சங்கே முழங்கு - எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு
தமிழால் வாழ்பவர்கள் மலிந்து விட்ட இக்காலத்தில் தமிழுக்காக வாழ்ந்த பெருமகனார்கள் கூறிய கருத்துக்கள் பாடநூல்களில் குறைந்துகொண்டே வருகின்றன. தமிழின் பெருமையை வடநாட்டிற்குச் சென்று பறைசாற்றிய பெருமகனார் குமரகுருபரர். பேசாமகவாக இருந்த இவர் திருச்செந்தூர் தலத்தில் ஐந்து அகவை நிரம்பிய போதே பாடத் தொடங்கியவர். இவரது வரலாற்றை முதலில் நாம் பார்ப்போம்.
தமிழ் இலக்கியத்தைத் தழைக்கச் செய்ததில் குமரகுருபரருக்குப் பெரும்பங்குண்டு. வடநாடு சென்று தமிழின் பெருமையை உணர்த்தியவர் அவர். இவர் சீவைகுண்டம் என்னும் ஊரில் சைவ வேளாளர் மரபில் – சண்முகசிகாமணிக் கவிராயருக்கும் சிவகாமி அம்மையாருக்கும் மகனாகத் தோன்றினார். ஐந்தாண்டுகள் வரை பேசாக் குழந்தையாக – ஊமையாக இருந்தார் அவர். கவிராயர் மனமுருகி முருகனை வேண்டுவதற்காகத் திருச்செந்தூர் சென்றார். திருச்செந்தூர் முருகன் சன்னிதியில் இறைவன் திருவருளால் பேசும் திறன் பெற்றார். அக்கணமே முருகக் கடவுள் மீது “கந்தர் கலி வெண்பா” என்ற கவிதைத் தொகுப்பைப் பாடினார். அருமையான பொருள் பொதிந்த பாடல்கள் அவை. முருகக் கடவுள் அவர் கனவில் தோன்றி “குமருகுருபர” என்று அழைத்த காரணத்தால் இவர் குமரகுருபரர் என அழைக்கப்படுகிறார். இவர் மதுரை மாநகர் சென்று மன்னனின் முன்னிலையில் “மீனாட்சியம்மைப் பிள்ளைத் தமிழ்” என்ற நூலைப் பாடினார். இதைக் கேட்டு அங்கயற்கண்ணியே நேரில் வந்து ஒரு முத்துமாலையைக் கொடுத்ததாகக் கூறுவர். இதுதவிர மீனாட்சியம்மை குறம், மீனாட்சியம்மை இரட்டை மணிமாலை, மதுரைக் கலம்பகம் எனப் பல நூல்களைப் பாடினார். திருவாரூர் சென்று திருவாரூர் நான்மணிமாலை பாடினார். புள்ளிருக்குவேளூர் என்னும் வைத்தீஸ்வரன் கோவிலுக்குச் சென்று முத்துக்குமாரசாமி பிள்ளைத் தமிழ் என்னும் நூலைப் பாடினார். சிதம்பரம் சென்று சிதம்பர மும்மணிக் கோவை, சிதம்பரச் செய்யுள் கோவை, சிவகாமி இரட்டை மணிமாலை போன்ற நூல்களை தமிழுலத்திற்குத் தந்தார். தருமபுரம் சென்று ஞானதீட்சை அருளிய குருநாதர் மாசிலாமணி மீது பண்டார மும்மணிக் கோவை என்னும் சிறுகாப்பியத்தை அருளினார். பின்னர் ஆசானின் ஆணைப்படி காசி சென்று காசிக் கலம்பகம் பாடினார். முகலாய மன்னனின் சோதனைகளை எதிர்கொண்டு பின்னர் அந்த மன்னனின் அன்பையும் அரவணைப்பையும் பெற்றார். அப்போது சகலகலாவல்லி மாலை என்னும் நூலை நமக்குத் தந்தார். இதைப்பாடி சரஸ்வதி தேவியின் அருள் பெற்று இந்துஸ்தானி மொழியில் பேசும் வல்லமையைப் பெற்ற அவர் கம்பராமாயணத்தை இந்துஸ்தானி மொழியில் காசியில் விரித்துரைத்தாராம். துளசிதாசர் இந்த உரையைக் கேட்டு இந்தியில் இராமாயணத்தை இயற்றியதாகச் சொல்வர். காசியில் வைகாசித் திங்கள் தேய்பிறை மூன்றாம் நாளில் அவர் இறைவனடி சேர்ந்தார். இப்படியாக குமரி முதல் இமயம் வரை தமிழைப் பரப்பிய பெருந்தகையாளர் குமரகுருபரர்.
