Monday, June 20, 2011

வைணவப் பாடல்கள் - Thirumangai Alwar thirukurunthandagam song

வைணவப் பாடல்கள்

நிதியினைப் பவளத் தூணை நெறிமையால் நினையவல்லார்
கதியினைக் கஞ்சன் மாளக் கண்டு முன் அண்டம் ஆளும்
மதியினை மாலை வாழ்த்தி வணங்கி என் மனத்து வந்த
விதியினைக் கண்டு கொண்ட தொண்டனேன் விடுகிலேனே.

திருமங்கை ஆழ்வார் நெடுமாலை எப்படியெல்லாம் புகழ்ந்து பாடுகிறார் பாருங்கள்.  எளிமையான தமிழ்.
செல்வக் குவியலை
பவளத்தூண் போன்றவனை
மனதை நெறிப்படுத்தி நினைக்க வல்லவர்களுக்கு துணையாய் இருப்பவனை
உலகெங்கும் அட்டூழியம் செய்த கம்சனை அழித்து பின்னர் உலகத்தை காப்பதிலே அக்கறை செலுத்தியவனை
திருமாலை
நான் வாழ்த்தி வணங்கி என் மனத்திலே நிறுத்தி என் விதியை மாற்றவல்லவன் இவன் என்ற காரணத்தால் தொண்டனாகிய நான் என் இறைவனை இனிவிட மாட்டேன்.  பிரியமாட்டேன்.

செல்வம் என்று சொல்லி இருக்கலாம்.  ஆனால் நிதி என்று ஆழ்வார் சொல்லுகிறார்.  நிதி என்பது செல்வக் குவியல்.  நிதியை நவநிதிகள் என்றும் சொல்லுவார்கள்.  நவநிதிகள் யாவை?  கச்சநிதி, கற்பநிதி, சங்கநிதி, பதுமநிதி, நந்த நிதி, நீல நிதி, மகாநிதி, மகாபதும நிதி, முகுந்த நிதி ஆகியவையே நவநிதிகள் ஆகும்
சரி.  இந்தப் பாடல் மூலம் நாம் கற்றுக் கொண்ட தமிழ்ச் சொற்கள் என்ன?
நிதி என்றால் பொருள், செல்வம்
கதி என்றால் வழி, மார்க்கம்
மதி என்றால் அறிவு
மால் என்றால் திருமால்
மேற்கண்ட பாடல் திருமங்கை ஆழ்வார் அவர்களின் திருக்குறுந்தாண்டகத்தில் முதல் பாடல்.

சரி அடுத்த பாடலுக்குப் போவோமா?

காற்றினைப் புனலைத் தீயைக் கடி மதிள் இலங்கை செற்ற
ஏற்றினை இமயமேய எழில் மணித்திரளை இன்ப
ஆற்றினை அமுதம் தன்னை அவுணர் ஆருயிரை உண்ட
கூற்றினை குணங்கொண்டு உள்ளம் கூறு நீ கூறுமாறே

காற்று-நீர்-தீ- நிலம்- வானம் ஆகியவை கட்டுக்கோப்புடன் இருந்த வலிமையான மதிள்கள் அமைந்த இலங்கையை அழித்த சிங்கத்தை
இமயமலையில் எழுந்தருளி இருக்கும் மணித்திரட்சியை,
பேரின்பப் பெருவெள்ளத்தை,
அமுதம் போன்றவனை,
அசுரர் உயிரை உண்ட கூற்றுவன் போன்றவனை
மனமே நீ அந்த இறைவனுடைய குணங்களை வகைப்படுத்திக் கூறு.
பொதுவாக ஐம்பூதங்களை இறைவனின் வடிவமாகக் காண்பது தமிழ் மரபு.  இறைவனைப் போற்றும் போது
பூ நிலாய ஐந்துமாய்
புனற்கண் நின்ற நான்குமாய்
தீநிலாய மூன்றுமாய்
சிறந்த காலிரண்டுமாய்,
மீநிலாய தொன்றுமாகி (திருச்சந்த விருத்தம்)
என்று வரிசைப்படுத்துவார்கள்.

ஒன்றினிற் போற்றிய விசும்பு நீயே
இரண்டின் உணரும் வளியும் நீயே
மூன்றின் உணரும் தீயும் நீயே
நான்கின் உணரும் நீரும்  நீயே
ஐந்துடன் முற்றிய நிலனும் நீயே
என்று பரிபாடல் பாட்டு ஒன்று கூறும்.
இந்தப் பாடல் மூலம் நாம் கற்றுக் கொண்ட தமிழ்ச் சொற்கள்
புனல்-நீர், கடி-காவல், ஏறு-காளை மற்றும் சிங்கம்


No comments:

Post a Comment