Tuesday, August 2, 2011

story of vaali _வாலிவதைப் படலம்

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு


இச்சரத்தினை எய்தவன் யாராக இருக்க முடியும் என்று சிந்திக்கிறான் வாலி.

தேவரோ என அயிர்க்கும் அத்தேவர் இச்செயலுக்கு
ஆவரோ அவர்க்கு ஆற்றல் உண்டோ


எப்போதுமே எதிரியின் நெஞ்சைத் துளைத்துக் கொண்டு வேகமாக வெளியேறும் இராமபாணம்.  அதைத் தன் கையால் பிடித்து தடுத்து நிறுத்துகிறான் வாலி.  அந்த அம்பை உருவுகிறான்.  அதில் இராமனின் பெயர் இருந்ததைப் பார்க்கிறான். தன்து நெஞ்சில் பாய்ந்த அம்பு இராமனால் எய்யப்பட்டது என்று தெரிந்தவுடனேயே வாலி கூறும் வாசகம் நமது நெஞ்சில் நீங்காத வடுவாகப் பதிகிறது.

இல்லறம் துறந்த நம்பி எம்மனோர்க்காகத் தங்கள்
வில்லறம் துறந்த வீரன் தோன்றலால் வேதநூலில்
சொல்லறம் துறந்திலாத சூரியன் மரபும் தொல்லை
நல்லறம் துறந்தது

என்று கூறி நகைக்கிறான்.  பெருமுழக்கமிட்டுச் சிரிக்கிறான் வாலி.  இப்படிக் வாலி கூறக் கேட்ட இராமன் வாலி முன்னே தோன்றுகிறான்.  எல்லாம் தெரிந்த நீங்களே இப்படி செய்யலாகுமா என்று வினா தொடுக்கிறான் வாலி. “தீமை தான் பிறரைக் காத்துத் தான் செய்தால் தீங்கன்றாமோஎன்று நக்கலாகக் கேட்கிறான்.  “ஓவியத்து எழுத ஒண்ணா உருவத்தாய் அமிழ்தின் வந்த தேவியைப் பிரிந்த பின்னை திகைத்தனை போலும் என்று இராமனின் தவறுக்குத் தானே காரணமும் கூறுகிறான்.  “அரக்கர் தலைவன் தவறு செய்தால் குரங்குத் தலைவனைக் கொல்லுவதாஎன்று கேட்கிறான் வாலி.

கூட்டு ஒருவரையும் வேண்டா கொற்றவ பெற்ற தாதை
பூட்டிய செல்வம் ஆங்கோர் தம்பிக்குக் கொடுத்துப் போந்து
நாட்டொரு கருமஞ் செய்தாய் எம்பிக்கு இவ்வரசை நல்கிக்
காட்டொரு கருமம் செய்தாய் கருமம் தான் இதன் மேல் உண்டோ

“உன் தந்தை உனக்குக் கொடுத்த அரச பதவியை பரதனுக்குக் கொடுத்து நாட்டில் ஒரு தருமம் செய்தாய்.  காட்டிலேயோ என் தந்தை எனக்குக் கொடுத்த அரச பதவியைப் பறித்து என் தம்பிக்குக் கொடுத்துள்ளாய்.  தருமத்தின் தலைவன் நீ தான் என்று குத்திக் காட்டுகிறான்.  மறைந்து நின்று நீ கொன்றது ஒரு குற்றமே.  அப்படியிருக்க இராவணன் தவறு செய்தான் என்று எவ்வாறு நீ குற்றம் சாட்ட இயலும் என்றும் கேட்கிறான்.  அதுமட்டுமல்ல,

இருவர் போர் எதிரும் காலை இருவரும் நல் உற்றாரே
ஒருவர் மேல் கருணை தூண்டி ஒருவர் மேல் ஒளித்து நின்று
வரிசிலை குழைய வாங்கி வாய் அம்பு மருமத்து எய்தல்
தருமமோ என்று வினவுகிறான்.  மறைந்து நின்று அம்பு எய்தது,

வீரம் அன்று விதி அன்று மெய்ம்மையின்
வாரம் அன்று நின் மண்ணினுகு என் உடல்
பாரம் அன்று பகை அன்று பண்பழிந்து
ஈரமின்றி இது என் செய்தவாறு அரோ

என மறைந்து நின்று அம்பு எய்த வீரமற்ற செயலைச் செய்த இராமனைக் கண்டிக்கிறான் வாலி.  சூரியன் மரபுக்கே களங்கத்தை ஏற்படுத்தி விட்டதாக வருத்தப்பட்டு பேசுகிறான்.

