பரீட்சித்து பெயர்க் காரணம்
பாரதப் போரின் இறுதிக் கட்டத்தில் அசுவத்தாமன் அபாண்ட அத்திரம் என்ற அம்பை உபயோகித்து பாண்டவர்களை அவர்கள் வம்சத்துடன் கொல்ல ஏவுகிறான். சீறிப் பாய்கிறது அந்த அத்திரம். பாண்டவர்களை நோக்கிச் சீறிப் பாய்ந்த அந்த அத்திரத்தைக் கண்டு அச்சப்பட்டனர் பாண்டவர்கள். கண்ணன் அனைவரையும் அச்சப்பட வேண்டாம் எனக் கூறி தனது சக்கரப் படையால் அதைக் கிரகித்துக் கொண்டார். அதேபோல உத்தரையின் கர்ப்பத்தில் உள்ள கருவை அந்த அத்திரம் அழிக்க முற்பட்ட போதும் கண்ணன் அந்தக் கருவைக் காப்பாற்றினார். எப்படிக் காப்பாற்றினார்? சங்கு சக்கரத்தை ஏந்தி குழந்தையைச் சுற்றி வந்து அந்த பிரம்மாத்திரத்தை நாசம் செய்தார். கருவிலிருந்த அந்தக் குழந்தை ஒளி வீசும் முகமுடைய இவர் யார் என்று யோசிக்கும் போதே மறைந்தார் கண்ணன். மாதங்கள் கடந்தன. சுபத்திரைக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது. தர்மர் அந்தணர்களை அழைத்து என்ன பெயர் வைக்கலாம் என்று வினவினார். அவர்கள்,“இவன் கருவில் இருக்கையில் விஷ்ணுவால் காப்பாற்றப்பட்டதால் இவனுக்கு விஷ்ணுராதன் என்று பெயரிடலாம்“ என்று கூறினார்கள். இவன் இராமனைப் போல சத்தியத்தைக் காப்பாற்றும் அரசனாகத் திகழ்வான் என்று அறுதியிட்டு உரைத்தனர். விஷ்ணுதரன் நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்தான். ஆனால் அவன் கருவில் கண்ட உருவம் அவன் மனக்கண் முன் அடிக்கடி வந்தது. யாரைப் பார்த்தாலும் அவர் கருவில் கண்ட அந்த மனிதனாக இருப்பாரோ என்று பரீட்சித்துப் பார்த்தான். அடிக்கடி பலபேரை இப்படிப் பரீட்சித்துப் பார்த்தால் தான் இவருடைய பெயர் பரீட்சித்து மகராசா என்று வழங்கியது என்று கூறப்படுகிறது.
No comments:
Post a Comment