நவபிருந்தாவன யாத்திரை
திரு.அம்மன் சத்தியநாதன் அவர்கள் எழுதிய “நவநிதி நல்கும் நவபிருந்தாவனம்” என்னும் நூலைப் படித்த உடன் ஆனேகுந்தி பகுதியையும் நவபிருந்தாவனத்தையும் கண்டு மகிழ வேண்டும் என்ற எண்ணம் என்னை ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்தது. அதற்கான வாய்ப்பும் கிடைத்து அந்த இடத்திற்குச் சென்றோம்.
ஆனேகுந்தி என்னும் இடம் துங்கபத்திரா நதிதீரத்தில் உள்ள ஹம்பியின் எதிர்கரையில் அமைந்துள்ளது. இந்த இடத்தைப் பற்றிய முழுமையான தகவலை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் அவசியம் திரு.அம்மன் சத்தியநாதன் அவர்களின் நூலைப் படித்தே ஆகவேண்டும். அந்த நூலில் உள்ள படங்களும் செய்திகளும் படிப்போரின் மனத்தைக் கொள்ளை கொள்ளும். அவருடைய வார்த்தையில் ஆனேகுந்தியைப் பற்றிக் கூற வேண்டும் என்றால் – “நூற்றாண்டுகள் பல கடந்தும் கூட இன்னும் ஆனேகுந்தி பழமை மாறாமல் இருப்பதை நான் பலமுறை சுற்றிச் சுற்றி வந்து ரசித்திருக்கிறேன். நீர்வளமும் நிலவளமும் மலைவளமும் கொண்ட ஆனேகுந்தி மற்றும் ஹம்பி பகுதிகளை இன்றும் நாம் நாள்கணக்கில் கண்டு ஆனந்தித்துக் கொண்டிருக்கலாம்”. நூற்றுக்கு நூறு இந்த வார்த்தைகள் உண்மை. பழமை மாறவில்லை. ஒரு சிறுகிராமமாகத் தான் உள்ளது இந்த நகரம். அரிஅர-புக்கர் அமைத்த விசயசாம்ராஜ்யத்தின் முதல் தலைநகராக இது விளங்கியது என்றால் நம்ப முடியாது தான். இந்தப் பகுதியைச் சுற்றித் தான் அனுமன் அஞ்சனாத்தி மலைப்பகுதியில் வாழ்ந்திருக்கிறான் – வாலியும் சுக்கிரீவனும் வசித்திருக்கிறார்கள். இராமர் வாலியைக் கொன்ற இடம் உள்ளது. சிந்தாமணி என்று இன்று அந்த இடம் அழைக்கப்படுகிறது. இப்படி இராமாயணக் காலத்திற்கு நம்மை அழைத்துச் செல்லும் அற்புதமான இடம் இது. வாழ்நாளில் ஒருதடவை இங்கு அனைவரும் அவசியம் போய் வரவேண்டும். அரிஅர புக்கருக்கு வழிகாட்டியவர் வித்யாரண்யர் என்னும் தவசீலர். இங்கு தான் பின்னர் வியாசராசர் நரசப்ப மன்னனுக்கும் – வீரநரசிம்மனுக்கும் – கிருஷ்ணதேவராயருக்கும் வழிகாட்டி இருக்கிறார். இவை எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தாற்போல இங்கு பிரகலாதன் தவம் புரிந்திருக்கிறான். தகவல் கேட்டவுடனேயே உடல் புல்லரித்தது.
இங்கு தங்குவதற்கு இராகவேந்திரர் மடம் ஒன்றும் கோவிலும் சேர்ந்தே உள்ளன. தங்குவதற்கு வசதி உள்ளது. இதற்கு எதிரில் ஒரு நவநாகரிகமான தங்கும் விடுதியும் உள்ளது. உணவு வசதியும் செய்து தருகிறார்கள். அங்கு அறை எடுத்து தங்கினோம். விடியற்காலையில் படகில் பூசை சாமான்கள், அபிடேகம் செய்வதற்கான பொருட்களை ஏற்றிக் கொண்டு எங்கள் குழு படகில் துங்கபத்திரா நதியின் நடுவில் அமைந்த மேட்டுப்பகுதியை நோக்கிப் பயணமானோம். நதியில் இப்படி மேட்டுப்பகுதி இருந்தால் அதை ரங்கம் என்று கூறுவார்களாம். மறுகரையில் இறங்கி விரைந்து – வளைந்து ஓடும் துங்கபத்திரா நதியில் குளித்தோம். பின்னர் நவபிருந்தாவனம் நோக்கிப் பக்திச் சிரத்தையுடன் காலெடுத்து வைத்தோம். அந்த வளாகத்திற்குள் கால்எடுத்து வைத்தவுடன் உடலும் உள்ளமும் அதிர்ந்தது. மிகப் பவித்திரமான இடம். ஒரு மேட்டுப்பகுதியில் அனுமார் நின்ற கோலத்தில் வாலில் அட்சய குமாரனை வைத்திருக்கும் கோலம். இன்னொரு சன்னதியில் பள்ளிகொண்ட பெருமாள். நவபிருந்தாவனம் எதிரில் ஒரு அனுமார் சன்னதி. அற்புதமான இடம். சுற்றிலும் மலையும் நதியும். நவபிருந்தாவனத்தில் உள்ள ஒன்பது பிருந்தாவனங்கள் சுமார் 300 ஆண்டு கால இடைவெளியில் அமைந்ததாகக் கூறுகிறர்கள். முதல் பிருந்தாவனம் பத்மநாப தீர்த்தரின் பிருந்தாவனம். ஒன்பதாவது பிருந்தாவனம் சுதீந்திரரின் பிருந்தாவனம். பிரகலாதன் தவம் செய்த இடம் – அனுமார் சுற்றித் திரிந்த இடம். இங்குள்ள மகான்கள் யார்யார் என்று முதலில் நாம் தெரிந்து கொண்டு அதன்பின் சுற்றவேண்டும். யார்யார் என்பதை நான் கூறுகிறேன். அவர்கள் வரலாற்றை நீங்கள் அம்மன் சத்தியநாதன் எழுதிய நவபிருந்தாவனம் பற்றிய நூலைப் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டும்.
