Tuesday, July 26, 2011

Kambaramayanam _ வாலிவதைப் படலம்

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு

பாகம் இரண்டு

தன்து நெஞ்சில் பாய்ந்த அம்பு இராமனால் எய்யப்பட்டது என்று தெரிந்தவுடனேயே வாலி கூறும் வாசகம் நமது நெஞ்சில் நீங்காத வடுவாகப் பதிகிறது.

“இல்லறம் துறந்த நம்பி எம்மனோர்க்காகத் தங்கள்
வில்லறம் துறந்த வீரன் தோன்றலால் வேதநூலில்
சொல்லறம் துறந்திலாத சூரியன் மரபும் தொல்லை
நல்லறம் துறந்தது

என்று கூறி நகைக்கிறான்.  பெருமுழக்கமிட்டுச் சிரிக்கிறான் வாலி.  இப்படிக் வாலி கூறக் கேட்ட இராமன் வாலி முன்னே தோன்றுகிறான்.  எல்லாம் தெரிந்த நீங்களே இப்படி செய்யலாகுமா என்று வினா தொடுக்கிறான். “தீமை தான் பிறரைக் காத்துத் தான் செய்தால் தீங்கன்றாமோஎன்று நக்கலாகக் கேட்கிறான்.  “ஓவியத்து எழுத ஒண்ணா உருவத்தாய் அமிழ்தின் வந்த தேவியைப் பிரிந்த பின்னை திகைத்தனை போலும்என்று இராமனின் தவறுக்குத் தானே காரணமும் கூறுகிறான்.  “அரக்கர் தலைவன் தவறு செய்தால் குரங்குத் தலைவனைக் கொல்லுவதாஎன்று கேட்கிறான் வாலி.

கூட்டு ஒருவரையும் வேண்டா கொற்றவ பெற்ற தாதை
பூட்டிய செல்வம் ஆங்கோர் தம்பிக்குக் கொடுத்துப் போந்து
நாட்டொரு கருமஞ் செய்தாய் எம்பிக்கு இவ்வரசை நல்கிக்
காட்டொரு கருமம் செய்தாய் கருமம் தான் இதன் மேல் உண்டோ

உன் தந்தை உனக்குக் கொடுத்த அரச பதவியை பரதனுக்குக் கொடுத்து நாட்டில் ஒரு தருமம் செய்தாய்.  காட்டிலேயோ என் தந்தை எனக்குக் கொடுத்த அரச பதவியைப் பறித்து என் தம்பிக்குக் கொடுத்துள்ளாய்.  தருமத்தின் தலைவன் நீ தான் என்று குத்திக் காட்டுகிறான்.  மறைந்து நின்று நீ கொன்றது ஒரு குற்றமே.  அப்படியிருக்க இராவணன் தவறு செய்தான் என்று எவ்வாறு நீ குற்றம் சாட்ட இயலும் என்றும் கேட்கிறான்.  அதுமட்டுமல்ல,

“இருவர் போர் எதிரும் காலை இருவரும் நல் உற்றாரே
ஒருவர் மேல் கருணை தூண்டி ஒருவர் மேல் ஒளித்து நின்று
வரிசிலை குழைய வாங்கி வாய் அம்பு மருமத்து எய்தல்
தருமமோ என்று வினவுகிறான்.  மறைந்து நின்று அம்பு எய்தது,

வீரம் அன்று விதி அன்று மெய்ம்மையின்
வாரம் அன்று நின் மண்ணினுகு என் உடல்
பாரம் அன்று பகை அன்று பண்பழிந்து
ஈரமின்றி இது என் செய்தவாறு அரோ

என மறைந்து நின்று அம்பு எய்த வீரமற்ற செயலைச் செய்த செயலைக் கண்டிக்கிறான் வாலி.  சூரியன் மரபுக்கே களங்கத்தை ஏற்படுத்தி விட்டதாக வருத்தப்பட்டுத் தெரிவிக்கிறான்.

கார் இயன்ற நிறத்த களங்கம் ஒன்று
ஊர் இயன்ற மதிக்கு உளதாம் எனச்
சூரியன் மரபுக்கும் ஓர் தொன் மறு
ஆரியன் பிறந்து ஆக்கினை ஆம் அரோ

என்று கூறுகிறார் கம்பர்.  மறைந்து நின்று அம்பு எய்து என்னைக் கொல்ல முயன்ற நீ இப்போது ஆண் சிங்கம் போல என் முன் வந்து நிற்கின்றாயே எனக் கேட்கிறான் வாலி. 

பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்த இராமன் இப்போது தன்னுடைய வாதத்தை எடுத்து வைக்கின்றான். 

தொடரும்.


வாலி வதைப் படலம் பாகம் 3

தன் மார்பில் பதிந்த அம்பு இராமனுடையது என்பதை அறிந்ததும் உயிர் போகும் நிலையிலும் வாய்விட்டு சிரித்து இராமன் நெறி பிறழ்ந்ததைச் சுட்டிக் காட்டுகிறான் வாலி.  இப்போது இராமனின் முறை.  தனது நியாயத்தை எடுத்துச் சொல்லுகிறான் இராமன்.  வாலி ஒரு மாயாவியுடன் போரிட குகை ஒன்றுக்குள் சென்று வெகுநாட்களாகப் போரிடுகிறான்.  வெளியில் சுக்கிரீவனும் அமைச்சர் பெருமக்களும் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.  நெடுநாள் ஆன காரணத்தால் தானும் குகைக்குள் புக முயல்கிறான் சுக்கிரீவன்.  தடுத்து நிறுத்துகிறார்கள் அமைச்சர்கள்.

