Monday, August 22, 2011

VIVEKA CHINTHAMANI - விவேகசிந்தாமணி

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு

உழவினைச் சிறப்பித்துக் கூறும் வள்ளுவர்,

“உழுவார் உலக்த்தார்க்கு ஆணி அஃதற்றாது
எழுவாரை எல்லாம் பொறுத்து

எனக் கூறுவார்.  உழவுத் தொழில் செய்வோர் உலகில் உயிர் வாழ்கின்ற அனைவரையும் தாங்குகிறார்கள்.  எனவே அவர்கள் உலகத்திற்கு அச்சாணி போன்றவர்கள் என்று கூறுகிறார் வள்ளுவர்.  அதுமட்டுமல்ல,

“உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
தொழுதுண்டு பின்செல்பவர்
 என உழவர்களை மேன்மைப்படுத்துகிறார்.

உழவர்கள் பிறரிடம் போய் இரந்து உண்ணமாட்டார்கள்.  அதுமட்டுமல்ல யாராவது உதவி என்று கேட்டால் அவர்களுக்கு உதவும் எண்ணமும் கொண்டிருப்பர் என்னும் கருத்தை,

இரவார் இரப்பார்க்கு ஒன்று ஈவர் கரவாது
கைசெய்தூண் மாலையவர்.

என்னும் குளள் மூலம் விளக்குவார் வள்ளுவர்.  இப்படிப்பட்ட கருத்தை விவேக சிந்தாமணி என்னும் நூலில் ஒரு பாட்டு எடுத்து இயம்புகிறது.

அலகில்லா மறை விளங்கும் அந்தணர் ஆகுதி விளங்கும்
பலகலையாம் தொகை விளங்கும் பாவலர் தம் பா விளங்கும்
மலர்குலாம் திரு விளங்கும் மழை விளங்கும் மனு விளங்கும்
உலகெலாம் ஒளி விளங்கும் உழவர் உழும் உழவாலே.

எளிய தமிழில் அருமையான கருத்தைத் தந்துள்ளார் இப்புலவர்.  வேதம் விளங்க வேண்டுமா?  யாகங்கள் நடக்க வேண்டுமா?  கலைகள் செழிக்க வேண்டுமா?  கவிதைகள் வெளிவரவேண்டுமா?  திருமகள் பொலிவு பெறவேண்டுமா?  மனித குலம் உய்ய வேண்டுமா?  மழை உரியகாலத்தில் பெய்ய வேண்டுமா?  உலகம் சிறப்புற்றுத் திகழ வேண்டுமா?  எல்லாம் நடக்கும்.  எப்போது?  உழவர் உழும் உழவாலே தான் இத்தனை சிறப்புகளும் நமக்குக் கிடைக்கும்.

VIVEKA CHINTHAMANI - விவேகசிந்தாமணி

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு


ஆசை என்பது தான் அனைத்துத் துன்பங்களுக்கும் அடிப்படை என்பார் புத்தபெருமான்.  இக்கருத்தையே வலியுறுத்தும் வள்ளுவரும்,

அவா இல்லார்க்கு இல்லாகும் துன்பம் அஃதுண்டேல்
தவா அது மேன்மேல் வரும்.

(தவா என்றால் .  தொடர்ந்து மற்றும் நீங்காமல் என்று பொருள்.)  ஆசை இல்லை என்றால் துன்பம் இல்லை.  ஆசை வந்தால் துன்பம் தொடர்ந்து வரும் என்பார் வள்ளுவர்.  அதுமட்டுமல்ல,  ஆசை இருந்தால் துன்பம் மட்டுமல்ல மீண்டும் மீண்டும் பிறவித்துயரம் வரும்.

அவா என்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும்
தவா அப்பிறப்பு ஈனும் வித்து.

என்கிறார் வள்ளுவர்.  இக்கருத்தையே வலியுறுத்தும் விவேகசிந்தாமணியில் ஒரு பாடல் இதோ.

பகையினை ஆக்கலும் பாவம் ஆக்கலும்
நகையினை ஆக்கலும் நவையை ஆக்கலும்
திகைமனம் ஆக்கலும் சிறுமை ஆக்கலும்
அகைதரு காமத்தின் அன்றி இல்லையே

பகையை உண்டாக்குவது பாவத்தைக் கொண்டுவருவது பிறர் நம்மைப் பார்த்து இகழும்படிச் செய்வது குற்றங்களைச் செய்யத் தூண்டுவது நம்மைத் திகைக்கவைத்துத் தடுமாற்றத்தை உண்டாக்குவது சிறுமையைத் தருவது எல்லாம் எது?  ஆசை தான்.  அதிலும் பெண்ணாசை இருக்கிறதே அது எல்லாக் குற்றங்களையும் ஒன்றுசேர செய்யச் சொல்லும்.  இதே போன்ற கருத்தை விளக்கும் மற்றொரு விவேகசிந்தாமணிப் பாடலும் உண்டு.

கைதவம் இழைத்தலும் களவு செய்தலும்
ஐதுயிர் கோறலும் அறத்தைக் கோறலும்
பொய்தவ உரைத்தலும் பொருள் இழத்தலும்
எய்திய காமத்தின் அன்றி இல்லையே.

(கோறல் என்றால் அழிப்பது, சிதைப்பது, வதைப்பது எனப் பல பொருள் தரும் அருமையான சொல்) (ஐது என்றால் அழகு)  (தவ என்றால் அதிகமாக, மிகுதியாக என்று பொருள்)

நன்றியைக் கோறலும் நலனைக் கோறலும்
வென்றியைக் கோறலும் விவேகம் கோறலும்
துன்றிய ஒக்கலைத் துறந்து நிற்றலும்
கன்றிய காமத்தின் அன்றி இல்லையே.

(துன்றிய ஒக்கல் என்றால் பொருந்திய உறவினர் என்று பொருள்)

எளிய தமிழில் அற்புதமான கருத்துகளைத் தருகிறது விவேக சிந்தாமணி.

