நாம் திரைப்படங்களில் அடிக்கடி கேட்கும் வசனம். அரசசபையில் மன்னவன் தனது நாட்டில் மும்மாரி பொழிகிறதா என்று கேட்டுத் தெரிந்து கொள்வான். எனக்கும் பல நாட்களாக சந்தேகம். ஏன் மும்மாரி பொழிகிறதா எனக் கேட்கிறார்கள். நாலு மாரி - ஐந்து மாரி பொழிகிறதா எனக் கேட்பதில்லையே என நினைத்துக் கொண்டிருப்பேன். விவேகசிந்தாமணியில் மாதம் மும்மாரி பொழிவதற்கும் ஆண்டுக்கு மும்மாரி பொழிவதற்கும் காரணத்தை விளக்கி அருமையான பாடல்கள் இருந்தன. எளிய பாடல்கள். உங்களுடன் பகிர்ந்து கொள்ள வந்துள்ளேன்.
வேதம் ஓதிய வேதியருக்கு ஓர் மழை
நீதி மன்னர் நெறியினுக்கு ஓர் மழை
மாதர் கற்புடை மங்கையர்க்கு ஓர் மழை
மாதம் மூன்று மழையெனப் பெய்யுமே
எங்கும் நிறைந்த இறைவனை - எல்லா உயிரினங்களுக்கும் உள்ளே இருக்கும் கடவுளை நினைத்துப் பாடல்கள் பாடித் துதிக்கும் நல்லவர்களுக்காக ஒரு மழை - நீதி நெறி தவறாத மன்னவனுக்காக ஒரு மழை - கற்புடை மங்கையருக்காக ஒரு மழை. ஆக மாதம் மூன்று மழை பெய்ய வேண்டும். இதற்கு மேல் நல்லவர்கள் இருந்தால் மேலும் மழை பெய்யும் போலும். குறைந்தபட்சம் மாதம் மூன்று மழை பெய்தால் வளம் குறையாது என நினைத்து இப்படிச் சொல்லியிருப்பார்கள் என்று கருதுகிறேன்.
அந்தணன் என்பவன் அறவோன். இக்காலத்தில் யார்யாரையெல்லாமோ நாம் அந்தணர்கள் - அய்யர்கள் - பிராமணர்கள் என்று கூறுகிறோம். கல்வி கற்பிக்க வேண்டும். இறைவனைத் துதிக்க வேண்டும். நீதிநெறியைக் கற்றுத் தர வேண்டும். தனக்கு வேண்டியதை மட்டும் தக்கணையாகப் பெற்றுக் கொண்டு தன் பசியைப் போக்கிக் கொள்ள வேண்டும். தன் குடும்பத்தினரின் பசியைப் போக்க வேண்டும். மன்னவனும் வணிகனும் இவர்களுக்கு உதவவேண்டும். வீட்டில் நல்ல- கெட்ட செயல்கள் நடக்கும் போது அதற்குரிய கிரியைகள் செய்ய அந்தணர்கள் வருவார்கள். அரிசி, பருப்பு, காய்கறிகள் வாங்கச் சொல்லி இலைகளில் பரப்பி இறைவனை வேண்டி நமக்காக பூசைகள் செய்வார்கள். பிறகு அவற்றை எடுத்துச் செல்வார்கள். அப்படிக் கொண்டுபோன பொருட்களை அவர்கள் வெளியில் சொற்ப விலைக்கு விற்பார்கள். நானே பார்த்திருக்கிறேன். அதன் விளைவு என்ன என்பது அவர்களுக்கும் தெரியாது. நமக்கும் தெரியாது. செய்தால் செய்துவிட்டுப் போகட்டும். ஏழை தானே - இதன்மூலம் பணம் கிடைத்தால் மகிழ்ச்சியாக இருந்து போகட்டும் என்று நாம் நினைக்கிறோம். ஆனால் பின்வரும் பாடல் அந்தணன் அரிசியை விற்றால் விளைவு என்பதை மிக அழகாக விளக்குகிறது.
அரிசி விற்றிடும் அந்தணர்க்கு ஓர் மழை
வரிசை தப்பிய மன்னருக்கு ஓர் மழை
புருடனைக் கொன்ற பூவையருக்கு ஓர் மழை
வருடம் மூன்று மழையெனப் பெய்யுமே.
முறைதவறிய அந்தணன் - நீதிநெறி தவறிய மன்னவன் - கணவனையே கொல்லத் துணியும் காரிகை ஒரு நாட்டில் இருந்தால் அந்த நாட்டில் ஆண்டுக்கு மூன்று மழையே பெய்யும் என்கிறது இப்பாடல்.
மாதம் மும்மாரி - ஆண்டுக்கு மும்மாரிக்கு காரணம் தெரிந்தது.
No comments:
Post a Comment