Monday, August 22, 2011

விவேகசிந்தாமணி - VIVEKACHINTHAMANI

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு


முயற்சி திருவினை ஆக்கும்.  இது நாம் எல்லோரும் அறிந்த கருத்து.  முயற்சி இல்லை என்றால் அது வறுமையில் கொண்டு போய் தள்ளிவிடும்.

முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்திவிடும்.

முயற்சி இல்லாமல் இருக்கும் நிலையையே முயற்றின்மை என்ற சொல்லால் திருவள்ளுவர் நமக்கு எடுத்துக் காட்டுகிறார்.

முயற்சி செய்பவனைக் கண்டால் விதியும் புறமுதுகு காட்டி ஓடிவிடும் என்கிறார் திருவள்ளுவர் ஒரு குறளில்.  இதோ அந்தக் குறள்.

ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழாது உஞற்றுபவர்.

உப்பக்கம் என்றால் புறமுதுகு காட்டுவது.  உஞற்றுபவர் என்றால் முயற்சி செய்பவர்.  உலைவின்றி என்றால் தளர்சி இல்லாது, தொடர்ந்து

தெய்வத்தால் ஆகாததைக் கூட ஒருவன் தன்னுடைய முயற்சியால் அடையலாம்.  இதோ அதைச் சொல்லும் திருக்குறள்.

தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சி தன்
மெய்வருத்தக் கூலி தரும்.

தெய்வத்தை நம்பிக் கொண்டு எந்தத் தொழிலையும் செய்யாமல் இருந்தால் பலன் கிடைக்குமா?  கிடைக்காது.  ஆனால் முயற்சி செய்து கடுமையாக உழைத்தால் வாழ்க்கையில் உயர்நிலையை அடையலாம்.  முயற்சியானது நமக்கு உரிய கூலியைத் தரும்.  இப்படிப்பட்ட உயரிய முயற்சியைப் பற்றி விவேகசிந்தாமணியில் ஒரு அருமையான பாடல் உள்ளது.  இதோ அந்தப் பாடல்.

கடவுள் ஈகுவன் என்று எண்ணி நித்தியமும் கருதுறு முயற்சி செய்யானேல்
அடல் உறு செல்வம் அடைகுவனே கொல் அருங்கலத்து இட்ட பால் அடிசில்
மிடல் உறு கரத்தால் எடுத்து உண்ணாது எங்ஙன் வீங்கும் வெம்பசிப்பிணி ஒழிப்பன்
உடல்பவம் தனக்கு ஓர் ஆதரம் ஆம் என்று உடல் நனி வாட்டும் மெய்த்தவத்தோய்.

பால்சோறு தட்டிலே உள்ளது.  நமது கைகளால் அதை உண்ணாவிட்டால் நமது பசியை ஆற்ற முடியுமா?  முடியவே முடியாது.  அது போல இறைவன் வருவான் இறைவன் தருவான் எனக் கருதி நாம் ஒரு பணியும் செய்யாமல் அமர்ந்திருந்தால் செல்வத்தை அடைய முடியுமா?  முடியவே முடியாது.  அது மட்டுமல்ல முயற்சி பற்றி இன்னொரு பாடலும் விவேகசிந்தாமணியில் உள்ளது.  இதோ அந்தப் பாடல்

மானிடன் ஒருவன் தனக்கு அரும் செல்வம் வாய்க்க என்று அனுதினம் முயற்சி
தான் உஞற்றுவனேல் கடவுளும் அதனைத் தந்து அளிக்குவன் அதால் அன்றோ
ஆனபேர் அறிஞர் திருவினை முயற்சி ஆக்கும் அம்முயற்சி அல்லாமை
ஈனமார் இன்மை புகுத்திடுமால் என்று யாரும் நன்கு உணர்தர நவில்வார்.

ஆம் திருவள்ளுவர் முயற்சி திருவினையாக்கும் என்று கூறி உள்ளார் என இந்தப் புலவர் நமக்குத் தெரிவிக்கிறார்.   இந்த பாடலிலும் உஞற்றுதல் என்ற சொல் உள்ளது.  இப்போது இப்படிப்பட்ட சொற்கள் நடப்பிலே உள்ளதா?  இல்லவே இல்லை.  நாம் நமது மொழியை மறந்து கொண்டிருக்கிறோம்.  எங்கே பார்த்தாலும் வடமொழிச் சொல்.  அதற்கும் மேலே இப்போது ஆங்கிலச் சொற்கள்.  சிறிது ஆண்டுகள் கழித்து தந்தை அப்பா என்றால் தமிழகத்தில் மக்கள் அப்படி என்றால் என்ன என்று கேட்பார்கள்.  அவர்களுக்கு டாடி என்ற சொல் மட்டுமே தெரியும்.

No comments:

Post a Comment