Sunday, August 21, 2011

VIVEKA CHINTHAMANI POEMS

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு

இக்காலத்தில் நோய்கள் பெருகி எங்கு பார்த்தாலும் பணத்தைப் பிடுங்கும் மருத்துவ மனைகள் பெருகி வருகின்றன.  மருத்துவம் என்பது ஒரு சேவை என்ற கருத்தே மெல்ல மெல்ல மறைந்து வருகிறது.  சரி முன்னெச்சரிக்கையாக பிணி வராமல் நாம் தான் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.  எளிய உணவு தேவையான அளவு உடற்பயிற்சி யோகங்கள் என நம்மைநாமே பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.  சரி இந்த நோய்கள் ஏன் வருகின்றன?  இதோ பதில் தருகிறது விவேக சிந்தாமணிப் பாடல் ஒன்று.

தன்னைத் தான் பேணாதாலும்
சரீரத்தின் தண்டிப்பாலும்
பின்னுற்ற விசாரத்தாலும்
பின் சலமலத்தினாலும்
அன்னத்தை ஒறுப்பதாலும்
அரையுடல் முழுகலாலும்
தன்மத்தை இகழ்வதாலும்
சரீரத்தில் வியாதி தோன்றும்

தன் உடம்பை முறையாகப் பராமரிக்கத் தவறுவது முதல் குற்றம்.  உடலுக்கு வேண்டிய உணவு, நீர் உரிய நேரத்தில் உரிய அளவில் தரத் தவறக் கூடாது.  கடுமையான வேலை பார்த்து நம் உடலுக்கு நாமே தண்டனை கொடுப்பது.  தேவையற்ற சிந்தனைகளைப் பெருக்கி அதன் காரணமாக மனத்துயர் அடைவது.  மனச்சோர்வு அடைவது.  மலசலம் கழிப்பதில் காலநேரம் தவறுவது.  இந்த உணவு பிடிக்காது இந்த காய்காறி பிடிக்காது எனக் கூறி உணவுப் பண்டங்களை ஒதுக்கி சுவையாக உள்ளது என்பதற்காக நொறுக்குத் தீனியைத் தின்பது.  முழு உடலும் நனையும் படி குளிக்காமல் அரைகுறையாகக் குளிப்பது.  அறநெறிகளை இகழ்ந்து தீய வழிகளில் செல்வது.  இப்படி ஒவ்வொன்றாக சேர்ந்து சிறிது சிறிதாக நம் உடம்பைக் கெடுத்து நோய்கள் உடலுக்குள் நுழைகின்றன.  இவற்றையெல்லாம் நாம் உணர்ந்து நோய்களைத் தவிர்க்க வேண்டும்.

திருக்குறளில் இதே கருத்துகள் பல குறள்களில் உள்ளன.

மருந்தென் வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றின் உணின்.

ஏற்கனவே உண்ட உணவு செரித்த பின் வேண்டிய அளவு அளவறிந்து உண்ண வேண்டும்  அப்படி வாழப் பழகினால் மருந்தே வேண்டாம் என்கிறது திருக்குறள்.

மாறுபாடு இல்லாத உண்டி மறுத்து உண்ணின்
ஊறுபாடு இல்லை உயிர்க்கு

ஒவ்வாத உணவை நாம் ஒதுக்கி விட வேண்டும்.  மறுக்கப் பழக வேண்டும்.  நட்பு வட்டாரத்தில் இருக்கிறோம் எனக் கருதி நாகரிக்த்தின் பெயரால் ஒவ்வா உணவை ஏற்கக் கூடாது.  அப்படி இருந்தால் நோய்கள் வராது.  இப்படி பல அருமையான குறள்கள் மருந்து என்ற தலைப்பிலே வள்ளுவர் நமக்குக் கொடுத்துள்ளார்.

No comments:

Post a Comment