Sunday, August 21, 2011

பட்டினத்தார் பாடல்கள் - நிலையாமை

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு

இக்காலத்தில் அரசியல்வாதிகளாகட்டும் செல்வந்தர்களாகட்டும் பணத்தை அதிக அளவில் ஈட்டும் கணிப்பொறியாளர்கள் ஆகட்டும்.  பணம் வந்தவுடன் பகட்டான வாழ்க்கை வாழவேண்டும் என்று நினைக்கிறார்கள்.  மனைவி-மக்களுக்காக வீடுகள், நகைகள் போன்றவற்றை வாங்கிக் குவிக்கிறார்கள்.  ஏழைஎளியவர்களுக்கு உதவி செய்வதிலோ அறச்செயல்களைச் செய்வதிலோ இறைவனைத் துதிப்பதிலோ அக்கறை காட்டுவதே இல்லை.  சரி திடீரென்று உயிர் பிரிந்து விட்டால் என்ன நடக்கும் என்பதைச் சிந்தித்துப் பார்ப்பதே இல்லை.  மரணம் வந்தால் மரணத்திற்குப் பின் யார்யார் உடன்வருவார் என்று சிந்தித்துப் பார்ப்பதே இல்லை.  அதனால் செய்யக் கூடாத தவறுகளை எல்லாம் துணிந்து செய்யத் துணிகிறார்கள்.  அடுத்த நொடியில் கூட மரணம் வரலாம்.  அப்போது சேர்த்து வைத்த சொத்து உடன் வருமா?  இன்பம் தரப்போகிறாள் என்று கருதி நகைகள் பூட்டி அழகு பார்த்த அந்த மங்கை உடன் வருவாளா?  மக்கள் தான் உடன் வருவார்களா?  யாரும் வரமாட்டார்கள்.  தாம் உணர்ந்த உண்மைகளை சித்தர்களும் புலவர்களும் நமக்கு எடுத்துக் காட்டி உள்ளார்கள்.  அவற்றை நாம் படித்துப்பார்த்தால் தவறுகளைச் செய்யும் போது அச்சப்படுவோம்.  சரி பட்டினத்தார் பாடிய சில பாடல்களை நாம் பார்ப்போம்.  அதிலிருந்து நல்ல கருத்துகளைத் தெரிந்து கொள்வோம்.  தவறுகளைத் தவிர்ப்போம்.

இந்த உடல் என்பது என்ன?

“அங்கோடு இங்கோடு அலமருங்க கள்வர்
ஐவர் கலகமிட்டு அலைக்குங் கானகம்
சலமலப் பேழை இருவினைப் பெட்டகம்
வாத பித்தம் கோழை குடிபுகுஞ் சீறூர்
ஊத்தைப் புன்தோல் உதிரக் கட்டளை
நாற்றப் பாண்டம் நான் முழத்து ஒன்பது
பீற்றல் துண்டம் பேய்ச்சுரைத் தோட்டம்
அடலைப் பெரிய சுடலைத் திடருள்
ஆசைக் கயிற்றில் ஆடும் பம்பரம்
ஓயா நோக்கிடம்- ஓடும் மரக்கலம்
மாயா விகாரம் மரணப் பஞ்சரம்
சோற்றுத் துருத்தி தூற்றும் பத்தம்
காற்றில் பறக்கும் கானப் பட்டம்
விதிவழித் தருமன் வெட்டும் கட்டை
சதுர்முகப் பாணன் தைக்கும் சட்டை
ஈமக் கனலில் இடுசில விருந்து
காமக் கனலில் கருகும் சருகு
கிருமி கிண்டும் கிழங்கு
.......
“நீரில் குமிழி நீர் மேல் எழுத்து
கண்துயில் கனவில் கண்ட காட்சி

என்று நிலையில்லா இந்த உடலை இந்த உலக வாழ்வை மிக அழகாக விவரிப்பார் பட்டினத்தார்.

இதுமட்டுமல்ல..