கார் இயன்ற நிறத்த களங்கம் ஒன்று
ஊர் இயன்ற மதிக்கு உளதாம் எனச்
சூரியன் மரபுக்கும் ஓர் தொன் மறு
ஆரியன் பிறந்து ஆக்கினை ஆம் அரோ

என்று கூறுகிறார் கம்பர்.  “மறைந்து நின்று அம்பு எய்து என்னைக் கொல்ல முயன்ற நீ இப்போது ஆண் சிங்கம் போல என் முன் வந்து நிற்கின்றாயே எனக் கேட்கிறான் வாலி.  

பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்த இராமன் இப்போது தன்னுடைய வாதத்தை எடுத்து வைக்கின்றான். 

தன் மார்பில் பதிந்த அம்பு இராமனுடையது என்பதை அறிந்ததும் உயிர் போகும் நிலையிலும் வாய்விட்டு சிரித்து இராமன் நெறி பிறழ்ந்ததைச் சுட்டிக் காட்டுகிறான் வாலி.  இப்போது இராமனின் முறை.  தனது நியாயத்தை எடுத்துச் சொல்லுகிறான் இராமன்.  வாலி ஒரு மாயாவியுடன் போரிட குகை ஒன்றுக்குள் சென்று வெகுநாட்களாகப் போரிடுகிறான்.  வெளியில் சுக்கிரீவனும் அமைச்சர் பெருமக்களும் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.  நெடுநாள் ஆன காரணத்தால் அண்ணன் திரும்பி வராததைக் கண்டுத் திகைக்கிறான் சுக்கிரீவன்.  அண்ணனுக்கு ஆபத்து ஏற்பட்டிருக்குமோ என்று அஞ்சுகிறான்.  துணைக்குத் தானும் குகைக்குள் புக முயல்கிறான் சுக்கிரீவன்.  ஆனால் சுற்றி இருந்த பெரியவர்களும் அமைச்சர்களும்தடுத்து நிறுத்துகிறார்கள்.  மக்களைக் காக்கும் பொறுப்பு உள்ளதைச் சுட்டிக் காட்டுகிறார்கள்.  மறுக்கிறான் சுக்கிரீவன்.

வானம் ஆள என் தம்முனை வைத்தவன்
தானும் மாளக் கிளையின் இறத் தடிந்து
யானும் மாள்வேன் இருந்து அரசு ஆள்கிலேன்

என்று சுக்கிரீவன் கூற தடுத்தனர் முற்று உணர்ந்த முதியவர்களும் அமைச்சரும்.  அரசுரிமையை ஏற்று மக்களைக் காக்கும்படி வேண்டுகிறார்கள்.  எனவே வேறு வழியில்லாமல் சுக்கிரீவன் அரசுப் பொறுப்பை ஏற்கிறான்.  சிறிது காலம் சென்றபின் போரில் வெற்றி பெற்ற வாலி திரும்பி வருகிறான்.  தன் தம்பி அரசாள்வதைக் கண்டு வெகுண்டு எழுகிறான். கொதிக்கிறான்.  ஆனால் சுக்கிரீவன் அண்ணன் வரவு கண்டு அகமகிழ்கிறான்.  ஆணவமில்லாத சுக்கிரீவன் நடந்ததை எடுத்துக் கூறுகிறான்.  ஆனால் சினத்தில் இருந்த வாலி செவிமடுக்கவில்லை.  சினத்தின் காரணமாகச் சிந்தையைப் பறிகொடுத்து விட்டான் வாலி.  குற்றமற்றவன் என்று அவன் கூறிய சொற்களை ஏற்கவில்லை வாலி.  கோபத்தில் பொங்கினான்.  தொழுத கையோடு நின்றவனை ஆதரிக்காமல் கொல்லுவேன் என வாலி அடிக்க ஓடினான்.  நால் திசையிலும் ஓடினான் சுக்கிரீவன்.  விடவில்லை வாலி.  எனவே தான் முனிவரால் சாபமிடப்பட்டு வாலியால் வரமுடியாத பொன்மலைப்பகுதியை அடைந்தான்.(இப்பொன்மலைப் பகுதி தான் இருசிய முகமலை என இப்போது அழைக்கப்படுகிறது).  கர்நாடகத்தில் உள்ள ஹம்பிக்கு அருகே துங்கபத்திரா நதிக்கரையில் உள்ளது.  அதுமட்டுமல்ல  சுக்கிரீவனின் மனைவியையும் சொந்தம் கொண்டாடி உறவு கொள்கிறான்.  இவற்றையெல்லாம் எடுத்துக் கூறிய இராமர்,  “உனக்கு நியாயஅநியாயங்கள் பற்றி நன்றாகத் தெரியும்.  சிந்தித்துச் செயல்படவில்லை.  அதுமட்டுமல்ல சுக்கிரீவன் மனைவிளை ஆள்வது பாதகமான செய்ல் என்று உணர்ந்தவன் நீ.  ஆனால் சுக்கிரீவனின் மனைவியை நீ அடைந்தாய்.  இது மிகவும் நியாயமற்ற செயல்

