Sunday, August 21, 2011

விவேகசிந்தாமணி VIVEKA CHINTHAMANI

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு

உழவினைச் சிறப்பித்துக் கூறும் வள்ளுவர்,

“உழுவார் உலக்த்தார்க்கு ஆணி அஃதற்றாது
எழுவாரை எல்லாம் பொறுத்து

எனக் கூறுவார்.  உழவுத் தொழில் செய்வோர் உலகில் உயிர் வாழ்கின்ற அனைவரையும் தாங்குகிறார்கள்.  எனவே அவர்கள் உலகத்திற்கு அச்சாணி போன்றவர்கள் என்று கூறுகிறார் வள்ளுவர்.  அதுமட்டுமல்ல,

“உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
தொழுதுண்டு பின்செல்பவர்
 என உழவர்களை மேன்மைப்படுத்துகிறார்.

உழவர்கள் பிறரிடம் போய் இரந்து உண்ணமாட்டார்கள்.  அதுமட்டுமல்ல யாராவது உதவி என்று கேட்டால் அவர்களுக்கு உதவும் எண்ணமும் கொண்டிருப்பர் என்னும் கருத்தை,

இரவார் இரப்பார்க்கு ஒன்று ஈவர் கரவாது
கைசெய்தூண் மாலையவர்.

என்னும் குளள் மூலம் விளக்குவார் வள்ளுவர்.  இப்படிப்பட்ட கருத்தை விவேக சிந்தாமணி என்னும் நூலில் ஒரு பாட்டு எடுத்து இயம்புகிறது.

அலகில்லா மறை விளங்கும் அந்தணர் ஆகுதி விளங்கும்
பலகலையாம் தொகை விளங்கும் பாவலர் தம் பா விளங்கும்
மலர்குலாம் திரு விளங்கும் மழை விளங்கும் மனு விளங்கும்
உலகெலாம் ஒளி விளங்கும் உழவர் உழும் உழவாலே.

எளிய தமிழில் அருமையான கருத்தைத் தந்துள்ளார் இப்புலவர்.  வேதம் விளங்க வேண்டுமா?  யாகங்கள் நடக்க வேண்டுமா?  கலைகள் செழிக்க வேண்டுமா?  கவிதைகள் வெளிவரவேண்டுமா?  திருமகள் பொலிவு பெறவேண்டுமா?  மனித குலம் உய்ய வேண்டுமா?  மழை உரியகாலத்தில் பெய்ய வேண்டுமா?  உலகம் சிறப்புற்றுத் திகழ வேண்டுமா?  எல்லாம் நடக்கும்.  எப்போது?  உழவர் உழும் உழவாலே தான் இத்தனை சிறப்புகளும் நமக்குக் கிடைக்கும்.

No comments:

Post a Comment