திருமால் எடுத்த அவதாரங்களில் இராம அவதாரமும் கிருஷ்ண அவதாரமும் மிக முக்கயமானவை. எப்படி வாழ வேண்டும் என்பதை விளக்குவது இராமாயணம். எப்படி வாழக்கூடாது என்பதை விளக்குவது மகாபாரதம். இந்த இரு காப்பியங்களிலும் வீரம் செறிந்த வாலியும் கர்ணனும் வஞ்சகமாகக் கொல்லப்படுகிறார்கள்.
இராமாயணத்தில் சூரியனின் மகன் சுக்கிரீவன். இந்திரனின் மகன் வாலி. இராமாயணத்தில் இந்திரனின் மகனான வாலி வஞ்சகமாகக் கொல்லப்படுகிறான். இராமர் மறைந்திருந்து அம்பு விடுத்து வாலியைக் கொல்கிறார். இதற்குப் பரிகாரமாக மகாபாரதத்தில் சூரியன் மகனான கர்ணனை வஞ்சகமாகக் கொல்கிறார் கிருஷ்ணன். வீரத்தின் விளைநிலம் கர்ணன். வெல்லமுடியாது அவனை. ஆனால் கிருஷ்ணர் பல மாயங்களைச் செய்து - ஏமாற்றி கர்ணனைக் கொல்கிறார். மகாபாரதத்தில் அர்ச்சுனன் இந்திரன் மகன் இந்திரனின் மகனுக்குச் சாதகமாகச் செயல்படுகிறார். இப்போது கூட்டணிகளில் கட்சிகள் மாறி மாறி கூட்டணிகளில் சேர்வது போல உள்ளது இது.
வாலிவதைப் படலத்தைச் சுருக்கமாகப் பார்ப்போம் இப்போது.
வாலியை கம்பர் ;“சிறியன சிந்தியாதான்” என ஏத்திக் கூறுகிறார்.
தாய் என உயிர்க்கு நல்கித் தருமமும் தகவும் சால்பும்
நீ என நின்ற நம்பி நெறியினில் நோக்கும் நேர்மை
நாய் என நின்ற எம்மால் நவையற உணரல் ஆமே
தீயன பொறுத்தி என்றான் சிறியன சிந்தியாதான்.
இராமன் மறைந்திருந்து அம்பை எய்கிறான். இராமபாணத்தால் தாக்கப்பட்ட வாலி மரம் போல் சாய்கிறான். இராமபாணத்திற்கு ஒரு பெருமை. எய்தால் உடனே எதிரியை வீழ்த்தி விட்டுத் திரும்பி விடும். அப்படிப் பெருமைமிக்க அந்த இராமபாணம் தன் உடலை ஊடுருவிச் செல்லாதபடி பிடித்துக் கொள்கிறான். அது மட்டுமல்ல, அந்த பாணத்தை உருவி அது யாரால் எய்யப்பட்டது என்பதைக் காண்கிறான். பின்னர் இராமனோடு சொற்போர் நடத்துகிறான். இறுதியில் சமாதானமடைந்து கூறும்போது, “இராமபிரானே, நீ உலகத்தில் வாழும் உயிர்களுக்கெல்லாம் தாயைப் போல் திகழ்கிறாய். அறம், நடுநிலைமை, நற்குணநிறைவு போன்ற குணங்களின் மொத்த வடிவமாகத் திகழ்கிறாய். உனது உயர்ந்த எண்ணங்களை நாய் போன்ற என்னால் உணர முடியுமா? எனவே நான் செய்த தீச்செயல்களைப் பொறுத்துக் கொள்ள வேண்டும்”என்கிறான் சிறியன சிந்தியாதான் என அழைக்கப்படும் வாலி. இப்படிப் பெருமைமிக்க வாலியின் வதம் எப்படி கம்பரால் சித்தரிக்கப்படுகிறது என்பதை நாம் பார்ப்போம்.
