Wednesday, August 25, 2010
ennaip patri - mudinthavudan americap payanathirku varugiren.
இளங்கலையில் சேர விண்ணப்பித்தவுடன் நேரில் ஆய்வு செய்ய என்னை முதல்வர் அழைத்தார். ஆம் அப்போது முதல்வர் சுப அண்ணாமலை அவர்கள். என்னுடைய விண்ணப்பத்தைப் பார்த்தார். என்னுடய மதிப்பெண் பட்டியலைப் பார்த்தார். ஏனப்பா நீ தமிழ் இலக்கியம் படிக்கலாமே. கல்லோரியிலேயே முதல் மதிப்பைப் பெற்று இருக்கிறாயே? ஏன் ஆங்கில இலக்கியம் படிக்க வேண்டும் என்று விரும்புகிறாய் என்று கேட்டார். எனக்குப் பதில் சொல்லத் தெரியவில்லை. ஆனால் ஆங்கில இலக்கியம் தான் வேண்டும் என்று கூறி ஆங்கில இலக்கியத்தைப் பெற்று படித்தேன். பட்டம் பெற்றேன். பட்டப் படிப்பு படிக்கும் பொது பலபலக் கனவுகள். படித்து வெளியே வந்தேன். மேல் படிப்பு படிக்க முடியாத குடும்பச் சூழ்நிலை. வேலை கிடைக்கவில்லை. ஒரு வெறியில் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளிலே தட்டச்சும் சுருக்கெழுத்தும் படிக்கப் போனேன். கடுமையான முயற்சியில் ஒரே ஆண்டில் தமிழ் தட்டெழுத்து மற்றும் சுருக்கெழுத்தில் உயர்நிலை ஆங்கில தட்டெழுத்தில் உயர்நிலை, ஆங்கில சுருக்கெழுத்தில் மட்டும் கீழ் நிலையே தேற முடிந்தது., ஆனால் உடனே வேலை கிடைத்து விட்டது. எனக்கு மிக ஆச்சரியம். தினசரி நேர்காணலுக்கான கடிதங்கள் வந்தன. முதலில் நகரமைப்பு துணை இயக்குனர் அலுவலகத்தில் பணி கிடைத்தது. கடிதம் தான் வருகிறதே என்று அடுத்து வணிக வரி அலுவலகத்திற்கான நேர்காணலுக்குச் சென்றேன். அங்கும் பணி கிடைத்தது. எனக்கு அண்டப் பணி பிடித்திருந்தது. எனவே சேர்ந்து விட்டேன். பிறகு தமிழ்நாடு பணியாளர் தேர்வு எழுதினேன். அறநிலையத் துறையில் நிரந்தர வேலை கிடைத்தது. பணியில் சேர்ந்தேன். அங்குதான் ம அ முருகேசன் என்னும் நீதிபதியிடம் பணி புரியும் வாய்ப்பு கிடைத்தது. மீண்டும் ஒரு திருப்புமுனை . அவர் ஒரு தமிழ் ஆர்வலர். பல கட்டுரைகளை எனக்கு வழங்கினார். எனவே மீண்டும் தமிழில் ஆர்வம் துளிர்த்தது. தமிழ் சுருக்கெழுத்துத் துறையில் எதாவது சாதிக்க வேண்டும் என்று எண்ணம் வந்தது. தமிழ் சுருக்கெழுத்தில் எதாவது ஒரு சாதனை படைக்க வேண்டும் என்று ஒரு எண்ணம் வந்தது. முயற்சி செய்தேன். முடிவில் உயர்வேகம் நிமிடத்திற்கு `150 வார்த்தைகள் என்ற வேகத்தில் தமிழில் எழுதும் தேர்வில் வெற்றி பெற்றேன். இதற்குள் நீதிபதி மாற்றலாகி மதுரை மாநகராட்சிக்குப் போய்விட்டார். ஆனால் மதுரையிலே தொடர்ந்து இருக்க வழி கட்டிய அவர் என்னை மதுரை மாநகராட்சியில் பணியில் சேர்த்து விட்டார். 23 ஆண்டுகள் பணி ஆற்றினேன். தன்விருப்ப ஓய்வில் வெளியே வந்தேன். தமிழ் இலக்கியத்தைப் படிக்க வேண்டும் என்னும் ஆர்வம் மீண்டும் துளிர் விட்டது. பன்னிரு திருமுறை, நாலாயிர திவ்ய பிரபந்தம், சித்தர் பாடல்கள், திருஅருட்பா, திருக்குறள், சிலப்பதிகாரம், கண்ணதாசன் பாடல்கள், பாரதியார் பாடல்கள், பாரதிதாசன் பாடல்கள் என்று தொடர்ந்தேன். இவ்வளவு நாட்கள் வீணாகக் கழித்து விட்டோமே என்று வருத்தப் பட்டேன். பேராசிரியர் சுப.அண்ணாமலை அவர்கள் துவக்கத்தில் கூறியதைக் கேட்டிருந்தால் முன்னமேயே இந்த இலக்கியங்களை படிதிருக்கலமே என்று எண்ணினேன். என் மகன் இப்பொழுது அமெரிக்க நாட்டில் பணி புரிவதால் அங்கு வரலாம் என்று எண்ணி கடவுச் சீட்டு பெற மனு செய்தேன். கிடைத்தவுடன் அமெரிக்க நாட்டுக்கு செல்ல அனுமதி பெற அந்த நாட்டு தூதரகத்தில் மனு செய்து அனுமதி பெற்றேன். போய்வர பயணச் சீட்டு வாங்கி மருத்துவ காப்பீட்டுப் பணத்தையும் செலுத்தி இறுதியாக ஜூன் 25 ஆம் தேதி அமெரிக்கா செல்ல புறப்பட்டேன்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment