எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு
நட்பு என்பதை விளக்க வரும் வள்ளுவர்,
உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு
என்று சொல்வார். ஒரு நண்பனுக்கு இடுக்கண் வந்தால் அவன் வந்து “உதவி செய்” என்று முறையிடத் தேவையில்லை. இடுப்பில் இருந்து ஆடை நழுவினால் கை தானே போய் சரி செய்வது போல தமது நண்பனுக்கு ஒரு துன்பம் என்றால் உடனே போய் உதவி செய்வது தான் நட்பின் அடையாளம். அது மட்டுமல்ல நண்பன் தீயவழியில் சென்றால் அதைத் தடுக்கும் துணிவும் நண்பர்களுக்கு இருக்க வேண்டும். அவனை நல்வழியில் நடத்திச் செல்லும் பொறுப்பும் நல்ல நண்பர்களுக்கு இருக்க வேண்டும். துன்பம் வந்தால் உடன் உதவ வேண்டும். இக்கருத்தை,
அழிவினை நீக்கி ஆறு உய்த்து அழிவின் கண்
அல்லல் உழப்பதாம் நட்பு
என்னும் குறள் மூலம் எடுத்து இயம்புகிறார் திருவள்ளுவர். சிரித்து மகிழுவதற்காக அல்ல நட்பு. சிந்திக்கவும் வேண்டும், நண்பர்கள் நிலைதடுமாறினால் திருத்த வேண்டும் என்று திருவள்ளுவர் வலியுறுத்துவார்.
நகுதற் பொருட்டு அன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு
என்பது திருக்குறள். எனவே தான் நண்பர்களைத் தேர்ந்தெடுக்கும் போது மிகக் கவனமாக இருக்க வேண்டும். சிந்திக்காமல் சேர்பவர்களை எல்லாம் நாம் நண்பர்கள் என்று ஏற்றுக் கொள்ள முடியாது. அவ்வாறு சிந்திக்காமல் பழகும் எல்லோரையும் நண்பர்கள் என்று ஏற்றுக்கொண்டால் நம் வாழ்வில் துன்பம் என்பது தொடர்கதையாகிவிடும்.
ஆய்ந்து ஆய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை
தான் சாந் துயரம் தரும்
என்பது திருக்குறள். பணம் இருக்கும் போது பத்து பேர் நம்மைச் சுற்றி இருப்பார்கள். எல்லோரும் நம்மை நண்பர் என்று அழைப்பார்கள். ஆனால் துன்பம் வரும் போது கல்லடி பட்ட காக்கை போல அனைவரும் பறந்து விடுவார்கள். துன்பம் நல்ல நண்பன் யார் என்பதைக் காட்டிவிடும்.
கேட்டினும் உண்டு ஓர் உறுதி கிளைஞரை
நீட்டி அளப்பதோர் கோல்
துன்பம் என்பது நட்பை அளக்க ஓர் அளவு கோல் என்கிறார் திருவள்ளுவர். இப்படி, நட்பு – நட்பு ஆராய்தல் – தீ நட்பு என்ற அதிகாரங்களில் பல அருமையான – தேவையான கருத்துப் பெட்டகங்கள் உள்ளன.
இப்படி ஒரு கருத்தை விவேக சிந்தாமணி என்னும் நூலில் ஒரு பாடலில் நான் கண்டேன். இதோ அந்தப் பாடல்.
அருமையும் பெருமை தானும் அறிந்து உடன் படுவர் தம்மால்
இருமையும் ஒருமையாகும் இன்புறற்கு ஏது உண்டாம்
பரிவில்லாச் சகுனி போலப் பண்புகெட்டவர்கள் தம்மால்
ஒருமையில் நிரயம் எய்தும் ஏதுவே உயரும் மன்னோ.
(நிரயம் என்றால் நரகம் என்று பொருள்)
நல்ல நண்பர்கள் கிடைத்தால் இம்மை மறுமைப் பயன்கள் எல்லாம் நமக்கு ஒன்றுசேர கிட்டும். ஆனால் சகுனி போல நம்மைத் தீய பாதையில் இட்டுச் செல்லும் நண்பர்கள் அமைந்தாலோ நிச்சயம் நரகம் தான் நமக்குக் கிட்டும்.
No comments:
Post a Comment