திருமால் பத்து அவதாரங்கள் எடுத்ததாகத் தான் நாம் கதைகளின் மூலம் அறிகிறோம். ஆனால் ஸ்ரீமத் பாகவதத்தைப் படிப்பவர்கள் திருமால் உலகின் நன்மைக்காகப் பல அவதாரங்களை எடுத்து இருப்பதை அறியலாம்.
இந்த நிலவுலகத்தை நிலைநிறுத்த பாதாளத்தில் இருந்து பூமியை வெளிப்படுத்த எடுத்தது வராக அவதாரம்.
சனத்குமாரர்களாகத் தோன்றியவரும் நாராயணனே
தர்மன் என்னும் முனிவருக்கும் அவர் மனைவி கலைக்கும் மகன்களாக நரநாராயணன்களாக அவதாரம் எடுத்ததும் திருமாலே
ஆசூரி என்னும் முனிவருக்கு அழிந்து போன சாங்கிய சாத்திரத்தை உபதேசிப்பதற்காக எடுத்த அவதாரம் தான் கபில அவதாரம்
இறைவனே தனக்கு மகனாகப் பிறக்க வேண்டும் என அத்ரி முனிவர் நினைக்கிறார். அவர் ஆசையை நிறைவேற்ற அவருக்கும் அனசூயைக்கும் தத்தாத்ரேயன் என்ற மகனாக அவதரித்தவர் பாற்கடலில் பள்ளி கொண்ட பெருமாள் தான்.
ருசி என்ற பிரசாபதிக்கு ஆகூதியிடம் யக்ஞன் என்னும் மகனாகத் தோன்றியவர் அரங்கநாதரே.
நாபி என்பவருக்கும் அவர் மனைவி மேருக்கும் ரிஷபன் என்னும் பெயரில் மகனாக அவதரித்தவர் திருமாலே.
பூமாதேவியிடமிருந்து மருத்துவப் பொருட்களைப் பெற பிருது என்னும் மன்னனாக அவதரித்தவர் நெடுமாலே.
மதுரை மாநகரிலே கிருதுமால் நதியிலே மீன் அவதாரம் எடுத்ததும் பரந்தாமன் திருமாலே.
அமுதத்திற்காக தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்த போது ஆமையாக உருவெடுத்ததும் திருமாலே.
அப்படிக் கடலைக் கடக்கும் போது தன்வந்தரியாக வருவதும் பரந்தாமனே.
அசுரர்களை ஏமாற்றி அமுதத்தை தேவர்களுக்குக் கொடுக்க மோகினி அவதாரம் எடுப்பதும் வாசுதேவனே.
பிரகலாதனைக் காக்க நரசிம்ம அவதாரம் எடுத்ததும் திருமாலே.
பின்னர் பரசுராமராக, இராமராக, கண்ணனாக அவதரித்ததும் நெடுமாலே.
இப்படிப் பல அவதாரங்களின் சிறப்புகள் ஸ்ரீமத் பாகவதத்திலே கூறப்படுகின்றன. பிறவித் தளையிலிருந்து விடுபட இறைவனின் புகழைப் போற்றும் பாகவதத்தைப் படியுங்கள்.
No comments:
Post a Comment