ஈரம் ஆவதும் இல்பிறப்பு ஆவதும்
வீரம் ஆவதும் கல்வியின் மெய்ந்நெறி
வாரம் ஆவதும் மற்றொருவன் புணர்
தாரம் ஆவதைத் தாங்கும் தருக்கரோ

(வாரம் என்றால் உரிய செயல், தருக்கு என்றால் பெருமை)

மறம் திறம்பல் வலியம் எனா மனம்
புறம் திறம்பல் எளியவர்ப் பொங்குதல்
அறம் திறம்பல் அருங்கடி மங்கையர்
திறம் திறம்பல் தெளிபுடையோர்க்கு எலாம்.

வீரத்தில் இருந்து தவறுதல்,  எளியவர் மேல் பாய்தல், தருமத்தில் இருந்து தவறுதல், கற்பின் வலியை அழித்தல் போன்ற தவறுகளைச் செய்தவன் என்று இராமன் வாலி மேல் அடுக்கடுக்காகக் குற்றம் சாட்டுகிறான்.

தருமம் இன்னது எனும் தகைத் தன்மையும்
இருமையும் தெரிந்து எண்ணலை எண்ணினால்
அருமை உம்பிதன் ஆருயிர்த் தேவியைப்
பெருமை நீங்கினை எய்தப் பெறுதியோ

அறத்தைப் பற்றியோ இம்மை-மறுமை பற்றியோ நீ சிந்திக்கவில்லை.  எனவே தான் உன் தம்பியின் மனைவியை உனதாக்கிக் கொண்டாய்.  இப்படி நீ பல தவறுகளைச் செய்தாய்.  உன் தம்பியோ என்னைச் சரணடைந்தான்.  என் நண்பனானான்.  எளியவன் துன்பத்தை ஒழிப்பது என் கடமை.  எனவே தான் உன்னைக் கொல்லத் துணிந்தேன் என்கிறான் இராமன். தன்னுடைய செயலை இராமன் நியாயப் படுத்தியதும் வாலி மீண்டும் தன் பக்கத்து நியாயத்தை எடுத்து உரைத்து மறைந்திருந்து கொன்றது தவறே எனச் சுட்டிக் காட்டுகிறான்.

