எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு
நாம் அடிக்கடி கேட்ட வார்த்தைகள் தான். நாயைக் குளிப்பாட்டி நடுவீட்டில் வைத்தாலும் -- என்று அடிக்கடி யாராவது தவறு செய்தால் கோபப்பட்டு நாம் பேசுவதுண்டு. அதையே விவேக சிந்தாமணியில் அற்புதமாகக் கூறியுள்ளார்கள்.
குக்கலைப் பிடித்து நாவிக்கூண்டினில் அடைத்து வைத்து
மிக்கதோர் மஞ்சள் பூசி மிகுமணம் செய்தாலும் தான்
அக்குலம் வேறதாமோ? அதனிடம் புனுகுண்டாமோ?
குக்கலே குக்கலல்லால் குலந்தனில் பெரியதாமோ?
நாம் நறுமணம் மிக்க புனுகு விற்கும் கடைகளில் பார்த்தால் ஒரு கூண்டு இருக்கும். பூனை போன்ற ஒரு பிராணி சுற்றிக்கொண்டிருக்கும். அதனிடமிருந்து புனுகு கிடைக்கிறது. இந்த கூண்டைத் தான் நாவிக் கூண்டு என்று கூறி உள்ளார்கள். அப்படிப்பட்ட கூண்டில் ஒரு நாயைக் குளிப்பாட்டி மஞ்சள் பூசி அழகு செய்து வாசனைத் திரவியங்களைத் தடவி வைத்தாலும் அந்த நாயிடமிருந்து புனுகு கிடைக்குமா? கிடைக்காது. ஏனென்றால் அது புனுகுப் பூனை அல்ல. நாய் தான். குக்கல் என்றால் நாய். எளிமையான தமிழ். அருமையான கருத்து.
No comments:
Post a Comment