“ஐம்பொறி மயக்கமும் இடும்பையும் பிணியும் இடுக்கிய ஆக்கையை
உயிர் எனும் குருகு விட்டு ஓடும் குரம்பையை
எலும்பொடு நரம்பு கொண்டு இடையில் பிணித்துக்
கொழுந்தசை வேய்ந்தும் ஒழுக்கு விழுங் குடிலைச்
,,,,,,
ஐம்புலப் பறவை அடையும் பஞ்சரத்தை(பஞ்சரம் என்றால் கூண்டு)
....
ஆசைக் கயிற்றில் ஆடும் பம்பரத்தைக்
காசில் பணத்தில் சுழலும் காற்றாடியை
.....
“காமக் காற்றெடுத்து அலைப்பக்
கெடுவழிக் கரைசேர் கொடுமரக்கலத்தை
இருவினை விலங்கொடும் இயங்கு புற்கலனைக்
நடுவன் வந்து அழைத்திட நடுங்கும் யாக்கையைப்

“ஒன்பதுவாய்த் தோல்பைக்கு ஒருநாளைப் போலவே
அன்பு வைத்து அலைந்தாய் நெஞ்சமே

“எத்தனை நாள் கூடி எடுத்த சரீரம் இவை
அத்தனையும் மண் தின்பதில்லையோ

“ஆங்காசப் பொக்கிசம் கோபக் களஞ்சியம் ஆணவத்தால்
நீங்கா அரண்மனை பொய் வைத்த கூடம் விண்நீடி வளர்
தேங்கார் பெருமதில் காமவிலாசம் இத்தேகம் கந்தல்

“விடக்கே பருந்தின் விருந்தே கமண்டல வீணன் இட்ட
முடக்கே புழு வந்து உறையிடமே நலம் முற்றும் இலாச்
சடக்கே கருவி தளர்ந்து விட்டால் பெற்ற தாயும் தொடாத்
தொடக்கேஎன்கிறார் நமது உடலை.

(விடக்கு என்றால் தசைப்பிண்டம், முடக்கு என்றால் சிறு குடில், கமண்டல வீணன் என்றால் பிரமன், )

இப்படி நமது உடலை வர்ணிக்கும் பட்டினத்தார் மரணம் வந்தால் என்ன நிகழும் என்பதையும் பல பாட்டுகளில் நமக்கு விளக்குகிறார்.

“கட்டி அணைத்திடும் பெண்டிரும் மக்களும் காலத்தச்சன்
வெட்டி முறிக்கும் மரம் போல் சரீரத்தை வீழ்த்தி விட்டால்
கொட்டி முழக்கி அழுவார் மயானம் குறுகி அப்பால்
எட்டி அடிவைப்பரோ?   என்று கேள்வி கேட்கிறார் பட்டினத்தார்
மயானத்திற்குப் பிறகு யார் வரப்போகிறார்கள்?  யாரும் வரமாட்டார்கள்.

“காதற்ற ஊசியும் வாராது காணுங் கடை வழிக்கே
என்றும்,


“மனையாளும் மக்களும், வாழ்வும் தனமும் தன் வாயில் மட்டே
இனமான சுற்றம் மயானம் மட்டே-வழிக்கேது துணை?
தினாயாம் அளவு எள் அளவாகிலும் முன்பு செய்தவம்
தனையாள என்றும் பரலோகம் சித்திக்கும் சத்தியமே

“அத்தமும் வாழ்வும் அகத்து மட்டே விழி அம்பொழுக
மெத்திய மாதரும் வீதி மட்டே விம்மி விம்மி இரு
கைத்தலம் மேல்வைத்து அழும் மைந்தரும் சுடுகாடு மட்டே
பற்றித் தொடரும் இருவினைப் புணிணிய பாவமுமே

என்று நற்செயலாம் தவத்தைச் செய்யச் சொல்கிறார்.

இறந்த பின் நமது உடலை சொந்தம் கொண்டாடுபவர் யார் யார் என்று மிக விளக்கமாகப் பட்டினத்தார்ல ஒரு பாடலிலே சொல்கிறார்.

“எரி எனக்கென்னும் புழுவோ எனக்கென்னும் இந்த மண்ணும்
சரி எனக்கென்னும் பருந்தோ எனக்கென்னும் தான் புசிக்க
நரி எனக்கென்னும் புன்னாய் எனக்கென்னும் இந்நாறுடலைப்
பிரியமுடன் வளர்த்தேன் இதனால் என்ன பேறு எனக்கே?