இப்படி தமிழுக்காக வாழ்ந்து பெருமை அடைந்தவர்களும் உண்டு
தமிழ் வால்க என்று கூறித் தமிழால் வாழ்பவர்களும் இப்போது உண்டு
சரி குமரகுருபரர் இயற்றிய நீதிநூலான “நீதிநெறி விளக்க”த்திலிருந்து சில பாடல்களைப் பார்ப்போம்.
நீரில் குமிழி இளமை நிறைசெல்வம்
நீரில் சுருட்டும் நெடுந்திரைகள் – நீரில்
எழுத்தாகும் யாக்கை, நமரங்காள்- என்னே
வழுத்தாதது எம்பிரான் மன்று?
நம் வாழ்வில் இளமைப்பருவம் மிக முக்கியமானது. ஆனால் அந்த பருவம் வரும் – சில நாட்களிலே பருவம் மாறி நாம் முதுமை அடைந்து விடுவோம். எனவே இளமை என்பதை நீரில் உள்ள குமிழி போன்ற பருவம் என்கிறார் குமரகுருபரர். நீரினில் காற்று அடித்தால் அலை எழும். ஆனால் மீண்டும் மறைந்து போகும். அது போல நிறைசெல்வம் என்பது நிரந்தரமானது அன்று. அது சிலநாள் இருக்கும். பின்னர் மறைந்து விடும். நம்முடைய வாழ்வு எப்படிப்பட்டது. அது நீரில் எழுதும் எழுத்துக்குச் சமமானது. நீரில் எழுதினால் நிலைத்து நிற்குமா? நிற்காது. அப்படித்தான் நமது வாழ்வு நிலையானது அல்ல. அழியக் கூடியது. இப்படி எல்லாம் மறையக்கூடிய அல்லது அழியக்கூடியவைகளாக உள்ளன. இவற்றை நாம் உணராமல் “நாம் தான் பெரியவர்கள்” என்று இறுமாப்பு கொண்டு அலைகிறோம். நம்மைப் படைத்த இறைவனை வணங்குவதை தலைக்குனிவு என்று சொல்லும் இறைமறுப்பாளர்களும் உள்ளனர். இந்த உடல் உள்ள போதே இறைவனை நாம் வணங்க வேண்டும். காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள வேண்டும். உடலில் உயிர்க்காற்று உள்ளபோதே இறைவனைத் துதித்து பிறவா நிலையை அடைய நாம் முயற்சிக்க வேண்டும்.
நெடுந்திரை என்றால் பெரிய அலைகள். திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்று ஒரு பழமொழியும் உண்டு.
யாக்கை என்றால் உடம்பு.
வழுத்தல் என்றால் வணங்குதல்
நமரங்காள் என்றால் நம்மவர்களே என்று பொருள்.
கல்வி இன்பமும் கலவி இன்பமும்
தொடங்குங்கால் துன்பமாய் இன்பம் பயக்கும்
மடம் கொன்று அறிவகற்றும் கல்வி – நெடுங்காமம்
முற்பயக்கும் சில்நீர இன்பத்தின், முற்றிழையாய்
பிற்பயக்கும் பீழை பெரிது
துவக்கத்தில் துன்பமாய்த் தெரியும் கல்வி. இடர்பட்டு கல்வி கற்றால் பிற்காலத்தில் நல்ல வேலை கிடைத்து – சமூகத்தில் நல்ல அந்தஸ்து கிடைத்து நாம் இன்பமாக வாழ முடியும். இப்படி நாம் கடினமாக உழைத்துக் கற்ற கல்வி நம் அறியாமையை நீக்கும். அறிவை விருத்தியடைய்ச் செய்யும். இப்படி தொடங்குங்கால் துன்பமாய் இருந்தாலும் இன்பமே பயப்பது கல்வி.
