இறைவனின் திருமணக் கோலங்கள்
சிவபெருமான் தனது திருமணக் கோலத்தை அகத்தியருக்கும் பிற அன்பர்களுக்கும் பல இடங்களிலே காண்பித்து உள்ளார். அப்படிப்பட்ட இடங்களை மங்களபுரி, கல்யாணபுரங்கள் என்று அழைப்பார்கள். திருமணத் தடை இருந்தால் இப்படிப்பட்ட இடங்களுக்குப் போய்வாருங்கள் எனப் பெரியவர்களும் சோதிடர்களும் கூறுவது வழக்கம்.
தென்னகத்தில் இப்படி இறைவனின் திருமணக்கோலங்கள் பல இடங்களில் உள்ளன. இவற்றை நான்காகப் பிரிக்கலாம்.
சில இடங்கிளல் சிவபெருமான் பார்வதியின் வலக்கரத்தைக் தன் வலக்கரத்தில் தாங்கி நிற்க திருமால் நீர் வார்த்துத் தாரைவார்க்கும் கோலம் முதலாவது வகை. மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவில் இப்படிப்பட்ட சிற்பம் மிகவும் சிறப்பானதாகும். திருவான்மியூர் மற்றும் திருஒற்றியூர் முதலிய ஊர்களில் இப்படிப்பட்ட உருவம் உலாத்திருமேனியாக உள்ளது என்று கூறுகிறார்கள்.
இரண்டாவது கோலம் பார்வதியின் கரத்தைப் பற்றிக் கெண்டு சிவபெருமான் தீவலம் செய்யும் வகையில் அமைந்த கோலம். இப்படிப்பட்ட திருக்கோலம் திருமணஞ்சேரி, வடக்காலத்தூர், வேள்விக்குடி ஆகிய இடங்களில் உள்ளதாகக் கூறப்படுகிறது.
மூன்றாவது வகைத் திருக்கோலம் திருமணம் நிறைவுபெற்று மணமக்கள் உயர் இருக்கையில் வரம் தரும் திருக்கோலம் ஆகும். இதை உமாமகேசுவரக் கோலம் என்பர். இப்படிப்பட்ட திருக்கோலம் திருமறைக்காடு, இடும்பாவனம், திருவேற்காடு போன்ற இடங்களில் உள்ளதாகக் கூறப்படுகிறது. திருமழிசையிலும் மூலவருக்குப் பின்புறம் கடுசர்க்கரை எனப்படும் சுதையால் இக்கோலம் உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நான்காவது வகைத் திருக்கோலம் மணமக்கள் ஊர்வலமாகப் போகும் திருக்கோலம். இப்படிப்பட்ட மணக்கோலம் திருமுல்லைவாயில்(சென்னையை அடுத்த ஆவடிக்கு அருகில்) மற்றும் திருவீழிமிழலைத் திருத்தலங்களில் உள்ளதாகத் தெரிகிறது
No comments:
Post a Comment