நேற்று ஞாயிற்றுக் கிழமை. காலையில் சென்னையில் உள்ள புலியூருக்குச் சென்றிருந்தேன். ஆம். இது தான் இன்றைய வடபழனி என்று அழைக்கப்படும் இடத்தின் பெயர். தாம்பரத்தில் இருந்து பேருந்தில் வந்தால் வடபழனி பேருந்து நிறுத்தத்தில் இறங்கியதும் ஒரு பெரிய கோபுரம் தெரியும். அதுதான் புலிக்கால் முனிவர் வழிபட்ட இடம் என்று சொல்கிறார்கள். எனவே தான் காரணப் பெயராக புலியூர் என்று இருந்திருக்கிறது. புலியூர் சரோஜா என்றால் உங்களுக்கெல்லாம் நன்றாகத் தெரியும். ஆம் மானாட மயிலாட பார்த்து களிப்பவர்கள் தானே நீங்கள். அதில் நாட்டிய ஆசிரியர் இருப்பார். ஒருவேளை அவர்கள் இந்த பகுதியைச் சேர்ந்தவராக இருக்கலாம். சரி நான் சொல்ல வந்தததைச் சொல்கிறேன். வடபழனி பேருந்து நிற்குமிடம் வந்தது. இறங்கினேன். ஒரு பழைய நூல்கள் விற்கும் நடைமேடைக் கடை இருந்தது. அங்கே எனக்கு ஒரு நூல் கிடைத்தது. நூலைத் திறந்தவுடன் தென்பட்ட பாடல்-
செய்யும் தொழில் சிறக்கும் செல்வ நலம் உயரும்
வையம் செழிப்புற்று வாழ்வு ஓங்கும் – தெய்வத்
திருமழிசைக் கோபுரநேர் தேவராசப் பேரார்
குருகணேசன் தாள் தொழுதக்கால்.
உடனே அந்த ஆலயத்தைக் காணவேண்டும் என்ற ஆவல் எழுந்தது. அருகிலே விசாரித்தேன். பூந்தமல்லி வழியாக திருவள்ளூர் செல்லும் பேருந்து உள்ளதாகவும் வடபழனி பேருந்து நிலையத்தில் இருந்து போக முடியும் என்றும் சொன்னார்கள். விரைந்தேன். பேருந்து கிடைத்தது. திருமழிசையில் கோயில் முன்பு பேருந்து நிறுத்தம் இருந்தது. இறங்கினேன். இந்த தலம் சென்னை – பெங்களூரு நெடுஞ்சாலையில் பூவிருந்தவல்லியை அடுத்து மேற்கே திருவள்ளூர் வழியாகத் திருத்தணித்தணிக்குச் செல்லும் சாலையில் அமைந்துள்ளது.
ஒரு பெரியவரை அணுகினேன். இந்த ஊருக்குத் திருமழிசை எனப் பெயர் ஏன் வந்தது என வினவினேன். என்னை கோவிலில் அமரச் சொல்லி அவர் அந்த ஊரின் வரலாற்றையும் கோவில் வரலாற்றையும் கூறினார். முற்காலத்தில் இந்த இடம் அழிஞ்சல் காடாக இருந்துள்ளது. அப்போது அகத்தியரும் புலத்தியரும் இங்கு சிவதரிசனம் கண்டுள்ளனர். செங்கல்பட்டு செங்கை எனப்படுவது போல சைதாப்பேட்டை சைதை எனப்படுவது போல திரு அழிசை என இந்த ஊர் அழைக்கப்பட்டுள்ளது. திருஅழிசை திருவழிசை ஆனதாகவும் பின்னர் மருவி திருமழிசை ஆகிவிட்டதாகவும் அந்தப் பெரியவர் கூறினார். இப்படியெல்லாமா ஊர் பெயர் மாறும் என்று நான் கேட்டதற்கு. ஏன் தம்பி பூவிருந்தவல்லியை பூந்தமல்லி என்று அரசு அழைக்கிறதே. அதற்கு என்ன சொல்லுகிறீர்கள் என்று பதில் கேள்வி கேட்டார். நான் வாய்மூடி மௌனியாகி விட்டேன். இந்த ஊரில் உதித்த ஆழ்வார் பெயர் இந்த ஊரின் பெயராலேயே திருமழிசை ஆழ்வார் என்று வழங்கி வருவதையும் அவர் சுட்டிக் காட்டினார். சோழர்கள் காலத்தில் இது பெருநகரமாக இருந்ததாம். வைணவர்கள் இருந்த பகுதி அகரம் எனவும் சிவாலயம் இருந்த பகுதி அகத்தீசுவரம் என்ற பெயரிலும் அழைக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். பின்னர் அகத்தீசுவரம் என்ற பெயரும் மாறி பத்திரங்களில் உடையவர் கோவில் என்று வழங்கியதாகவும் அவர் தெரிவித்தார். அகத்தியர் வழிபட்டதால் ஆதியில் அகத்தீசுவரம் என்றே அழைக்கப்பட்டுள்ளது.
