விவேகசிந்தாமணியில் ஓர் அருமையான பாடல் மூடன் யார், முகடி என்பவன் யார், பசப்பன் யார், பாவி யார் என மிக அருமையாக விளக்கம் அளிக்கிறது. இப்பாடல் மூலம் மறைந்து கொண்டிருக்கும் சில தமிழ்ச் சொற்களை நாம் படித்துத் தெரிந்து கொள்ள வாய்ப்பு கிடைப்பதோடு அருமையான கருத்துகளையும் படிக்க வாய்ப்பு கிடைக்கிறது. பாடல் மிக எளிமையானது. கருத்து நிறைந்தது.
கருதிய நூல் கல்லாதான் மூடன் ஆகும்
கணக்கறிந்து பேசாதான் கசடன் ஆகும்
ஒரு தொழிலும் இல்லாதான் முகடி ஆகும்
ஒன்றுக்கும் உதவாதான் சோம்பன் ஆகும்
பெரியோர்கள் முன்நின்று மரத்தைப் போலும்
பேசாமல் இருப்பவனே பேயன் ஆகும்
பரிவு சொல்லித் தழுவினவன் பசப்பன் ஆகும்
பசித்தவருக்கு இட்டு உண்ணான் பாவியாமே
சிறந்த நூல்கள் எனப் பெரியோர் கூறிய நூல்களைப் படிக்காதவன் மூடன்.
குறைந்த பேச்சு பேசாமல் வளவள எனப்பேசி நேரத்தை வீணடிப்பவன் கசடன் ஆகும். அலைபேசியைக் கையில் வைத்துக்கொண்டு மணிக்கணக்கில் பேசுபவர்கள் கவனித்துக்கொள்ள வேண்டும். வெள்ளை வேட்டி- வெள்ளை சட்டை - தொழில் ஒன்றும் இல்லை - ஆடம்பரமாக வண்டி வாகனங்களில் அடுத்தவர் சம்பாதிக்கும் பணத்தில் ஊர் சுற்றுதல் - இப்படி இருப்பவன் தான் முகடி. முகடி என்றால் மூதேவி. ஒருவனுக்கு சோம்பல் இருந்தால் அவனிடம் ஒரு வேலையும் நாம் சொல்லக் கூடாது. அவன் செய்யமாட்டான். அவனை நம்பி நாம் ஏமாறக் கூடாது. அவன் ஒரு உதவாக்கரை. முற்றும் கற்றவன் போல வெளிவேடம் போட்டு கற்ற பெரியோர் கேட்கும் வினாக்களுக்கு பதில் சொல்லத் தெரியாமல் திருதிரு என முழிப்பவன் பேயன். இன்னலில் இருப்பவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்யாமல் பகட்டுக்காக - விளம்பரத்திற்காக அரவணைத்து நாளிதழ்களுக்கும் ஊடகங்களுக்கும் பேட்டி கொடுப்பவன் பசப்பன். பசிப்பவர்கள் எதிரில் இருக்க - அவர்களை வைத்துக்கொண்டே அவர்களுக்குக் கொடுக்காமல் உணவு உண்பவன் பெரும்பாவி. இப்படி அருமையான கருத்துகளை தருகிறது இப்பாடல் எழுதியவர் யார் என்று தெரியவில்லை. இந்த நூல் நடைமேடையில் கிழிந்த நிலையில் இருந்தது. இதிலே உள்ள கருத்துகளைப் படித்தவுடன் அனைவருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டும் போல் இருந்தது. எனவே உங்கள் முன் படைக்கிறேன்.
No comments:
Post a Comment