சைவப் பாடல்கள்
இறைவன் புகழை பன்னிருதிருமுறையும் நாலாயிர திவ்விய பிரபந்தமும் இனிக்க இனிக்கப் பாடின. செந்தமிழால் பாடின. தமிழ் என்று சொல்லிக் கொள்வதிலும் தமிழன் என்று சொல்லிக் கொள்வதிலும் பெருமை பட்டார்கள் நம் முன்னோர்கள். எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்று இருந்த காலம் அது. நாம் சில பாடல்களைப் பார்ப்போம்.
திருவாசகம் என்னும் உயரிய சைவ நூலிலே திருத்தசாங்கம் என்று ஒரு பகுதி. தசாங்கம் என்றால் என்ன? தச என்றால் பத்து. அங்கம் என்றால் உறுப்பு. பத்து உறுப்புகள் என்று பொருள். அரசனைப் பற்றி புகழ்ந்து பாடும் போது,
பெயர்
நாடு
ஊர்
ஆறு
மலை
வாகனம்
படை எனும் ஆயுதம்
முரசு,
தார் என்ற சொல்லப்படுகிற மாலை
கொடி
ஆகியவை சிறப்பித்துப் பாடுவது வழக்கம். இங்கே மணிவாசகர் இறைவனைப் பற்றிப் பாடும் போது இவற்றை விவரித்துப் பாடுகிறார். பாடலை நோக்குவோமா?
முதல் பாடல்
ஏரார் இளங்கிளியே எங்கள் பெருந்துறைக்கோன்
சீரார் திருநாமம் தேர்ந்துரையாய் – ஆரூரன்
செம்பெருமான் வெண்மலரான் பாற்கடலான் செப்புவபோல்
எம்பெருமான் தேவர்பிரான் என்று.
தாமரை மலரிலே அமர்ந்துள்ள அயனும் பாற்கடலில் பள்ளிகொண்டுள்ள அரியும் சிவபெருமானை செம்மைப்பெருமான், எம்பிரான், விண்ணவர் தலைவன் என்று போற்றுகின்றனர். அது போலவே பேர் ஆயிரம் உடைய இறைவனது திருப்பெயர்க்ளை பயன் அறிந்து சொல்ல வேண்டும்.
பேர் சொல்லியாகிவிட்டது. நாட்டை பற்றிக் கூறவேண்டுமே. இது சிவபெருமானுடைய நாடு? இதோ பதில்.
ஏதமிலா இன்சொல் மரகதமே ஏழ் பொழிற்கும்
நாதன் நமை ஆளுடையான் நாடுரையாய் – காதலவர்க்கு
அன்பு ஆண்டு மீளா அருள் புரிவான் நாடு என்றும்
தென்பாண்டி நாடே தெளி.
ஈசனைத் தேடி வடநாடு சென்று காசி, கயா, இமயமலை என்றெல்லாம் சுற்ற வேண்டிய அவசியமே இல்லை. இறைவனின் நாடு தென்பாண்டி நாடு. அவன் ஆண்ட இடம் மதுரை மாநகரம். ஆம். அங்கயற்கண்ணியை மணந்து அழகிய மதுரையை ஆண்டவன் அல்லவா ஈசன். மதுரை மாநகரில் பல திருவிளையாடல்களை நிகழ்த்தியவன் அல்லவா அந்த சிவபெருமான். எனவே தான் ஏழுலகிற்கும் தலைவனான சிவபெருமானது நாடு எது என்று கேட்டால் அன்பர்களின் அன்பினை ஏற்று பிறவித்தளையை அறுத்து மீண்டும் கருவில் உருவாகாதபடி பிறவி நோயை அகற்றி நமக்கெல்லாம் நன்மை செய்பவனது நாடு தெற்கின் கண் உள்ள பாண்டிய நாடே ஆகும்.
No comments:
Post a Comment