தமிழில் சிந்தியுங்கள் - தமிழில் பேசுங்கள் - தமிழில் இறைவனை வழிபடுங்கள் - முன்னோர்களை நினைவு கூறுங்கள் - தமிழர்களுடன் பேசும் போது தமிழிலேயே பேசுங்கள் - தமிழிலேயே மின்னஞ்சல் அனுப்புங்கள்
அமரிக்காவில் உள்ள ஏன் பேத்தியின் ஆரம்பப் பள்ளி இன்று திறந்தது. "தாத்தா இன்று என்னுடன் பள்ளிக்கூடத்திற்கு வந்து பாருங்கள் - ஏன் நண்பர்களை காண்பிக்கிறேன் என்று கூறினாள். அவள் படிக்கப் போவது முதலாம் வகுப்பு. மகிழுந்தில் போகலாம் என்று கூறினாள். நடக்கும் தூரம் தான். ஆனால் மலை ஏற்றம். எனவே சரி எனக் கூறினேன். பள்ளிக்கு வெகு தொலைவிலேயே வண்டியை நிற்பாட்ட வேண்டி இருந்தது. அவ்வளவு கூட்டம். அங்கு போனால் எல்லோரும் புகைப்படக் கருவிகளுடன் வந்து தங்கள் குழந்தைகள் பள்ளிக்குப் போவதை படம் பிடித்துக் கொண்டிருந்தார்கள். குழந்தைகள் தங்கள் நண்பர்களைப் பார்த்தவுடன் ஓடிச் சென்று கட்டித் தழுவிக் கொண்டனர். காட்சிகளை பெற்றோர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தனர். ஆசிரியர்கள் தங்கள் பெயரையும் வகுப்பையும் குறித்து பதாகை போல் பிடித்துக் கொண்டு இருந்தனர். என் பேத்தியைக் கூட்டிக் கொண்டு போய் அவளது வகுப்பு ஆசிரியர் நிற்கும் இடத்திற்கு அருகில் போய் நின்றோம். அவர் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு எங்களிடம் கைகுலுக்கினார். மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. பள்ளிக்கு அழைத்துவர பேருந்து வசதி வ்வேண்டுமா என்று கேட்டார். ஆமாம் என்றோம். குறித்துக் கொண்டார். "ஏனப்பா அருகில் தானே இருக்கிறது - நாமே அழைத்து வந்து விடலாமே" என்றேன். "இல்லையப்பா பனி விழும் போது நடைமேடையில் நடந்து அழைத்து வர முடியாது. மழை என்றாலும் சிரமம். பள்ளிப் பேருந்து பாதுகாப்பானது" என்றான். பள்ளிப் பேருந்து குழந்தைகளை ஏற்றிக்கொண்டு இருக்கும்போது அதன் பின்னாலும் எதிரிலும் வரும் வாகனங்கள் நின்று போக வேண்டுமாம். இல்லை என்றால் ஆயிரம் டாலர் அபராதமாம். குழந்தைகளுக்கு அவ்வளவு பாதுகாப்பு. அவ்வளவு முக்கியத்துவம். பள்ளிகூடங்கள் இருக்கும் பகுதிகள் மற்றும் குழந்தைகள் அதிகம் நடமாடக்கூடிய இடங்களுக்கு அருகில் வாகனங்கள் இருபத்தி ஐந்து மைல் வேகத்தில் தான் செல்ல வேண்டும் என்று கட்டுப்பாடு இருக்கிறது. "அட நாமும் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி படிக்க வைத்தோமே? இப்படியெல்லாம் கவலைப்பட்டோமா" என்று தோன்றியது. சில இடங்களில் "எங்கள் அருமைக் குழந்தைகள் விளையாடுகிறார்கள். வாகனத்தின் வேகத்தைக் குறைத்து கவனமாகச் செல்லுங்கள்" என்று கூட பதாகைகள் வைக்கப்பட்டு உள்ளன. தொடர்வேன்
..
No comments:
Post a Comment