வனத்தில் சீதையை இழந்து வாடி வரும் இராமரை அனுமன் சந்தித்து சுக்கிரீவனைப் பற்றிக் கூறி அவனுக்கு அபயம் அளிக்க வைக்கிறான். சொல்லின் செல்வன் அல்லவா அனுமன். எப்படி தன் வாதத்தை எடுத்து வைக்க வேண்டுமோ அப்படி எடுத்து வைத்து இராமரின் ஆதரவைப் பெற்று விடுகிறான். பின்னர் சுக்கிரீவன், அனுமன் மற்றும் இராம இலக்குவர்கள் மலைச்சாரல் வழியே செல்கிறார்கள். அவர்கள் செல்வது எப்படி உள்ளது என்பதை கம்பர் விளக்குகிறார்.
வெங்கண் ஆளி ஏறும், மீளி மா இரண்டும் வேகநாகமும்
சிங்க ஏறு இரண்டொடும் திரண்ட அன்ன செய்கையார்
தங்க சாலம், மூலம், ஆர் தமாலம், ஏலம், வாழை, மாப்
பொங்கு நாகமும் துவன்று சாரல் ஊடு போயினார்.
ஆண் யாளி ஒன்று, வீரமிக்க புலிகள் இரண்டு, வேகமாகப் போகும் யானைகள் இரண்டு ஆகியவை இரண்டு ஆண் சிங்கங்களுடன் சென்றது போல சுக்கிரீவன் தன் அமைச்சர்களுடன் இராமஇலக்குவர்களோடு மரங்கள் அடர்ந்த மலைச்சாரல் வழியே சென்றார்கள்.
இராமஇலக்குவர்கள் விரைந்து வருவதைக் கண்டு மேகங்கள் சிதறி ஓடுகின்றன – நீர் பெருகி ஓடுகிறது – பாம்புகள் ஓடுகின்றன – யானைகள் ஓடுகின்றன – சிங்கங்கள் ஓடுகின்றன. ஓடைகளில் உள்ள வாளை மீன்களும் நீர்ப்பாம்புகளும் கூட ஓடுகின்றன. வேங்கைகளும் கருங்குரங்குகளும் ஓடுகின்றன. இப்படி பிற உயிரினங்கள் எல்லாம் ஓடுவதை கம்பர் மிக அழகாக எடுத்துக் கூறுகிறார்.
நீடு நாகமூடு மேகம் ஓட நீரும் ஓட நேர்
ஆடு நாகம் ஓட மான யானை ஓட ஆளி போம்
மாடு நாகம் நீடு சாலர் வாளை ஓடும் வாவியோடு
ஓடு நாகம் ஓட வேங்கை ஓடும் ஊகம் ஓடவே
(நீடு நாகமூடு என்றால் உயர்ந்த வானத்தில் எனப் பொருள்
நேர் ஆடு நாகம் என்றார் நேரே படமெடுத்து ஆடும் இயல்புள்ள பாம்புகள் எனப் பொருள்
வாவி என்றால் சுனை, ஊகம் என்றால் கருங்குரங்கு)
இப்படி வளம் பொருந்திய மலைகள் உள்ள பகுதியைக் கடந்து வாலி வாழ்ந்த இடத்தை அடைகிறார்கள். அங்கே ஆலோசனை நடத்துகிறார்கள். வாலியின் வலிமை என்ன என்பதை அனுமன் எடுத்து உரைக்கிறான். வாலிக்கும் சுக்கிரீவனுக்கும் இடையே பகை வரக் காரணம் என்ன என்பதை சுக்கிரீவன் கூறுகிறான். எல்லாவற்றையும் கேட்ட இராமர் தன் கருத்தைக் கூறுகிறார்.
அவ்விடத்து இராமன் நீ அழைத்து வாலி ஆனது ஓர்
வெவ்விடத்தின் வந்து போர் விளைக்கும் ஏல்வை வேறு நின்று
எவ்விடத் துணிந்து அமைந்தது என் கருத்து இது என்றனன்
தெவ்வடங்கும் வென்றியானும் நன்று இது என்று சிந்தியா.
