழைப்பார்கள்.  திருமணத் தடை இருந்தால் இப்படிப்பட்ட இடங்களுக்குப் போய்வாருங்கள் எனப் பெரியவர்களும் சோதிடர்களும் கூறுவது வழக்கம்.
     தென்னகத்தில் இப்படி இறைவனின் திருமணக்கோலங்கள் பல இடங்களில் உள்ளன.  இவற்றை நான்காகப் பிரிக்கலாம்.
சில இடங்கிளல் சிவபெருமான் பார்வதியின் வலக்கரத்தைக் தன் வலக்கரத்தில் தாங்கி நிற்க திருமால் நீர் வார்த்துத் தாரைவார்க்கும் கோலம் முதலாவது வகை.  மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவில் இப்படிப்பட்ட சிற்பம் மிகவும் சிறப்பானதாகும்.  திருவான்மியூர் மற்றும் திருஒற்றியூர் முதலிய ஊர்களில் இப்படிப்பட்ட உருவம் உலாத்திருமேனியாக உள்ளது என்று கூறுகிறார்கள்.
இரண்டாவது கோலம் பார்வதியின் கரத்தைப் பற்றிக் கெண்டு சிவபெருமான் தீவலம் செய்யும் வகையில் அமைந்த கோலம். இப்படிப்பட்ட திருக்கோலம் திருமணஞ்சேரி, வடக்காலத்தூர், வேள்விக்குடி ஆகிய இடங்களில் உள்ளதாகக் கூறப்படுகிறது.
     மூன்றாவது வகைத் திருக்கோலம் திருமணம் நிறைவுபெற்று மணமக்கள் உயர் இருக்கையில் வரம் தரும் திருக்கோலம் ஆகும்.  இதை உமாமகேசுவரக் கோலம் என்பர்.  இப்படிப்பட்ட திருக்கோலம் திருமறைக்காடு, இடும்பாவனம், திருவேற்காடு போன்ற இடங்களில் உள்ளதாகக் கூறப்படுகிறது.  திருமழிசையிலும் மூலவருக்குப் பின்புறம் கடுசர்க்கரை எனப்படும் சுதையால் இக்கோலம் உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
     நான்காவது வகைத் திருக்கோலம் மணமக்கள் ஊர்வலமாகப் போகும் திருக்கோலம்.  இப்படிப்பட்ட மணக்கோலம் திருமுல்லைவாயில்(சென்னையை அடுத்த ஆவடிக்கு அருகில்) மற்றும் திருவீழிமிழலைத் திருத்தலங்களில் உள்ளதாகத் தெரிகிறது

பரீட்சித்து பெயர்க் காரணம் - Srimath Bhagavatham - Parikshith - explanation for the name in tamil language


