think in tamil. speak tamil. teach tamil. worship in tamil.
முதலில் தமிழ் மொழியில் வழக்கத்தில் உள்ள சில பழமொழிகளைப் பார்ப்போம்.
ஆக்கப் பொறுத்தவன் ஆறப் பொறுக்க வேண்டும்.
ஆகும் காலம் ஆகும், போகும் காலம் போகும்.
ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள்.
ஆசை உள்ளளவும் அலைச்சலும் உண்டு!
ஆசை வெட்கம் அறியாது.
ஆடத் தெரியாத ஆட்டக்காரி மேடை கோணல் என்றாளாம்.
ஆடிக் கறக்கிற மாட்டை ஆடிக் கறக்க வேண்டும்; பாடிக் கறக்கிற மாட்டை பாடிக் கறக்க வேண்டும்.
ஆடு நனைகிறதே என்று ஒநாய் அழுமா.
ஆட்டுக்கு வால் அளவறிந்து வைத்திருக்கிறது.
ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு.
ஆத்துக்குப் போயும் வேர்த்து வடிஞ்ச கதையா
ஆயிரங்காலம் நெல்லுக்கு ஒரு அந்துப்பூச்சி போதும்.
ஆயிரம் தலை கண்டால் ஒரு கோயிலைக் கண்டது போல
ஆயிரம் வந்தாலும் அவசரப் படாதே
ஆய்ந்து பாராதான் காரியந் தான் சாந்துயரந் தரும்.
ஆரால் கேடு, வாயால் கேடு.
ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு.
ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும்[ நாலடியார்] இரண்டும்[குறள்] சொல்லுக்குறுதி.
ஆலை இல்லாத ஊரிலே இலுப்பைப் பூச்சக்கரை.
ஆழமறியாமல் காலை இடாதே.
ஆவும் தென்னையும் ஐந்து வருடத்தில் பலம் தரும்.
ஆளனில்லாத மங்கைக்கு அழகு பாழ்.
ஆள் கொஞ்சமானாலும் ஆயுதம் மிடுக்கு.
ஆறிலுஞ் சாவு நூறிலுஞ் சாவு.
ஆறின கஞ்சி பழங் கஞ்சி.
ஆறு கடக்கிறவரையில் அண்ணன் தம்பி, ஆறு கடந்தால் நீ யார் நான் யார்?
ஆற்றிலே போட்டாலும் அளந்து போடு.
ஆறுகெட நாணல் இடு, ஊரு கெட நூலை விடு.
ஆறு போவதே போக்கு அரசன் சொல்வதே தீர்ப்பு.
ஆனை கறுத்தால் ஆயிரம் பொன்.
ஆனைக்கு ஒரு காலம் பூனைக்கு ஒரு காலம்.
ஆனைக்கும் அடிசறுக்கும்.
ஆனை படுத்தால் ஆள் மட்டம்.
ஆனை வரும் பின்னே. மணி ஓசை வரும் முன்னே
சரி. இப்போது பழமொழி நானூறிலே ஒரு பாடலைப் பார்ப்போமா?
11 மிக்குப் பெருகி மிகுபுனல் பாய்ந்தாலும்
உப்பொழிதல் செல்லா ஒலிகடல்போல் - மிக்க
இனநலம் நன்குடைய வாயினும் என்றும்
மனநலம் ஆகாவாம் கீழ்.
மிகப் பெருகி நன்மை மிகுதலான நன்னீர் கடலில் வீழ்ந்தாலும், தன்னிடத்துள்ள உவர்ப்பு நீங்காத ஆரவாரிக்கும் கடலைப்போல், கீழ்மக்கள், மிகவும் நல்லோரினத்தோடு சேர்ந்து வாழும் நன்மையை நன்றாகப் பெற்றிருந்தாலும், எப்பொழுதும் மனத்தின்கண் தூய்மை பெறுதல் இலர்.
கீழ்மக்கள் பெரியார்இணக்கம் பெற்றிருப்பினும் மனச்செம்மை அடையார்.
கடல் தன்னிடத்து வந்த நன்னீரை உவர்ப்பாக்குதல்போல், கீழ்மக்கள் தம்முடன் இருக்கும் பெரியோர்களைத் தம்மைப்போல் ஆக்குவர்.
நாளை ௧௨ வது பாடலைப் பார்ப்போமா?
No comments:
Post a Comment