பகைவர்களை அடக்கி வெற்றி கொள்ளும் இயல்பினை உடைய இராமன் நன்கு சிந்தித்து “நீ சென்று வாலியைப் போர் செய்யக் கூப்பிடு. வாலியாகிய கொடிய விடத்துடனே எதிர்த்துப் போர் செய்கின்ற நேரத்தில் நான் ஓரிடத்தில் மறைந்து நின்று அம்பை எய்து கொல்வேன்” எனத் தன் கருத்தைத் தெரிவிக்கிறான்.
(வெவ்விடம் என்றால் கொடிய விஷம்
எவ்விடம் என்றால் அம்பைச் செலுத்துதல் எ என்றால் அம்பு என்ற பொருளுண்டு.
கம்பர் காலத்தில் ஜ, ஷ, ஸ, ஹ போன்ற வட எழுத்துக்களை உபயோகிப்பதற்கு யோசித்து இருக்கிறார்கள். இப்போது இவற்றைச் சேர்த்து எழுதுவது நாகரிகம் என்று நாம் யோசிக்கிறோம். இதனால் பல தமிழ்ச் சொற்களை இழந்தோம். விஷம் என்பதை விடம் என்று அழகாகத் தமிழில் கூறுகிறார்கள். கஷ்டம் என்பதைக் கட்டம் என்றும் நஷ்டம் என்பதை நட்டம் என்றும் கூறியிருக்கிறார்கள் அந்தக் காலத்தில். வடமொழி எழுத்துகளுக்குப் பதிலாக தமிழ் எழுத்துகளை எப்படி உபயோகிக்க வேண்டும் என தமிழ் இலக்கணத்தில் அழகாகச் சொல்லப்பட்டு உள்ளது. நாம் தான் படித்துப் புரிந்து கொள்வதில்லை. வடமொழிச் சொற்களையும் ஆங்கிலச் சொற்களையும் அள்ளி அள்ளித் தமிழில் புகுத்தி அதற்கு இணையான பல தமிழ்ச் சொற்களை இழந்து நிற்கிறோம்.)
இராமபிரானின் இந்த வார்த்தைகளைக் கேட்டவுடன் சுக்கிரீவன் துள்ளிக் குதிக்கிறான். ஆரவாரம் செய்கிறான். எப்படி என்பதை கம்பரின் சொல்லிலேயே பார்ப்போம்.
வார்த்தை அன்னது ஆக வான் இயங்கு தேரினான் மகன்
நீர்த்தரங்க வேலை அஞ்ச நீலமேகம் நாணவே
வேர்த்து மண்உளோர் இரிந்து விண் உளோர்கள் விம்ம மேல்
ஆர்த்த ஓசை ஈசன் உண்ட அண்டம் முற்றும் உண்டதே
இராமபிரானின் சொற்களைக் கேட்டவுடன் கடல் அஞ்சும் படியாக – மேகங்கள் வெட்கமடையும்படியாக – மண்ணில் உள்ளோரும் விண்ணில் உள்ளோரும் அஞ்சி ஓடும் வண்ணம் பேராரவாரம் செய்தான் கதிரவன் மகன் சுக்கிரீவன்.
(வான் இயங்கு தேரினான் மகன் என்றால் கதிரவன் மகன் எனப் பொருள். இராமாயணத்தில் கதிரவன் மகனுக்கு ஆதரவாக போரிட்டு இந்திரன் மகனான வாலியை மறைந்து நின்று வஞ்சகமாகக் கொல்கிறான் திருமாலின் அவதாரமான இராமன். மகாபாரதத்தில் இதற்குப் பரிகாரமாக இந்திரனின் மகனான அர்ச்சுனன் பக்கம் நின்று தேரோட்டி மாயைகள் பல புரிந்து வஞ்சகமாகக் கதிரவன் மகனான கர்ணனைக் கொல்லக் காரணமாக செயல்படுகிறான் திருமாலின் அவதாரமான கண்ணன்) தரங்க வேலை என்றால் அலைகள் வீசும் கடல் எனப் பொருள். இரிந்து என்றால் ஓடும்படி எனப் பொருள்)
ஆரவாரம் செய்தததோடு நின்றானா சுக்கிரீவன். தேர்தல் காலங்களில் அரசியல்வாதிகள் மேடைகளில் தராதரமின்றி சவால் விடுவது போலப் பேசுகிறான். எப்படி?