எரியும் நரியும், புழுவும் பருந்தும் நாயும் சொந்தம் கொண்டாடப் போகும் இந்த உடலை நாம் எப்படி எல்லாம் போற்றி வாசனைத் திரவியங்கள் அழகிய ஆடைகள் சுவையான உணவுகள் கொடுத்துப் பேணிக் கொண்டிருக்கிறோம்.  நற்செயல்களைப் புறந்தள்ளி ஆடை அலங்காரத்தில் நகைநட்டில் கவனம் செலுத்துகிறோம்.  அறச்செயல்களை விரும்புவதில்லை நாம்.  சிந்தித்துப் பார்க்க வேண்டிய கருத்துகள்.

இறக்கும் தருவாயில் ஞானத் தெளிவு வந்து மனிதன் எப்படி எல்லாம் தனக்குள் புலம்புவான் என்பதை பட்டினத்தார் மிக அழகாகத் தொகுத்துத் தந்துள்ளார்.

“வார்த்தைத் திறமில்லா மனிதருக்குப் புன் சொல்லாம்
சாத்திரங்கள் சொல்லிச் சதுர் இழந்து கெட்டேனே

மெத்த மெத்தச் செல்வாக்கில் வேறு மருள் எடுத்துத்
தத்தித் தலை கீழாய்த் தான் நடந்து கெட்டேனே

வழக்கத் தலங்களினும் மண் பெண் பொன் ஆசையினும்
பழக்கம் தவிராமல் பதி இழந்து கெட்டேனே

ஆணி பொருந்தும் அரும்பூமி அத்தனையும்           (ஆணி என்றால் முதன்மை)                                                       
காணில் நமது என்று கனம் பேசிக் கொண்டேனே

ஆசாரம் இல்லாத அசடருடன் கூடிப்
பாசாங்கு பேசிப் பதி இழந்து கெட்டேனே

குருமார்க்கம் இல்லாக் குருடருடன் கூடிக்
கருமார்க்கத்துள்ளே கருத்தழிந்து கெட்டேனே

ஆலம் அருந்தும் அரன் பெருமை எண்ணாமல்
பாலர் பெண்டிர் மெய் என்று பதி இழந்து கெட்டேனே

பிணவாசம் உற்ற பெரும்காயம் மெய் என்று
பண ஆசையாலே பதி இழந்து கெட்டேனே

கண்ட புலவர் கனக்கவே தான் புகழ
உண்ட உடம்ல்லாம் உப்பரித்துக் கெட்டேனே

எண்ணிறந்த சென்மம் எடுத்துச் சிவபூசை
பண்ணிப் பிழையாமல் பதி இழந்து கெட்டேனே

சிற்றெறும்பு சற்றும் தீண்டப் பொறா உடம்மை
உற்றுருக்கவும் சுடவும் ஒப்பித்து மாண்டேனே

தன் உடம்பு தானே தனக்கும் பகையாம் என்று
எண்ணும் உணர்வு இல்லாமல் இன்பம் என்று மாண்டேனே

தோல் எலும்பு மாமிசமும் தொல் அன்னத்தால் வளரும்
மேல் எலும்பும் சுத்தமென்று வீறாப்பாய் மாண்டேனே

போக்குவரத்தும் பொருள்வரத்தும் காணாமல்
வாக்கழிவு சொல்லி மனம் மறுகிக் கெட்டேனே

என்று மனம் புலம்ப  பிரியப் போகும் உயிர் உடலைப் பார்த்து கிண்டல் செய்கிறது.  வாழத் தவறிவிட்டாய் மனிதனே எனச் சுட்டிக் காட்டுகிறது.  இறைவனை துதிக்கத் தவறினாயே எனப் பழி சுமத்துகிறது.

