Saturday, August 20, 2011

௦விவேகசிந்தாமணி

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு

விவேக சிந்தாமணியில் ஒரு அருமையான பாடல்.  இக்காலத்தில் அற்பனுக்கு வாழ்வு அரசியல் என்ற சாக்கடையால் வந்து விடுகிறது.  சில நல்லவர்களும் இதிலே மிகக் கடுமையாகப் பாடுபட்டு உயர் பதவிகளில் வந்து அமர்ந்து விடுவார்கள்.  பதவி வந்தவுடன் அந்த பதவியை வைத்து பணம் சம்பாதிக்க எண்ணுபவர்கள் அந்த நல்லவர்களைச் சுற்றி உறவு என்ற பெயரில் குவிவார்கள்.  அண்ணே என்று அழைப்பார்கள்.  மாப்பிள்ளே என்று அழைப்பார்கள்.  மாமா என்று அழைப்பார்கள்.  கூட்டம் கூட்டமாகக் கூடுவார்கள்.  பணமும் பதவியும் போய்விட்டால் காக்கைக் கூட்டம் போல் சூழ்ந்திருந்த இந்த வேடதாரிகள் அனைவரும் பறந்து ஓடிவிடுவார்கள்.  ஒருவகையில் இறைவன் நல்லவர்களை அடையாளம் கண்டு கொள்ளவே நல்லவர்களுக்கு இன்னலைக் கொடுக்கிறான்.  எனவே தான் இடுக்கண் வரும் போது நகைக்கும்படி கூறுகிறார் வள்ளுவர்.  வந்த இடுக்கண் - இன்னல் - துன்பம் - துயரம் இதெல்லாம் நல்லவர்களை அடையாளம் காட்டிவிடும்.  இதையெல்லாம் விளக்க ஓர் அருமையான பாடல் விவேகசிந்தாமணியில் உள்ளது.  பார்க்கலாமா?

பொன்னொடு மணி உண்டானால் புலையனும் கிளைஞன் என்று
தன்னையும் புகழ்ந்து கொண்டு சாதியின் மணமும் செய்வர்
மன்னராய் இருந்த பேர்கள் வகைகெட்டுப் போவாராகில்
பின்னையும் ஆரோ என்று பேசுவர் ஏசுவாரே.

எளிய பாடல் பொருள் எளிதில் விளங்குகிறது.  கிளைஞன் என்றால் உறவினன் - நண்பன் என்று பொருள்.  பொன்னும் மணியும் இருந்தால் இழிந்தவனும் உறவினன் என்று கூறிக்கொண்டு சுற்றிச்சுற்றி வருவான்.  அதுமட்டுமல்ல யார்யாரோ இந்த குடும்பத்தில் மணவினை புரியவும் துடியாய்த் துடிப்பர்.  ஆனால் பதவி இழந்துவிட்டாலோ “ இவன் யார்” என்று உடன் சுற்றித் திரிந்தவர்களே கேட்பர்.  எள்ளி நகையாடுவர்.  இயற்கை இது தான்.

No comments:

Post a Comment