இடித்து உரப்பி வந்து போர் எதிர்த்தியேல் அடர்ப்பன் என்று
அடித்தலங்கள் கொட்டி வாய் மடித்து அடுத்து அலங்க தோள்
புடைத்து நின்று உளைத்த பூசல் புக்கது என்ப மிக்கு இடம்
துடிப்ப அங்கு உறங்கு வாலி திண் செவித் தொளைக்கணே
உறங்கிக் கொண்டிருக்கின்ற வாலியின் காதைத் துளைக்கும் வண்ணம் குரல் கொடுத்து, “என்னுடைன் போரிய வா. உன்னைக் கொன்று விடுவேன்.” என்று ஆரவாரம் செய்து தொடைகளையும் தோள்களையும் தட்டுக் கொண்டு கூறுகிறான் சுக்கிரீவன்.
(அடர்ப்பன் என்றால் கொல்வேன் என்று பொருள். உளைத்த என்றால் வலிய போருக்கு அழைத்த என்று பொருள்)
யானையின் பிளிறலைக் கேட்ட சிங்கம் போல தனது படுக்கையில் படுத்திருந்த வாலி சுக்கிரீவனின் ஆரவார ஓசையைக் கேட்டான். வாலிக்குச் சிரிப்பு வந்தது. அந்த சிரிப்பைக் கேட்டு ஈரேழு உலகத்தில் உள்ளவர்களும் அஞ்சினார்கள்.
சிரித்தனன் அவ்வொலி திசையின் அப்புறத்து
இரித்தது அல்வுலகம் ஓர் ஏழொடு ஏழையும்
(இரித்தது என்றால் அஞ்சி ஓடும்படி செய்தது, ஏழொடு ஏழையும் என்றால் பதினான்கு உலகத்தையும் என்று பொருள்)
எழுந்தான் வாலி. தோள்களைத் தட்டினான். சுக்கிரீவனை அழிக்க விரைந்து புறப்பட்டான். அவனது நடையால் அதிர்ந்தது கிஷ்கிந்தா பகுதி முழுவதும். மலை முகடுகள் சாய்ந்தன. “வந்தனென் வந்தனென்” என்று கூவிக் கொண்டே வருகிறான் வாலி. எண்திசையிலும் முழங்கியது அவன் குரல். இக்குரல் கேட்டு வானவர் நிலைகுலைந்தனர்.
ஞாலமும் நால்திசைப் புனலும் நாகரும்
மூலமும் முற்றிட முடிவில் தீக்குமக்
காலமும் ஒத்தனன் கடலின் தான் கடை
ஆலமும் ஒத்தனன் எவரும் அஞ்சவே
மண்ணுலகும் நால்திசையில் உள்ள கடல்களும் அழியும்படி வந்தான் வாலி. ஆலகால கடும்விடத்தைப் போலத் தோன்றினான் அவன். வேகமாகக் கிளம்பிய வாலியைத் தடுக்கிறாள் தாரை. “விலக்கலை விடுவிடு” என்றும் சுக்கிரீவன் “இன்உயிர் குடித்து ஒல்லை மீள்குவன் மலைக்குல மயிலே” என்று கூறி வாலி கிளம்புகிறான். (ஒல்லை என்றால் உடனே என்று பொருள்). ஆனால் தாரையோ அவன் புதிய வலிமை பெறவில்லை ஆனால் புதிய துணையைப் பெற்றுள்ளான். அதனால் தான் அவன் ஆரவாரம் எழுப்பி அழைக்கிறான் எனத் தெரிவிக்கிறாள். வாலியோ தன் வலிமையை எடுத்துக் கூறுகிறான். தாரை கூறுவதை ஏற்க மறுக்கிறான்.