VIVEKA CHINTHAMANI - விவேகசிந்தாமணி

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு


இக்காலத்தில் நோய்கள் பெருகி எங்கு பார்த்தாலும் பணத்தைப் பிடுங்கும் மருத்துவ மனைகள் பெருகி வருகின்றன.  மருத்துவம் என்பது ஒரு சேவை என்ற கருத்தே மெல்ல மெல்ல மறைந்து வருகிறது.  சரி முன்னெச்சரிக்கையாக பிணி வராமல் நாம் தான் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.  எளிய உணவு தேவையான அளவு உடற்பயிற்சி யோகங்கள் என நம்மைநாமே பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.  சரி இந்த நோய்கள் ஏன் வருகின்றன?  இதோ பதில் தருகிறது விவேக சிந்தாமணிப் பாடல் ஒன்று.

தன்னைத் தான் பேணாதாலும்
சரீரத்தின் தண்டிப்பாலும்
பின்னுற்ற விசாரத்தாலும்
பின் சலமலத்தினாலும்
அன்னத்தை ஒறுப்பதாலும்
அரையுடல் முழுகலாலும்
தன்மத்தை இகழ்வதாலும்
சரீரத்தில் வியாதி தோன்றும்

தன் உடம்பை முறையாகப் பராமரிக்கத் தவறுவது முதல் குற்றம்.  உடலுக்கு வேண்டிய உணவு, நீர் உரிய நேரத்தில் உரிய அளவில் தரத் தவறக் கூடாது.  கடுமையான வேலை பார்த்து நம் உடலுக்கு நாமே தண்டனை கொடுப்பது.  தேவையற்ற சிந்தனைகளைப் பெருக்கி அதன் காரணமாக மனத்துயர் அடைவது.  மனச்சோர்வு அடைவது.  மலசலம் கழிப்பதில் காலநேரம் தவறுவது.  இந்த உணவு பிடிக்காது இந்த காய்காறி பிடிக்காது எனக் கூறி உணவுப் பண்டங்களை ஒதுக்கி சுவையாக உள்ளது என்பதற்காக நொறுக்குத் தீனியைத் தின்பது.  முழு உடலும் நனையும் படி குளிக்காமல் அரைகுறையாகக் குளிப்பது.  அறநெறிகளை இகழ்ந்து தீய வழிகளில் செல்வது.  இப்படி ஒவ்வொன்றாக சேர்ந்து சிறிது சிறிதாக நம் உடம்பைக் கெடுத்து நோய்கள் உடலுக்குள் நுழைகின்றன.  இவற்றையெல்லாம் நாம் உணர்ந்து நோய்களைத் தவிர்க்க வேண்டும்.

திருக்குறளில் இதே கருத்துகள் பல குறள்களில் உள்ளன.

மருந்தென் வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றின் உணின்.

ஏற்கனவே உண்ட உணவு செரித்த பின் வேண்டிய அளவு அளவறிந்து உண்ண வேண்டும்  அப்படி வாழப் பழகினால் மருந்தே வேண்டாம் என்கிறது திருக்குறள்.

மாறுபாடு இல்லாத உண்டி மறுத்து உண்ணின்
ஊறுபாடு இல்லை உயிர்க்கு

ஒவ்வாத உணவை நாம் ஒதுக்கி விட வேண்டும்.  மறுக்கப் பழக வேண்டும்.  நட்பு வட்டாரத்தில் இருக்கிறோம் எனக் கருதி நாகரிக்த்தின் பெயரால் ஒவ்வா உணவை ஏற்கக் கூடாது.  அப்படி இருந்தால் நோய்கள் வராது.  இப்படி பல அருமையான குறள்கள் மருந்து என்ற தலைப்பிலே வள்ளுவர் நமக்குக் கொடுத்துள்ளார்.

VIVEKACHINTHAMANI -விவேகசிந்தாமணி


எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு


என் பொருள், என் வீடு, என் நகை, என் சுற்றம் என இறுமாப்போடு, தன்முனைப்போடு, அகங்காரத்தோடு திரிகின்ற மக்களைப் பார்த்து சாகும் போது எதுவும் உடன் வராது என்ற கருத்தை ஒரு விவேகசிந்தாமணிப் பாடல் ஒன்று அருமையாக விளக்குகிறது.  இது போன்ற பல பாடல்களை நாம் பட்டினத்தார் பாடல்களில் நேற்று நாம் கண்டோம்.  இன்று விவேகசிந்தாமணியில் ஒரு பாடலைப் பார்ப்போம்.

என் பொருள் என் பொருள் என்று சீவன் விடு மனமே ஒன்று இயம்பக் கேளாய்
உன் பொருளானால் அதன்மேல் உன் நாமம் வரைந்துளதோ உன்றனோடும்
முன்பிறந்து வளர்ந்தது கொல் இனி உனைவிட்டு அகலாதோ முதிர்ந்து நீ தான்
பின்பு இறக்கும் போது அது தான் கூட இறந்திடும் கொல்லோ பேசுவாயே

“என் பொருள் என் பொருள் என்று புலம்புகிறாயே அந்த பொருளின் மேல் உன் பெயர் பொறிக்கப்பட்டுள்ளதா?  நீ பிறக்கும் போதே அது உன்னுடன் உடன்பிறந்ததா?  அல்லது நீ இறக்கும் போது உன்னுடன் அது வரப்போகிறதா?  சிந்தனை செய்து பார்.  எதுவும் நிரந்தரமல்ல என்பது உனக்குப் புரியும் என்கிறது இப்பாடல்.  சரிதானே.  இதை உணர்ந்தால் நிலம் வேண்டும் அடுத்தவர் நிலத்தை அபகரிக்க வேண்டும் பணம் சேர்க்க வேண்டும் நகை சேர்க்க வேண்டும் என்ற எண்ணமே மக்களுக்கு வராதே.  துன்பங்களும் தொடராதே.