சரி கலவி எப்படி? தொடக்கத்தில் சிறிது இன்பம் கொடுக்கும் கலவி. எனவே தான் இதைச் சிற்றின்பம் என்று கூறுகிறார்கள் பெரியோர்கள். இந்த இன்பத்திற்கு அடிமைப்பட்டு அந்த குளத்தில் குளிக்கப் போனால் பின்னர் அதனால் தொடரக்கூடிய துன்பங்கள் ஏராளம்-ஏராளம். முறையாக இருந்தால் சிறு குடும்பம். அதைக் காப்பாற்ற நாம் படும் துயரம். குழந்தைகளைப் பள்ளியில் சேர்க்க. கல்லூரியில் சேர்க்க – திருமணம் செய்ய. இப்படித் தொடர்வது துயரம். ஏன் என்றால் இவற்றுக்கெல்லாம் பொருள் ஈட்ட வேண்டும். முறையற்று ஆற்றிலும் சேற்றிலும் – குளிக்க நினைத்தால். நம்மிடம் இருக்கும் பொருளை எல்லாம் பறிக்கும் பரத்தையர் கூட்டம் மிகுந்து விடும். கோவலன் கதி தான். பொருளை இழந்து பின்னர் உயிரையும் இழந்தான் கோவலன். அதுபோல துவக்கத்தில் இனித்தாலும் கலவி என்பது இறுதிவரை துன்பத்தையே தரும்.
மடம் என்றால் அறியாமை, சில்நீர – சிறிதளவே உள்ள, இழை- ஆபரணம், பீழை- துன்பம்.
கல்வியா? செல்வமா?
எனைத்துணையரேனும் இலம்பட்டார் கல்வி
தினைத்துணையும் சீர்ப்பாடு இலவாம் – மனைத்துக்காள்
மாண்பிலள் ஆயின் மணமகன் நல்லறம்
பூண்ட புலப்படா போல்.
வறுமையில் வாடுபவர்கள் எவ்வளவு கல்வி கற்று திறமைசாலிகளாக இருந்தாலும் – மதிநுட்பத்துடன் செயல்பட்டாலும் – தினைத்துணை அளவும் பாராட்டப்பட மாட்டார்கள். பெருமைப்படுத்தப்பட மாட்டார்கள். எப்படி என்றால் - மனைவியானவள் இல்லறத்திற்குத் தக்க மாட்சிமை இல்லாமல் இருந்தால், அவளுடைய கணவன் மேற்கொள்ளும் இல்லறம் சிறப்படையாது. அதுபோல.
இதையே வள்ளுவப் பெருந்தகையும்,
“நற்பொருள் நன்கு உணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார்
சொற்பொருள் சோர்வுபடும்” என்று தனது குறளில் சுருக்கமாகத் தெளிவாகக் கூறி உள்ளார்.
இலம்பட்டார் என்றால் வறுமையுற்றார்
சீர்ப்பாடு என்றால் பெருமை
இன்சொல்லன் தாழ்நடையன் ஆயினும் ஒன்று இல்லானேல்
வன்சொல்லின் அல்லது வாய்திறவா - என்சொலினும்
கைத்துடையான் காற்கீழ் ஒதுங்கும் கடல்ஞாலம்
பித்துடைய அல்ல பிற.
ஒருவன் இனிய சொல்லைப் பேசுபவனாகவே இருக்கட்டும் – ஒழுக்கம் உடையவனாகவே இருக்கட்டும். அவனிடம் செல்வம் இல்லையேல் இந்த உலக மக்கள் கடுஞ்சொல் கொண்டு தாக்குவர் அவனை. இனிய சொற்களைப் பேசமாட்டார்கள். இதற்கு மாறாக ஒரு செல்வந்தன் என்ன சொன்னாலும் அவன் காலின் கீழ் கட்டுண்டு கிடப்பர் இந்த உலக மக்கள். இதைப் பார்த்தால் கடல்சூழ்ந்த இந்த உலகம் மயக்கத்தில் உள்ளது என்பது விளங்குகிறது. நல்லறிவு இல்லை.
