அருட்செல்வஞ் செல்வத்துட் செல்வம் பொருட்செல்வம்
பூரியார் கண்ணு முள.
The wealth of wealth is wealth of grace
Earthly wealth e'en the basest has.
நாம் உலகத்தில் உள்ள பல வகையான செல்வங்களை - தங்கத்தை, பணத்தை, நிலத்தை, வேட்டை - இவை எல்லாம் செல்வம் என்று கூறிக்கொண்டு இறுமாந்து கொண்டு இருக்கிறோம். இவைகளை யார் வேண்டுமானாலும் சேர்க்கலாம். ஆனால் உண்மையில் செல்வம் என்றால் என்ன தெரியுமா? அருட்செல்வம் தான் உயர்ந்த செல்வம் என்று அறுதியிட்டு உறுதியாகச் சொல்கிறார் திருவள்ளுவர்.
இதே போன்று நாலடியாரிலும் செல்வம் நிலையானது அல்ல என்று கூறப்பட்டு உள்ளது.
1 அறுசுவை யுண்டி அமர்ந்தில்லாள் ஊட்ட
மறுசிகை நீக்கியுண் டாரும் - வறிஞராய்ச்
சென்றிரப்பர் ஓரிடத்துக் கூழ்எனின், செல்வம்
ஒன் றுண்டாக வைக்கற்பாற் றன்று.
அன்போடு மனைவி அறுசுவையுடன் உணவைப் பரிமாறினாலும் செல்வச் செருக்கினால் ஒரு கவளத்திற்கு மேல் வேண்டாம் என்று மறுக்கும் களமும் உண்டு. பசியாக உள்ளது ஒரு கவளம் தாருங்கள் என்று இரந்து நிற்கும் காலமும் வரலாம். எனவே செல்வம் ஒரு இடத்தில நிலையாக நிற்கும் - நாம் சிறப்பாக வாழலாம் என்று யாரும் கருதக் கூடாது.
(பொ-ள்.) அறுசுவை உண்டி - அறுசுவையுள்ள உணவை, இல்லாள் - மனையாள், அமர்ந்து ஊட்ட - விரும்பி உண்பிக்க, மறுசிகை நீக்கி உண்டாரும் - மறுபிடி தவிர்த்து உண்ட செல்வரும், வறிஞராய்ச் சென்று இரப்பர் ஓர் இடத்து கூழ் - ஒரு காலத்தில் வறுமையாளராகி எங்கேனும் ஓர் இடத்திற்போய்க் கூழ் இரப்பர், எனின் - ஆதலின், செல்வம் ஒன்று - செல்வமென்பதொன்று, உண்டாக வைக்கற்பாற்று அன்று - நிலையுடையதாக மனத்திற் கருதக் கூடியதன்று.
செல்வரும் வறிஞராக மாறுதலால், செல்வம் நிலையுள்ளதாகக் கருதற்குரியதன்று. . செல்வத்தின் நிலையாமை தெரிந்தால், அதனைக் காலத்தில் தக்கவாறு பயன்படுத்திக்கொள்ளும் உணர்வு உண்டாகும்.
இப்படிப்பட்ட செல்வதை எப்படி பயன்படுத்தவேண்டும் என்று மிக விளக்கமாகச் சொல்லப்பட்டு உள்ளது. தொடரும் பாட்டிலே பாருங்கள். செல்வம் எங்கும் நிலையாக நிற்காது. எனவே செல்வம் உள்ள போது சுற்றத்தோடு பகிர்ந்து உன்ன வேண்டும் என்று வலியுறுத்துகிறது இந்தப் பாட்டு
துகள்தீர் பெருஞ்செல்வம் தோன்றியக்கால் தொட்டுப்
பகடு நடந்தகூழ் பல்லாரோ டுண்க ;
அகடுற யார்மாட்டும் நில்லாது செல்வம்
சகடக்கால் போல வரும்.
(பொ-ள்.) துகள்தீர் பெரு செல்வம் - குற்றமற்ற சிறந்த செல்வம், தோன்றியக்கால் - உண்டானால், தொட்டு - அது தொடங்கி, பகடு நடந்த கூழ் - ஏர் நடந்ததனால் உண்டான உணவை, பல்லாரோடு உண்க - விருந்தினர் முதலிய பலரோடுங் கூடி உண்ணுக, ஏனென்றால் ; செல்வம் - பொருள், அகடு உற யார்மாட்டும் நில்லாது - உறுதி பொருந்த யாரிடத்திலும் நிலைத்திராமல் , சகடக்கால் போலவரும் - வண்டியுருளைபோல மாறிப் புரளும்.
செல்வம் யாரிடத்திலும் நிலைத்திராமையால், அது தோன்றினால் உடனே பலர்க்கும் அளித்துப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
பெருஞ்செல்வம் என்பது இங்கே மேன்மையான செல்வம் ; வேளாண்மையால் வருகின்ற செல்வமே பெருஞ்செல்வம் என்பது குறிப்பு.
சரி குமரேசர் சதகம் என்ன கூறுகிறது. பார்ப்போமா?