“உடக்கை ஒருக்கி உயிரை அடைத்து வைத்த
சடக்கைச் சதம் என்று சார்ந்து அங்கு இறுமாந்தை
உடக்கைத் தகர்த்தே உயிரை எமன் கொள்கையிலே
அடக்கமாய் வைத்த பொருள் அங்கு வரமாட்டாதே

(உடக்கு என்றால் சுற்றாணி  சடக்கு என்றால் தேகம்)

தித்திக்கும் தேனைத் தெவிட்டாத தெள்ளமுதை
முத்திக்கு வித்தான முப்பாழைப் போற்றாமல்
பற்றிப் பிடித்து இயமன் பாசத்தால் கட்டும் வண்ணம்
சுற்றி இருக்கும் வினை சூழ்ந்தனையே நெஞ்சமே

அஞ்செழுத்தாய் எட்டெழுத்தாய் ஐம்த்தோர் அட்சரமாய்ப்
பிஞ்செழுத்தாய் நின்ற பெருமானைப் போற்றாமல்
வஞ்சகமாய் உற்ற முறை மாதல் வலைக்குள்ளாகிப்
பஞ்சரித்துத் தேடிப் பாழுக்கு இறைத்தோமே
(பஞ்சரித்து என்றால் கெஞ்சிப்பேசி)

அக்கு அறுகு கொன்றை தும்பை அம்புலியும் சூடுகின்ற
சொக்கர் திருத்தாளைத் தொழுது வணங்காமல்
மக்கள் பெண்டிர் சுற்றமுடன் வாழ்வை மிக நம்பி அன்பாய்
எக்காலமும் உண்டென்று எண்ணினையே நெஞ்சமே
(அக்கு என்றால் ருத்ராட்சம்)

ஆண்ட குருவின் அருளை மிகப் போற்றி
வேண்டும் கயிலாய வீட்டுவழி பாராமல்
பூண்ட குழல் மாது நல்லார் பொய் மாய்கைக்கு உள்ளாகித்
தூண்டில் அகப்பட்டுத் துடிகெண்டை ஆனேனே

பூவாணர் போற்றும் புகழ் மதுரைச் சொக்கரது
சீர்பாதம் போற்றிச் சிவலோகம் சேராமல்
தாவாரம் தோறும் தலைபுகுந்த நாய்போலே
ஆகாத நெஞ்சமே அலைந்து திரிந்தாயே

 ஞானம் பிறக்கிறது நெஞ்சுக்குள்.  செய்ய மறந்ததைப் பட்டியலிடுகிறான் மனிதன்.  அருமையான பாடல்கள்.

மூலத்து உதித்து எழுந்த முக்கோணச் சக்கரத்துள்
வாலைதனைப் போற்றாமல் மதி மறந்தேன் பூரணமே

உந்திக் கமலத்து உதித்து நின்ற பிருமாவைச்
சந்தித்துக் காணாமல் தட்டழிந்தேன் பூரணமே

நாவிக் கமல நடுநெடுமால் காணாமல்
ஆவிகெட்டு யானும் அறிவிழந்தேன் பூரணமே

உருத்திரனை இருதயத்தில் உண்மையுடன் பாராமல்
கருத்தழிந்து நானும் கலங்கினேன் பூரணமே

விசுத்தி மகேசுவரனை விழி திறந்து பாராமல்
பசித்துருகி நெஞ்சம் பதறினேன் பூரணமே

நெற்றி விழியுடைய நிர்மல சதாசிவத்தைப்
புத்தியுடன் பாராமல் பொறி அழிந்தேன் பூரணமே

நாதவிந்து தன்னை நயமுடனே பாராமல்
போதம் மயங்கிப் பொறி அழிந்தேன் பூரணமே

உச்சி வெளியை உறுதியுடன் பாராமல்
அச்சமுடன் நானும் அறிவிழந்தேன் பூரணமே

மூக்குமுனையை முழித்திருந்து பாராமல்
ஆக்கை கெட்டு நானும் அறிவிழந்தேன் பூரணமே

இடைபிங்கலையின் இயல்பு அறிய மாட்டாமல்
தடையுடனே யானும் தயங்கினேன் பூரணமே

ஊனுக்குள் நீ நின்று உலாவினதைக் காணாமல்
நான் என்று இருந்து நலன் அழிந்தேன் பூரணமே

மெய்வாழ்வை மிக விரும்பி மிக வாழாமல்
பொய்வாழ்வை நம்பிப் புலம்பினேன் பூரணமே

பெண்டு பிள்ளை தந்தை தாய் பிறவியுடன் சுற்றம் இவை
உண்டென்று நம்பி உடல் அழிந்தேன் பூரணமே