இந்த கோவிலைப் பற்றிய வரலாறு. அகத்திய முனிவர் அழிஞ்சல் மரத்தின் கீழ் தமது சீடனான புலத்தியருடன் சிவலிங்கம் அமைத்து வழிபட்டு சிவபார்வதி திருமணக் கோலத்தைக் கண்டு மகிழ்ந்த வரலாறு. அவர் மேலும் கூறியதாவது. இப்பகுதியில் அழிஞ்சல் மரக்காடுகள் அந்தகாலத்தில் அதிகம் இருந்தன. அதனையொட்டி இப்பகுதியில் அழிஞ்சல்வாக்கம், அழிசூர், அழிஞ்சங்காடு போன்ற ஊர்கள் இருப்பதாகவும் ஏர்அழிஞ்சல் மரத்தின் கீழ் இருந்து இறைவனை வழிபட்டால் நினைப்பது சீக்கிரம் நடக்கும் என்றும் அவர் தகவல் கொடுத்தார். அழிசூரில் இப்போதும் அழிஞ்சல் மரம் உள்ளது என்றார் அவர்.
இந்த ஆலயத்திற்குக் கிழக்கிலும் தெற்கிலும் வாயில்கள் உள்ளன. கிழக்கு வாயில் குளத்தினை ஒட்டி உள்ளது. தெற்கு வாயிலில் நெடிய கோபுரம் உள்ளது. உள்ளே நுழைந்தவுடன் கணபதி சன்னிதானம். இவரை தேவராச கணபதி என அழைக்கிறார்கள். இவரைப் பற்றித் தான் நான் முதலில் வடபழனியில் படித்த பாடல் பாடப்பட்டுள்ளது.
செய்யும் தொழில் சிறக்கும் செல்வ நலம் உயரும்
வையம் செழிப்புற்று வாழ்வு ஓங்கும் – தெய்வத்
திருமழிசைக் கோபுரநேர் தேவராசப் பேரார்
குருகணேசன் தாள் தொழுதக்கால்.
வெளிப்பிரகாரத்தை வலம் வந்தேன். தென்மேற்கு மூலையில் ஒரு அலங்கார மண்டபம். அடுத்து வடக்குப் பிரகாரத்தில் கிழக்கு நோக்கியவாறு முருகன் சன்னதி. கருவறையில் வள்ளியம்மை, தெய்வானையுடன் வீரவாகுத் தேவரும் உள்ளார். இதற்கு இணையாக தெற்கில் புலத்தியர் வழிபட்ட சிவலிங்கம் உள்ளது. வடக்குப் பிரகாரத்தில் வாகன அறை. அதையொட்டி சனீசுவரன் சன்னதி. அருகிலே ஒரு கிணறு. கல்யாணதீர்த்தம் என்று பெயர். இந்த கிணற்று நீரே கோவிலில் அபிடேகம் முதலியவற்றுக்குப் பயன்படுத்தப்படுவதாகச் சொல்கிறார்கள். கிழக்குப் பிரகாரத்தில் பலிபீடம், கொடிமேடை, நந்தி மண்டபம் உள்ளது. வழிபட்டு பின்னர் உட்பிரகாரத்தை அடைந்தேன். இங்கே வடக்கில் தெற்கு நோக்கியவாறு மூன்று சன்னதிகள். நடுவில் கூத்தாடும் இறைவன் இறைவியுடன். அம்பிகை ஐயனை நோக்குகிறார். கிழக்கில் குளிர்ந்தநாயகி சன்னதி. மேற்கில் காட்சிகொடுத்த நாயகர் சன்னதி. வலம் வந்தால் மகாமண்டபத்தை அடைகிறோம். இங்கே தான் அகத்தியருக்கும் சோழமன்னருக்கும் காட்சி கொடுத்த ஒத்தாண்டேசுவரர் எனும் கைதந்த பிரான் சிவலிங்கத் திருமேனியாகக் காட்சி அளிக்கிறார். மேனி சிலிர்த்தது. மூலவருக்கு நாகாபரணம் அணிவித்து மிக நேர்த்தியாக அலங்காரம் செய்திருந்தார்கள். இறைவனின் பின்புறம் ஒரு மாடம். அதிலே திருமணக்கோலத்தில் இறைவனும் இறைவியும். இறைவனின் திருமணக் கோலம் தான் நாம் காண்பது. கண் குளிர்ந்தது.
தமிழகத்தில் இறைவனின் திருமணக் கோலம் நான்கு வடிவங்களில் பல கோவில்களில் உள்ளது. இதை நாளை நான் விளக்குகிறேன்.
No comments:
Post a Comment