வாலி மிக அழகாக பதில் சொல்கிறான்.  நீங்கள் சொல்லிய அறச் செயல்கள் எல்லாம் மனித குலத்திற்கு உரியன.  நாங்களோ குரங்கு இனத்தைச் சேர்ந்தவர்கள்.  விருப்பமானபடி வாழ்தலே எங்கள் தருமம்.  எனவே மனித தருமத்து நியாயத்தை வைத்து நான் தவறு இழைத்ததாகக் கூற முடியாது என பதில் சொல்கிறான்.  ஒருவகையில் இதைக் கேட்டால் நியாயமாகத் தான் நமக்கும் தெரிகிறது.  இராமனும் ஏற்கனவே இலக்குவனிடம் “பித்து ஆய விலங்குஎன ஏற்கனவே வாலியைக் கூறி உள்ளான். “கற்புடைமை என்பது மனித குலத்திற்கு உரியதாகப் பிரமன் படைத்து விட்டான்.  மணந்து கொண்ட கணவனுடன் வாழுவது மனித தர்மம்.  குரங்குகளாகிய நாங்கள் நேர்ந்தால் நேர்ந்தபடி வாழுமாறு பிரமன் படைத்துவிட்டான்.  மனஉணர்ச்சி வழியே செல்கின்றவர்கள் நாங்கள்.  வேதமுறைப்படி வந்த திருமணமுறை எங்களுக்கு இல்லை.  எங்களுடைய பிறப்பின் தன்மை இப்படிப்பட்டது.  எனவே எங்கள் நியதிப்படி நான் குற்றம் ஒன்றையும் செய்யவில்லை என்று தன் தரப்பை எடுத்து விளக்குகிறான் வாலி.  இராமன் நிதானமாகப் பதில் சொல்கிறான்.  “இறைவனைக் குறித்து தவம் செய்து வரம் பல பெற்றுள்ளாய்.  நீதி நியாயங்களைப் பேசத் தெரிகிறது.  அறவழிகளைப் பற்றி நன்றாக அறிந்துள்ளாய்.  வானவரின் புதல்வனாக உள்ளாய்.  வீரம் மிக்கவன் நீ.  இராவணனையே அடக்கியவன் நீ.  பாற்கடலைக் கடைந்து உள்ளாய்.  எனவே உன் பழக்க வழக்கத்தால் அறநெறியை நன்றாக அறிந்தவன் நீ.  அறவழி என்பது உடல் பற்றியதோ இனம் பற்றியதோ அல்ல.  அறநெறி அறிந்தவன் தவறு செய்துவிட்டு செய்யவில்லை எனச் சாதிக்கக் கூடாது.  அது அறமல்ல.எனப் புத்தி புகட்டுகிறார் இராமர்.

பொறியின் யாக்கையதோ புலன் நோக்கிய
அறிவின் மேலது அன்றோ அறத்து ஆறு தான்
நெறியின் நோன்மையை நேரிது உணர்ந்த நீ
பெறுதியோ பிழை உற்று உறு பெற்றி தான்

என்கிறார் கம்பர்.  “தன் காலை ஒரு முதலை கவ்விய போது  திருமாலை நோக்கிக் “ஆதிமூலமே எனக் அலறிய யானையை ஒரு விலங்கினமாகக் கொள்ள முடியாது.  எல்லா யானைகளும் ஆபத்துக் காலத்தில் இறைவனை அழைப்பதில்லை.  இராவணன் சீதையைத் தூக்கிக் கொண்டு போகும் போது அறவழியைப் பேசி இராவணனுடன் போரிட்ட ஜடாயு என்னும் கழுகு விலங்கினத்தைச் சேர்ந்தது அல்ல.  எல்லா கழுகுகளும் அவ்வாறு நியாயத்தை எடுத்துக் கூறி போரிட முடியாது.  விலங்குகள்  நன்மை தீமைகளைப் பற்றி அறியாது .  உனக்கோ நன்மை தீமையைப் பற்றி நன்றாகத் தெரிகிறது.  வரம் பல பெற்று உள்ளாய்.  உனக்குத் தெரியாத அறவழியே இல்லை.  எல்லா உயிரினங்களிலும் சிறந்ததான மனிதப் பிறவி எடுத்தாலும் தக்கது தகாதது அறியவில்லை என்றால் அவர்கள் விலங்குகளே.  சிவபெருமானைக் குறித்து கடுமையான தவம் புரிந்து அருமையான வரங்களைப் பெற்றவன் நீ.  இப்படியெல்லாம் சிறப்புடைய நீ சுக்கிரீவனின் மனைவியின் கற்பின் சிறப்பை அழித்து விட்டாய்.  எனவே எப்படி பார்த்தாலும் நீ செய்தது குற்றமே என்று இராமன் கூறுகிறான்.

நன்று தீது என்று இயல்நெறி நல்லறிவு
இன்றி வாழ்வதன்றோ விலங்கின் இயல்
நின்ற நன்னெறி நீ அறியா நெறி
ஒன்றும் இன்மை உன் வாய்மை உணர்த்துமால்.

தக்க இன்ன தகாதன இன்னவென்று
ஒக்க உன்னலர் ஆயின் உயர்ந்துள
மக்களும் விலங்கே மனுவின் நெறி
புக்கவேல் அவ்விலங்கும் புத்தேளிரே

இனையது ஆதலின் எக்குலத்து யாவர்க்கும்
வினையினால் வரும் மேன்மையும் கீழ்மையும்
அனைய தன்மை அறிந்தும் அழித்தனை
மனையின் மாட்சி என்றான் மனுநீதியான்.