தண்டிகை பல்லக்குடனே சகல சம்பத்துகளும்
உண்டென்று நம்பி உணர்வு அழிந்தேன் பூரணமே

இந்த உடல் உயிரை எப்போதும் தான் சதமாய்ப்
பந்தமுற்று நானும் பதம் அழிந்தேன் பூரணமே

மாதர் பிரபஞ்ச மயக்கத்திலே விழுந்து
போதம் மயங்கிப் பொறி அழிந்தேன் பூரணமே

மண் பெண் பொன் ஆசை மயக்கத்திலே விழுந்து
கண் கெட்ட மாடு அது போல் கலங்கினேன் பூரணமே

தனிமுதலைப் பார்த்துத் தனித்திருந்து வாழாமல்
அநியாயமாப் பிறந்து இங்கு அலைந்து நின்றேன் பூரணமே

வாசிதனைப் பார்த்து மகிழ்ந்து உனைத் தான் போற்றாமல்
காசிவரைப் போய்த் திரிந்து கால் அலுத்தேன் பூரணமே
(வாசி என்றால் பிராணவாயு)

உடலுக்குள் நீ நின்று உலாவினதைக் காணாமல்
கடல் மலை தோறும் திரிந்து கால் அலுத்தேன் பூரணமே

எத்தேச காலமும் நாம் இறவாது இருப்பம் என்று
உற்று உனைத்தான் பாராமல் உருவழிந்தேன் பூரணமே

எத்தனை தாய் தந்தை இவர்களிடத்தே இருந்து
பித்தனாய் யானும் பிறந்து இறந்தேன் பூரணமே

பெற்று அலுத்தார் தாயார் பிறந்து அலுத்தேன் யானும் உன்றன்
பொன்துணைத்தாள் தந்து புகல் அருள்வாய் பூரணமே

உற்றார் அழுது அலுத்தார் உறன்முறையார் சுட்டு அலுத்தார்
பெற்று அலுத்தால் தாயார் பிறந்து அலுத்தேன் பூரணமே

பிரமன் படைத்து அலுத்தான் பிறந்து இறந்து அலுத்தேன் நான்
உரமுடைய அக்கினி தான் உண்டு அலுத்தான் பூரணமே

என்னை அறியாமல் எனக்குள்ளே நீ இருக்க
உன்னை அறியாமல் உடல் இழந்தேன் பூரணமே

கருவாய் உருவாய்க் கலந்து உலகெலாம் நீயாய்
அருவாகி நின்றது அறிகிலேன் பூரணமே

செம்பொன் கமலத் திருவடியைப் போற்றாமல்
பம்பை கொட்ட ஆடும் பிசாசானேன் பூரணமே

எனக்குள்ளே நீ இருக்க உனக்குள்ளே நான் இருக்க
மனக்கவலை தீர வரம் அருள்வாய் பூரணமே

குலம் ஒன்றாய் நீ படைத்த குறியை அறியாமல்
மலபாண்டத்துள் இருந்து மயங்கினேன் பூரணமே

ஐந்து பொறியை அடக்கி உனைப் போற்றாமல்
நைந்துருகி நெஞ்சம் நடுங்கினேன் பூரணமே

என்னைத் திருக்கூத்தால் இப்படி நீ ஆட்டுவித்தாய்
உன்னை அறியாது உடல் அழிந்தேன் பூரணமே

நரம்பு தசை தோல் எலும்பு நாற்றத்துக்குள்ளிருந்து
வரம்பறிய மாட்டாமல் மயங்கினேன் பூரணமே

உள்ளும் புறம்புமாய் உடலுக்குள் நீயிருந்தது
எள்ளளவும் நான் அறியாது இருந்தேனே பூரணமே

தாயாகித் தந்தையாய்த் தமர் கிளைஞர் சுற்றம் எல்லாம்
நீயாகி நின்ற நிலை அறியேன் பூரணமே

விலங்கு புள் ஊர்வன அசரம் விண்ணவர் நீர்ச்சாதி
மனுக்குலங்கள் எழுவகையில் நின்ற குறிப்பறியேன் பூரணமே