மூன்று என முற்றிய முடிவு இல் பேருலகு
ஏன்று உடன் உற்றன எனக்கு நேர் எனத்
தோன்றினும் தோற்று அவை தொயும் என்றலின்
சான்று உள அன்னவை தையல் கேட்டியால்
மூவுலகத்திலுன் உள்ள சக்திகள் ஒன்றாகச் சேர்ந்து வந்து எதிர்த்தாலும் அவை தோற்று அழியும். அதற்குச் சான்றுகள் உள்ளன என்று எடுத்துரைக்கிறான் வாலி. தான் பாற்கடலைக் கடைந்த வல்லமையை எடுத்து உரைக்கிறான். தன்னை எதிர்ப்பவரின் பலத்தில் பாதி தனக்கு வந்து விடும் என்பதையும் எடுத்துக் காட்டுகிறான். உடனே தாரை “இராமன் என்பவன் உன்னுயிர் கோடலுக்கு உடன் வந்தான்” எனத் தெரிவிக்கிறாள். இராமன் பற்றி மிகப் பெருமையாகக் கூறி இராமரை நீ அவமதித்து விட்டாயே – இராமர் இப்படி செய்யமாட்டார் என உறுதியாகக் கூறுகிறான் வாலி. “இருமையும் நோக்குறும் இயல்பினாற்கு இது பெருமையோ” என்று நவில்கிறான். “தருமமே தவிர்க்குமோ தன்னைத் தானரோ” என்கிறான் வாலி. தர்மம் தன்னைத் தானே அழித்துக் கொள்ளுமா என்று கேட்கிறான். சிறிய தாயின் கட்டளைக்கு இணங்கி அரசுரிமையைத் தன் இளவலுக்கு அளித்தவன் அவன். அப்படிப்பட்ட இராமனைப் போற்றாமல் சுக்கிரீவனுக்குத் துணையாக வந்துள்ளான் எனக் கூறித் தூற்றுகிறாயே என்று கொதிக்கிறான் வாலி. “உலகமே எதிர்த்தாலும் தன் வில்லான கோதண்டம் கொண்டு வெற்றி பெறுவான் இராமன். அப்படிப்பட்டவனுக்கு ஒரு குரங்கின் துணை தேவையில்லை. எனவே சுக்கிரீவனுடன் அவன் நட்பு கொண்டிருக்க முடியாது என வாதிடுகிறான்.
நின்ற பேருலகெலாம் நெருக்கி நேரினும்
வென்றி வெஞ்சிலையலால் பிறிது வேண்டுமோ
தன் துணை தன்னில் ஒருவரும் தன்னில் வேறிலான்
புன்தொழில் குரங்கொடு புணரு நட்பனோ
என்று அழகாகச் சொல்லுகிறார் கம்பர். (சிலை என்றால் வில்)
தம்பியர் தவிர தனக்கு வேறு உயிர் இல்லை எனக் கூறும் இராமன் என்னுடைய தம்பியும் நானும் மோதும் இடையில் வந்து அம்பு தொடுக்கமாட்டான் அருட்கடல் இராமன் என உறுதியாக நம்புகிறான்.
தம்பியர் அல்லது தனக்கு வேறு உயிர்
இம்பரின் இலது என எண்ணி ஏய்ந்தவன்
எம்பியும் யானும் உற்று உதிர்ந்த போரிடை
அம்பிடை தொடுக்குமோ அருளின் ஆழியான்.
(அருளின் ஆழியான் என்றால் அருட்கடல். ஆழி என்றால் கடல், இம்பரின் என்றால் இந்த உலகத்தில் என்று பொருள்)
இப்படியெல்லாம் வாலி கூறியவுடன் தாரை தடுப்பதற்கு அஞ்சுகிறாள். வாலி ஆரவாரம் செய்து கொண்டு கிளம்புகிறான். வாலியைக் கண்டவுடன் இராமன் ஆச்சரியம் அடைகிறான்.