VIVEKACHINTHAMANI - விவேகசிந்தாமணி


எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு


நட்பு என்பதை விளக்க வரும் வள்ளுவர்,

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு

என்று சொல்வார்.  ஒரு நண்பனுக்கு இடுக்கண் வந்தால் அவன் வந்து “உதவி செய் என்று முறையிடத் தேவையில்லை.  இடுப்பில் இருந்து ஆடை நழுவினால் கை தானே போய் சரி செய்வது போல தமது நண்பனுக்கு ஒரு துன்பம் என்றால் உடனே போய் உதவி செய்வது தான் நட்பின் அடையாளம்.  அது மட்டுமல்ல நண்பன் தீயவழியில் சென்றால் அதைத் தடுக்கும் துணிவும் நண்பர்களுக்கு இருக்க வேண்டும்.  அவனை நல்வழியில் நடத்திச் செல்லும் பொறுப்பும் நல்ல நண்பர்களுக்கு இருக்க வேண்டும்.  துன்பம் வந்தால் உடன் உதவ வேண்டும்.  இக்கருத்தை,

அழிவினை நீக்கி ஆறு உய்த்து அழிவின் கண்
அல்லல் உழப்பதாம் நட்பு

என்னும் குறள் மூலம் எடுத்து இயம்புகிறார் திருவள்ளுவர்.  சிரித்து மகிழுவதற்காக அல்ல நட்பு.  சிந்திக்கவும் வேண்டும்,  நண்பர்கள் நிலைதடுமாறினால் திருத்த வேண்டும் என்று திருவள்ளுவர் வலியுறுத்துவார்.

நகுதற் பொருட்டு அன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு

என்பது திருக்குறள்.  எனவே தான் நண்பர்களைத் தேர்ந்தெடுக்கும் போது மிகக் கவனமாக இருக்க வேண்டும்.  சிந்திக்காமல் சேர்பவர்களை எல்லாம் நாம் நண்பர்கள் என்று ஏற்றுக் கொள்ள முடியாது.  அவ்வாறு சிந்திக்காமல் பழகும் எல்லோரையும் நண்பர்கள் என்று ஏற்றுக்கொண்டால் நம் வாழ்வில் துன்பம் என்பது தொடர்கதையாகிவிடும்.

ஆய்ந்து ஆய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை
தான் சாந் துயரம் தரும்

என்பது திருக்குறள்.  பணம் இருக்கும் போது பத்து பேர் நம்மைச் சுற்றி இருப்பார்கள்.  எல்லோரும் நம்மை நண்பர் என்று அழைப்பார்கள்.  ஆனால் துன்பம் வரும் போது கல்லடி பட்ட காக்கை போல அனைவரும் பறந்து விடுவார்கள்.  துன்பம் நல்ல நண்பன் யார் என்பதைக் காட்டிவிடும்.

கேட்டினும் உண்டு ஓர் உறுதி கிளைஞரை
நீட்டி அளப்பதோர் கோல்

துன்பம் என்பது நட்பை அளக்க ஓர் அளவு கோல் என்கிறார் திருவள்ளுவர்.  இப்படி, நட்பு நட்பு ஆராய்தல் தீ நட்பு என்ற அதிகாரங்களில் பல அருமையான தேவையான கருத்துப் பெட்டகங்கள் உள்ளன.

இப்படி ஒரு கருத்தை விவேக சிந்தாமணி என்னும் நூலில் ஒரு பாடலில் நான் கண்டேன்.  இதோ அந்தப் பாடல்.

அருமையும் பெருமை தானும் அறிந்து உடன் படுவர் தம்மால்
இருமையும் ஒருமையாகும் இன்புறற்கு ஏது உண்டாம்
பரிவில்லாச் சகுனி போலப் பண்புகெட்டவர்கள் தம்மால்
ஒருமையில் நிரயம் எய்தும் ஏதுவே உயரும் மன்னோ.

(நிரயம் என்றால் நரகம் என்று பொருள்)
நல்ல நண்பர்கள் கிடைத்தால் இம்மை மறுமைப் பயன்கள் எல்லாம் நமக்கு ஒன்றுசேர கிட்டும்.  ஆனால் சகுனி போல நம்மைத் தீய பாதையில் இட்டுச் செல்லும் நண்பர்கள் அமைந்தாலோ நிச்சயம் நரகம் தான் நமக்குக் கிட்டும்.

VIVEKACHINTHAMANI. விவேகசிந்தாமணி

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு

அறிவுடையார்  எல்லாம் உடையார் அறிவிலார்
என்னுடையரேனும் இலர்.

என்னும் திருகுறள்  அறிவுடையார் தான் எல்லாம் உடையவர் என்னும் கருத்தை வலியுறுத்திக் கூறுகிறது.  அறிவில்லாதவர் அளவற்ற செல்வம் பெற்றிருந்தாலும் ஒன்றும் இல்லாதாவரே.  அதுமட்டுமல்ல கல்வி தான் அழியாத செல்வம் எனக் கூறி பிற செல்வங்கள் என்றாவது ஒரு நாள் அழிந்தே போகும் என்றும் கூறுகிறார்.  எனவே கல்விச் செல்வம் மிக இன்றியமையாதது ஆகும்.

கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடல்ல மற்றையவை.
(மாடு என்றால் செல்வம்)

இப்படி அறிவுச் செல்வத்தைப் போற்றி விவேகசிந்தாமணியில் ஒரு பாடலைக் கண்டேன்.  இதோ அந்தப் பாடல்

வெள்ளத்தால் அழியாது வெந்தழலால் வேகாது வேந்தராலும்
கொள்ளத்தான் இயலாது கொடுத்தாலும் குறையாது கொடிய தீய
கள்ளத்தார் எவராலும் களவாட முடியாது கல்வி என்னும்
உள்ளத்தே பொருள் இருக்க உலகெங்கும் பொருள் தேடி உழல்வது என்னே?