பரீட்சித்து பெயர்க் காரணம்
பாரதப் போரின் இறுதிக் கட்டத்தில் அசுவத்தாமன் அபாண்ட அத்திரம் என்ற அம்பை உபயோகித்து பாண்டவர்களை அவர்கள் வம்சத்துடன் கொல்ல ஏவுகிறான்.  சீறிப் பாய்கிறது அந்த அத்திரம்.  பாண்டவர்களை நோக்கிச் சீறிப் பாய்ந்த அந்த அத்திரத்தைக் கண்டு அச்சப்பட்டனர் பாண்டவர்கள்.  கண்ணன் அனைவரையும் அச்சப்பட வேண்டாம் எனக் கூறி தனது சக்கரப் படையால் அதைக் கிரகித்துக் கொண்டார்.  அதேபோல உத்தரையின் கர்ப்பத்தில் உள்ள கருவை அந்த அத்திரம் அழிக்க முற்பட்ட போதும் கண்ணன் அந்தக் கருவைக் காப்பாற்றினார்.  எப்படிக் காப்பாற்றினார்?  சங்கு சக்கரத்தை ஏந்தி குழந்தையைச் சுற்றி வந்து அந்த பிரம்மாத்திரத்தை நாசம் செய்தார்.  கருவிலிருந்த அந்தக் குழந்தை ஒளி வீசும் முகமுடைய இவர் யார் என்று யோசிக்கும் போதே மறைந்தார் கண்ணன்.  மாதங்கள் கடந்தன.  சுபத்திரைக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது.  தர்மர் அந்தணர்களை அழைத்து என்ன பெயர் வைக்கலாம் என்று வினவினார்.  அவர்கள்,“இவன் கருவில் இருக்கையில் விஷ்ணுவால் காப்பாற்றப்பட்டதால் இவனுக்கு விஷ்ணுராதன் என்று பெயரிடலாம்“ என்று கூறினார்கள்.  இவன் இராமனைப் போல சத்தியத்தைக் காப்பாற்றும் அரசனாகத் திகழ்வான் என்று அறுதியிட்டு உரைத்தனர்.  விஷ்ணுதரன் நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்தான்.  ஆனால் அவன் கருவில் கண்ட உருவம் அவன் மனக்கண் முன் அடிக்கடி வந்தது.  யாரைப் பார்த்தாலும் அவர் கருவில் கண்ட அந்த மனிதனாக இருப்பாரோ என்று பரீட்சித்துப் பார்த்தான்.  அடிக்கடி பலபேரை இப்படிப் பரீட்சித்துப் பார்த்தால் தான் இவருடைய பெயர் பரீட்சித்து மகராசா என்று வழங்கியது என்று கூறப்படுகிறது.

Monday, June 20, 2011

திருமழிசை - Temples in Thirumazhisai near Chennai

நேற்று ஞாயிற்றுக் கிழமை.  காலையில் சென்னையில் உள்ள புலியூருக்குச் சென்றிருந்தேன்.  ஆம்.  இது தான் இன்றைய வடபழனி என்று அழைக்கப்படும் இடத்தின் பெயர்.  தாம்பரத்தில் இருந்து பேருந்தில் வந்தால் வடபழனி பேருந்து நிறுத்தத்தில் இறங்கியதும் ஒரு பெரிய கோபுரம் தெரியும்.  அதுதான் புலிக்கால் முனிவர் வழிபட்ட இடம் என்று சொல்கிறார்கள்.  எனவே தான் காரணப் பெயராக புலியூர் என்று இருந்திருக்கிறது.  புலியூர் சரோஜா என்றால் உங்களுக்கெல்லாம் நன்றாகத் தெரியும்.  ஆம் மானாட மயிலாட பார்த்து களிப்பவர்கள் தானே நீங்கள்.  அதில் நாட்டிய ஆசிரியர் இருப்பார்.  ஒருவேளை அவர்கள் இந்த பகுதியைச் சேர்ந்தவராக இருக்கலாம்.  சரி நான் சொல்ல வந்தததைச் சொல்கிறேன்.  வடபழனி பேருந்து நிற்குமிடம் வந்தது.  இறங்கினேன்.  ஒரு பழைய நூல்கள் விற்கும் நடைமேடைக் கடை இருந்தது.  அங்கே எனக்கு ஒரு நூல் கிடைத்தது.  நூலைத் திறந்தவுடன் தென்பட்ட பாடல்-

செய்யும் தொழில் சிறக்கும் செல்வ நலம் உயரும்
வையம் செழிப்புற்று வாழ்வு ஓங்கும் தெய்வத்
திருமழிசைக் கோபுரநேர் தேவராசப் பேரார்
குருகணேசன் தாள் தொழுதக்கால்.