என்பது கம்பர் வாக்கு.  அப்போதும் விடவில்லை வாலி.  “உங்கள் கூற்றுப்படி நான் விலங்கினத்தைச் சேர்ந்தவன் அல்ல.  நான் விலங்கு அல்ல என்றால் என்னுடன் நேருக்கு நேர் நின்று அன்றோ நீங்கள் போர் புரிந்திருக்க வேண்டும்.  விலங்கை வேடன் கொல்வது போல் மறைந்திருந்து என்னைத் தாக்கியது ஏன் என்று வாலி கேட்கிறான்.  இதற்கு இராமனால் பதில் கூற முடியவில்லை.  ஆனால் இலக்குவன் உதவிக்கு வருகிறான்.  “உன் தம்பி ஏற்கனவே சரணடைந்து விட்டான்.  நேரில் வந்தால் நீயும் சரணடைவாய்.  அப்போது நீதியை நிலைநிறுத்த முடியாது.  எனவே என் அண்ணன் மறைந்திருந்து அம்பெய்தான் என்று இலக்குவன் கூறுகிறான்.  இவையெல்லாம் கேட்டு ஒருவழியாக இறுதியில் சமாதானமடைகிறான் வாலி.  தவறை உணர்கிறான்.  இராமனை வணங்குகிறான் கவிக்குலத்து அரசன் வாலி.

தாயென உயிர்க்கு நல்கித் தருமமும் தகவும் சால்பும்
நீயென நின்ற நம்பி நெறியினில் நோக்கும் நேர்மை
நாயென நின்ற எம்மால் நவையற உணரலாமே
தீயென பொறுத்தி என்றான் சிறியன சிந்தியாதான்.

உயர்ந்த நன்னெறியை நாய் போன்ற என்னால் உணர முடியவில்லை.  மன்னிக்க வேண்டுகிறேன் என்று கூறிகிறான் சிறியன சிந்தியாதான்.  அதோடு நிற்கவில்லை.  “மரணத்தருவாயில் எனக்கு நல்லறிவைக் கொடுத்துள்ளாய்.  மூவர் நீ முதல்வன் நீ முற்றும் நீ மற்றும் நீ பாவம் நீ தருமம் நீ பகையும் நீ உறவும் நீ என்று இராமனைப் போற்றுகிறான்.  சிந்திக்கிறான்.  ஒரு தடவை விலங்கு அல்ல என்கிறான்.   ஆனால் விலங்கைக் கொல்வது போல மறைந்து நின்று கொன்றது நியாயம் என்று சொல்லுகிறான் இந்த இராமன்.  எதிர்காலத்தில் என் தம்பிக்கோ என் மகனுக்கோ இதே கதி வந்துவிடக்கூடாதுஎன்று நினைக்கிறான்.  எனவே இராமரிடம் சில வரங்கள் சில வேண்டுகிறான்.
பிறவி நோய்க்கும் அருமருந்து அனைய ஐயா வரந்தரு வள்ளால் ஒன்று கேள் என மறித்தும் சொல்வான்.  நீங்கள் உண்மையிலேயே பெரிய வீரர் தான்.  முப்புரம் எரித்த சிவபெருமானும் பிற தேவர்களும் கொடுத்த வரங்களால் வலிமை கொண்ட என் மார்பையே துளைக்கும் வண்ணம் சரம் தொடுத்தவரன்றோ நீங்கள்.   வரங்களை அள்ளித் தரும் சிவபெருமானே உங்கள் நாமத்தைக் கூறி அன்றோ வரம் தரும் வள்ளல்தன்மையை அடைந்துள்ளார்.  உயர்திணை அஃறிணைப் பொருட்களாக ஆறுவகைப் பருவங்களாக மலரும் அதில் உள்ள மணமுமாக எல்லாவற்றிலும் நீங்கள் நீக்கமறக் கலந்து உள்ளீர்கள்.  உங்கள் அம்பினால் மாளும் நான் முக்தி அடைவது உறுதி.

