நான் வலைத் தளங்களுக்குப் புதியவன். ஜூன் மாதம் அமரிக்காவுக்கு வந்த பிறகு பொழுது போகாத காரணத்தால் வலைத் தளங்களுக்குள் உலவினேன். எப்படி உலவுவது என்று என் மகனிடம் கற்றுக்கொண்டேன். இதற்குமுன் மின்னஞ்சல் பார்க்கவும் மின்னஞ்சல் அனுப்பவும் மட்டும் இணையத்தைப் பயன்படுத்தினேன். இப்பொழுது தான் இப்படி ஒரு தகவல் களஞ்சியம் உள்ளது எனப் புரிந்தது. முதலில் திருவாசகம் கிடைக்குமா என்று தேடினேன். படிக்கவும் கிடைத்தது. பாடலாகக் கேட்கவும் முடிந்தது. அவ்வளவு தகவல்கள் திருவாசகத்தைப் பற்றி. மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். பின்னன் பன்னிரு திருமுறை எனத் தட்டினேன். தகவல்கள் விரிந்தன. பல தகவல்கள் காத்திருந்தன. TAMIL HINDU என்று தட்டினேன். ஒரு வலைத் தளம் வந்தது. அப்பப்பா எண்ணற்ற தகவல்கள். வீடியோ காட்சிகளுடன் ஒரு தளமாக இருந்தது. கம்பரமயனதைப் பற்றி ஹரிகிருஷ்ணன் என்பவர் வரைந்த கட்டுரைகள், திருமலை என்பவர் கொடுத்த தாமிரபரணி பற்றிய கட்டுரை, வழிபாட்டு திருதலங்களைப் பற்றி, பாரதியார் பற்றி என கட்டுரைகள் விரிந்தன. படித்துப் பரவசம் அடைந்தேன். இதிலே சிறப்பு என்ன என்றால் இந்தக் கட்டுரைகளைப் பற்றி நாம் நமது கருத்துகளைப் பதிய முடிகிறது. நாம் அவசியமாக பதிய முயற்சி செய்ய வேண்டும். நானும் படித்து என் கருத்துகளைப் பதிந்தேன். மற்றவர்கள் பதிந்த கட்டுரைகளைப் படிக்கும் போதும் இந்தக் கட்டுரைகளைப் படிக்கும் போதும் பிற தளங்களைப் பற்றிய தகவல்கள் எனக்குக் கிடைத்தன. அப்படி நான் அறிந்து கொண்டது தான் tamilvu என்னும் தமிழ் இணைய தளத்தின் பெயரை. அதைத் திறந்து பார்த்தல் அங்கே நூலகம் என்று ஒரு பிரிவு - அகராதி என்று ஒரு பிரிவு இருந்தது. நூலகத்தைச் சொடுக்கித் திறந்தேன். ஆச்சரியம். அங்கே எட்டுத்தொகை நூல்கள், பத்துப்பாட்டு நூல்கள், பதினெட்டு நூல்கள், சைவ சமய நூல்களான பன்னிருதிருமுறைப் பாடல்கள், சைவ சித்தாந்த பாடல்கள், வைணவ நூலான நாலாயிர திவ்யப்ரபந்தம், கிருத்துவ சமய நூல்கள் - அதிலே எனக்குப் பிடித்த கண்ணதாசனின் இயேசு காவியம், இஸ்லாமிய சமய நூல்கள் - நான் இதுகாறும் படிக்க கிடைக்காத குரான் காவியம் அழகான தமிழில் இருந்தது - பாரதியார் பாடல்கள், பாரதிதாசன் பாடல்கள், கம்ப ராமாயணம், வில்லிபாரதம், கல்கி அவர்களின் சிறந்த கதைகள், பேரறிஞர் அண்ணாவின் கதைகள், அகிலனின் கதைகள், திருஅருட்பா இப்படி ஒரு பெட்டகமே இருந்தது. அதுவும் பொருளுடன். திகைத்தேன். வாழ்நாளில் பல ஆண்டுகளை வெட்டியாக பொழுது போக்கிவிட்டோமே என்று வருந்தினேன். தினசரி படித்தேன். aanmegam என்று ஒரு தளத்தில் பல இறைப் பாடல்கள், சுகி சிவம் போன்றோரின் பேருரைகள், கிருபானந்தவாரியாரின் பேருரைகள் எல்லாம் இருந்தன. மதுரைக்காரர் ஒருவர் படைத்திருந்தார் அந்த தளத்தை. koumaram என்று ஒரு தளத்தில் முருகனைப் பற்றிய அதனைத் தகவல்களும் பாடல்களும், வீடியோ பாடல்களும் கொட்டிக் கிடந்தன. தமிழ் மந்திரங்கள் ஏராளமாக இருந்தது. இப்படி தளம் மாறி மாறிச் சென்றபோது தான் தேனியைச் சேர்ந்த ஒரு நண்பரின் அருமையான தளம் ஒன்று கண்ணில் சிக்கியது. அது தான் muthukamalam என்னும் தளம். இது ஒரு supermarket மாதிரி. எல்லா தகவல்களும் கொட்டிக் கிடந்தன. வலைதளங்களைப் பற்றிய எராளமான கட்டுரைகள் இருந்தன. எனக்கு அன்று இரவு உறக்கம் வரவில்லை. தொடர்ந்தேன் என் பயணத்தை. பல தளங்களைப் பார்க்க முடிந்தது. தமிழில் அரசின் பணியை விட ஆர்வலர்களின் பங்களிப்பே மிக அதிகம் என்பதைப் புரிந்து கொண்டேன். மாநாடுகள் நடத்துவதில் பயன் இல்லை. இப்படிப்பட்ட தளங்களைப் பற்றி - ஆன்மீகமாக இருந்தாலும் இலக்கியமாக இருந்தாலும் - அரசியலாக இருந்தாலும் - ஈழத் தமிழ் சகோதரர்களின் எண்ணற்ற தளங்களாக இருந்தாலும் நாம் படிக்க - அறிந்து கொள்ள வாய்ப்புக்கள் விரிய வேண்டும். அப்பொழுது தான் தமிழ் சமுதாயம் விழிப்படையும். இல்லையேல் திரைப்படம் - சின்னத்திரை என்று விரைவில் தமிழ் மொழியை - தொன்மையான கலாச்சாரத்தை இழக்க நேரிடும்.ல் winmani என்ற தளத்தில் நமது மாணவர்களுக்கான மின்னணு பற்றிய கணினி பற்றிய எராளமான தகவல்கள், பொது அறிவுக்கான கேள்விகள் பதிலுடன் உள்ளன. மாணவர்கள் தினசரி இதைப் படித்தாலே போதுமான அளவு பொதுஅறிவு நிச்சயமாக வளரும். இப்படி வேடிக்கையாக - விளையாட்டாக தொடர்ந்த வலைப் பயணம் எனக்கு பல புதிய பயிற்சிகளையும் தந்தது. இதன் விளைவாக யாருடைய உதவியும் இன்றி - அறுபது வயது துவங்கிய ஜூலை 13 அன்று தமிழில் இப்படி ஒரு வலைப்பூவைத் துவக்கி தமிழில் தகவல் பரிமாற்றம் செய்ய என்னால் - தவறு - அடியேனால் முடிகிறது. தொடரும்.
No comments:
Post a Comment