உடனே அந்த ஆலயத்தைக் காணவேண்டும் என்ற ஆவல் எழுந்தது.  அருகிலே விசாரித்தேன்.  பூந்தமல்லி வழியாக திருவள்ளூர் செல்லும் பேருந்து உள்ளதாகவும் வடபழனி பேருந்து நிலையத்தில் இருந்து போக முடியும் என்றும் சொன்னார்கள்.  விரைந்தேன்.  பேருந்து கிடைத்தது.  திருமழிசையில் கோயில் முன்பு பேருந்து நிறுத்தம் இருந்தது.  இறங்கினேன்.  இந்த தலம் சென்னை பெங்களூரு நெடுஞ்சாலையில் பூவிருந்தவல்லியை அடுத்து மேற்கே திருவள்ளூர் வழியாகத் திருத்தணித்தணிக்குச்  செல்லும் சாலையில் அமைந்துள்ளது.
     ஒரு பெரியவரை அணுகினேன்.  இந்த ஊருக்குத் திருமழிசை எனப் பெயர் ஏன் வந்தது என வினவினேன்.  என்னை கோவிலில் அமரச் சொல்லி அவர் அந்த ஊரின் வரலாற்றையும் கோவில் வரலாற்றையும் கூறினார்.  முற்காலத்தில் இந்த இடம் அழிஞ்சல் காடாக இருந்துள்ளது.  அப்போது அகத்தியரும் புலத்தியரும் இங்கு சிவதரிசனம் கண்டுள்ளனர்.  செங்கல்பட்டு செங்கை எனப்படுவது போல சைதாப்பேட்டை சைதை எனப்படுவது போல திரு அழிசை என இந்த ஊர் அழைக்கப்பட்டுள்ளது.  திருஅழிசை திருவழிசை ஆனதாகவும் பின்னர் மருவி திருமழிசை ஆகிவிட்டதாகவும் அந்தப் பெரியவர் கூறினார்.  இப்படியெல்லாமா ஊர் பெயர் மாறும் என்று நான் கேட்டதற்கு.  ஏன் தம்பி பூவிருந்தவல்லியை பூந்தமல்லி என்று அரசு அழைக்கிறதே.  அதற்கு என்ன சொல்லுகிறீர்கள் என்று பதில் கேள்வி கேட்டார்.  நான் வாய்மூடி மௌனியாகி விட்டேன்.  இந்த ஊரில் உதித்த ஆழ்வார் பெயர் இந்த ஊரின் பெயராலேயே திருமழிசை ஆழ்வார் என்று வழங்கி வருவதையும் அவர் சுட்டிக் காட்டினார்.  சோழர்கள் காலத்தில் இது பெருநகரமாக இருந்ததாம்.  வைணவர்கள் இருந்த பகுதி அகரம் எனவும் சிவாலயம் இருந்த பகுதி அகத்தீசுவரம் என்ற பெயரிலும் அழைக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.  பின்னர் அகத்தீசுவரம் என்ற பெயரும் மாறி பத்திரங்களில் உடையவர் கோவில் என்று வழங்கியதாகவும் அவர் தெரிவித்தார்.  அகத்தியர் வழிபட்டதால் ஆதியில் அகத்தீசுவரம் என்றே அழைக்கப்பட்டுள்ளது.
     இந்த கோவிலைப் பற்றிய வரலாறு.   அகத்திய முனிவர் அழிஞ்சல் மரத்தின் கீழ் தமது சீடனான புலத்தியருடன் சிவலிங்கம் அமைத்து வழிபட்டு சிவபார்வதி திருமணக் கோலத்தைக் கண்டு மகிழ்ந்த வரலாறு.  அவர் மேலும் கூறியதாவது.  இப்பகுதியில் அழிஞ்சல் மரக்காடுகள் அந்தகாலத்தில் அதிகம் இருந்தன.  அதனையொட்டி இப்பகுதியில் அழிஞ்சல்வாக்கம், அழிசூர், அழிஞ்சங்காடு போன்ற ஊர்கள் இருப்பதாகவும்  ஏர்அழிஞ்சல் மரத்தின் கீழ் இருந்து இறைவனை வழிபட்டால் நினைப்பது சீக்கிரம் நடக்கும் என்றும் அவர் தகவல் கொடுத்தார்.  அழிசூரில் இப்போதும் அழிஞ்சல் மரம் உள்ளது என்றார் அவர்.   
     இந்த ஆலயத்திற்குக் கிழக்கிலும் தெற்கிலும் வாயில்கள் உள்ளன.  கிழக்கு வாயில் குளத்தினை ஒட்டி உள்ளது. தெற்கு வாயிலில் நெடிய கோபுரம் உள்ளது.  உள்ளே நுழைந்தவுடன் கணபதி சன்னிதானம்.  இவரை தேவராச கணபதி என அழைக்கிறார்கள்.  இவரைப் பற்றித் தான் நான் முதலில் வடபழனியில் படித்த பாடல் பாடப்பட்டுள்ளது.
செய்யும் தொழில் சிறக்கும் செல்வ நலம் உயரும்
வையம் செழிப்புற்று வாழ்வு ஓங்கும் தெய்வத்
திருமழிசைக் கோபுரநேர் தேவராசப் பேரார்
குருகணேசன் தாள் தொழுதக்கால்.