ஆணாகிப் பெண்யாய் அலியாகி வேற்றுருவய்
மாணாகி நின்ற வகையறியேன் பூரணமே

வாலையாய்ப் பக்குவமாய் வளர்ந்து கிழம் தானாகி
பாலையாய் நின்ற பயன் அறியேன் பூரணமே

கொல்வாய் பிறப்பிப்பாய் கூட இருந்தே சுகிப்பாய்
செல்வாய் பிறர்க்குள் செயல் அறியேன் பூரணமே

ஒன்றாய் உயிராய் உடல்தோறும் நீ இருந்தும்
என்றும் அறியார்கள் ஏழைகள் தாம் பூரணமே

என்ன தான் கற்றால் என்?  எப்பொருள் பெற்றால் என்?
உன்னை அறியாதார் உய்வரோ? பூரணமே

கற்றறிவோம் என்பார் காணார்கள் உன்பதத்தை
பெற்று அறியார் தங்களுக்கு புறப்பு அறுமோ பூரணமே

வான் என்பார் அண்டம் என்பார் வாய்ஞானமே பேசித்
தான் என்பார் வீணர் தனை அறியார் பூரணமே

மூச்சு என்பார் உள்ளம் என்பார் மோனம் எனும் மோட்சம் என்பார்
பேச்சு என்பார் உன்னுடைய பேர் அறியார் பூரணமே

வாயார வாழ்த்தி மகிழ்ந்து உனைத்தான் போற்றாமல்
காயம் எடுத்துக் கலங்கினேன் பூரணமே

சந்திரனை மேகமது தான் மறைத்தவாரது போல்
பந்தமுற யானும் உனைப் பார்க்கிலேன் பூரணமே
நீர்மேல் குமிழி போல் நிலையற்ற காயம் இதைத்
தாரகம் என்று எண்ணி நான் தட்டழிந்தேன் பூரணமே

எள்ளுக்குள் எண்ணெய் போல எங்கும் நிறைந்திருந்து
உள்ளம் அறியாது உருகினேன் பூரணமே

பூசையுடன் புவன போகம் எனும் போக்கியத்தால்
ஆசையுற்றே நானும் அறிவிழந்தேன் பூரணமே

படைத்தும் அழித்திடுவாய் பார்க்கில் பிரமா எழுத்தைத்
துடைத்துச் சிரஞ்சீவியாய்த் துலங்குவிப்பாய் பூரணமே

பாவபுண்ணியம் என்னும் பகுப்பாய்ப் படைத்து அழித்து இங்கு
ஆவலை உண்டாக்கி வைத்த அருள் அறியேன் பூரணமே

சாந்தம் என்றும் கோபம் என்றும் சாதி பேதங்கள் என்றும்
பந்தம் என்றும் புத்தி என்றும் படைத்தனையே பூரணமே

நானே நீ - நீயே நான் நாம் இரண்டும் ஒன்றானால்
தேனில் ருசியது போல் தெவிட்டாய் நீ பூரணமே

கண்ணிழந்த பிறகு சூரிய வணக்கம் செய்ய நினைப்பது போல சாகும் தருவாயில் ஞானம் பிறக்கிறது.  பிறந்து என்ன பயன்.  சிறிது நேரத்தில் சாகப் போகிறோம்.


செத்த பின்னால் என்னென்ன நடக்கிறது.  கற்பனைக் கண் கொண்டு பார்க்கிறார் பட்டினத்தார். அன்றும் அது தான் நடந்தது.  இன்றும் அது தான் நடக்கிறது.  இது ஓர் உலக உண்மை.  உலக உண்மையை உணர்ந்தவர்கள் இப்படிக் கூறுவார்கள்-

“முன் தொடர்பில் செய்த முறைமையால் வந்த செல்வம்
இற்றை நாள் பெற்றோம் என்று எண்ணாது பாழ்மனமே
அற்றவர்க்கும் ஈயாமல் அரன் பூசை ஓராமல்
கற்றவர்க்கும் ஈயாமல் கண் மறைந்து விட்டனையே

பொன்னும் பொருளும் உடன் வராது என்பதை கற்றறிந்த பெரியவர்கள் எல்லோரிடமும் கூறுவார்கள்.

