Sunday, August 21, 2011

சித்தர் பாடல்களைப் புரிந்து கொள்ள சில விளக்கங்கள்

இறைவன் இந்த உலகத்தைப் படைக்கும் முன் குணமற்ற வெளியாய் இருந்தது.  உலகம் படைக்கப்பட்ட பின் மாயை தோன்றியது.  இது மாயை, அறியாமை, தன்முனைப்பு(அகங்காரம்) என மூன்று வகையானது.

மனித உடல் அவரவர் கையினால் எட்டு சாண் அளவு நீளம் உள்ளது என்று கூறப்படுகிறது.  நான்கு சாண் பருமனும், 96 விரற்கடைப் பிரமாணமும் உள்ளது என்று கூறுகிறார்கள்.

உடலின் வாயில்கள் ஒன்பது உள்ளதாகக் கருதப்படுகிறது.  அவையாவன
கண்கள் இரண்டு - செவிகள் இரண்டு - மூக்குத் துவாரங்கள் இரண்டு - வாய் ஒன்று - கருவாய் ஒன்று - மலவாய் ஒன்று.

ஐந்து பூதங்கள் யாவை?

நிலம் - புனல் - அனல் - கால் - விசும்பு

புனல் என்றால் நீர்
அனல் என்றால் தீ
கால் என்றால் காற்று
விசும்பு என்றால் ஆகாயம்.

ஐம்பொறிகள் யாவை?

மெய் - வாய் - கண் - மூக்கு - செவி

மெய் காற்றின் அம்சம்
வாய் நீரின் அம்சம்
கண் நெருப்பின் அம்சம்
மூக்கு மண்ணின் அம்சம்
செவி விசும்பின் அம்சம்

எனவே
காற்றின் அம்சமான மெய் குளிர்ச்சி, வெப்பம், மென்மை, வன்மை போன்றவற்றை உணர்ந்து அறியும்

நீரின் அம்சமான வாய் உப்பு, புளிப்பு, இனிப்பு, கைப்பு, கார்ப்பு, துவர்ப்பு என்னும் அறுசுவைகளை அறியும் வல்லமையை உடையது

கண் தீயின் அம்சம் என்பதால் ஒளியை கறுப்பு, சிகப்பு, நீலம், பச்சை எனவும் நீளம், குட்டை, பருமன், போன்ற வடிவங்களையும் அறியும்

மூக்கு மண்ணின் அம்சம் என்பதால் மணம், நாற்றம் போன்றவற்றை நுகர்ந்து அறியும்

ஐந்து தொழில் உறுப்புகள் யாவை?

வாய் - கை - கால் - மலவாய் - கருவாய்.  சரி இவற்றின் பணி என்ன?

வாய் சொல்வது என்னும் பணியைச் செய்கிறது
கை ஏற்றல் மற்றும் கொடுத்தல் என்னும் பணியைச் செய்கிறது
கால் நடத்தல் என்னும் பணியைச் செய்கிறது
மலவாய் கழித்தல் அல்லது விடுதல் என்னும் பணியைச் செய்கிறது
கருவாய் மகிழ்தல் என்னும் பணியைச் செய்கிறது


இவற்றைப் போன்றே அகக்கருவிகள்  நான்கு உள்ளன.

அவை மனம், அறிவு, நினைவு மற்றும் தன்முனைப்பு

மனம் நினைக்கும்
புத்தி முடிவு செய்யும்.  அதாவது அறிவு நிச்சயிக்கும்
தன்முனைப்பு நம்மை உசுப்பிவிடும்
நினைவு மூன்றுக்கும் காரணமாக இருக்கும்.
இதனால் தான் நினைப்பு பொழைப்பைக் கெடுக்கும் என்பார்கள்.  மூன்றுக்கும் அடிப்படையானது நினைப்பு தான்.

மனம் காற்றின் அம்சம்.  காற்றைப் போல நினைப்பு- மறதி ஆகியவற்றுடன் காற்று போலவே அலைந்து திரியும்

புத்தி என்னும் அறிவு நெருப்பின் அம்சம்.  இது செயல்களை - பொருள்களை ஆராயும்.  நன்மை தீமைகளை பகுத்து அறியும்.

நினைப்பு என்பது நீரின் அம்சம்.  இது ஐம்பொறிகளில் சலனத்தை உண்டாக்கும்.  பொறிவழி பல விஷயங்களுக்கு நம்மை இழுத்துச் சென்று நம்மை ஆட்டிப் படைக்கும்.  இதையே மனம் என்றும் கூறுவார்கள்.

தன்முனைப்பு என்னும் அகங்காரம் இந்த உடலை “நர்ன்” என மயங்கச் செய்யும்.  செயல்களை ஆலோசிக்காமல் “நான்”  “எனது” என்ற எண்ணம் கொண்டு பாப புண்ணியங்களைச் செய்து கொண்டிருக்கும்.  இரண்டுமே மறுபிறவிக்கு வழிவகுக்கும்.  பாவம் செய்தாலும் பிறவி.  புண்ணியம் செய்தாலும் பிறவி.  எனவே தான் பெரியோர்கள் சும்மா இரு மனமே என்று கூறுகிறார்கள்.

ஐவகை உடம்புகள் என்ன?

உணவுடம்பு என்னும் பருவுடம்பு. இதைத் தான் வடமொழியில் அன்னமயகோசம் என்கிறார்கள்.

