கண்ணபெருமான் இந்த நிலவுலகை விட்டு நீத்ததும், பாண்டவர்களும் இந்த உலகத்தை விட்டுச் செல்ல முடிவெடுக்கிறார்கள். தருமர் அபிமன்யுவின் மகனான பரீட்சித்துவை அரசபீடத்தில் அமரவைத்து முடிசூட்டுகிறார். பின்னர் அனைவரும் விண்ணுலகம் செல்கின்றனர். தருமரால் முடிசூட்டப்பட்ட பரீட்சித்து சிறந்த முறையில் அரசோச்சுகிறான். அவன் உத்தரனுடைய பெண் இராவதியை மணந்து கொள்கிறான். இவனுக்கு சனமேசயன் முதலிய நான்கு குமாரர்கள் பிறக்கிறார்கள். இப்படி இருக்கும்போது பரீட்சித்து மகாராசா தன் நாட்டை சுற்றிப்பார்த்து வரும்போது ஒரு இடத்தில் மூன்று கால்களை இழந்து ஒற்றைக்காலில் நிற்கும் ஒரு காளையையும் அருகில் கண்ணீர்விட்டுக் கொண்டு நிற்கும் பசுவையும் இவைகளின் அருகே சாட்டையுடன் ஒருவன் நின்று காளையை அடிப்பதையும் காண்கிறான்.
மூன்று காலை இழந்து நிற்கும் காளை தர்மதேவதை. கிருதயுகத்தில் தர்மதேவதையான இந்த காளைக்கு நான்கு கால்கள். திரேதாயுகத்தில் தர்மம் குறைந்ததால் ஒரு கால் குறைந்து கால்கள் மூன்றானது. துவாபரயுகத்தில் மற்றொரு காலை இழந்தது. கலியுகத்தில் கலிபுருஷனிடம் அதர்மம் கூடியிருந்ததால் இன்னொரு காலையும் இழந்து ஒற்றைக் காலில் நிற்கிறது தர்மதேவதை. அருகே நிற்கும் பசு தான் பூமாதேவி. கலிபுருஷனின் அதர்ம ஆதிக்கத்தைக் கண்டு கண்ணீர் விடுகிறார் பூமித்தாய். தர்மதேவதையோ மனிதர்களைக் காப்பதற்காக உருவெடுத்து வந்துள்ளது. ஆனால் மனிதர்களோ தர்மத்தை கொஞ்சம் கொஞ்சமாக காவு கொடுக்கிறார்கள். இதனால் காளையின் மூன்று கால்கள் இல்லாமல் போய்விட்டன. சாட்டையுடன் காளையின் அருகில் நின்று காளையை மிரட்டி அடித்துக் கொண்டிருப்பவன் தான் கலிபுருஷன். தர்மத்தையே மிரட்டும் வலிமை கொண்டு அதர்மத்தை ஆட்சிபுரிய அனுமதித்தவன் தான் இந்த கலிபுருஷன். இதிலிருந்து நாம் தெரிந்து கொள்வது என்ன? அதர்மத்தின் கை இந்த கலியுகத்தில் ஓங்கித் தான் நிற்கும். அதற்காக நாம் அதர்மத்தின் பக்கம் சாயத் தேவையில்லை.
பரீட்சித்து மகாராசாவுக்குப் புரிந்து விட்டது. எதிரே நிற்பவன் கலிபுருஷன். கண்ணபிரான் மறைந்தவுடன் நிலவுலகில் அதர்மத்தை நிலைநாட்ட அடி எடுத்து வைத்துவிட்டான். உடனே வில்லில் அம்பைப் பூட்டி நான் இருக்கும் வரையில் தருமம் அடிபடுவதை அனுமதிக்கமாட்டேன் என்று கூறி கணை தொடுக்கத் தயாராகிறான். கலிபுருஷன் அஞ்சுகிறான். பாண்டவர் வம்சத்தில் வந்தவன் இந்த பரீட்சித்து. வில்வித்தையில் சிறந்தவன். கலிபுருஷன் பரீட்சித்து மகாராசாவிடம் சரணடைகிறான். சரணடைந்தவனைக் காப்பது தானே முறை. எனவே கொல்லாமல் விடுகிறான் பரீட்சித்து. கெஞ்சுகிறான் பரீட்சித்துவிடம். “இந்த நிலவுலகில் ஏதாவது ஓர் இடத்தைக் காண்பியுங்கள். நான் அங்கே போய் பிழைத்துக் கொள்கிறேன்.”
பரீட்சித்து மகராசா நான்கு இடங்களை ஒதுக்கீடு செய்கிறான்.
1) சூதாட்டம் ஆடும் இடம்
2) மது அருந்தும் இடம்
3) மங்கைகளிடம் அதிக ஆசை கொண்டு அவர்களுக்கு பணிபுரிபவர்கள் வசிக்கும் இடம்
4) பிராணிகளை வதை செய்யும் இடம்
கலிபுருஷனுக்கு மனம் திருப்தி அடையவில்லை. இந்த நான்கும் ஒன்று சேர்கிற இடத்தை எனக்குக் காட்டி அங்கேயும் வாசம் செய்ய அனுமதி கொடுக்க வேண்டும் என்று வேண்டினான். தங்கத்தை சுட்டிக்காட்டினான் பரீட்சித்து.
எனவே தான் கலிகாலத்தில் சூதாட்டம், மது அருந்துதல், பெண்டிர் சுகம், புலால் விரும்புதல், தங்க ஆபரண்ங்களை விரும்புதல் ஆகியவற்றிலிருந்து ஒதுங்கி இருக்கும்படி பெரியவர்கள் சொல்கிறார்கள்.
யார் கேட்கிறார்கள். எல்லோரும் கலி புருஷனின் கட்டுப்பாட்டில் அல்லவா இருக்கிறோம். சமயம் கிடைக்கும் போதெல்லாம் இறைவனின் திருப்பெயரை உச்சரித்த வண்ணம் இருந்தால் இவற்றில் உள்ள ஆசை கொஞ்சம் கொஞ்சமாகக் குறையும். பற்றறுத்தல் என்ற நிலைக்குக் கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து பிறவித் தளையிலிருந்து நாம் விடுபடலாம்.
No comments:
Post a Comment