“மாணிக்கம் முத்து வயிரப் பணி பூண்டு
ஆணிப்பொன் சிங்காதனத்தில் இருந்தாலும்
காணித்துடலை நமன் கட்டியே கைப்பிடித்தால்
காணிப்பொன் கூட வரக் காண்கிலமே நெஞ்சமே

“கற்கட்டும் மோதிரம் நல்கடுக்கண் அரைஞாண் பூண்டு
திக்கு எட்டும் போற்றத் திசைக்கு ஒருத்தர் ஆனாலும்
பற்கிட்ட எமன் உயிர் பந்தாடும் வேளையிலே
கைச்சட்டம் கூடவரக் காண்கிலமே நெஞ்சமே

“முன்னம் நீ செய்த தவம் முப்பாலும் சேரும் அன்றிப்
பொன்னும் பணிதிகழும் பூவையும் அங்கே வருமோ

“உற்றார் ஆர்?  பெற்றார் ஆர்?  உடன்பிறப்பு ஆர்? பிள்ளைகள் ஆர்?
மற்றார் இருந்தால் என்?  மாளும் போது உதவுவரோ?

“வீடிருக்க தாயிருக்க வேண்டும் மனையாள் இருக்க
பீடிருக்க ஊன் இருக்கப் பிள்ளைகளும் தாம் இருக்க
மாடிருக்கக் கன்றிருக்க வைத்த பொருளிருக்கக்
கூடிருக்க நீ போன கோலமென்ன கோலமே

“காற்றைத் துருத்தி கடிய வினைக்கு உள்ளான
ஊற்றைச் சடலத்தை உண்டு என்று இறுமாந்து
பார்த்து இரங்கி அன்னம் பசித்தோருக்கு ஈயாமல்
ஆற்று வெள்ளம் போல அளாவினையே நெஞ்சமே

“என் பெற்ற தாயாரும் என்னைப் பிணமென்று இகழ்ந்து விட்டார்
பொன் பெற்ற மாதரும் போம் என்று சொல்லிப் புலம்பி விட்டார்
கொன் பெற்ற மைந்தரும் பின்வலம் வந்து குடம் உடைத்தார்
என்றும்

 அழகாகச் சொல்லுகிறார்.



“ஊரும் சதமல்ல உற்றார் சதமல்ல உற்றுப் பெற்ற
பேருஞ் சதமல்ல பெண்டில் சதமல்ல பிள்ளைகளுஞ்
சீரும் சதமல்ல செல்வம் சதமல்ல தேசத்திலே
யாரும் சதமல்ல



என்று நிலையாமையை அழகாக எடுத்துக் கூறுவார் பட்டினத்தார்.

பிறப்புக்கும் இறப்புக்கும் இடைக்காலத்தில் ஆசையுடன் திரியும் மனிதன் என்ன செய்கிறான்?

“பொன்னை நினைந்து வெகுவாய்த் தேடுவார் பூவை அன்னாள்
தன்னை நினைந்து வெகுவாய் உருகுவர்

வாழ்க்கை உருண்டு ஓடும்.  விரைவில் மரணம் வரும்.  சங்கு ஊதுவது நிச்சம்.  சங்கிலே எத்தனை வகை?  அதையும் விளக்குகிறார் பட்டினத்தார்.

இறந்து போனபின் ஊதும் சங்குக்கு கூட ஒரு பாடல் உண்டு.  சங்குகளில் எத்தனை வகை.  அருமையான விளக்கம் இது.

முதற்சங்கம் அமுதூட்டும்
மொய்குழலார் ஆசை நடுச்சங்கம் நல்விலங்கு பூட்டும்
கடைச்சங்கம் ஆம்போது அது ஊதும்
அம்மட்டோ இம்மட்டோ நாம் வாழ்ந்த நலம்.
(முதல் சங்கு என்பது பால்புகட்டும் சங்கு,  இடைச்சங்கு என்பது திருமண நேரத்தில் வாத்தியத்தில் ஒன்றாய் அமைந்தது, கடைச்சங்கு என்பது இறந்த பின் ஊதப்படும் சங்கு)

இப்படி யெல்லாம் கூறியபின் நமக்கு அருமையான அறிவுரையைத் தருகிறார் பட்டினத்தார்.