1) பத்மநாப தீர்த்தர்
2) கவீந்திர தீர்த்தர்
3) வாகீச தீர்த்தர்
4) வியாசராச தீர்த்தர்
5) இரகுவர்ய தீர்த்தர்
6) சீனிவாச தீர்த்தர்
7) இராம தீர்த்தர்
8) சுதீந்திர தீர்த்தர் – இராகவேந்திரரின் குருநாதர். இவருடைய பிருந்தாவனத்திற்கு மறுபக்கம் இராகவேந்திரருக்கு நாமம் சாற்றி வழிபடும் வழக்கம் இன்றளவும் உள்ளது. இராகவேந்திரரே இங்கு வந்ததாகக் கூறுகிறார்கள். இருப்பதாகவும் கூறுகிறார்கள்.
9) கோவிந்த உதையரு
மனத்தை உருக்கும் இவர்களது மகாத்மியத்தை அம்மன் சத்தியனாதரின் நூலைப் படித்துப் பார்த்தால் கண்ணில் நீர் பெருகும்.
இங்கு அருமையான அபிஷேக ஆராதனைகள் நடந்தன. மனமுருகி வணங்கினோம். இத்துடன் காணொளிக் காட்சி உள்ளது. அருள்கூர்ந்து பார்க்கவும். பின்னர் வெளியில் வந்தபோது அபிஷேகப் பொருட்கள் பிரசாதமாக வழங்கப்பட்டன. மிக்க மகிழ்வுடன் ஏற்று உண்டோம். படகில் ஆனேகுந்தி வந்தடைந்தோம். என் மனதில் இருந்த சந்தேகத்தை தங்கும் விடுதி நடத்துபவரிடம் கேட்டேன். இந்த ஊருக்கு ஆனேகுந்தி என்ற பெயர் ஏன் வந்தது என்று கேட்டேன். அவர் யானைகள் கட்டப்பட்ட தெருவாக விளங்கியதால் ஆனகோந்தி என இருந்ததாகவும் இப்போது ஆனேகுந்தியாக உள்ளது என மருவியுள்ளதாகவும் கூறினார். பின்னர் அங்கிருந்து சிந்தாமணிக்குச் சென்று சிவாலயத்தைத் தரிசித்து, இராமர் வாலியைக் கொன்ற இடத்தைப் பார்த்தோம். பின்னர் அனுமர் வாழ்ந்த அஞ்சனாத்தி மலையையும் பம்பா சரோவர் என்ற இடத்தையும் பார்த்தோம். இந்தியாவில் நான்கு சரோவர்கள் உள்ளன. மானசரோவர், பிந்துசரோவர், நாராயண சரோவர் மற்றும் பம்பா சரோவர். இது ஒரு சிறிய குளம் தான். ஆனால் நீர் எந்த காலத்திலும் வற்றாத குளம்.
காலம் கனிந்தால் ஒரு முறை ஹம்பியையும் ஆனேகுந்தியையும் நவபிருந்தாவனத்தையும் தரிசனம் செய்துவிட்டு வாருங்கள். அஞ்சனாத்தி மலையிலிருந்து - அனுமார் வாழ்ந்த மலையிலிருந்து காட்சிகள்
நவபிருந்தாவன் வளாகக் காட்சிகள்
நவபிருந்தாவனத்தில் அபிஷேகம் செய்தபின் - காணொளி
நவபிருந்தாவன் வளாகத்தில் அலங்காரம் ஆராதனை முடிந்த பிறகு பஜனை செய்த போது எடுத்த காணொளிக் காட்சி
கட்டுரை தொடரும் அடுத்த பதிவில்.......
No comments:
Post a Comment