3. அரசர் இயல்பு குடிபடையில் அபிமானம், மந்திரா லோசனை, குறிப்பறிதல், சத்யவசனம்,
கொடைநித்தம் அவரவர்க் கேற்றமரி யாதை பொறை, கோடாத சதுருபாயம்
படிவிசா ரணையொடுப்ர தானிதள கர்த்தரைப் பண்பறிந் தேயமைத்தல்,
பல்லுயி ரெலாந்தன் உயிர்க்குநிக ரென்றே பரித்தல், குற்றங்கள்களைதல்,
துடிபெறு தனக்குறுதி யானநட்பகமின்மை, சுகுணமொடு, கல்வியறிவு,
தோலாத காலம்இடம் அறிதல், வினை வலிகண்டு துட்டநிக் ரகசௌரியம்,
வடிவுபெறு செங்கோல் நடத்திவரும் அரசர்க்கு வழுவாத முறைமையிதுகாண் மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு மலைமேவு குமரேசனே!
(இ-ள்.) குடி படையில் அபிமானம் - குடிகளிடத்தும் படை வீரரிடத்தும் பற்றும், மந்திர ஆலோசனை - நுண் கருத்துக்களைத் தானே ஆழ்ந்து ஆராயும் திறமையும், குறிப்பு அறிதல் - மற்றவர் மனத்திலுள்ளதை முகக் குறிப்பால் அறிதலும், சத்திய வசனம் - உண்மையான பேச்சும், கொடை - மனமுவந்து கொடுத்தலும், நித்தம் - எப்போதும், அவரவர்க்கு ஏற்ற மரியாதை - அவரவர்கட்குத் தக்கவாறு மதிப்பளித்தலும், பொறை - பொறுமையும், கோடாத சதுர் உபாயம் - தவறாத நால்வகைச் சூழ்ச்சிகளும், படி விசாரணையொடு - நாட்டின் நிலையை வினவி அறிதலும், பிரதானி தளகர்த்தரைப் பண்பு அறிந்தே அமைத்தல் - தன் கீழ் உள்ள அலுவலாளரையும் படைத்தலைவரையும் அவர்களுடைய தகுதி அறிந்து வேலையில் அமைத்தலும், பல்லுயிர் எலாம் தன் உயிர்க்கு நிகரென்றே பரித்தல் - பலவகை உயிர்களையும் தன்னுடைய உயிர்க்கு ஒப்பாகக் காப்பாற்றுதலும், குற்றங்கள் களைதல் -(அரசாட்சியில் நேரும்) பிழைகளை உடனே நீக்குதலும், தனக்கு உறுதியான துடி பெறு நட்பு - தனக்கு நன்மையை நாடும் சுறுசுறுப்பான நட்பைத் தேடிக்கொள்வதும், அகம் இன்மை - செருக்கு இல்லாமையும், சுகுணமொடு கல்வி அறிவு - நல்ல பண்புடன் கற்றுத் தேர்ந்த அறிவும், தோலாத காலம் இடம் அறிதல் - தோல்வியடையாதவாறு காலத்தையும் இடத்தையும் அறிதலும், வினை வலி கண்டு துட்ட நிக்கிரகம் - இருவருடைய போர்த்தொழிலின் வலிமையையும் அறிந்து தீயவர்களை அழிக்கின்ற, சௌரியம் - திறமையும், இது - இவை போன்றவைகளும், வடிவு பெறு செங்கோல் நடத்தி வரும் அரசர்க்கு - செம்மையான சிறந்த ஆட்சியைப் புரியும் மன்னவர்கட்கு, வழுவாத முறைமை - தவறாத நெறிகளாகும். (விளக்கவுரை) நால்வகைச் சூழ்ச்சி: இனிமையாகப் பேசுதல் (சாமம்) வேறுபடுத்தல் (பேதம்) பொருள் கொடுத்தல் (தானம்) ஒறுத்தல் (தண்டம்) பகைவரை இந்த நால்வகையுள் ஒன்றால் ஏற்றவகையில் வெல்வது அரசர் கடமை.
கோடுதல் - மாறுபடுதல்.
படி - உலகு; இங்கு அவன் ஆளும் நாட்டை மட்டும் குறிக்கிறது.
தளம் - படை கர்த்தர் (வடமொழி) - தலைவர்.
அகம்-மனம்; இங்கே தற்பெருமையைக் குறிக்கிறது.
சுகுணம் (வடமொழி) - நற் பண்பு.
துட்டர் (வடமொழி) - கயவர்.
நிக்கிரகம் (வடமொழி) - நீக்குதல்.
சௌரியம் (வடமொழி) - வீரம்.
அரசர்கள் குடிகளிடம் அன்பும், தரம் அறிதலும், குறிப்பறிதலும், நல்ல நட்புடன் செருக்கின்றி யிருத்தலும், காலம் இடம் வலியறிந்து பகைவரை வெல்வதும், கயவரை ஒறுத்தலும் உடையவர்களாக இருத்தல் வேண்டும்.
அரசு என்றால் எப்படி இருக்க வேண்டும்? அரசன் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை விளக்கமாகக் கூறுகிறது இந்த சதகப் பாடல்.
சடகப் பாடலில் வடமொழிச் சொற்கள் அதிகமாக இருந்தாலும் ஷ் ஜ போன்ற எழுத்துக்கள் பயன்படுத்தப்படவில்லை என்பதை நாம் அறிய வேண்டும். துட்டர் என்று உள்ளதே தவிர துஷ்டர் என்று இல்லை. இவ்வழக்கத்தை இன்று நாம் கடைபிடிக்க வேண்டியது இன்றியமையாத ஒன்று.
No comments:
Post a Comment