“இருப்பது பொய்  போவது மெய் என்று எண்ணி நெஞ்சே
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே பருத்த தொந்தி
நம்மதென்று நாம் இருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்மதென்று தாம் இருக்கும் தான்

இந்த உலகத்திலே நாம் இருக்கப் போகிறோம் என்ற அகம்பாவத்தோடு திரிகிறோம்.  அது பொய்.  நாம் போவது நாம் இறப்பது மெய்.  இதைத் தான் பட்டினத்தார் பாடல் நமக்குத் தெரிவிக்கிறது.  ஆனால் ஆத்மஞானம் வந்த பிறகு “இருப்பது மெய் போவது பொய்என்பது நமக்குத் தெரிந்து விடும்.  இந்த உலகத்தில் அழியாமல் இருப்பவையே மெய்யானவை.  அழியப்போகின்றவை அத்தனையும் பொய்.  இந்த உடல் அழியும்.  நம் செல்வம் அழியும்.  உற்றார் அழிவர்.  உறவினர் அழிவர்.  நண்பர் அழிவர்.  நாம் பெற்ற  பட்டங்கள் அழியும்.  எனவே இவை எல்லாம் பொய்.  என்றும் இருப்பது நம் ஆத்மா.  ஆத்மா என்பது இறைவனின் ஒரு துளி.  அந்த துளி தான் ஒவ்வொரு உயிரிலும் பரவி உள்ளது.  மரமானாலும் விலங்கானாலும் மனிதன் ஆனாலும் எல்லாவற்றுக்கும் ஆன்மா உண்டு.  அது தான் அழியாதது.  கஷ்டநஷ்டங்களை இந்த உடல், மரம், விலங்குகள்  தாங்குகின்றன.  காரணம் அவைகளின் விருப்பங்கள்.  இரட்டைகளான இரவு-பகல், கஷ்டம்-நஷ்டம்,  இன்பம்-துன்பம்,  போன்றவற்றைக் கடந்தவன் இறைவன்.  ஆன்மா என்பதையும் இரட்டைகளைக் கடந்ததே.  எனவே பொய்யான இந்த உடல் மாள்வது திண்ணம்.

உடல் தீக்கிரையாவது திண்ணம்.  எனவே அதற்கு முன் நாம் செய்ய வேண்டியது என்ன?

“ஆவியொடு காயம் அழிந்தாலும் மேதினியில்
பாவியென்று நாமம் படையாதே மேவிய சீர்
வித்தாரமும் கடம்பும் வேண்டா மடநெஞ்சே
செத்தாரைப் போலத் திரி

“இன்னம் பிறக்க இசைவையோ நெஞ்சமே?
மன்னர் இவர் என்று இருந்து வாழ்ந்தாரை முன்னம்
எரிந்த கட்டை மீதில் இணைக்கோவணத்தை
உரிந்து உருட்டிப் போட்டது கண்டு

“நீர்க்குமிழி ஆம் உடலை நித்தியமாய் எண்ணுதே
ஆர்க்கும் உயர் ஆசை அழியேனே என்குதே
கண்ணுக்கு கண் எதிரே கட்டையில் வேகக் கண்டும்
எண்ணும் திரமாய் இருப்போம் என்று எண்ணுதே

என்று புலம்பி,

“அன்ன விசாரம் அது அற்ற இடம் கிட்டாதோ?
சொர்ண விசாரம் தொலைந்த இடம் கிட்டாதோ?
உலக விசாரம் ஒழிந்த இடம் கிட்டாதோ?
செப்புதற்கும் எட்டா தெளிந்த இடம் கிட்டாதோ?

என்று இறைவனிடம் வேண்டுகிறார் பட்டினத்தார்.

எல்லர்ம் கிட்டும்.  இறைவனின் திருவடியை உளமாற நினைந்து அல்லும் பகலும் அனவரதமும் அவனைத் துதித்து வந்தால் மீண்டும் கருவில் வந்து பிறவாத நிலை வரும்.  பிறவிப் பெருங்கடலை நாம் நீந்தி இறைவன் திருவடியை அடைந்து விடலாம்.  பிறப்பு-இறப்பு எனும் மாயச் சுழலில் சிக்காது கரையேறலாம். 

எனவே ஆசையே அனைத்து அல்லல்களுக்கும் காரணம் என்பதை அறிந்து பற்றற்ற வாழ்வை நாம் மேற்கொள்வோம்.

No comments:

Post a Comment