கசடறக் கற்றவை உள்ளத்தில் பசுமரத்து ஆணி போல பதிந்து விட்ல் அது வெள்ளத்தால் அழியாது வெந்தழலால் வேகாது வேந்தரோ கள்வரோ அதைக் கொள்ள முடியாது.  இப்படி அழிவற்ற கல்வி என்னும் பெருமை மிக்க செல்வம் இருக்க உலகோர் அழியக் கூடிய வேறு செல்வங்களைத் தேடி அலைவது ஏனோ?

VIVEKA CHINTHAMANI - விவேகசிந்தாமணி

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு

நான் அடிக்கடி இரவில் தயிர்சாதம் உண்ணக் கூடாது என்று நண்பர்களிடம் கூறுவேன்.  ஏன் என்று கேட்டால் கூறத் தெரியாது.  என் பெற்றோர் எனக்கு கூறிய அறிவுரை.  இரவில் தயிர் சாதம் சாப்பிட்டால் ஆயுள் குறையும் என்றும் பால்சாதம் சாப்பிட்டால் நோய்நொடி இல்லாமல் ஆயுள் கூடும் என்றும் நான் சிறுவனாக இருக்கும் போது என் தந்தை கூறுவார்.  இது குறித்து இன்று ஒரு பாடல் படித்தேன் விவேகசிந்தாமணியில்.  தயில் மட்டும் அல்ல இரவில் எதைஎதையெல்லாம் உண்ணக் கூடாது என்று அந்தப் பாடலிலே இருந்தது.  இதோ உங்களுக்காக அந்தப் பாடல்கள்.

காலை மாலை உறங்குவர் காரிகை
கோல மேனி குலைந்தபின் கூடுவர்
சால் இரைத்தயிர் சாதமொடு உண்பவர்
மாலை நேரினும் மாது பிரிவளே.

திருமாலையொத்து செல்வத்தோடு இருந்தாலும் -  கதிரவன் உதயமாகும் போது உறங்குபவனை விட்டும் - கதிரவன் மறையும் மாலை நேரத்தில்  உறங்குபவனை விட்டும் திருமகள் பிரிந்து சென்று விடுவாள். 
கட்டுடல் குலைந்த கிழவியோடு கூடுபவரிடமிருந்து திருமகள் பிரிந்து சென்று விடுவாள்.
அதே போல இரவில் தயிர்சாதம் உண்பவனை விட்டு திருமகள் பிரிந்து சென்று விடுவாள்.

சரி மேற்கண்டவாறு நடந்து கொண்டால் திருமகள் பிரிந்துவிடுவாள்.  திருமகளின் தமக்கை மூதேவி நம்மிடம் எப்போது வருவாள்.  இதோ அதை விளக்கும் அருமையான பாடல்.

இஞ்சி நெல்லி இலைக்கறி பாகற்காய்
கஞ்சி வெண்தயிர் கங்குல் அருந்திடின்
பொஞ்சு பூமகள் போய் உடன் மூத்தவள்
கொஞ்சிக் கொஞ்சிக் குலாவி நடிப்பளே.

இரவிலே இஞ்சி, நெல்லிக்காய், கீரைவகைகள், பாகற்காய், நீராகாரம், வெண்மை நிறமான தயிர் ஆகியவற்றை இரவில் சாப்பிட்டால் திருமகள் நம்மை விட்டு அகன்றுவிடுவாள்.  திருமகளின் மூத்த சகோதரி மூதேவி கொஞ்சிக் கொண்டு நம்மைத் தேடி உடனே வருவாள்.

எனவே நண்பர்களே இரவில் இஞ்சி, நெல்லிக்காய், கீரைவகைகள், பாகற்காய், புளிப்பான நீராகாரம், தயிர் போன்றவற்றை உபயோகிக்க வேண்டாம்.

VIVEKA CHINTHAMANI-விவேகசிந்தாமணி

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு


பல தமிழ்ச் சொற்களை நாம் மறந்து விட்டோம்.  முறையான உபயோகம் இல்லாததால் நல்ல தமிழ் சொற்கள் அழிகின்றன.  பொருள் தெரியாமல் தவிக்கிறோம்.  தினசரி நல்ல தமிழ் நூல்களில் இருந்து ஒரு பக்கமாவது நாம் படிக்க வேண்டும்.  அப்போது தான் பல தமிழ் சொற்களை நாம் கற்றுத் தெரிந்து கொள்ள முடியும்.  இன்று தாளாண்மை பற்றியும் வேளாண்மை பற்றியும் பார்ப்போம்.  அதென்ன தாளாண்மை வேளாண்மை.  தாளாளர் வேளாளர் என்ற சொல் இன்று நம்மிடையே உபயோகத்தில் உள்ளது.  அதை வைத்து புரிந்து கொள்ள முயல்வோம்.

தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே
வேளாண்மை என்னும் செருக்கு

முயற்சி உடையவர்கள் தான் பிறருக்கு உதவ முடியும்.  தாளாண்மை என்றால் விடாமுயற்சி.  அப்படிப்பட்ட விடாமுயற்சி இருப்பவன் தான் பிறருக்கு உதவ முடியும்.  வேளாண்மை என்றால் பிறருக்கு உதவுதல்.  ஆமாம், வேளாண்மை செய்பவர் தான் மட்டும் உண்ணவா அவ்வளவு சிரமப்படுகிறார்.  மற்றவர்களும் உண்பதற்காகத் தானே அவர் விடாமுயற்சி செய்கிறார். 

தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகை
வாளாண்மை போலக் கேடும்.
ஒரு கோழையின் கையில் வாள் இருந்தால் என்ன நடக்கும்.  வாள் இருந்தாலும் ஓடிப்போய் விடுவான்.  அதே வாள் ஒரு வீரன் கையில் இருந்தால் எதிரிகளைப் பந்தாடி விடுவான் அவன்.  அதுபோல  முயற்சி உடையவன் தான் பிறருக்கு உதவ முடியும்.  முயற்சி அற்றவன் ஒருகாலும் பிறருக்கு உதவமுடியாது.  இது திண்ணம்.