வெளிப்பிரகாரத்தை வலம் வந்தேன்.  தென்மேற்கு மூலையில் ஒரு அலங்கார மண்டபம். அடுத்து வடக்குப் பிரகாரத்தில் கிழக்கு நோக்கியவாறு முருகன் சன்னதி.  கருவறையில் வள்ளியம்மை, தெய்வானையுடன் வீரவாகுத் தேவரும் உள்ளார்.  இதற்கு இணையாக தெற்கில் புலத்தியர் வழிபட்ட சிவலிங்கம் உள்ளது.  வடக்குப் பிரகாரத்தில் வாகன அறை.  அதையொட்டி சனீசுவரன் சன்னதி.  அருகிலே ஒரு கிணறு.  கல்யாணதீர்த்தம் என்று பெயர்.  இந்த கிணற்று நீரே கோவிலில் அபிடேகம் முதலியவற்றுக்குப் பயன்படுத்தப்படுவதாகச் சொல்கிறார்கள்.  கிழக்குப் பிரகாரத்தில் பலிபீடம், கொடிமேடை, நந்தி மண்டபம் உள்ளது.  வழிபட்டு பின்னர் உட்பிரகாரத்தை அடைந்தேன்.  இங்கே வடக்கில் தெற்கு நோக்கியவாறு மூன்று சன்னதிகள்.  நடுவில் கூத்தாடும் இறைவன் இறைவியுடன்.  அம்பிகை ஐயனை நோக்குகிறார்.  கிழக்கில் குளிர்ந்தநாயகி சன்னதி.  மேற்கில் காட்சிகொடுத்த நாயகர் சன்னதி.  வலம் வந்தால் மகாமண்டபத்தை அடைகிறோம்.  இங்கே தான் அகத்தியருக்கும் சோழமன்னருக்கும் காட்சி கொடுத்த ஒத்தாண்டேசுவரர் எனும் கைதந்த பிரான் சிவலிங்கத் திருமேனியாகக் காட்சி அளிக்கிறார்.  மேனி சிலிர்த்தது.  மூலவருக்கு நாகாபரணம் அணிவித்து மிக நேர்த்தியாக அலங்காரம் செய்திருந்தார்கள்.  இறைவனின் பின்புறம் ஒரு மாடம்.  அதிலே திருமணக்கோலத்தில் இறைவனும் இறைவியும்.  இறைவனின் திருமணக் கோலம் தான் நாம் காண்பது.  கண் குளிர்ந்தது.
     தமிழகத்தில் இறைவனின் திருமணக் கோலம் நான்கு வடிவங்களில் பல கோவில்களில் உள்ளது.  இதை நாளை நான் விளக்குகிறேன்.

சைவப் பாடல்கள் - Songs on Lord Shiva in Tamil

சைவப் பாடல்கள்

இறைவன் புகழை பன்னிருதிருமுறையும் நாலாயிர திவ்விய பிரபந்தமும் இனிக்க இனிக்கப் பாடின.  செந்தமிழால் பாடின.  தமிழ் என்று சொல்லிக் கொள்வதிலும் தமிழன் என்று சொல்லிக் கொள்வதிலும் பெருமை பட்டார்கள் நம் முன்னோர்கள்.  எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்று இருந்த காலம் அது.  நாம் சில பாடல்களைப் பார்ப்போம்.

