தமிழ் இலக்கியத்திலே பல வகையான பறைகள் இருப்பதாக நான் இன்று "தமிழ் ஹிந்து" என்னும் வலைத் தளத்தில் படித்தேன். ஜெயஸ்ரீ சாரநாதன் என்பவர் மிக அழகாக விரிவாக ஒரு ஆய்வுக் கட்டுரையை எழுதி இருந்தார். அதில் படித்ததை நான் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
ஐந்திணைகளுக்கு எனத் தனித்தனியாக பறைகள் உள்ளன என்று அவர் விவரிக்கிறார்.
"ஐந்திணைகளுக்கும் உரிய பறைகள் தொண்டகப்பறை (குறிஞ்சி), துடிப்பறை (பாலை) , ஏறுகோட்பறை (முல்லை), மணப்பறை மற்றும் கிணைப்பறை (மருதம்) , மீன்கோட்பறை (நெய்தல்)."
இவை தவிர வேறு சில பறைகளும் அந்த நாளில் இருந்திருக்கின்றனஎன்று கூறி அவற்றைப் பட்டியலிடுகிறார் ஆதாரங்களுடன்.
" புறநானூறில் 12 விதமான பறைகள் சொல்லப்படுகின்றன. இவற்றுள் ஆண்டாள் எந்தப் பறையைக்கொட்டியிருப்பாள் எனக் காண்போம்.
(1) அரிப்பறை :- அரிப்பது போல ஓசை எழுப்பும். வயல் வெளியில் பறவைகள், இலைகளின் மீது உரசிச் செல்லும் சப்தம் போலவும், பெண்டிர் அணிந்த நகைகள் ஒன்றனோடு ஒன்று உரசுவது போலவும் என்று, அரிப்பறை ஓசை உவமை காட்டப் படுகிறது.
(2) அனந்தன் பறை :- சுடுகாட்டுப் பகுதிகளில், பேயாட்டம் ஆடும் மகளிர் இதைக் கொட்டுவர். சரசரவென்று பாம்பு செடிகளுக்கிடையே ஓடும் ஓசை போல் இருக்கும் போலிருக்கிறது. இதன் ஓசை கேட்டு பருந்துகள் வருமாம்.
(3) ஆகுளிப்பறை மற்றும்
(4 ) சிறு பறை :- மிகச் சிறிய, கைக்கடக்கமான பறை இது. பாணர்கள் யாழுடன் எடுத்துச் செல்லும் பறை. அரசனைக் குறித்தோ, கடவுளைக் குறித்தோ பாடுவதற்குப் பயன் படுவது. இதை விடிவதற்கு முன் கொட்டுவார்கள்.
(5) சல்லிப்பறை :- இதைப் பெரும் பறை என்பார்கள். விழாக்களிலும், ஊர்வலங்களிலும் கொட்டுவார்கள்.
6) சாக்காட்டுப்பறை :- இது சாவுக்கு அடிக்கும் பறை.
(7) செருப்பறை :- அரசன் போர்க்களத்தில் நுழையும் போது அடிப்பது. யானைப் படைக்கு முன்னால் அடித்துச் செல்வர்.
(8) போர்ப்பறை :- இது போர் அறிவிக்கும் பறை. போருக்குச் செல்லும் போது அடிக்கும் பறை.
(௯) நெய்தல் பறை :- சாக்காட்டுப் பறை போல, சாவின் போது நெய்தல் நிலத்தில் அடிக்கபடுவது.
(10) தடாரிப்பறை :- இதைக் கிணைப் பறை என்றும் பம்பைப் பறை என்றும் கூறுவர். இது உடுக்கையாக இருக்கலாம்.
(11) ஒரு கண் பறை:- அளவில் பெரியதான இப்பறையில், கண் போன்ற அடையாளம் தெரியும். அது யானையின் பாத வடிவில் இருக்கும், செய்திகளை அறிவிப்பதற்கும், போர்க்களங்களிலும், இது பயன் படுத்தப்பட்டது.
(12) மணப்பறை :- திருமணங்களில் கொட்டப்படுவது.
புறநானூறில் ஆங்காங்கே பேசப் படும் இந்த 12 பறைகளில், ஆகுளிப் பறையும், சிறுபறையும் மென்மையாகவும், பாடலுக்கு இசைந்தும் கொட்டப்படுவதுடன், கடவுளைக் குறித்து, விடிவதற்கு முன்னமேயே கொட்டப் படுவதால், ஆண்டாளும் அவள் தோழிகளும், கொட்டிய பறை சிறு பறை அல்லது ஆகுளிப் பறை எனக் கொள்ளலாம்.
இனி, பறை என்று ஆண்டாள் கூறும் செய்திகளைப் பார்ப்போம்.
மொத்தம் 10 இடங்களில் ஆண்டாள் பறை என்று குறிப்பிடுகிறாள்.
ஆண்டாள் கூறும் பறை
1. பறை தருவான் (பாசுரம் - 1)
2. பாடிப்பறை கொண்டு (பாசுரம்- 8 )
3. போற்றப் பறை தரும் - (பாசுரம்- 10)
4. அறை பறை - (பாசுரம் -16)
5. பறை தருகியாகில் - (பாசுரம் -25)
6. சாலப்பெரும் பறை - (பாசுரம் -26)
7. உன்றன்னை பாடிப் பறைகொண்டு - (பாசுரம் -27)
8. நீ தாராய் பறை - (பாசுரம் -28)
9. இற்றைப் பறை கொள்வான் - (பாசுரம் -29)
10.அங்கப் பறை கொண்ட ஆற்றை - (பாசுரம் -30)
அவற்றுள், 26 -ஆம் பாசுரத்தில் வரும் சாலப் பெரும் பறை, மேற் கண்ட 12 பறைகளுள் சல்லிப் பறையை ஒத்திருக்கிறது. சல்லிப் பறை என்பது, விழாக்களில் கொட்டப்படுவது. சுற்றுப்புறத்து ஓசைகளையும் மீறி ஓங்கி ஒலிக்க வேண்டிய பறை.
‘மாலே மணி வண்ணா’ எனத் தொடங்கும் பாசுரத்தில், ‘சாலப் பெரும் பறையே பல்லாண்டிசைப்பாரே’ என்று ஆண்டாள் கூறும் வர்ணனை இறைவன் வரும் வீதி ஊர்வலம் போல உள்ளது.
ஞாலத்தை எல்லாம் நடுங்கச் செய்யும் வகையில் பாஞ்சசன்னியம் என்னும் சங்கூதும் ஒலியோடு, பிற ஒலி முழக்கங்களும், பல்லாண்டு இசைத்த வண்ணம் செல்வதும், கோல விளக்கும், கொடியும், விதானமும் செல்லும் பாங்கினையும் உரைத்திருப்பது, மார்கழி மாதத்து வைகுண்ட ஏகாதசி அன்று திருமால் வீதி வலம் வரும் கருட சேவை போன்று இருக்கிறது. வீதி ஊர்வலத்தில் கொட்டப்படும் சல்லிப் பறையை ஆண்டாள் சாலப் பெரும் பறை என்று கூறியிருக்கலாம்.
பறையிலே இவ்வளவு வகையா? இப்படி நாம் நம் இசையைப் பற்றி அறிந்து கொல்லாத விடயங்கள் எவ்வளவோ உள்ளன. கலைகளைப் பற்றி அறியாத விடயங்கள் உள்ளன. மொழி பற்றி அறியாத விடயங்கள் பல உள்ளன. தொடர்ந்து பாப்போம்.
No comments:
Post a Comment