விவேகசிந்தாமணி - VIVEKACHINTHAMANI

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு


முயற்சி திருவினை ஆக்கும்.  இது நாம் எல்லோரும் அறிந்த கருத்து.  முயற்சி இல்லை என்றால் அது வறுமையில் கொண்டு போய் தள்ளிவிடும்.

முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்திவிடும்.

முயற்சி இல்லாமல் இருக்கும் நிலையையே முயற்றின்மை என்ற சொல்லால் திருவள்ளுவர் நமக்கு எடுத்துக் காட்டுகிறார்.

முயற்சி செய்பவனைக் கண்டால் விதியும் புறமுதுகு காட்டி ஓடிவிடும் என்கிறார் திருவள்ளுவர் ஒரு குறளில்.  இதோ அந்தக் குறள்.

ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழாது உஞற்றுபவர்.

உப்பக்கம் என்றால் புறமுதுகு காட்டுவது.  உஞற்றுபவர் என்றால் முயற்சி செய்பவர்.  உலைவின்றி என்றால் தளர்சி இல்லாது, தொடர்ந்து

தெய்வத்தால் ஆகாததைக் கூட ஒருவன் தன்னுடைய முயற்சியால் அடையலாம்.  இதோ அதைச் சொல்லும் திருக்குறள்.

தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சி தன்
மெய்வருத்தக் கூலி தரும்.

தெய்வத்தை நம்பிக் கொண்டு எந்தத் தொழிலையும் செய்யாமல் இருந்தால் பலன் கிடைக்குமா?  கிடைக்காது.  ஆனால் முயற்சி செய்து கடுமையாக உழைத்தால் வாழ்க்கையில் உயர்நிலையை அடையலாம்.  முயற்சியானது நமக்கு உரிய கூலியைத் தரும்.  இப்படிப்பட்ட உயரிய முயற்சியைப் பற்றி விவேகசிந்தாமணியில் ஒரு அருமையான பாடல் உள்ளது.  இதோ அந்தப் பாடல்.

கடவுள் ஈகுவன் என்று எண்ணி நித்தியமும் கருதுறு முயற்சி செய்யானேல்
அடல் உறு செல்வம் அடைகுவனே கொல் அருங்கலத்து இட்ட பால் அடிசில்
மிடல் உறு கரத்தால் எடுத்து உண்ணாது எங்ஙன் வீங்கும் வெம்பசிப்பிணி ஒழிப்பன்
உடல்பவம் தனக்கு ஓர் ஆதரம் ஆம் என்று உடல் நனி வாட்டும் மெய்த்தவத்தோய்.

பால்சோறு தட்டிலே உள்ளது.  நமது கைகளால் அதை உண்ணாவிட்டால் நமது பசியை ஆற்ற முடியுமா?  முடியவே முடியாது.  அது போல இறைவன் வருவான் இறைவன் தருவான் எனக் கருதி நாம் ஒரு பணியும் செய்யாமல் அமர்ந்திருந்தால் செல்வத்தை அடைய முடியுமா?  முடியவே முடியாது.  அது மட்டுமல்ல முயற்சி பற்றி இன்னொரு பாடலும் விவேகசிந்தாமணியில் உள்ளது.  இதோ அந்தப் பாடல்

மானிடன் ஒருவன் தனக்கு அரும் செல்வம் வாய்க்க என்று அனுதினம் முயற்சி
தான் உஞற்றுவனேல் கடவுளும் அதனைத் தந்து அளிக்குவன் அதால் அன்றோ
ஆனபேர் அறிஞர் திருவினை முயற்சி ஆக்கும் அம்முயற்சி அல்லாமை
ஈனமார் இன்மை புகுத்திடுமால் என்று யாரும் நன்கு உணர்தர நவில்வார்.

ஆம் திருவள்ளுவர் முயற்சி திருவினையாக்கும் என்று கூறி உள்ளார் என இந்தப் புலவர் நமக்குத் தெரிவிக்கிறார்.   இந்த பாடலிலும் உஞற்றுதல் என்ற சொல் உள்ளது.  இப்போது இப்படிப்பட்ட சொற்கள் நடப்பிலே உள்ளதா?  இல்லவே இல்லை.  நாம் நமது மொழியை மறந்து கொண்டிருக்கிறோம்.  எங்கே பார்த்தாலும் வடமொழிச் சொல்.  அதற்கும் மேலே இப்போது ஆங்கிலச் சொற்கள்.  சிறிது ஆண்டுகள் கழித்து தந்தை அப்பா என்றால் தமிழகத்தில் மக்கள் அப்படி என்றால் என்ன என்று கேட்பார்கள்.  அவர்களுக்கு டாடி என்ற சொல் மட்டுமே தெரியும்.

VIVEKA CHINTHAMANI - விவேகசிந்தாமணி

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு


“கோபத்தை மறந்து விடு  என்று அடிக்கடி ஒலிபெருக்கிகளில் நாகூர் அனீபாவின் பாடலைக் கேட்டு நான் மிகவும் இரசிப்பதுண்டு.  கோபம் என்ற சொல்லுக்கு இணையான சொல் சினம்., வெகுளுதல்

சரி இந்த சினம் எப்படிப்பட்டது.  அது சேர்ந்தாரைக் கொல்லும் குணமுடையது.  இதோ அதை எடுத்துச் சொல்லும் திருக்குறள்.

சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனம் என்னும்
ஏமப் புணையைச் சுடும்.

