எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு
என் பொருள், என் வீடு, என் நகை, என் சுற்றம் என இறுமாப்போடு, தன்முனைப்போடு, அகங்காரத்தோடு திரிகின்ற மக்களைப் பார்த்து சாகும் போது எதுவும் உடன் வராது என்ற கருத்தை ஒரு விவேகசிந்தாமணிப் பாடல் ஒன்று அருமையாக விளக்குகிறது. இது போன்ற பல பாடல்களை நாம் பட்டினத்தார் பாடல்களில் நேற்று நாம் கண்டோம். இன்று விவேகசிந்தாமணியில் ஒரு பாடலைப் பார்ப்போம்.
என் பொருள் என் பொருள் என்று சீவன் விடு மனமே ஒன்று இயம்பக் கேளாய்
உன் பொருளானால் அதன்மேல் உன் நாமம் வரைந்துளதோ உன்றனோடும்
முன்பிறந்து வளர்ந்தது கொல் இனி உனைவிட்டு அகலாதோ முதிர்ந்து நீ தான்
பின்பு இறக்கும் போது அது தான் கூட இறந்திடும் கொல்லோ பேசுவாயே
“என் பொருள் என் பொருள்” என்று புலம்புகிறாயே – அந்த பொருளின் மேல் உன் பெயர் பொறிக்கப்பட்டுள்ளதா? நீ பிறக்கும் போதே அது உன்னுடன் உடன்பிறந்ததா? அல்லது நீ இறக்கும் போது உன்னுடன் அது வரப்போகிறதா? சிந்தனை செய்து பார். எதுவும் நிரந்தரமல்ல என்பது உனக்குப் புரியும் என்கிறது இப்பாடல். சரிதானே. இதை உணர்ந்தால் நிலம் வேண்டும் – அடுத்தவர் நிலத்தை அபகரிக்க வேண்டும் – பணம் சேர்க்க வேண்டும் – நகை சேர்க்க வேண்டும் என்ற எண்ணமே மக்களுக்கு வராதே. துன்பங்களும் தொடராதே.
No comments:
Post a Comment