“யாவரும் எவையுமாய் இருதுவும் பயனுமாய்ப்
பூவும் நல்வெறியும் ஒத்து ஒருவரும் பொதுமையாய்  இருப்பவன் இராகவன் என்பது கம்பர் வாக்கு.  (இருது(ருது எனும் வடசொல் தமிழ் மொழியில் வந்துள்ளது) என்றால் பருவகாலம்.  வெறி என்றால் மணம்.).  நான் செய்த தீமைகளுக்கெல்லாம் தண்டனை கொடுத்து எனக்கு முக்தி அளித்து விட்டாய் “தருமமே உருவமாய் உடையவ.  “வானினும் உயர்ந்த மானக் கொற்றவனே, குரங்குகளுடன் ஆலோசனை செய்து எனது தம்பிக்கு பயனற்ற வெற்று அரசைக் கொடுத்து எனக்கு தண்டனை மூலம் வீட்டுப் பேற்றினை அளித்து உள்ளாய்.  ஓவிய உருவத்தினனே, ஒருவேளை என் தம்பி இனப் பழக்கத்தால் என்றேனும் மது அருந்தி தவறு செய்தால் என் மேல் சரம் எய்தது போல் என் தம்பி மேல் சரம் தொடுக்கக் கூடாது என வேண்டுகிறேன்.  அண்ணனைக் கொன்றவன் இவன் என்று உன் தம்பிமார்கள் என் தம்பியை இகழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.  என்னிடம் உதவி கேட்டிருந்தால் என் வாலில் இராவணனைக் கட்டி வந்து உன் துணைவியை மீட்டிருப்பேன்.  காலம் கடந்துவிட்டது.  நான் மரணத்தின் வாசலில் உள்ளேன்.  கடந்ததைச் சொல்லிப் பயன் இல்லை.  ஆனால் அப்பணியைச் செய்ய வல்லமை உள்ளவன் அனுமன் இங்கே உள்ளான்.

.....மாய அரக்கனை வாலில் பற்றிக்
கொற்றவ நின் கண் தந்து குரக்கியல் தொழிலும் காட்டப்
பெற்றிலென் கடந்த சொல்றிப் பயனிலைப் பிறிது ஒன்றேனும்
உற்றது செய்க என்றாலும் உரியன் இவ்வனும்ன்

என்றான்.  அதுமட்டுமல்ல அனுமனை உன்னடைய வில் போல் நினைத்திடல் வேண்டும்.  வில் வளைத்தால் எதையும் சாதிக்கும் வல்லமை படைத்தவன் நீ.  அதே போல் அனுமன் நினைத்தால் நினைத்ததை முடிப்பான்.  என்னுடைய தம்பியை உன்னுடைய தம்பியாகக் கருத வேண்டும்.  இவர்கள் உதவியால் உன் துணைவியை நீ மீண்டும் அடையலாம். என்று கூறுகிறான் வாலி.

பின்னர் சுக்கிரீவனை அழைத்து அறிவுரை கூறுகிறான்.  “பரம்பொருளே வில்லேந்தி உன் முன் இராமனாக நிற்கிறான்.  முக்திச் செல்வம் வேண்டும் என எண்ணுவோர் இராகவனையே துதிக்கிறார்கள்.  இவருக்குப் பணி செய்து நீயும் முக்தி பெறலாம்.  இராமபிரான் கட்டளையை தலைமேற்கொண்டு அக்கறையுடன் பணி செய்ய வேண்டும்.  அவர் கருதியதை நீ முடித்துக் காட்ட வேண்டும்.  குற்றம் பொறுப்பார்கள் என்று கருதி தவறு இழைக்கக் கூடாது.என்று சுக்கிரீவனை அறிவுறுத்திப் பின் தன் மகன் அங்கதனை அழைக்கிறான்.    அங்கதன் வரும் காட்சியும் அழுது புலம்பும் காட்சியும் மனக் கண்ணால் பார்க்கும் வண்ணம் கம்பர் சொல்லோவியமாகத் தந்துள்ளார்

சுடருடை மதியம் என்னத் தோன்றினன் தோன்றி யாண்டும்
இடர் உடை உள்ளத்தோரை எண்ணினும் உணர்ந்திலாதான்

துன்பத்தையே இதுவரை காணாதவன் அங்கதன்.  தந்தை குருதிக் கடலில் விழுந்து கிடப்பதைக் கண்டவுடன் புலம்புகிறான்.  தந்தையின் மீது வீழ்ந்து அழுகிறான்.