காற்று உடம்பு அல்லது வளியுடம்பு -  இதை வடமொழியில் பிராணமய கோசம் என்கிறார்கள்.

மனவுடம்பு.  இதைத்தான் வடமொழியில் மனோமய கோசம் என்கிறார்கள்.

அறிவுடம்பு - இதைத்தான் வடமொழியில் விஞ்ஞானமய கோசம் என்கிறார்கள்.

இன்ப உடம்பு - வடமொழியில் ஆனந்தமய கோசம் என்கிறார்கள்.

ஆக ஒன்று புரிகிறது நமக்கு.  கோசம் என்றால் உடம்பு என்பது.
சலம் என்றால் மலை என்பது போல.  வேதாசலம், வெங்கடாசலம் போல.

குணங்கள் மூன்று வகை என்கிறார்கள். அவை என்னென்ன?

மனஎழுச்சி -  ராஜசம்

மயல் அல்லது மயக்கம் - தாமசம்

நன்மை அல்லது அமைதி -  சாத்வீகம்


மூன்று மலங்கள் அல்லது மும்மலம் என்றால் என்ன?
ஆணவம், மாயை மற்றும் வினையே மும்மலங்கள்.

ஆணவம் ஆன்மாவின் அறிவை மறைக்கும்.  ‘நான்” “எனது” என்னும் அறியாமையைத் தோற்றுவிக்கும். மனைவி, மக்கள், சொத்து போன்றவற்றில் மயக்கம் உண்டாக்கும்.  தொடர்ந்து ஆசைகளை உண்டாக்கிக் கொண்டே இருக்கும்.  ஆசைகளை அனைத்துத் துன்பங்களுக்கும் காரணம்.

மாயை என்பது பிறர் உடமைகளை தனது என்று நினைக்கச் செய்வதாகும்.  அப்படி நினைத்தாலே தொடர்வது தொல்லை தானே.

வினை அல்லது கர்மம்.  மேலே உள்ள இரண்டையும் அனுசரித்து புண்ணிய பாவங்களை விளைவிக்கும்.


முக்குற்றங்கள் என்னும் முப்பிணிகள் யாவை?

வாதம், பித்தம், கபம் என்பவையே முக்குற்றங்கள் ஆகும்.

வாதம் என்றால் என்ன? பிராணவாயு மிகுந்து நீரும் நெருப்பும் கலந்தால் அது வாதம் எனப்படும்
செவி விசும்பின் அம்சம் என்பதால் ஒலிகள், ஓசைகள் ஆகியவற்றைக் கேட்டறியும்

தீயும் காற்றும் பெருகி இதயத்தில் ஊன்றினால் அது பித்தமாகும்

நீர், நெருப்பு, காற்று ஆகியவை உடலில் கலவாமல் கலங்கினால் அது கபம் ஆகும்.

ஆறு ஆதாரங்கள் என்று அடிக்கடி சொல்லுவார்கள். 

மூலம் - மூலாதாரம்
கொப்பூழ் - சுவாதிஷ்டானம்
மேல்வயிறு - மணிபூரகம்
நெஞ்சம் - அநாகதம்
மிடறு - விசுத்தம்
புருவநடு - ஆக்ஞேயம்

இவையே மனித உடலில் முக்கியமான ஆறு நிலைகளாகும்.  இந்த நிலைகளையே ஆதாரங்கள் என்று கூறுகிறார்கள்.

நாம் தினமும் நிமிடத்திற்கு பதினைந்து மூச்சுகள் விடுகிறோம் எனக் கூறப்படுகிறது.  வலது மூக்குத் துவாரம் வழியாகவும் இடது மூக்குத் துவாரம் வழியாகவும் நாம் மூச்சு விடுகிறோம்.  உள்ளுக்கு இழுக்கும் மூச்சு பூரகம் எனப்படும்.  வெளிவிடும் மூச்சு ரேசகம் எனப்படும்.  மூச்சைக் கட்டுதல் கும்பகம் எனப்படும்.

பூரகம், ரேசகம் என்னும் மூச்சை அடக்கி ஆள முடிந்தால் மனம், அறிவு, அகங்காரம் என்கிற தன்முனைப்பு, நினைப்பு ஆகியவற்றை அடக்கி ஆளலாம்.

தசவாயுக்கள் நம்முள் இருந்து நம்மை ஆட்டிவைப்பதாகக் கூறுவார்கள்.  அந்த பத்து காற்று என்னென்ன?

உயிர்க்காற்று என்னும் பிராணன்
மலக்காற்று என்னும அபானன்
தொழில்காற்று என்னும் வியானன்
ஒலிக்காற்று என்னும் உதானன்
நிரவுக்காற்று என்னும் சமானன்
விழிக்காற்று என்னும் நாகன்
இமைக்காற்று என்னும் கூர்மன்
தும்மல் காற்று என்னும் கிருகரன்
கொட்டாவிக்காற்று என்னும் தேவதத்தன்
வீங்கல்காற்று என்னும் தனஞ்சயன்


ஐந்து அவத்தைகள் என்றால் என்ன?

நனவு என்னும் சாக்கிரம்
கனவு என்னும் சொப்பனம்
உறக்கம் என்னும் சுழுத்தி
பேருறக்கம் என்னும் துரியம்
உயிர்ப்பு அடக்கம் என்னும் துரியாதீதம்.

தொடரும்.....


No comments:

Post a Comment