தாழ்நடையன் – ஒழுக்கம் உள்ளவன், கைத்துடையான்- கையில் செல்வம் உடையவன் ஞாலம் – உலகம், பித்து - பைத்தியம்
கற்றது கைம்மண் அளவு
முற்றும் உணர்ந்தவர் இல்லை – முழுவதும்
கற்றனம் என்று களியற்க – சிற்றுளியால்
கல்லும் தகரும் – தகரா, கனங்குழாய்
கொல்லுலைக் கூடத்தினால்
எல்லாம் அறிந்தவர்கள் இந்த உலகத்தில் யாரும் இல்லை. அனைத்தும் அறிந்தோம் என்று யாரும் செருக்கு கொள்ள முடியாது. ஏனெனில் சிறு உளியும் பெரு மலையைத் தகர்த்து விடும். பெரு மலைகளை இன்று சிறு வெடிகளை வைத்து தகர்ப்பதைக் கண்கூடாகக் காண்கிறோம். பெருமலையை சம்மட்டி கொண்டு அடித்து சிதற வைக்க முடியாது. ஆனால் சிறு உளியால் தகர்த்து விடலாம்.
களியற்க – செருக்கு கொள்ள வேண்டாம், கல் என்பது இங்கே மலையைக் குறிக்கும். கூடம் என்பது சம்மட்டியைக் குறிக்கும்.
தமிழுக்கு அனுப்பப்பட்டு விட்டது
குமரகுருபரரின் நீதிநெறி விளக்கம் நமக்கு பல அற்புதமான கருத்துகளைத் தெரிவிக்கிறது. கல்விச் செருக்கைப் பற்றிக் கூற வந்த மற்றொரு பாடலைப் பார்ப்போம்.
தம்மின் மெலியாரை நோக்கித் தமது உடைமை
அம்மா பெரிது என்று அகம் மகிழ்க – தம்மினும்
கற்றாரை நோக்கிக் கருத்தழிக, கற்றதெல்லாம்
எற்றே இவர்க்கு நாம் என்று
நம்முடன் படித்தவர்கள் – உற்றார் – உற்வினர் இப்படி பலருடன் நாம் வாழ்கிறோம். அதிலே சிலர் பணம் படைத்தவர்களாகவும் சிலர் படிப்பிலே உயர்ந்தவர்களாகவும் இருப்பார்கள். நம்மை விட செல்வத்தில் குறைந்து உள்ளவர்களைப் பார்க்கும் போது நாம் “இறைவன் நமக்கு எவ்வளவு பெரிய செல்வத்தைக் கொடுத்து உள்ளான்” என நினைந்து இறைவனை வாழ்த்த வேண்டும். உள்ளத்திலே மகிழ்ச்சி கொள்ள வேண்டும். அதே சமயம் நம்மைவிட கற்றவர்களைக் காணும் போது “நாம் இன்னும் அதிகமாகக் கற்கவேண்டும் போல் உள்ளது. இவர் இவ்வளவு படித்துள்ளாரே. வாழ்க்கையை வீணாக்காமல் படித்து அறிவைப் பெருக்கிக்கொள்ள வேண்டும்” என்று நாம் எண்ண வேண்டும். இப்படி நாம் வாழ்ந்தோமானால் நம் வாழ்வு பொருளுடையதாக இருக்கும்.
மெலியார் – ஏழைகள் , கருத்தழிக – கர்வத்தை விடுக
செல்வம் இரண்டு வகைப்படும். கல்விச் செல்வம் ஒன்று. பொருட் செல்வம் மற்றொன்று. இவ்விரண்டும் நமக்கு வேண்டும் என்றால் உள்ளவரிடம் இரந்து நிற்க வேண்டும். செல்வம் படைத்தவன் அது கல்விச் செல்வம் என்றாலும் சரி – பொருட்செல்வம் என்றாலும் சரி அவன் உயர்ந்த இடத்தில் உள்ளான். இல்லாதவன் அவனிடத்தில் தாழ்ந்து போக வேண்டும். அப்போது தான் நமக்கு வேண்டிய செல்வம் நமக்குக் கிடைக்கும். இதை குமரகுரபரர் தமது நீதிநெறி விளக்கத்தில் விளக்கும் விதமே அலாதி.
கல்வி உடைமை பொருள் உடைமை என்று இரண்டு
செல்வமும் செல்வம் எனப்படும்-இல்லார்
குறையிரந்து தம் முன்னர் நிற்ப போல் நாமும்
தலைவணங்கித் தாழப் பெறின்.
குறையிரந்து என்றால் தாழ்ந்து எனப் பொருள்.