“எவ்வேலை எம்மேகம் எக்காலொடு அக்காலவெந்தீ
வெவ்வேறு உலகத்து இவன் மேனியை மானும் என்றான்”
என்று வியக்கிறான் இராமன். எந்த கடல், எந்த மேகம், எந்த காற்று, எந்த ஊழித்தீ இவன் மேனியை ஒத்திருக்கும் என்று கூறுகிறான் இராமன். (மானும் என்றால் ஒத்திருக்கும் என்று பொருள்). வாலியைக் கண்டதும் இலக்குவன் திகைக்கிறான். மனம் மாறுகிறான். தன் அண்ணனையே கொல்ல நினைக்கும் இந்த சுக்கிரீவன் எப்படி நமக்கு உதவுவான் என்றே புரியவில்லை என்று கூறுகிறான் இலக்குவன். “மாற்றான் என தம் முனை கொல்லிய வந்து நின்றான் இவன் வேற்றார்கள் திறத்து தஞ்சம் என்” என்கிறான். (தம் முனை என்றால் தம் முன்னவன் அதாவது அண்ணன்). அண்ணன் இராமனோ “பித்துஆய விலங்கின் ஒழுக்கினைப் பேசல் ஆமோ” என்று பதில் சொல்கிறான். மிருகங்களின் ஒழுக்கத்தைக் குறித்துக் கவலைப்படத் தேவையில்லை என்கிறான் இராமன். இதிலிருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டிய கருத்து ஒன்று உள்ளது. வாலியையோ சுக்கிரீவனையோ மனித இனமாகப் பார்க்கவில்லை இராமன். விலங்கினமாகத் தான் பார்க்கிறான். எனவே தான் மறைந்து இருந்து கொல்வதில் தவறில்லை எனத் துணிகிறான். அதுமட்டுல்ல, “எத்தாயர் வயிற்றினும் பின் பிறந்தார்கள் எல்லாம் ஒத்தால் பரதன் பெரிது உத்தமனாதல் உண்டோ” என்றும் கூறுகிறான். பின்னே பிறந்த தம்பியர் எல்லாம் அண்ணனோடு ஒற்றுமையாக வாழ்ந்தால் பரதன் மிகச் சிறந்த தம்பி என்ற பெயரைப் பெற்றுவிடமுடியுமா எனவும் கேட்கிறான். அரசபோகத்தை விடுத்து காட்டில் உடன் சுற்றும் தம்பி இலக்குவன் நல்லவன் என்று கூறவில்லை இராமன். பரதனைத் தான் உதாரணத்திற்கு எடுத்துக் கூறுகிறான். வாலியும் சுக்கிரீவனும் மோதுகிறார்கள். அவர்கள் மோதுவது குன்றோடு குன்று மோதுவது போல் இருந்தது. ஒருவரையொருவர் கடித்துக் கொண்டார்கள். அடித்துக் கொண்டார்கள். புடைத்துக் கொண்டார்கள். குத்திக் கொண்டார்கள். கடித்துக் கொண்டதால் குருதி கொப்பளித்தது. ஒருவரை மற்றொருவர் தூக்கினர். தூக்கி எறிந்தனர். சிறிது நேரம் ஒருவருக்கொருவர் சளைக்காமல் சண்டையிட்டாலும் சிறிது நேரத்தில் வாலி
சுக்கிரீவனை நிலைகுலையச் செய்கிறான். வருந்திய சுக்கிரீவன் திரும்பி வந்து இராமனிடம் முறையிடுகிறான். அடையாளம் தெரிவதற்காக மாலை ஒன்றை அணிவிக்கிறார் இராமர். மாலையை அணிந்து கொண்ட சுக்கிரீவன் மீண்டும் வாலியுடன் மோதுகிறான். செங்கதிரோன் மகன் அடிபட்டு மிதிபட்டு இராமன் இருந்த திக்கை நோக்கிப் பார்க்கிறான். இராமன் வாலி மேல் “கோல் ஒன்று வாங்கித் தொடுத்து நாணொடு தோள் உறுத்து இராகவன் துரந்தான்” அம்பைச் செலுத்துகிறான் இராகவன். அம்பு வாலியின் மார்பைத் துளைக்கிறது. மேருமலை வீழ்ந்தது போல் வீழ்கிறான் வாலி. உடனே சுக்கிரீவனை விட்டுவிடுகிறான். தன்னைத் துளைத்த அம்பைப் பிடித்துக் கொள்கிறான். அவனது இந்த உறுதியைப் பார்த்து காலதேவனே திகைக்கிறான். வாலியின் வீரத்தைப் பாராட்டுகிறான் எமன். இச்சரத்தினை எய்தவன் யாராக இருக்க முடியும் என்று சிந்திக்கிறான் வாலி.