புணை என்றால் கப்பல்.  ஏமப் புணை என்றால் கடலில் நமக்குப் பாதுகாப்பு தரக்கூடிய கப்பல் என்று பொருள்.  இனம் என்றால் உறவினர்.  நாம் கோபப்பட்டால்  நம்மை அண்டி இருக்கும் நமது உறவினர் மற்றும் நண்பர்கள் நம்மை விட்டு அகலுவர்.  நண்பர்கள் என்போர் உடுக்கை என்னும் உடையை நாம்  இழந்தால் எப்படி கை வந்து சரிசெய்கிறதோ அப்படி நம்மைக் காப்பாற்றக் கூடியவர்கள்.  நல்ல உறவினரும் அப்படியே.   சரி நம்மை நாம் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்றால் நாம் என்ன செய்ய வேண்டும்.  முதலில் சினத்தைக் காக்க வேண்டும்.  ஏன் மறந்து விட வேண்டும்.  இதைத் தான் நாகூர் அனீபாவின் பாட்டு நமக்குச் சொல்கிறது.  சினத்தை நாம் கட்டுப்படுத்தாவிட்டால் அது நம்மையே அழித்துவிடும் என்கிறார் திருவள்ளுவர்.

தன்னைத் தான் காக்கின் சினம் காக்க காவாக்கால்
தன்னையே கொல்லும் சினம்.

அதெல்லாம் இல்லை.  எனக்கு அடிக்கடி கோபம் வரும்.  அதை மாற்றிக் கொள்ள என்னால் முடியாது என்று பெருமை பேசுவோர் இருக்கத்தான் செய்கிறார்கள்.  அவர்களைப் பற்றி திருவள்ளுவர் என்ன கூறுகிறார்?  நிலத்திலே வெறும் கையால் அறைந்தால் என்ன ஆகும்.  வலி நிலத்திற்கு?   அடித்த கைக்கா?  உறுதியாக கை தான் காயப்படும்.  இதை மிக அழகாக எடுத்துக் காட்டுகிறார் திருவள்ளுவர்.

சினத்தைப் பொருள் என்று கொண்டவன் கேடு
நிலத்து அறைந்தான் கை பிழையாதற்று.

கடும்சினம் கொண்டவர்களை இறந்தார் என்றே அழைக்கிறார் திருவள்ளுவர்.  இறந்தார் என்னும் சொல் இறந்தவர்களையும் குறிக்கிறது கடும் சினம் கொண்டவர்களையும் குறிக்கிறது.  சினத்தைத் துறந்தவர்களை -  கோபத்தைக் கட்டுப்படுத்தியவர்களைத் துறந்தார் என்கிறார் திருவள்ளுவர்.  துறவிகளையும் அவர் துறந்தார் என்று தான் கூறுகிறார்.  இதோ அந்த அருமையான திருக்குறள்.

இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத்
துறந்தார் துறந்தார் துணை.
(துணை என்றால் ஈடானவர் என்றும் பொருள் உண்டு).

சரி இப்படிப்பட்ட கோபத்தைப் பற்றி விவேகசிந்தாமணியில் பாடல் உண்டா?  நிச்சயமாக உண்டு.  இதோ இரு பாடல்கள்.

மூங்கிலில் பிறந்த முழங்கு தீ மூங்கில் முதல் அற முருககுமாறு போலத்
தாங்கரும் சினத்தீ தன்னுளே பிறந்து தன்னுறு கிளையெலாம் சாய்க்கும்
ஆங்கு அதன் வெம்மை அறிந்தவர் கமையால் அதனை உள்ளடக்கவும் அடங்காது
ஓங்கிய கோபத் தீயினை ஒக்கும் உட்பகை உலகில் வேறு உண்டோ?

இரண்டு மூங்கில்கள் உரசினால் நெருப்புப் பொறி தோன்றும்.  தோன்றுவது சிறு பொறி தான்.  ஆனால் அந்த தீ மெல்ல மெல்ல பரவும்.  மூங்கிலையும் மூங்கில் காட்டையும் வேரோடும் வேரடி மண்ணோடும் அது அழிக்கும்.  (முருக்குதல் என்றால் எரித்தல் என்று பொருள்.).  அதுபோல நம் மனத்தில் தோன்றும் சினமென்னும் தீ நம்மையும் நம்மைச் சுற்றியுள்ள உறவினர் மற்றும் நண்பர்களை எல்லாம் அழித்து ஒழித்துவிடும்.  எனவே சினத்தைப் போன்ற கோபத்தைப் போன்ற உட்பகை வேறு எதுவும் கிடையாது.  சரி, இப்படிப்பட்ட கோபத்தால் யார்யாரெல்லாம் அழிந்தார்கள் என்று விவரிக்கிறது ஒரு பாடல்.

கோபத்தால் கௌசிகன் தவத்தைக் கொட்டினான்
கோபத்தால் நகுடனும் கோலம் மாற்றினான்
கோபத்தால் இந்திரன் குலிசம் போக்கினான்
கோபத்தால் இறந்தவர் கோடிகோடியே.

பாட்டு என்னவோ சிறிய பாட்டு தான்.  அதை விளக்க நினைத்தால் கதைகள் பல சொல்லியே ஆகவேண்டும்.  முதலில் கௌசிகன் கதைக்கு வருவோம்.

விசுவாமித்திர முனிவரை நாம் அனைவரும் அறிவோம்.  இராமாயணக் காப்பியத்திலும் மகாபாரதக் கதையிலும் பல இடங்களில் அவர் வருவார்.  கோபத்திற்கு பெயர் பெற்றவர்.  எப்போது கோபம் வரும் என்று சொல்லவே முடியாது.  அவருடைய கோபத்தினால் அவர் தன்னுடைய தவத்தினால் பெற்ற பலன்களையே இழந்தார்.  அவருடைய கோபத்திற்குப் பயந்து தசரதன் தன் புதல்வனான இராமனை இராமன் சிறுவனாக இருக்கும் போதே அரக்கர்களுடன் போரிட கானகத்திற்கு அனுப்புவார்.  இப்படிப்பட்டவர் திரிசங்கு என்னும் அரசகுமாரனை உடலோடு சொர்ககத்திற்கு அனுப்ப முயற்சி செய்கிறார்.  தேவர்கள் இதை ஏற்க முடியாது எனக் கூறி திரிசங்குவைத் தள்ளிவிடுகிறார்கள்.  இதனால் கொதித்தெழுந்த விசுவாமித்திரர் திரிசங்குவிற்காக தனி சொர்க்கத்தையே படைக்கிறார்.  இதனால் கடுமையான தவத்தால் தான் பெற்ற பலன்கள் அத்தனையையும் இழக்கிறார்.