திருவாசகம் என்னும் உயரிய சைவ நூலிலே திருத்தசாங்கம் என்று ஒரு பகுதி.  தசாங்கம் என்றால் என்ன?  தச என்றால் பத்து.  அங்கம் என்றால் உறுப்பு.  பத்து உறுப்புகள் என்று பொருள்.  அரசனைப் பற்றி புகழ்ந்து பாடும் போது,
பெயர்
நாடு
ஊர்
ஆறு
மலை
வாகனம்
படை எனும் ஆயுதம்
முரசு,
தார் என்ற சொல்லப்படுகிற மாலை
கொடி
ஆகியவை சிறப்பித்துப் பாடுவது வழக்கம்.  இங்கே மணிவாசகர் இறைவனைப் பற்றிப் பாடும் போது இவற்றை விவரித்துப் பாடுகிறார்.  பாடலை நோக்குவோமா?

முதல் பாடல்
ஏரார் இளங்கிளியே எங்கள் பெருந்துறைக்கோன்
சீரார் திருநாமம் தேர்ந்துரையாய் ஆரூரன்
செம்பெருமான் வெண்மலரான் பாற்கடலான் செப்புவபோல்
எம்பெருமான் தேவர்பிரான் என்று.
 தாமரை மலரிலே அமர்ந்துள்ள அயனும் பாற்கடலில் பள்ளிகொண்டுள்ள அரியும் சிவபெருமானை செம்மைப்பெருமான், எம்பிரான், விண்ணவர் தலைவன் என்று போற்றுகின்றனர். அது போலவே பேர் ஆயிரம் உடைய இறைவனது திருப்பெயர்க்ளை பயன் அறிந்து சொல்ல வேண்டும்.

பேர் சொல்லியாகிவிட்டது.  நாட்டை பற்றிக் கூறவேண்டுமே.  இது சிவபெருமானுடைய நாடு?  இதோ பதில்.

ஏதமிலா இன்சொல் மரகதமே ஏழ் பொழிற்கும்
நாதன் நமை ஆளுடையான் நாடுரையாய் காதலவர்க்கு
அன்பு ஆண்டு மீளா அருள் புரிவான் நாடு என்றும்
தென்பாண்டி நாடே தெளி.

ஈசனைத் தேடி வடநாடு சென்று காசி, கயா, இமயமலை என்றெல்லாம் சுற்ற வேண்டிய அவசியமே இல்லை.  இறைவனின் நாடு தென்பாண்டி நாடு.  அவன் ஆண்ட இடம் மதுரை மாநகரம்.  ஆம்.  அங்கயற்கண்ணியை மணந்து அழகிய மதுரையை ஆண்டவன் அல்லவா ஈசன்.  மதுரை மாநகரில் பல திருவிளையாடல்களை நிகழ்த்தியவன் அல்லவா அந்த சிவபெருமான்.  எனவே தான் ஏழுலகிற்கும் தலைவனான சிவபெருமானது நாடு எது என்று கேட்டால் அன்பர்களின் அன்பினை ஏற்று பிறவித்தளையை அறுத்து மீண்டும் கருவில் உருவாகாதபடி பிறவி நோயை அகற்றி நமக்கெல்லாம் நன்மை செய்பவனது நாடு தெற்கின் கண் உள்ள பாண்டிய நாடே ஆகும்.

வைணவப் பாடல்கள் - Thirumangai Alwar thirukurunthandagam song

வைணவப் பாடல்கள்

நிதியினைப் பவளத் தூணை நெறிமையால் நினையவல்லார்
கதியினைக் கஞ்சன் மாளக் கண்டு முன் அண்டம் ஆளும்
மதியினை மாலை வாழ்த்தி வணங்கி என் மனத்து வந்த
விதியினைக் கண்டு கொண்ட தொண்டனேன் விடுகிலேனே.

