Monday, August 22, 2011

VIVEKA CHINTHAMANI - விவேகசிந்தாமணி

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு


“கோபத்தை மறந்து விடு  என்று அடிக்கடி ஒலிபெருக்கிகளில் நாகூர் அனீபாவின் பாடலைக் கேட்டு நான் மிகவும் இரசிப்பதுண்டு.  கோபம் என்ற சொல்லுக்கு இணையான சொல் சினம்., வெகுளுதல்

சரி இந்த சினம் எப்படிப்பட்டது.  அது சேர்ந்தாரைக் கொல்லும் குணமுடையது.  இதோ அதை எடுத்துச் சொல்லும் திருக்குறள்.

சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனம் என்னும்
ஏமப் புணையைச் சுடும்.

புணை என்றால் கப்பல்.  ஏமப் புணை என்றால் கடலில் நமக்குப் பாதுகாப்பு தரக்கூடிய கப்பல் என்று பொருள்.  இனம் என்றால் உறவினர்.  நாம் கோபப்பட்டால்  நம்மை அண்டி இருக்கும் நமது உறவினர் மற்றும் நண்பர்கள் நம்மை விட்டு அகலுவர்.  நண்பர்கள் என்போர் உடுக்கை என்னும் உடையை நாம்  இழந்தால் எப்படி கை வந்து சரிசெய்கிறதோ அப்படி நம்மைக் காப்பாற்றக் கூடியவர்கள்.  நல்ல உறவினரும் அப்படியே.   சரி நம்மை நாம் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்றால் நாம் என்ன செய்ய வேண்டும்.  முதலில் சினத்தைக் காக்க வேண்டும்.  ஏன் மறந்து விட வேண்டும்.  இதைத் தான் நாகூர் அனீபாவின் பாட்டு நமக்குச் சொல்கிறது.  சினத்தை நாம் கட்டுப்படுத்தாவிட்டால் அது நம்மையே அழித்துவிடும் என்கிறார் திருவள்ளுவர்.

தன்னைத் தான் காக்கின் சினம் காக்க காவாக்கால்
தன்னையே கொல்லும் சினம்.

அதெல்லாம் இல்லை.  எனக்கு அடிக்கடி கோபம் வரும்.  அதை மாற்றிக் கொள்ள என்னால் முடியாது என்று பெருமை பேசுவோர் இருக்கத்தான் செய்கிறார்கள்.  அவர்களைப் பற்றி திருவள்ளுவர் என்ன கூறுகிறார்?  நிலத்திலே வெறும் கையால் அறைந்தால் என்ன ஆகும்.  வலி நிலத்திற்கு?   அடித்த கைக்கா?  உறுதியாக கை தான் காயப்படும்.  இதை மிக அழகாக எடுத்துக் காட்டுகிறார் திருவள்ளுவர்.

சினத்தைப் பொருள் என்று கொண்டவன் கேடு
நிலத்து அறைந்தான் கை பிழையாதற்று.

கடும்சினம் கொண்டவர்களை இறந்தார் என்றே அழைக்கிறார் திருவள்ளுவர்.  இறந்தார் என்னும் சொல் இறந்தவர்களையும் குறிக்கிறது கடும் சினம் கொண்டவர்களையும் குறிக்கிறது.  சினத்தைத் துறந்தவர்களை -  கோபத்தைக் கட்டுப்படுத்தியவர்களைத் துறந்தார் என்கிறார் திருவள்ளுவர்.  துறவிகளையும் அவர் துறந்தார் என்று தான் கூறுகிறார்.  இதோ அந்த அருமையான திருக்குறள்.

இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத்
துறந்தார் துறந்தார் துணை.
(துணை என்றால் ஈடானவர் என்றும் பொருள் உண்டு).

சரி இப்படிப்பட்ட கோபத்தைப் பற்றி விவேகசிந்தாமணியில் பாடல் உண்டா?  நிச்சயமாக உண்டு.  இதோ இரு பாடல்கள்.

மூங்கிலில் பிறந்த முழங்கு தீ மூங்கில் முதல் அற முருககுமாறு போலத்
தாங்கரும் சினத்தீ தன்னுளே பிறந்து தன்னுறு கிளையெலாம் சாய்க்கும்
ஆங்கு அதன் வெம்மை அறிந்தவர் கமையால் அதனை உள்ளடக்கவும் அடங்காது
ஓங்கிய கோபத் தீயினை ஒக்கும் உட்பகை உலகில் வேறு உண்டோ?