அடுத்த கதை நகுடன் கதை.  இந்த நகுடன் தன்னுடைய கோபத்தினால் பாம்பாக மாறிவிடுவான்.  என்ன கதை அது?  நகுடன் என்பவன் மிகப்பெரிய சக்கரவர்த்தி.  யாகங்கள் பல புரிந்து இந்திரனுக்கு நிகரான அந்தஸ்தைப் பெற்றவன்.  ஒரு முறை சாபத்தின் காரணமாக இந்திரன் ஒளிந்து கொள்ள வேண்டிய நிலை ஏற்படுகிறது.  இந்திரன் என்பவன் அடிக்கடி தவறு செய்பவன் தானே.  அதற்கான தண்டனையாக மறைந்து கொள்கிறான்.  இந்திரன் என்பது தேவர் தலைவன் என்னும் பதவி.  இப்பதவி காலியாக இருக்கக் கூடாது.  அரக்கர்கள் படையெடுத்து விடுவார்கள்.  எனவே,  யாகங்கள் பல புரிந்து இந்திரனுக்கு இணையான பலம் படைத்த நகுடனை எல்லோரும் கெஞ்சி இந்திரன் பதவி ஏற்கும்படி அழைக்கிறார்கள்.  இயல்பில் நகுடன் நல்லவனே.  ஆனால் இந்திரன் என்னும் அந்தப் பதவி கிடைத்தவுடனேயே இந்திரனின் சேட்டைப்புத்தி இவனையும் தொற்றிவிடுகிறது.  உடனே இந்திராணியை அடையத் துடிக்கிறான்.  இந்திராணியோ ஒரு நிபந்தனையை விதிக்கிறாள்.  ஏழு முனிவர்கள் பல்லக்கைச் சுமக்க வந்தால் தான் தன்னை அடைய முடியும் என்று கூறுகிறாள்.  காதலுக்குத் தான் கண் இல்லையே?  உடன் அவன் ஏழு முனிவர்கள் சப்த ரிஷிகள் துணையை நாடுகிறான்.  அவர்களும் ஞானக்கண் கொண்டு நடக்கப்போவதைத் தெரிந்து கொண்டு ஒப்புக் கொள்கிறார்கள்.  அந்த முனிவர்களிலே அகத்தியர் மிகவும் குள்ளமானவர்.  அதனால் பல்லக்கு ஒருபுறம் தாழ்வாக இருக்கும்.  அகத்தியர் எம்பி எம்பி நடக்க வேண்டி வரும்.  அகத்தியர் குள்ளமாக இருந்து மற்றவர்களுக்கு ஈடு கொடுத்து வேகமாக நடக்காததால் தான் இந்திராணியை உடனடியாக அடையமுடியவில்லை என்ற கோபம் நகுட மன்னனுக்கு.  எனவே சாட்டையை எடுத்து வேகமாகப் போ என்று வடமொழியில் சொல்கிறான்.  சர்ப்ப என்றால் பாம்பு என்றும் பொருள் உண்டு.  வேகமாக என்றும் பொருள் உண்டு.  அடிபட்ட அகத்தியர் உடனடியாகச் சாபமிடுகிறார்.  சர்ப்ப சர்ப்ப என்று நீ கூறியதால் உன் தவத்தை எல்லாம் இழந்து நீ பாம்பாக மாறக் கடவாய் என்று சாபமிடுகிறார்.  இந்த மலைப்பாம்பு மகாபாரதக் கதையில் வீமனைச் சுருட்டிவிடும்.  விடுவிக்க வரும் தருமரிடம் பல கேள்விகளைக் கேட்கும்.  தர்மர் நியாயமான பதிலைக் கூற வீமனை விடுவிப்பார்.  இப்படி கோப்த்தால் நகுடன் பாம்பாக மாறினான் என்று ஒரு கதை.

மூன்றாவது கதை இந்திரனின் கதை.  குலிசம் என்றால் வச்சிராயுதம்.  அதை இந்திரன் எப்படி இழக்கிறான்?  ஒருமுறை தேவகுருவான பிரகஸ்பதி சபைக்கு வந்தபோது உரிய மரியாதையைத் தரவில்லை இந்திரன்.  நாட்டியத்தைக் கவனித்துக் கொண்டு ஆனந்தத் தேரில் பவனி வந்ததால் அவன் மரியாதை தர மறந்துவிட்டான்.  எனவே கோபத்தில் குருபகவான் சென்று விட்டார்.  பின்னர் பிரமனின் அறிவுரைப்படி துவட்டாவின் புத்திரனாகிய விச்சுவவுருவனைக் குருவாகக் கொண்டான்.  இந்த விச்சுவவுருவனோ அரக்கர்களுக்கு மிகவும் வேண்டியவன்.  இந்திரன் ஒரு யாகத்தைச் செய்ய இந்த புதிய குருவைப் பணித்த போது அவன் யாகத்தில் மந்திரங்களை அரக்கர்களுக்கு ஆதரவாகச் சொல்லிக்கொண்டிருப்பது தெரிகிறது இந்திரனுக்கு.  கோபத்தில் வச்சிரத்தினால் தன்னுடைய குருவின் மூன்று தலைகளை கழுகு, பருந்து, காகம் ஆகிய மூன்று பறவைகளாகப் பறந்தோடும்படி வெட்டுகிறான்.  இதனால் பிரம்மகத்தி தோடம் நேர்கிறது.  விச்சுவவுருவனின் தந்தை துவட்டா என்னும் பெருமுனி.  தன் மகன் கொல்லப்பட்டதை அறிந்து வெகுண்டு எழுகிறார் அவர்.  உடனே ஒரு வேள்வி புரிந்து விருத்திராசுரன் என்னும் அரக்கனை உண்டாக்கி இந்திரன் மீது ஏவுகிறார்.  அந்த போரில் இந்திரன் பின்னடைய நேரிடுகிறது.  பின்னர் திருமாலின் ஆணைப்படி ததீசி என்னும் முனிவர் அளித்த முதுகெலும்பு கொண்டு புதிய வச்சிர ஆயுதம் தயாரிக்கப்படுகிறது.  விருத்திராசுரன் கொல்லப்படுகிறான்.  இந்திரன் தன் வச்சிராயுதத்தை இழந்த இந்த கதையே மூன்றாவது கதையாகும்.