திருமங்கை ஆழ்வார் நெடுமாலை எப்படியெல்லாம் புகழ்ந்து பாடுகிறார் பாருங்கள்.  எளிமையான தமிழ்.
செல்வக் குவியலை
பவளத்தூண் போன்றவனை
மனதை நெறிப்படுத்தி நினைக்க வல்லவர்களுக்கு துணையாய் இருப்பவனை
உலகெங்கும் அட்டூழியம் செய்த கம்சனை அழித்து பின்னர் உலகத்தை காப்பதிலே அக்கறை செலுத்தியவனை
திருமாலை
நான் வாழ்த்தி வணங்கி என் மனத்திலே நிறுத்தி என் விதியை மாற்றவல்லவன் இவன் என்ற காரணத்தால் தொண்டனாகிய நான் என் இறைவனை இனிவிட மாட்டேன்.  பிரியமாட்டேன்.

செல்வம் என்று சொல்லி இருக்கலாம்.  ஆனால் நிதி என்று ஆழ்வார் சொல்லுகிறார்.  நிதி என்பது செல்வக் குவியல்.  நிதியை நவநிதிகள் என்றும் சொல்லுவார்கள்.  நவநிதிகள் யாவை?  கச்சநிதி, கற்பநிதி, சங்கநிதி, பதுமநிதி, நந்த நிதி, நீல நிதி, மகாநிதி, மகாபதும நிதி, முகுந்த நிதி ஆகியவையே நவநிதிகள் ஆகும்
சரி.  இந்தப் பாடல் மூலம் நாம் கற்றுக் கொண்ட தமிழ்ச் சொற்கள் என்ன?
நிதி என்றால் பொருள், செல்வம்
கதி என்றால் வழி, மார்க்கம்
மதி என்றால் அறிவு
மால் என்றால் திருமால்
மேற்கண்ட பாடல் திருமங்கை ஆழ்வார் அவர்களின் திருக்குறுந்தாண்டகத்தில் முதல் பாடல்.

சரி அடுத்த பாடலுக்குப் போவோமா?

காற்றினைப் புனலைத் தீயைக் கடி மதிள் இலங்கை செற்ற
ஏற்றினை இமயமேய எழில் மணித்திரளை இன்ப
ஆற்றினை அமுதம் தன்னை அவுணர் ஆருயிரை உண்ட
கூற்றினை குணங்கொண்டு உள்ளம் கூறு நீ கூறுமாறே

காற்று-நீர்-தீ- நிலம்- வானம் ஆகியவை கட்டுக்கோப்புடன் இருந்த வலிமையான மதிள்கள் அமைந்த இலங்கையை அழித்த சிங்கத்தை
இமயமலையில் எழுந்தருளி இருக்கும் மணித்திரட்சியை,
பேரின்பப் பெருவெள்ளத்தை,
அமுதம் போன்றவனை,
அசுரர் உயிரை உண்ட கூற்றுவன் போன்றவனை
மனமே நீ அந்த இறைவனுடைய குணங்களை வகைப்படுத்திக் கூறு.
பொதுவாக ஐம்பூதங்களை இறைவனின் வடிவமாகக் காண்பது தமிழ் மரபு.  இறைவனைப் போற்றும் போது
பூ நிலாய ஐந்துமாய்
புனற்கண் நின்ற நான்குமாய்
தீநிலாய மூன்றுமாய்
சிறந்த காலிரண்டுமாய்,
மீநிலாய தொன்றுமாகி (திருச்சந்த விருத்தம்)
என்று வரிசைப்படுத்துவார்கள்.

ஒன்றினிற் போற்றிய விசும்பு நீயே
இரண்டின் உணரும் வளியும் நீயே
மூன்றின் உணரும் தீயும் நீயே
நான்கின் உணரும் நீரும்  நீயே
ஐந்துடன் முற்றிய நிலனும் நீயே
என்று பரிபாடல் பாட்டு ஒன்று கூறும்.
இந்தப் பாடல் மூலம் நாம் கற்றுக் கொண்ட தமிழ்ச் சொற்கள்
புனல்-நீர், கடி-காவல், ஏறு-காளை மற்றும் சிங்கம்