வானம் ஆள என் தம்முனை வைத்தவன்
தானும் மாளக் கிளையின் இறத் தடிந்து
யானும் மாள்வேன் இருந்து அரசு ஆள்கிலேன்

என்று சுக்கிரீவன் கூற தடுத்தனர் முற்று உணர்ந்த முதியரும் அமைச்சரும்.  அரசுரிமையை ஏற்று மக்களைக் காக்கும்படி வேண்டுகிறார்கள்.  எனவே வேறு வழியில்லாமல் சுக்கிரீவன் அரசுப் பொறுப்பை ஏற்கிறான்.  சிறிது காலம் சென்றபின் போரில் வெற்றி பெற்ற வாலி திரும்பி வருகிறான்.  தன் தம்பி அரசாள்வதைக் கண்டு கொதிக்கிறான்.  ஆனால் சுக்கிரீவன் அண்ணன் வரவு கண்டு அகமகிழ்கிறான்.  நடந்ததைக் கூறி ஆணவமில்லாத சுக்கிரீவன் நடந்ததை எடுத்துக் கூறுகிறான்.  ஆனால் சினத்தில் இருந்த வாலி செவிமடுக்கவில்லை.  குற்றமற்றவன் என்று அவன் கூறிய சொற்களை ஏற்கவில்லை வாலி.  கோபத்தில் பொங்கினான்.  தொழுத கையோடு நின்றவனை ஆதரிக்காமல் கொல்லுவேன் என வாலி அடிக்க ஓடினான்.  நால் திசையிலும் ஓடினான் சுக்கிரீவன்.  விடவில்லை வாலி.  எனவே தான் முனிவரால் சாபமிடப்பட்டு வாலியால் வரமுடியாத பொன்மலைப்பகுதியை அடைந்தான்.(இப்பொன்மலைப் பகுதி தான் இருசிய முகமலை என இப்போது அழைக்கப்படுகிறது).  கர்நாடகத்தில் உள்ள ஹம்பிக்கு அருகே துங்கபத்திரா நதிக்கரையில் உள்ளது.  அதுமட்டுமல்ல  சுக்கிரீவனின் மனைவியையும் நீ அடைந்தாய்.  உனக்கு நியாயஅநியாயங்கள் பற்றி நன்றாகத் தெரியும்.  அடுத்தவன் மனைவியை ஆள்வது பாதகமான செய்ல் என்று உணர்ந்தவன் நீ.  ஆனால் சுக்கிரீவனின் மனைவியை நீ அடைந்தாய்.

ஈரம் ஆவதும் இல்பிறப்பு ஆவதும்
வீரம் ஆவதும் கல்வியின் மெய்ந்நெறி
வாரம் ஆவதும் மற்றொருவன் புணர்
தாரம் ஆவதைத் தாங்கும் தருக்கரோ

(வாரம் என்றால் உரிய செயல், தருக்கு என்றால் பெருமை)

மறம் திறம்பல் வலியம் எனா மனம்
புறம் திறம்பல் எளியவர்ப் பொங்குதல்
அறம் திறம்பல் அருங்கடி மங்கையர்
திறம் திறம்பல் தெளிபுடையோர்க்கு எலாம்.

வீரத்தில் இருந்து தவறுதல்,  எளியவர் மேல் பாய்தல், தருமத்தில் இருந்து தவறுதல், கற்பின் வலியை அழித்தல் போன்ற தவறுகளைச் செய்தவன் என்று இராமன் வாலி மேல் அடுக்கடுக்காகக் குற்றம் சாட்டுகிறான்.

தருமம் இன்னது எனும் தகைத் தன்மையும்
இருமையும் தெரிந்து எண்ணலை எண்ணினால்
அருமை உம்பிதன் ஆருயிர்த் தேவியைப்
பெருமை நீங்கினை எய்தப் பெறுதியோ

அறத்தைப் பற்றியோ இம்மை-மறுமை பற்றியோ நீ சிந்திக்கவில்லை.  எனவே தான் உன் தம்பியின் மனைவியை உனதாக்கிக் கொண்டாய்.  இப்படி நீ பல தவறுகளைச் செய்தாய்.  உன் தம்பியோ என்னைச் சரணடைந்தான்.  என் நண்பனானான்.  எளியவன் துன்பத்தை ஒழிப்பது என் கடமை.  எனவே தான் உன்னைக் கொல்லத் துணிந்தேன் என்கிறான் இராமன். தன்னுடைய செயலை இராமன் நியாயப் படுத்தியதும் வாலி மீண்டும் தன் பக்கத்து நியாயத்தை எடுத்து உரைக்கிறான்.

தொடரும்.

No comments:

Post a Comment