3 கல்வியான் ஆய கழிநுட்பம் கல்லார்முன்
சொல்லிய நல்லவுந் தீயவாம் - எல்லாம்
இவர்வரை நாட! தமரையில் லார்க்கு
நகரமும் காடுபோன் றாங்கு.
எல்லாப் பொருள்களாலும் விரும்பப்படும் மலைநாட்டை உடையவனே!, (முன்னர்ப் பெற்றிருந்து பின்னர்) உறவினரை இல்லார்க்கு, நகரமும் காட்டை ஒத்துத் துன்பம் பயத்தல்போல, நூல்களைக் கற்றதனாலாய மிக்க நுண்பொருள்களுள், நூல்களைக் கல்லார் முன்பு கூறிய நல்லனவும் பொருளற்றனவாகத் தீயவாய் முடியும்.
வள்ளுவனாரும், 'அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால்தங்கணத்தர் அல்லார்முன் கோட்டி கொளல்' என்று குறித்தார்.
'தமரையில்லார்க்கு நகரமும் காடு போன்றாங்கு' என்பது இச்செய்யுளிற் கண்ட பழமொழி. தமர் என்றால் உறவினர் என்று பொருள்.
4 கேட்பாரை நாடிக் கிளக்கப் படும்பொருட்கண்
வேட்கை அறிந்துரைப்பர் வித்தகர் - வேட்கையால்
வண்டு வழிபடரும் வாட்கண்ணாய்! தோற்பன
கொண்டு புகாஅர் அவை.
(காம) விருப்பினால் (கண்களைப்பெடை வண்டுகள் எனக் கருதி) ஆண் வண்டுகள் பின் செல்லாநின்ற வாள்போலுங் கண்களையுடைய பெண்ணே!, அறிஞர் தாம் கூறும் பொருள்களைக் கேட்கத்தக்காரைத் தேடி, தம்மால் கூறப்படும் பொருளிடத்து அவர்களுக்கு விருப்பம் இருப்பதை அறிந்து சொல்லுவார்கள்,
அவையின்கண் தோல்வியடைதற்குரியனவற்றைக் கொண்டு போகார்.
கற்றார் அவையறிந்து ஆராய்ந்து சொல்லுவர் என்பது இப்பாடலின் பொருள்.
சரி அடுத்து சதகதைப் பார்ப்போமா?
அந்தணர் என்றால் யார் என்று இப்போது பட்டிமன்றமே நடத்துகிறார்கள். இந்த புலவர் என்ன கூறுகிறார் என்று பாருங்களேன்.
2. அந்தணர் இயல்பு
குறையாத காயத்ரி யாதிசெப மகிமையும், கூறுசுரு திப்பெருமையும்,
கோதிலா ஆகம புராணத்தின் வளமையும், குலவுயா காதிபலவும்,
முறையா நடத்தலால் சகலதீ வினைகளையும் முளரிபோ லேதகிப்பார் முதன்மைபெறு சிலைசெம்பு பிருதுவிக ளில்தெய்வ மூர்த்தம்உண் டாக்குவிப்பார் நிறையாக நீதிநெறி வழுவார்கள் ஆகையால், நீள்மழை பொழிந்திடுவதும்,
நிலமது செழிப்பதும், அரசங்செங் கோல்புரியும் நிலையும், மா தவர்செய்தவமும், மறையோர்க ளாலே விளங்கும் இவ்வுலகத்தின் மானிடத் தெய்வம்இவர் காண் மயிலேறி விளையாடு குகனே!புல் வயல்நீடு மலைமேவு குமரேசனே!
குற்றமில்லாத காயத்திரி முதலானவற்றை ஓதும் பெருமையையும்,
சொல்லப்படும் மறையின் சிறப்பையும்,
பிழையில்லாத ஆகமங்களின் சிறப்பையும் புராணங்களின் சிறப்பையும்,
விளங்கும் வேள்வி முதலான யாவற்றையும், ஒழுங்காக நடத்துவதனால்,
எல்லா வகையினுமுள்ள கொடிய நெருப்பைப் போலே நீக்கிக் கொள்வார்,
எல்லா வகையினுமுள்ள கொடிய நெருப்பைப் போலே நீக்கிக் கொள்வார்,
சிறப்புப் பெற்று கல்லினுஞ் செம்பினும் மண்ணிலும், தெய்வத் தன்மையை ஏற்றி வைப்பார்,
நன்னெறியிலிருந்து வழுவாமல் ஒழுங்காக இருப்பார்கள்,
ஆதலினாலே, நீள் மழை பொழிந்திடுவதும் - மண் வளம் பெறுவதும், மன்னவர்கள்
நல்ல அரசாட்சி நிலையாகச் செய்வதும், பெரிய தவசிகள் செய்யும் தவமும்,
மறையை ஓதும் அந்தணர்களாலே விளக்கமுறும், இவர்கள் மக்களிலே சிறந்தவர்கள்.
(விளக்கவுரை) காயத்திரி (வடமொழி) - ஞாயிற்றை
வழிபடும் மந்திரம். சுருதி (வடமொழி) - கேட்கப்படுவது.
கோது - பிழை,
ஆகமம் (வடமொழி) - மறையின் அங்கம்.
புராணம் - பழைமை.
யாகம் (வடமொழி) - வேள்வி.
முளரி (வடமொழி) - நெருப்பு,
தகிப்பார் (வடமொழி) - அழிப்பார்.
மூர்த்தம் (வடமொழி) - நிலை.
(கருத்து) அந்தணர்கள் முறையாகக் குலமுறைப்படி நடந்தால் நாட்டுக்கு நன்மை யுண்டாகும்.
கருத்து சிறந்தது தான். எவ்வளவு வடமொழிச் சொற்கள். நாம் அவற்றுக்கான தமிழ் சொற்களை அறிந்து கொண்டோமல்லவா. அதுவே எனக்கு மிக்க மகிழ்ச்சி.
No comments:
Post a Comment