கண்டனன் கலுழி நீரும் குருதியும் காலை மாலைக்
குண்டலம் அலம்புகின்ற குவவுத்தோட் குரிசில் திங்கள்
மண்டலம் உலகில் வந்து கிடந்ததம் மதியின் மீதா
விண்தலம் தன்னின் இன்று ஓர் மீன் விழுந்தென்ன வீழ்ந்தான்.
என்கிறார் கம்பர்.
“எந்தையே எந்தையே இவ்வெழுதிரை வளாகத்து யார்க்கும்
சிந்தையால் செய்கையால் ஓர் தீவினை செய்திலாதாய் என விளித்து  “நின் முகம் நோக்கிக் கூற்றம் வந்ததே அன்றோ அஞ்சாதுஎனத் துடிக்கிறான்.   சிறியன சிந்தியாதான என்று அழைக்கப்படும் வீரனான வாலி சிந்தையால் செய்கையால் ஓர் தீவினை செய்யாதவன் என அங்கதன் மொழிகிறான்.   “பூமியைக் காக்க எண்புறமும் நிற்கும் யானைகளைத் தேர்ற்கடித்த இராவணன் கூட உன் வாலின் வீரத்தை நீனைத்த போதெல்லாம் அஞ்சினானே.  அப்படிப்பட்ட பெருவீரனாகிய நீ மரம் சாய்ந்தது போல் வீழ்ந்து கிட்க்கிறாயே.  இனி தேவர்களோ அசுரர்களோ பாற்கடலைக் கடைய வேண்டும் என்றால் யாருடைய வலிமையை நம்பி கடைய முடியும்.  பாற்கடலைக் கடைந்து அமுதத்தை அடைய உதவினாய்.  உனக்கு அந்த அமுதத்தைத் தரவில்லையே அந்தத் தேவர்கள்.  நீயும் அந்த அமுதத்தைப் பெறவேண்டும் என்று நினைக்கவில்லையே.  நீ இப்போது இறக்கும் தருவாயில் உள்ளாயே.  உன்னைப் போன்ற வள்ளல் யாரும் உண்டோ?என்று மனம் பதைபதைத்துப் புலம்புகிறான் அங்கதன்.  வாலி தன் மகன் அங்கதனைத் தேற்றுகிறான்.  இராமனால் மரணத்தைத் தழுவிக்கொண்டு இருப்பது புண்ணியத்தின் பயனே என்பதை உறுதி செய்து தன் மகனுக்குத் தெரிவிக்கிறான்.  பின்னர் தன் மகனுக்கு சில அறிவுரைகளைக் கூறுகிறான்.  “தந்தையாகிய என் சொல்லைக் கேட்பாயாக.  இளமைப் பருவத்தின் விளையாட்டுத் தன்மையை விட்டுவிட வேண்டும்.  இந்த இராகவன் பிறவி நோய்க்கு மருந்து போன்றவன்.  இவன் கட்டளைய்ச செயல்படுத்தி நடந்து கொள் என்று கூறிவிட்டு இராமனிடம் “இவன் குற்றமற்றவன்.  இவனையும் உன் அடைக்கலமாக ஏற்றுக் கொள்ளவேண்டும் என வேண்டுகிறான்.  அடைக்கலம் என்று வந்தவரை இராமன் எப்பாடு பட்டும் காப்பாற்றுவான் என்பது வாலிக்கு நன்றாகப் புரிந்து விட்டது.  எனவே தன் மகன் அங்கதனுக்கு யாராலும் பாதகம் வரக்கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு அடைக்கலமாக ஏற்றுக் கொள்ளும்படி இராமனிடம் வேண்டுகிறான்.  இராமனும் அவ்வாறே அங்கதனை அடைக்கலமாக ஏற்று அதற்கு அடையாளமாகத் தன் வாளை அவனிடம் தருகிறான்.  இது கண்டு வாலி திருப்தி அடைகிறான்.  அவன் இராமபாணத்தைப் பிடித்திருந்த பிடி நழுவுகிறது.  தளர்கிறது.  உடனே அந்த பாணம் வாலியின் மார்பைத் துளைத்துக் கொண்டு உயர எழுந்து இராமனின் அம்பறாத்தூணியில் சேர்ந்தது.    


இயன்றால் அருள்கூர்ந்து கம்பராமாணத்தில் கிட்கிந்தா காண்டத்ல் ஏழாவது படலமாக வரும் வாலி வதைப்படலத்தை ஒருமுறை படித்துப் பாருங்கள்.  தமிழின் பெருமையை உணரலாம்.  பல நியாயங்கள் மோதுவதைப் படித்து இரசிக்கலாம்.

No comments:

Post a Comment