இரண்டு மூங்கில்கள் உரசினால் நெருப்புப் பொறி தோன்றும்.  தோன்றுவது சிறு பொறி தான்.  ஆனால் அந்த தீ மெல்ல மெல்ல பரவும்.  மூங்கிலையும் மூங்கில் காட்டையும் வேரோடும் வேரடி மண்ணோடும் அது அழிக்கும்.  (முருக்குதல் என்றால் எரித்தல் என்று பொருள்.).  அதுபோல நம் மனத்தில் தோன்றும் சினமென்னும் தீ நம்மையும் நம்மைச் சுற்றியுள்ள உறவினர் மற்றும் நண்பர்களை எல்லாம் அழித்து ஒழித்துவிடும்.  எனவே சினத்தைப் போன்ற கோபத்தைப் போன்ற உட்பகை வேறு எதுவும் கிடையாது.  சரி, இப்படிப்பட்ட கோபத்தால் யார்யாரெல்லாம் அழிந்தார்கள் என்று விவரிக்கிறது ஒரு பாடல்.

கோபத்தால் கௌசிகன் தவத்தைக் கொட்டினான்
கோபத்தால் நகுடனும் கோலம் மாற்றினான்
கோபத்தால் இந்திரன் குலிசம் போக்கினான்
கோபத்தால் இறந்தவர் கோடிகோடியே.

பாட்டு என்னவோ சிறிய பாட்டு தான்.  அதை விளக்க நினைத்தால் கதைகள் பல சொல்லியே ஆகவேண்டும்.  முதலில் கௌசிகன் கதைக்கு வருவோம்.

விசுவாமித்திர முனிவரை நாம் அனைவரும் அறிவோம்.  இராமாயணக் காப்பியத்திலும் மகாபாரதக் கதையிலும் பல இடங்களில் அவர் வருவார்.  கோபத்திற்கு பெயர் பெற்றவர்.  எப்போது கோபம் வரும் என்று சொல்லவே முடியாது.  அவருடைய கோபத்தினால் அவர் தன்னுடைய தவத்தினால் பெற்ற பலன்களையே இழந்தார்.  அவருடைய கோபத்திற்குப் பயந்து தசரதன் தன் புதல்வனான இராமனை இராமன் சிறுவனாக இருக்கும் போதே அரக்கர்களுடன் போரிட கானகத்திற்கு அனுப்புவார்.  இப்படிப்பட்டவர் திரிசங்கு என்னும் அரசகுமாரனை உடலோடு சொர்ககத்திற்கு அனுப்ப முயற்சி செய்கிறார்.  தேவர்கள் இதை ஏற்க முடியாது எனக் கூறி திரிசங்குவைத் தள்ளிவிடுகிறார்கள்.  இதனால் கொதித்தெழுந்த விசுவாமித்திரர் திரிசங்குவிற்காக தனி சொர்க்கத்தையே படைக்கிறார்.  இதனால் கடுமையான தவத்தால் தான் பெற்ற பலன்கள் அத்தனையையும் இழக்கிறார்.

அடுத்த கதை நகுடன் கதை.  இந்த நகுடன் தன்னுடைய கோபத்தினால் பாம்பாக மாறிவிடுவான்.  என்ன கதை அது?  நகுடன் என்பவன் மிகப்பெரிய சக்கரவர்த்தி.  யாகங்கள் பல புரிந்து இந்திரனுக்கு நிகரான அந்தஸ்தைப் பெற்றவன்.  ஒரு முறை சாபத்தின் காரணமாக இந்திரன் ஒளிந்து கொள்ள வேண்டிய நிலை ஏற்படுகிறது.  இந்திரன் என்பவன் அடிக்கடி தவறு செய்பவன் தானே.  அதற்கான தண்டனையாக மறைந்து கொள்கிறான்.  இந்திரன் என்பது தேவர் தலைவன் என்னும் பதவி.  இப்பதவி காலியாக இருக்கக் கூடாது.  அரக்கர்கள் படையெடுத்து விடுவார்கள்.  எனவே,  யாகங்கள் பல புரிந்து இந்திரனுக்கு இணையான பலம் படைத்த நகுடனை எல்லோரும் கெஞ்சி இந்திரன் பதவி ஏற்கும்படி அழைக்கிறார்கள்.  இயல்பில் நகுடன் நல்லவனே.  ஆனால் இந்திரன் என்னும் அந்தப் பதவி கிடைத்தவுடனேயே இந்திரனின் சேட்டைப்புத்தி இவனையும் தொற்றிவிடுகிறது.  உடனே இந்திராணியை அடையத் துடிக்கிறான்.  இந்திராணியோ ஒரு நிபந்தனையை விதிக்கிறாள்.  ஏழு முனிவர்கள் பல்லக்கைச் சுமக்க வந்தால் தான் தன்னை அடைய முடியும் என்று கூறுகிறாள்.  காதலுக்குத் தான் கண் இல்லையே?  உடன் அவன் ஏழு முனிவர்கள் சப்த ரிஷிகள் துணையை நாடுகிறான்.  அவர்களும் ஞானக்கண் கொண்டு நடக்கப்போவதைத் தெரிந்து கொண்டு ஒப்புக் கொள்கிறார்கள்.  அந்த முனிவர்களிலே அகத்தியர் மிகவும் குள்ளமானவர்.  அதனால் பல்லக்கு ஒருபுறம் தாழ்வாக இருக்கும்.  அகத்தியர் எம்பி எம்பி நடக்க வேண்டி வரும்.  அகத்தியர் குள்ளமாக இருந்து மற்றவர்களுக்கு ஈடு கொடுத்து வேகமாக நடக்காததால் தான் இந்திராணியை உடனடியாக அடையமுடியவில்லை என்ற கோபம் நகுட மன்னனுக்கு.  எனவே சாட்டையை எடுத்து வேகமாகப் போ என்று வடமொழியில் சொல்கிறான்.  சர்ப்ப என்றால் பாம்பு என்றும் பொருள் உண்டு.  வேகமாக என்றும் பொருள் உண்டு.  அடிபட்ட அகத்தியர் உடனடியாகச் சாபமிடுகிறார்.  சர்ப்ப சர்ப்ப என்று நீ கூறியதால் உன் தவத்தை எல்லாம் இழந்து நீ பாம்பாக மாறக் கடவாய் என்று சாபமிடுகிறார்.  இந்த மலைப்பாம்பு மகாபாரதக் கதையில் வீமனைச் சுருட்டிவிடும்.  விடுவிக்க வரும் தருமரிடம் பல கேள்விகளைக் கேட்கும்.  தர்மர் நியாயமான பதிலைக் கூற வீமனை விடுவிப்பார்.  இப்படி கோப்த்தால் நகுடன் பாம்பாக மாறினான் என்று ஒரு கதை.