இப்படி சினத்தால் பெரிய பெரிய மனிதர் எல்லாம் எப்படிச் சீரழிந்தார்கள் என்பதை விளக்குகிறது இந்த விவேகசிந்தாமணிப் பாடல்.  அதே போல கோபம் என்னவெல்லாம் செய்யும் என்பதையும் விளக்குகிறது ஒரு விவேகசிந்தாமணிப் பாடல்

வெகுளியே உயிர்க்கெலாம் விளைக்கும் தீவினை
வெகுளியே குணம் தவம் விரதம் மாய்க்குமால்
வெகுளியே அறிவினைச் சிதைக்கும் வெம்மைசால்
வெகுளியே கொடும்பகை வேறொன்று இல்லையால்

இப்படிப்பட்ட கோபம் நமக்குத் தேவையா?  சினத்தைத் தவிர்த்து வாழ்வில் ஏற்றம் பெற்றிடுங்கள்.

Sunday, August 21, 2011

திருக்குறளும் விவேகசிந்தாமணியும் - VIVEKACHINTHAMANI

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு


நட்பு என்பதை விளக்க வரும் வள்ளுவர்,

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு

என்று சொல்வார்.  ஒரு நண்பனுக்கு இடுக்கண் வந்தால் அவன் வந்து “உதவி செய் என்று முறையிடத் தேவையில்லை.  இடுப்பில் இருந்து ஆடை நழுவினால் கை தானே போய் சரி செய்வது போல தமது நண்பனுக்கு ஒரு துன்பம் என்றால் உடனே போய் உதவி செய்வது தான் நட்பின் அடையாளம்.  அது மட்டுமல்ல நண்பன் தீயவழியில் சென்றால் அதைத் தடுக்கும் துணிவும் நண்பர்களுக்கு இருக்க வேண்டும்.  அவனை நல்வழியில் நடத்திச் செல்லும் பொறுப்பும் நல்ல நண்பர்களுக்கு இருக்க வேண்டும்.  துன்பம் வந்தால் உடன் உதவ வேண்டும்.  இக்கருத்தை,

அழிவினை நீக்கி ஆறு உய்த்து அழிவின் கண்
அல்லல் உழப்பதாம் நட்பு

என்னும் குறள் மூலம் எடுத்து இயம்புகிறார் திருவள்ளுவர்.  சிரித்து மகிழுவதற்காக அல்ல நட்பு.  சிந்திக்கவும் வேண்டும்,  நண்பர்கள் நிலைதடுமாறினால் திருத்த வேண்டும் என்று திருவள்ளுவர் வலியுறுத்துவார்.

நகுதற் பொருட்டு அன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு

என்பது திருக்குறள்.  எனவே தான் நண்பர்களைத் தேர்ந்தெடுக்கும் போது மிகக் கவனமாக இருக்க வேண்டும்.  சிந்திக்காமல் சேர்பவர்களை எல்லாம் நாம் நண்பர்கள் என்று ஏற்றுக் கொள்ள முடியாது.  அவ்வாறு சிந்திக்காமல் பழகும் எல்லோரையும் நண்பர்கள் என்று ஏற்றுக்கொண்டால் நம் வாழ்வில் துன்பம் என்பது தொடர்கதையாகிவிடும்.

ஆய்ந்து ஆய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை
தான் சாந் துயரம் தரும்

என்பது திருக்குறள்.  பணம் இருக்கும் போது பத்து பேர் நம்மைச் சுற்றி இருப்பார்கள்.  எல்லோரும் நம்மை நண்பர் என்று அழைப்பார்கள்.  ஆனால் துன்பம் வரும் போது கல்லடி பட்ட காக்கை போல அனைவரும் பறந்து விடுவார்கள்.  துன்பம் நல்ல நண்பன் யார் என்பதைக் காட்டிவிடும்.

கேட்டினும் உண்டு ஓர் உறுதி கிளைஞரை
நீட்டி அளப்பதோர் கோல்

துன்பம் என்பது நட்பை அளக்க ஓர் அளவு கோல் என்கிறார் திருவள்ளுவர்.  இப்படி, நட்பு நட்பு ஆராய்தல் தீ நட்பு என்ற அதிகாரங்களில் பல அருமையான தேவையான கருத்துப் பெட்டகங்கள் உள்ளன.

இப்படி ஒரு கருத்தை விவேக சிந்தாமணி என்னும் நூலில் ஒரு பாடலில் நான் கண்டேன்.  இதோ அந்தப் பாடல்.

அருமையும் பெருமை தானும் அறிந்து உடன் படுவர் தம்மால்
இருமையும் ஒருமையாகும் இன்புறற்கு ஏது உண்டாம்
பரிவில்லாச் சகுனி போலப் பண்புகெட்டவர்கள் தம்மால்
ஒருமையில் நிரயம் எய்தும் ஏதுவே உயரும் மன்னோ.

(நிரயம் என்றால் நரகம் என்று பொருள்)
நல்ல நண்பர்கள் கிடைத்தால் இம்மை மறுமைப் பயன்கள் எல்லாம் நமக்கு ஒன்றுசேர கிட்டும்.  ஆனால் சகுனி போல நம்மைத் தீய பாதையில் இட்டுச் செல்லும் நண்பர்கள் அமைந்தாலோ நிச்சயம் நரகம் தான் நமக்குக் கிட்டும்.