எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு
ஆசை என்பது தான் அனைத்துத் துன்பங்களுக்கும் அடிப்படை என்பார் புத்தபெருமான். இக்கருத்தையே வலியுறுத்தும் வள்ளுவரும்,
அவா இல்லார்க்கு இல்லாகும் துன்பம் அஃதுண்டேல்
தவா அது மேன்மேல் வரும்.
(தவா என்றால் . தொடர்ந்து மற்றும் நீங்காமல் என்று பொருள்.) ஆசை இல்லை என்றால் துன்பம் இல்லை. ஆசை வந்தால் துன்பம் தொடர்ந்து வரும் என்பார் வள்ளுவர். அதுமட்டுமல்ல, ஆசை இருந்தால் துன்பம் மட்டுமல்ல மீண்டும் மீண்டும் பிறவித்துயரம் வரும்.
அவா என்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும்
தவா அப்பிறப்பு ஈனும் வித்து.
என்கிறார் வள்ளுவர். இக்கருத்தையே வலியுறுத்தும் விவேகசிந்தாமணியில் ஒரு பாடல் இதோ.
பகையினை ஆக்கலும் பாவம் ஆக்கலும்
நகையினை ஆக்கலும் நவையை ஆக்கலும்
திகைமனம் ஆக்கலும் சிறுமை ஆக்கலும்
அகைதரு காமத்தின் அன்றி இல்லையே
பகையை உண்டாக்குவது – பாவத்தைக் கொண்டுவருவது – பிறர் நம்மைப் பார்த்து இகழும்படிச் செய்வது – குற்றங்களைச் செய்யத் தூண்டுவது – நம்மைத் திகைக்கவைத்துத் தடுமாற்றத்தை உண்டாக்குவது – சிறுமையைத் தருவது எல்லாம் எது? ஆசை தான். அதிலும் பெண்ணாசை இருக்கிறதே அது எல்லாக் குற்றங்களையும் ஒன்றுசேர செய்யச் சொல்லும். இதே போன்ற கருத்தை விளக்கும் மற்றொரு விவேகசிந்தாமணிப் பாடலும் உண்டு.
கைதவம் இழைத்தலும் களவு செய்தலும்
ஐதுயிர் கோறலும் அறத்தைக் கோறலும்
பொய்தவ உரைத்தலும் பொருள் இழத்தலும்
எய்திய காமத்தின் அன்றி இல்லையே.
(கோறல் என்றால் அழிப்பது, சிதைப்பது, வதைப்பது எனப் பல பொருள் தரும் அருமையான சொல்) (ஐது என்றால் அழகு) (தவ என்றால் அதிகமாக, மிகுதியாக என்று பொருள்)
நன்றியைக் கோறலும் நலனைக் கோறலும்
வென்றியைக் கோறலும் விவேகம் கோறலும்
துன்றிய ஒக்கலைத் துறந்து நிற்றலும்
கன்றிய காமத்தின் அன்றி இல்லையே.
(துன்றிய ஒக்கல் என்றால் பொருந்திய உறவினர் என்று பொருள்)
எளிய தமிழில் அற்புதமான கருத்துகளைத் தருகிறது விவேக சிந்தாமணி.
No comments:
Post a Comment