மூன்றாவது கதை இந்திரனின் கதை.  குலிசம் என்றால் வச்சிராயுதம்.  அதை இந்திரன் எப்படி இழக்கிறான்?  ஒருமுறை தேவகுருவான பிரகஸ்பதி சபைக்கு வந்தபோது உரிய மரியாதையைத் தரவில்லை இந்திரன்.  நாட்டியத்தைக் கவனித்துக் கொண்டு ஆனந்தத் தேரில் பவனி வந்ததால் அவன் மரியாதை தர மறந்துவிட்டான்.  எனவே கோபத்தில் குருபகவான் சென்று விட்டார்.  பின்னர் பிரமனின் அறிவுரைப்படி துவட்டாவின் புத்திரனாகிய விச்சுவவுருவனைக் குருவாகக் கொண்டான்.  இந்த விச்சுவவுருவனோ அரக்கர்களுக்கு மிகவும் வேண்டியவன்.  இந்திரன் ஒரு யாகத்தைச் செய்ய இந்த புதிய குருவைப் பணித்த போது அவன் யாகத்தில் மந்திரங்களை அரக்கர்களுக்கு ஆதரவாகச் சொல்லிக்கொண்டிருப்பது தெரிகிறது இந்திரனுக்கு.  கோபத்தில் வச்சிரத்தினால் தன்னுடைய குருவின் மூன்று தலைகளை கழுகு, பருந்து, காகம் ஆகிய மூன்று பறவைகளாகப் பறந்தோடும்படி வெட்டுகிறான்.  இதனால் பிரம்மகத்தி தோடம் நேர்கிறது.  விச்சுவவுருவனின் தந்தை துவட்டா என்னும் பெருமுனி.  தன் மகன் கொல்லப்பட்டதை அறிந்து வெகுண்டு எழுகிறார் அவர்.  உடனே ஒரு வேள்வி புரிந்து விருத்திராசுரன் என்னும் அரக்கனை உண்டாக்கி இந்திரன் மீது ஏவுகிறார்.  அந்த போரில் இந்திரன் பின்னடைய நேரிடுகிறது.  பின்னர் திருமாலின் ஆணைப்படி ததீசி என்னும் முனிவர் அளித்த முதுகெலும்பு கொண்டு புதிய வச்சிர ஆயுதம் தயாரிக்கப்படுகிறது.  விருத்திராசுரன் கொல்லப்படுகிறான்.  இந்திரன் தன் வச்சிராயுதத்தை இழந்த இந்த கதையே மூன்றாவது கதையாகும்.

இப்படி சினத்தால் பெரிய பெரிய மனிதர் எல்லாம் எப்படிச் சீரழிந்தார்கள் என்பதை விளக்குகிறது இந்த விவேகசிந்தாமணிப் பாடல்.  அதே போல கோபம் என்னவெல்லாம் செய்யும் என்பதையும் விளக்குகிறது ஒரு விவேகசிந்தாமணிப் பாடல்

வெகுளியே உயிர்க்கெலாம் விளைக்கும் தீவினை
வெகுளியே குணம் தவம் விரதம் மாய்க்குமால்
வெகுளியே அறிவினைச் சிதைக்கும் வெம்மைசால்
வெகுளியே கொடும்பகை வேறொன்று இல்லையால்

இப்படிப்பட்ட கோபம் நமக்குத் தேவையா?  சினத்தைத் தவிர்த்து வாழ்வில் ஏற்றம் பெற்றிடுங்கள்.

No comments:

Post a Comment