Thursday, August 18, 2011

விவேகசிந்தாமணி

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு


தமிழ்நாட்டிலே பிறந்திருப்பான்.  தமிழ் மொழியின் சிறப்பை அறிய மாட்டான்.  ஆனால் தமில் வால்க என்று முழக்கமிடவும் டாடி மம்மியுடன் பேசவும் செய்வான்.  தன் குழந்தைக்கு டாடி-மம்மியைக் கற்றுக்கொடுக்க சிரமப்படுவான்.  தன் குழந்தை ஆங்கிலத்தில் தன்னை டாடி என்று சொன்னால் மிக மகிழ்வான்.  எங்கோ வெளிநாட்டிலிருந்து - இத்தாலியில் இருந்து - ஆங்கில நாட்டிலிருந்து இங்கு வந்து தமிழ் மொழியின் சிறப்பை அறிந்து நான் ஒரு தமிழ் மாணாக்கன் என்று கூறுவதில் வெளிநாட்டினர் பெருமைப்படுகிறார்கள்.  இங்குள்ளவர்களோ ஆங்கிலத்தில் படித்தால் தான் வெளிநாட்டில் வேலை கிடைக்கும் என்று கூறி தமிழில் படிக்க மறுக்கிறார்கள்.  தாய்மொழியில் படித்து வெளிநாடுகளில் பணிபுரியும் சீனர்களை - சப்பானியர்களை இவர்கள் புரிந்து  கொள்வதே இல்லை.  ஆனால் அவர்களின் கண்டுபிடிப்புகளை - தயாரிப்புகளை வீட்டில் வைத்துப் பெருமைப்படுவார்கள்.  இதையெல்லாம் அன்றே உணர்ந்திருக்கிறார்கள் போலும்.  குட்டையில் - குளத்தில் வாழும் தாமரை- தவளையை வைத்து அருமையான கவிதை ஒன்றைத் தந்திருக்கிறார்கள்.  தாமரையும் தவளையும் ஒரே தடாகத்தில் தான் இருக்கும்.  ஆனால் தாமரையில் உள்ள தேனை தவளை சுவைக்காது.  கானகத்தில் வாழும் வண்டினங்கள் பல அந்த தடாகத்திற்கு வந்து தேனைச் சுவைக்கும்.  இதை உதாரணமாகக் காட்டுகிறார் கவிஞர்.

தண் தாமரையின் உடன்பிறந்தும் தண்தேன் நுகரா மண்டூகம்
வண்டோ கானத்திடை இருந்தும் வந்து கமலமது உண்ணும்
பண்டே பழகி இருந்தாலும் அறியார் புல்லர் நலலோரைக்
கண்டே களித்து அங்கு உறவாடித் தம்மிற் கலப்பர் கற்றோரே

மடையர்கள் சான்றோர் அருகில் இருந்தாலும் அவர்களைப் பாராட்டிப் பழக மாட்டார்கள்.  ஆனால் கற்றோர் கற்றோரைக் காமுறுவர்.  எங்கிருந்தாலும் அவர்களுடன் உறவாடுவர்.


No comments:

Post a Comment