எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு
நான் அடிக்கடி இரவில் தயிர்சாதம் உண்ணக் கூடாது என்று நண்பர்களிடம் கூறுவேன். ஏன் என்று கேட்டால் கூறத் தெரியாது. என் பெற்றோர் எனக்கு கூறிய அறிவுரை. இரவில் தயிர் சாதம் சாப்பிட்டால் ஆயுள் குறையும் என்றும் பால்சாதம் சாப்பிட்டால் நோய்நொடி இல்லாமல் ஆயுள் கூடும் என்றும் நான் சிறுவனாக இருக்கும் போது என் தந்தை கூறுவார். இது குறித்து இன்று ஒரு பாடல் படித்தேன் விவேகசிந்தாமணியில். தயில் மட்டும் அல்ல – இரவில் எதைஎதையெல்லாம் உண்ணக் கூடாது என்று அந்தப் பாடலிலே இருந்தது. இதோ உங்களுக்காக அந்தப் பாடல்கள்.
காலை மாலை உறங்குவர் காரிகை
கோல மேனி குலைந்தபின் கூடுவர்
சால் இரைத்தயிர் சாதமொடு உண்பவர்
மாலை நேரினும் மாது பிரிவளே.
திருமாலையொத்து செல்வத்தோடு இருந்தாலும் - கதிரவன் உதயமாகும் போது உறங்குபவனை விட்டும் - கதிரவன் மறையும் மாலை நேரத்தில் உறங்குபவனை விட்டும் திருமகள் பிரிந்து சென்று விடுவாள்.
கட்டுடல் குலைந்த கிழவியோடு கூடுபவரிடமிருந்து திருமகள் பிரிந்து சென்று விடுவாள்.
அதே போல இரவில் தயிர்சாதம் உண்பவனை விட்டு திருமகள் பிரிந்து சென்று விடுவாள்.
சரி மேற்கண்டவாறு நடந்து கொண்டால் திருமகள் பிரிந்துவிடுவாள். திருமகளின் தமக்கை மூதேவி நம்மிடம் எப்போது வருவாள். இதோ அதை விளக்கும் அருமையான பாடல்.
இஞ்சி நெல்லி இலைக்கறி பாகற்காய்
கஞ்சி வெண்தயிர் கங்குல் அருந்திடின்
பொஞ்சு பூமகள் போய் உடன் மூத்தவள்
கொஞ்சிக் கொஞ்சிக் குலாவி நடிப்பளே.
இரவிலே இஞ்சி, நெல்லிக்காய், கீரைவகைகள், பாகற்காய், நீராகாரம், வெண்மை நிறமான தயிர் ஆகியவற்றை இரவில் சாப்பிட்டால் திருமகள் நம்மை விட்டு அகன்றுவிடுவாள். திருமகளின் மூத்த சகோதரி மூதேவி கொஞ்சிக் கொண்டு நம்மைத் தேடி உடனே வருவாள்.
எனவே நண்பர்களே இரவில் இஞ்சி, நெல்லிக்காய், கீரைவகைகள், பாகற்காய், புளிப்பான நீராகாரம், தயிர் போன்றவற்றை உபயோகிக்க வேண்டாம்.
No comments:
Post a Comment