தேவரோ என அயிர்க்கும் அத்தேவர் இச்செயலுக்கு
ஆவரோ அவர்க்கு ஆற்றல் உண்டோ எனும் அயலோர்
எவரோ என நகை செய்யும் ஒருவனே இறைவர்
மூவரோடும் ஒப்பான் செயல் ஆம் என மொழியும்
இச்செயலைத் தேவர்கள் செய்ய முடியாது. அவர்களுக்கு இந்த வல்லமை கிடையாது மூவருக்கும் இணையான ஒருவனே இச்செயலைச் செய்திருக்க முடியும் என நினைக்கிறான். நகைக்கிறான்.
நேமிதான் கொலோ நீலகண்டன் நெடும் சூலம்
ஆம் தான் கொலோ அன்று எனில் குன்று உரு அயிலும்
நாம் இந்திரன் வச்சிரப்படையும் என் நடுவண்
போம் எனும் துணைபோதுமோ யாது எனப் புழுங்கும்.
நேமி என்றால் சக்கரம். திருமால் தனது சக்கராயுதத்தை ஏவினானா? அல்லது இது சிவனின் சூலமா? அல்லது இந்திரனின் வச்சிராயுதமா எனப் புழுங்குகிறான். தன் பலத்தை எல்லாம் பயன்படுத்தி ஒருவழியாக அந்த இராமபாணம் தன்னை ஊடுருவாதபடி தன் பலம் முழுவதையும் காட்டி உருவுகிறான் அந்த இராமபாணத்தை. இதைக் கண்டு வானவரே பிரம்மிக்கின்றனர். அம்பைப் பிடுங்கியவுடன் குருதிக்கடல் கொப்பளிக்கிறது என்கிறார் கம்பர். குருதி பெருகி வருவதைக் கண்ட தம்பி சுக்கிரீவன் கலங்குகிறான். கலங்கி நிலத்திலே வீழ்ந்தான்.
வாசத் தாரவன் மார்பு எனும் மலை வழங்கு அருவி
ஓசைச் சோரியை நோக்கினன் உடன் பிறப்பு என்னும்
பாசத்தால் பிணிப்புண்ட அத்தம்பியும் பசுங்கண்
நேசத் தாரைகள் சொரிதர நெடுநிலம் வீழ்ந்தான்.
(தார் என்றால் மாலை, சோரி என்றால் குருதி வெள்ளம்)
பிடுங்கிய அம்பை முறித்துவிட முயல்கிறான் வாலி. சாதாரணமான நிலையில் இருந்தால் அந்த அம்பை அவன் முறித்திருப்பான். எய்யப்பட்டதோ இராமபாணம். வாலி கிடப்பதோ குருதி வெள்ளத்தில். எனவே முறிக்க முடியவில்லை. யாருடைய அம்பு என நோக்குகிறான். அதிலே இருந்தது இராமநாமம்.
மும்மைசால் உலகுக்கு எல்லாம் மூலமந்திரத்தை முற்றும்
தம்மையே தமர்க்கு நல்கும் தனிப்பெரும் பதத்தைத் தானே
இம்மையே எழுமை நோய்க்கு மருந்தினை இராம என்னும்
செம்மைசேர் நாமம் தன்னைக் கண்களிற் தெரியக் கண்டான்.
மூவுலகிற்கும் மூலமந்திரம் இராமநாமம். இராமநாமம் கூறித் துதித்தால் தம்மையே கொடுத்து விடுகிற மந்திரம். இப்பிறப்பிலேயே எல்லாப் பிறப்பிலும் பண்ணிய நோய்க்கு மருந்தாக விளங்கும் மந்திரம். அப்படிப்பட்ட செம்மையான “இராம” என்னும் நாமம் அந்த அம்பிலே பொறிக்கப்பட்டு இருந்தது.
No comments:
Post a Comment