பொருட் செல்வம் மிகுந்து இருந்தாலும் சரி – கல்விச் செல்வம் மிகுந்து இருந்தாலும் சரி – இல்லாதவரைக் கண்டால் நாம் தான் தாழ்ந்து போக வேண்டும். ஒரு தராசு உள்ளது என்று வைத்துக் கொள்வோம். கனம் மிகுந்த பொருள் உள்ள தட்டு தாழ்ந்து தானே இருக்கும். குறைவாக உள்ள தட்டு மேல்நோக்கிப் போகும். இது உலக இயல்பு தானே. அது போலத் தான் நம்மிடம் பொருட்செல்வம் அதிகம் இருந்தாலும் – கல்விச் செல்வம் அதிகம் இருந்தாலும் இல்லாதவரைக் கண்டால் நாம் தான் தாழ்ந்து போக வேண்டும். உயர்ந்தவர்கள் இறுமாப்பு கொள்ளக் கூடாது. இதை குமரகுருபரர் தனது நீதிநெறி விளக்கத்தில் மிக அழகாகச் சொல்கிறார்.
ஆக்கம் பெரியார் சிறியார் இடைப்பட்ட
மீச்செலவு காணின் நனி தாழ்ப – தூக்கின்
மெலியது மேன்மேல் எழச் செல்லச் செல்ல
வலிதன்றே தாழும் துலைக்கு.
துலை என்றால் தராசு. இராசிபலன் பார்க்கும்போது துலாராசி என்று பார்ப்பார்க்ள் அதில் தராசு படம் போட்டிருக்கும். அழகிய தமிழில் துலை என்ற சொல்கிறார் குமரகுருபரர். மீச்செலவு என்றால் வரம்பு மீறிய செயல்.
சில மக்களை நாம் தினந்தோறும் காணநேரிடும். மிக நல்லவர்களாக இருப்பார்கள். ஆனால் தான் நல்லவன் என்பதை எப்போது பார்த்தாலும் பறைசாற்றிக் கொண்டே இருப்பார்கள். தம்மைப் போல் மற்றவர் இல்லை என்பதை எடுத்துக்காட்ட பிறரை வைத்து ஒப்பிட்டுக் கொண்டே இருப்பார்கள். இப்படி ஒப்பீடு செய்து நல்லவர் என்று தன்னைத் தானே புகழ்தலும் நல்லதல்ல. மிகவும் தீமையானது. அவர்கள் செய்த நல்ல செயல்கள் பயனில்லாது போய்விடும். எனவே எப்போதும் தற்புகழ்ச்சியை நாம் விரும்பக்கூடாது. இதை குமரகுருபரர் தனது நீதிநெறி விளக்கத்தில் மிக அழகாக விளக்குகிறார்.
விலக்கிய ஓம்பி விதித்தனவே செய்யும்
நலத்தகையார் நல்வினையும் தீதே – புலப்பகையை
வென்றனம் நல்லொழுக்கில் நின்றேம் பிறவென்று
தம்பாடு தம்மிற் கொளின்.
ஓம்பி என்றால் விலக்கிவிட்டு – விட்டுவிட்டு. அதாவது விலக்கப்பட்டவைகளை ஒதுக்கிவிட்டு விதிக்கப்பட்டனவைகளையே செய்தாலும் அது தீதாக முடியும். தம் பாடு என்றால் தற்பெருமை.
புலப்பகை என்றால் ஐம்புலன்களுக்குப் பகையானவை அதாவது சுவை, ஒலி, ஊறு, ஓசை, நாற்றம் என்னும் ஐம்புலன்களால் சுவைக்கப்படுபவை – அனுபவிக்கப்படுபவை.
இன்று நுனிநாக்கில் ஆங்கிலம் பேசி தமிழ் கவிதை மற்றும் பாடல்கள் படிக்கமுடியாதவை - கடினமானவை எனவே அவற்றைப் படிக்கமுடியவில்லை என்று கூறுபவர்கள் பெருகிவருகிறார்கள். தமிழ்பாடல்கள் மிக எளிமையானவையே. நமக்குத் தமிழ் சொற்கள் தெரியவில்லை. அதை நாம் ஒத்துக்கொள்ள வேண்டும். சித்திரமும் கைப்பழக்கம் என்பது போல் பாடல்களைத் தொடர்ந்து பொருளுடன் படித்தால் தமிழ்ப் பாடல்களில் உள்ள சுவை நன்றாகத் தெரியும். முயற்சி செய்யுங்கள்.
No comments:
Post a Comment