எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு
சுந்தர காண்டம் என்று கம்பராமாயணத்தில் ஒரு அருமையான பகுதி. இப்பகுதியைத் தினசரி படிப்பதால் நன்மைகள் பல கிடைக்கும் என்று எல்லோரும் சொல்லுவார்கள். காரணம் கானகத்தில் சீதையைப் பிரிந்த இராமபிரானுக்கு உதவ அனுமன் இலங்கைக்குச் சென்று சீதையைக் கண்டு திரும்ப வந்து “கண்டின் சீதையை” எனச் சொல்லி இராமரின் மனதைக் குளிர வைக்கும் நிகழ்ச்சி நடப்பது இங்கே தான். பின்னர் நடப்பது தான் இராம-இராவண போர் நிகழ்ச்சி. இராமரின் வெற்றி. சீதையை மீட்பது. மீண்டும் முடியை சூட்டிக்கொள்ளும் நிகழ்ச்சிகள். எனவே தான் இதைப் படிததால் வாழ்வில் நம்பிக்கை கிடைக்கும். துக்கங்கள் அகலும். சரி. எனக்குப் படிக்க நேரம் இல்லை என்று சொல்லும் அன்பர்களுக்காக எளிதில் படிக்க - பயன்பெற ஒரு சிறு முயற்சி.
வாயுகுமாரன் - அஞ்சனை புதல்வன் கடலைத் தாண்ட சாம்பவான் அவனது பலத்தை ஞாபகப்படுத்துகிறான். அது கேட்டு அனுமன் கடலைத் தாண்ட ஆயத்தமானான். உடன் இருந்த வானரங்கள் வழி அனுப்பினர். வழியில் மைநாக மலை கடலில் எழுந்து உபசரித்தது. ஏற்றுக் கொண்டார். பின்னர் வந்த தடைகள் அத்தனையையும் தகர்த்து எறிந்தார். இலங்கையின் எழிலைக் கண்டார். தடுக்க வந்த காவல் தேவதையை வென்றார். பல மாளிகைகளில் சீதையைத் தேடினார். இறுதியில் அசோக வனத்தில் அரக்கிகள் நடுவில் அமர்ந்திருந்த சீதையைக் கண்டார். சிம்சுபா மரத்தின் நிழலில் அன்னை சீதை. தவக்கோலத்தில் இருந்தாள் சீதை. இராவணன் மிரட்டுவதைக் கண்டார். பின் தான் யார் என்பதைத் தெரிவித்து இராமனின் நிலையை விளக்குகிறார். அன்னை சீதையிடம் சூடாமணியைப் பெற்றுக் கொள்கிறான் அனுமன். பின்னர் தன் இயல்பான குறும்பைக் காட்ட அரக்கர்கள் எதிர்க்கிறார்கள். அழிக்கிறான் அத்தனை பேரையும். இந்திரனையே வென்ற இராவணனின் மகன் வருகிறான். பிரம்மாத்திரத்தைத் தொடுக்கிறான். பணிகிறான் அனுமன். கட்டுண்டான். இராவணன் சபையில் சென்று இராமனின் புகழ்பாடி அறிவுரை கூறுகிறான். வெகுண்டான் இராவணன். அனுமனின் வாலுக்குத் தீ வைக்க ஆணையிட்டான். அந்த தீயை இலங்கை முழுவதும் வைத்தான் அனுமன். ஆகாய வழியில் திரும்பினான். செய்தியை தன் தோழர்களிடம் பகிர்ந்து கொண்டு பின்னர் அனைவரும் இராமர் இருந்த இடத்தை அடைந்தனர். “கண்டேன் சீதையை” என்று கூறி இராமனின் மனதைக் குளிர வைக்கிறான் அனுமன். மகிழ்ந்த இராமர் மைதிலியை மீட்கப் புறப்பட்டார். கடலில் பாலம் அமைத்தார். வானரப் படை கடலைக் கடந்தது. கடுமையான போர் நடந்தது. இறுதிப் போரில் இராவணன் மாண்டான். சீதையை மீட்டார் இராமர். தந்தை தசரதன் இறக்கும் தருவாயில் “கைகேயி என் மனைவியும் அல்ல - பரதன் என் மகனும் அல்ல” என இரண்டு கொடுமொழியைக் கூறிவிட்டு மறைந்தார். எனவே அவரை வரவழைக்க சீதையைத் தீயில் இறங்க உத்தரவிட்டான். வானுலகத்தில் இருந்த தசரதர் வந்தார். சீதை உத்தமி எனக் கூறி ஏற்கும்படி உத்தரவிட்டார். இராமர் அவரிடம் அன்னை கைகேயியையும் பரதனையும் மன்னித்து சாபவிமோசனம் வழங்கும்படி வேண்டினார். கைகேயியின் இரண்டு வரத்தால் காட்டுக்கு வந்த இராமர் தசரதனிடம் இரண்டு வரங்கள் வாங்கி கைகேயியையும் பரதனையும் மன்னிக்க வைத்தார். நாடு திரும்பினார். மணிமுடி சூடினார்.
No comments:
Post a Comment